இஸ்ரேல் vs பலஸ்தீனம்! இறுதி வெற்றி யாருக்கு?

நசுக்கப்பட்டு விடுமா பலஸ்தீனம்? ஹமாஸை முற்றிலும் அழிக்க முடியுமா? இஸ்ரேல் இன்னும் முன்னேறுமா? நெதன்யாகு நினைத்தது நடக்குமா? இந்தியாவின் கோழைத்தனம்! அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தோன்றியுள்ள பலஸ்தீன ஆதரவு.. இன்னும் பல நுட்பமான தகவல்களை பீட்டர் துரைராஜுடன் பகிர்கிறார் நந்தன் ஸ்ரீதரன்!
பலஸ்தீன பிரச்சினை குறித்து ஊடகங்கள் சொல்லாத பல செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறார், நந்தன் ஸ்ரீதரன்.
# இறந்து போன பலஸ்தீன பொது மக்களை விட, இறந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம்!
# இந்தியாவில், அறிவார்ந்த மாநிலமான தமிழ்நாட்டில் பலஸ்தீனம் பற்றிய பிரச்சினைகள் வெளிவராமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்!
# முகநூல், வாட்ஸ் அப் போன்றவை பலஸ்தீனம் பற்றிய செய்திகளை தடுக்கின்றன.
என இந்தப் பிரச்சினை குறித்து பல்வேறு கோணங்களில் பேசும் நந்தன் ஸ்ரீதரனோடு ஒரு உரையாடல்;
பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை என்ன?
ரஃபா (Rafah) நிலப்பரப்பில் 14 இலட்சம் பலஸ்தீன மக்கள் அகதிகளாக உள்ளனர். 4000 பேருக்கு ஒரு கழிப்பிடம் தான் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்ற இடங்களில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றி வந்த 10,000 கனரக வாகனங்களை அனுமதிக்காமல் எல்லையிலேயே நிறுத்தி வைத்து பட்டினிப் போட்டு கொல்ல நினைக்கின்றனர்.

அங்குள்ள 307 பள்ளிகளில் 288 பள்ளிகளை குண்டுவீசி காலி செய்து விட்டார்கள். இருந்த 34 மருத்துவமனைகளில் 31 ஐ இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா, அரபு நாடுகளைத் தவிர, மற்ற உலக நாடுகள் அனைத்தும் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தியா கள்ள மௌனம் காக்கிறது. இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்வதால் தான் இந்தியாவில் பெரிய போராட்டம் நிகழவில்லை.
அறிவார்ந்த மாநிலமான தமிழ்நாடு போராட்டத்தை முன்னெடுத்தால், மற்ற மாநிலங்களும் போராடத் தொடங்கிவிடும் என்பதற்காக மக்களுக்கு செய்திகள் வரக்கூடாது என நினைக்கிறார்கள். தமிழ் இந்து, தினமணி போன்ற நாளிதழ்கள் இது பற்றி செய்தி போடுவதில்லை. ஆங்கில இந்துவில் ஓரளவு செய்திகள் வருகின்றன.
சோசியல் மீடியாக்களில் கூட பலஸ்தீனப் பிரச்சின பெரிதாக பேசப்படவில்லையே?
பலஸ்தீனம் குறித்த செய்திகளை முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவை பரப்பாது. ஏனெனில், அதன் உரிமையாளரான மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஒரு யூதர். பலஸ்தீனம் பற்றி, நான் முகநூலில் எழுதினால் எந்த பதிவும் யாரையும் சென்று சேர்ந்து விடாமல் முடக்கி விடுகிறார்கள்.

பொருளாதார பலம் யூதர்களிடம் இருப்பதால், உண்மையான பிரச்சினை வெளி உலகிற்கு தெரியாது. ‘ஹமாஸ் இயக்கத்தினர் தீவிரவாதி’ என்று செய்தியைப் பரப்புகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், ஹமாஸ் இயக்கத்தினர் ஒருபோதும் பொது மக்களைக் கொல்வது கிடையாது.
சென்னையில் புத்தக நிறுவனம் வைத்து இருக்கும் நண்பர் ஒருவர் பலஸ்தீனம் குறித்து ஒரு கூட்டம் நடத்துவதற்காக ஒருமாதமாக முயற்சி எடுத்து வருகிறார். காவல் உயதிகாரிகளைச் சந்தித்தும் இது வரை அனுமதி கிட்டவில்லை. சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பலில் அதானி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுத்து, போரில் கள்ளக் கூட்டாளியாக இருந்ததும் இப்போது அம்பலமாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகிறார்களே ..?
பெப்சி, கோக் நிறுவனங்கள், லெவி- ஜீன்ஸ், போன்றவை யூதர்கள் நடத்துவதுதான். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் யூதர்தான். அமெரிக்காவில் இருகட்சி ஆட்சிமுறை. அங்கு தேர்தல் செலவு அதிகம். குடியரசுக்கட்சியாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் அதன் செனட்டர்கள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) இஸ்ரேலுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர்களுக்கு விளம்பரம், நன்கொடை போன்றவை கிடைக்கும். வெள்ளை மாளிகையில் யூத ஆதரவுக் கொள்கை உளளது. அதனால்தான் அமெரிக்கா ஆதரவு தருகிறது. யூதர்களுக்கு எதிராக பேசத் தொடங்கியபிறகுதான், பில் கிளின்டன் தனது உதவியாளரோடு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த பாலியல் பிரச்சினை வெடித்தது, அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதும் இதனால்தான் என்ற கருத்தும் உண்டு.

அமெரிக்காவில் பள்ளிக்குழந்தைகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெளியில் வந்து போராடினார்கள். சிறு குழந்தைகள் நடத்திய போராட்டம் என்பதால் செய்தி பரவலானது. அதன் பிறகுதான் கல்லூரி மாணவர்கள் இதைப் பற்றி கவனிக்க ஆரம்பித்தார்கள். செய்தி நிறுவனங்கள் மறைத்தாலும் டிக் – டாக் செயலி மூலம் செய்திகள் பரவ ஆரம்பித்தன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதலில் போராட்டம் தொடங்கியது. இப்போது 45 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராடி வருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் புல்தரையில் அமர்ந்து போராடுகின்றனர். 1,250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு முன்பாக அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடந்ததில்லை.
அமெரிக்க பல்கலைக்கழகங்களோடு பல உடன்படிக்கைகளை இஸ்ரேல் தொழில் நிறுவனங்கள் போட்டுள்ளன. அதை இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாக்களில் பலஸ்தீன கொடியை மேடைகளில் பிடித்தபடி வருவது சாதாரணமாகிவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ, உப ஜனாதிபதி கமலா ஹாரிசோ பொது நிகழ்வில் பேச முடிவதில்லை; இவர்களை ‘பிணந்திண்ணி’ என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஐரோப்பாவில் முதலில் போராட ஆரம்பித்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் என மற்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு தரும் ஆதரவை நிறுத்திவிட்டன. அமெரிக்காவில் ஆரோன் புஷ்லெல் என்ற விமானப்படை வீரர் ‘என் பெயரால் இந்தப் படுகொலை நடக்க வேண்டாம்’ எனச் சொல்லி இஸ்ரேலிய தூதரகம் முன்பு தன்னை எரித்துக்கொண்டார். இந்தக் காணோளியெல்லாம் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
பலஸ்தீன பிரச்சினையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ?
இரண்டாம் உலகப் போரில் 6 மில்லியன் யூதர்கள் இறந்துபோனார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், யூதர்களைக் காக்க, அதே போரில் மற்றவர்கள் 85 மில்லியன் பேர் இறந்து போனார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பலஸ்தீன மக்கள் படிப்பறிவற்ற ஏழை மக்கள். அவர்களிடம் பணத்தைக் கொட்டி மலிவாக நிலத்தை வாங்கி உருவாக்கிய நாடுதான் இஸ்ரேல். பலஸ்தீன மன்னரும் அதற்கு அனுமதியளித்தார். எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவிற்கு இஸ்ரேல் தேவைப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் தமது சொந்த மண்ணில் இருந்து 10 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். 2002 இல் இஸ்ரேல், பலஸ்தீன மக்களை அவர்கள் இடத்தில் இருந்து காலி பண்ணச் சொன்னது.

இஸ்ரேலிய நிறுவனங்கள் மூலமாக நோர்வே, இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் இருக்கும் யூதர்களை அங்கு வந்து குடியேறும்படி அழைத்தன. அப்படி வருபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 5,000 டாலர் தரப்படும். தொழிற்சாலை, விவசாயம் தொடங்குபவர்களுக்கு முழுசெலவையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்கள். அங்கு தோடை, ஒலிவ் – தான் முக்கியமான விவசாயம். ஒலிவ் மரத்தை ஜைதூன் என்று கூறுவார்கள். ஆடு மேய்த்துக் கொண்டு செல்லும் அரபுமக்களை சுட்டுவிடுவதும் உண்டு.
மக்கள் இருக்கும் பகுதிகளில், நீர்ச்சுனைகளின் சுரப்பை தடுக்கும் வகையில் சிமெண்ட் கலவைகளை கொட்டி அப்புறப்படுத்தினார்கள். எதிர்த்து யாரும் சண்டை போட்டால், அதை காரணமாக வைத்து தாக்குதல் நடத்துவார்கள். இதைப் பற்றி வெளி உலகிற்கு தெரிவதில்லை. 2004 ஆம் ஆண்டுதான் கடைசியாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் சண்டை நடந்தது. அங்குள்ள அரசை பலஸ்தீன் அதிகாரம் (Palestine Authority) என்று சொல்லுவார்கள். இதுதான் உலக அங்கீகாரம் பெற்ற அரசு. ஆனால் ஒரு பொம்மை அரசு. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் அரசு. அது மக்கள் மீது நடக்கும் எந்தக் தாக்குதலையும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அங்குள்ள போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு ஒன்றிணைப்பை (Axis of Islamic resistance) உருவாக்கின. ஆயுதம், உளவு, கல்வி, பொதுமக்கள் தொடர்பு போன்றவை இல்லாததன் காரணமாக தங்களுக்கு கடந்த காலங்களில் தோல்வி ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார்கள். செயல் திட்டத்தை வகுத்தன. ஷியா, சுன்னி என வேறுபாடு கூடாது என்றனர். 13 போராளிக்குழுக்கள் ஒன்றிணைந்து ஹமாஸ் ஆனது.
எகிப்து, ஈரான், கட்டார் நாடுகள் அவர்களுக்கு ஆதரவளித்தன. இதில் ஈரானின் பங்கு மிக மிக முக்கியமானது. உண்மையில், இந்தப் போரே ஈரானின் வழி காட்டுதலோடு நடக்கிறது என்பது தான் உண்மை. அல் ஜஷிரா என்ற அரபுத் தொலைக்காட்சி ஆங்கில ஒளிபரப்பை கொண்டு வந்தது. ஒன்பது வருடமாக 2,000 கி.மீ நீளத்திற்கு இரத்த நாளங்களைப் போன்ற வலைப் பின்னல் கொண்ட சுரங்கங்களை எகிப்து வரை உருவாக்கினார்கள்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஒக்ரோபர் 7 ம் நாள் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதலைத் தொடுத்தார்கள். 250 பேர்களை ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்து சென்றார்கள். அதில், இஸ்ரேல் நாட்டின் இராணுவத் தளபதியும், உள்ளாடையோடு பணயக் கைதியாக இருந்தார். ‘பலஸ்தீனம் இல்லாத இஸ்ரேல்’ என்று கூறி வந்த நேத்தன்யாகு செய்வது அறியாமல் திகைக்கிறான். டிசம்பரில், அமெரிக்க தேர்தலில் அதிபராக டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் மிகுந்த பிற்போக்குவாதி, கிட்டத்தட்ட ஒரு அரைப் பைத்தியம் என்ன செய்வான் என்று சொல்ல முடியாது. அவன் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பான். அதுவரை இந்தப் போரை நீடிக்க நேத்தன்யாகு விரும்புகிறான்.
இதன் முடிவு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள் ?
பலஸ்தீன மக்களுக்கு இது வாழ்வு சாவா பிரச்சினை. அகதி முகாமில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனிஅறை என்றால் என்ன என்று தெரியாது. இந்த முகாமில் உள்ள மணமகனுக்கும், அந்த முகாமில் உள்ள மணமகளுக்கும் என்று பேசி திருமணம் நடக்கிறது. இஸ்ரேல் சுவரை புல்டோசரை வைத்து இரண்டு இடங்களில் இடித்து உள்ளே சென்று போராளிகள் தாக்கியுள்ளனர்.
பலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் நெதன்யாகுவை தடுக்க முடியாதா?
நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து, கைது செய்ய பிடியாணை கொடுத்துள்ளது. முப்பது ஆண்டுகளாக பிரதமராக இருந்த நேதன்யாகு, உள்நாட்டில் டாங்குகளை தனியாருக்கு கொடுத்ததில் ஊழல் என அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. அவர் பதவி இழந்த மறுநிமிடம் அவர் அந்த நாட்டு சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்! 120 பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட அவையில் 64 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். உள்நாட்டில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 250 பேரில் விடுவிக்கப்பட்ட 100 பேர் உயர்சாதி, மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள். எனவே மீதமுள்ளவர்களை விடுவிக்க கோரி உறவினர்களின் போராட்டம் வலுவடைந்து விட்டது. இஸ்ரேலிய பொருளாதாரம் நிலை குலைந்து விட்டது.

கடந்த ஒக்ரோபர் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 37,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதைவிட அதிக எண்ணிக்கையில் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். செங்கடல் பகுதியில் சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேலுக்கு வரும் கப்பல்களை ஹுத்தி இயக்கத்தினர் தாக்குகின்றனர். இதனால் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இஸ்ரேல் நாட்டிற்குள் ஹிஸ்புல்லா படையினர் புகுந்து விட்டனர். எகிப்து பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் எதிர்த்து நிற்கின்றனர். வடக்கு, தெற்கு, செங்கடல் என எல்லா பக்கமும் சூழப்பட்ட இஸ்ரேலுக்கு, உள்நாட்டிலும் நெருக்கடி. 20,000 இஸ்ரேல் போர் வீரர்கள் மனநிலை பிறழ்ந்து உள்ளனர்.
போராளிக் குழுக்களின் ஆயுதங்கள் துல்லிய தாக்குதலை நடத்துகின்றன. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வெகு விரைவில், அதாவது, ஆறு மாத காலத்துக்குள் வரும் என்றே நம்புகிறேன். இஸ்ரேல் தோற்றுப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது. இஸ்ரேல் ஒருவேளை லெபனான் மீது தாக்குதல் நடத்தினால், அது தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கு சமம்.. ஆனாலும் நெதன்யாகு பிடிவாதமாக, ”இந்த போரை துவங்கியே தீருவேன்” என்று அறிவித்திருக்கிறான். ஒரு வேளை இஸ்ரேல் ஈரானைத் தாக்கி, அதையும் இந்த போரில் ஈடுபடுத்தினால் அது மத்திய கிழக்குப் போராக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது.

பிரபல தொலைக் காட்சி தொடர் எழுத்தாளராக அறியப்பட்ட நீங்கள் பலஸ்தீன பிரச்சினை குறித்த எப்படி இவ்வளவு ஆழமாக பேசுகிறீர்கள் ?
ஈழத் தமிழர் பிரச்சினை, மியான்மர் நாட்டில் நடந்த ரோகிங்கா முஸ்லிம்கள் மீதான படுகொலை, காஷ்மீர் மக்களின் போராட்டம் என இன விடுதலை தொடர்பான செய்திகளை நான் எப்போதுமே கவனித்து வந்திருக்கிறேன். அப்படிதான் பலஸ்தீன பிரச்சினையையும் பார்க்கிறேன்.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்