மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்

– எஸ்.வி.ராஜதுரை

ம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறை உள்ளவர்களோ விமர்சனப் பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிசமும்  கம்யூனிசம் பற்றி – குறிப்பாக  சேன் சிமோன் (Saint-Simon), சார்ல்ஸ் ஃ பூரியே (Charles Fourier),  இராபர்ட் ஓவன் (Robert Owen) ஆகியோரைப் பற்றி முதன் முதலாக அறிந்து கொள்வது மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்துதான் என்று கருதலாம். அதன் பிறகு அவர்களைப் பற்றிய விரிவான விளக்கங்களை எங்கெல்ஸின்  கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்டூரிங்குக்கு மறுப்பு ஆகிய நூல்களிலிருந்து அறிந்திருப்பர்.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூன்றாம் பகுதியான ‘சோசலிச  மற்றும் கம்யூனிச இலக்கியம்’ என்பதன் உள்பிரிவுகளில் ஒன்றான ‘விமர்சனப் பகுப்பாய்வு கற்பான சோசலிசமும் கம்யூனிசமும்’ ( Ciritical-Utopian Socialism and Communism)  என்ற பகுதியில் அவர்கள்  வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு  கற்பனா சோசலிசவாதிகள் இருந்தபோதிலும் அவர்கள் முதன்மைப்படுத்துவது மேற்சொன்ன மூவரைத்தான். ‘கற்பனா சோசலிசம்’ என்பதன் மூலவர் 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேயத் தத்துவவாதியும் எழுத்தாளருமான சேர் தோமஸ் மூர் (Sir Thomas Moore)  என்பவர்தான். அவர் இலத்தின் மொழியில் முதன் முதலில் எழுதிய இரு பாகங்களைக் கொண்ட ‘யூட்டோப்பியா’  (Utopia) என்ற நாவல்தான் கற்பனா சோசலிசத்தின் மூலவேர் என்று கருதப்படுகிறது. Utopia  என்ற ஆங்கிலச் சொல், ‘நல்லது’ என்று பொருள்படும்  εὐ- [eu-], ’இடம்’ என்று பொருள்படும் οὔ ஆகிய இரு கிரேக்கச் சொற்களின் இணைப்பு ஆகும்.  ஒரு பூசந்தியிலிருந்து வெட்டிப் பிரிக்கப்பட்டு செயற்கையாக உருவாக்கப்ப்ட்ட ஒரு தீவில் அனைவரும் சமத்துவத்துடன் வாழ்வதாகக் கற்பிதம் செய்யப்படும் ஒரு சமுதாயத்தைக்  குறிக்கவே தோமஸ் மூர்  Utopia   என்ற சொல்லைப் பயன்படுத்தி அந்தப் பெயரையே தன் நாவலுக்கும் சூட்டினார்.  ஆனால், அவர் வர்ணிக்கும் சமுதாயம் நிலப்பிரபுத்துவச் சமுதாயம்தான் என்று மார்க்ஸிய அறிஞர் ஹால் ட்ரேப்பர் கூறுகிறார். 

அதன் பிறகு 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார்  தொமாஸ்ஸோ  காம்பெனெல்லா (Tommaso Campanella)  தனிச்சொத்து ஏதுமில்லாத,  எல்லோரும்  சரிசமமாக  வாழ்கின்ற  ஆனால் கத்தோலிக்க மதம் சார்ந்த  ஒரு கற்பனா சமுதாயத்தைப் பற்றிய  ‘சூரியனின் நகரம்’  (The City of the Sun)  என்ற நாவலை எழுதினார்பின்னர் 18-19 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்தவரும் மார்க்ஸின் சமகாலத்தவரும் பிரெஞ்சுத்  தொழிலாளர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவருவருமான  எத்தியென் காபெ  (Etien Cabet)  எல்லோரும்  சரிசமாக  வாழ்கின்ற  ஒரு  சமுதாயம்  பற்றிய   ‘ஐகேரியாவுக்கான பயணம்’ (Voyage en Icarie)  என்ற  நாவலில்  தன்  கருத்துகளை விளக்கியிருந்தார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அவரது பற்றாளர்களின் குறுங்குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ‘ஐகேரியன்கள்’, ‘ஐகேரியக் கம்யூனிஸ்டுகள்’, ‘கம்யூனிஸ்டுகள்’, ‘காபெவிஸ்டுகள்’ என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். காபெ, 1840களில் சிறிதுகாலம் இலண்டனிலிருந்த ‘நீதியாளர் கழகத்’தின்மீது (இதுதான் பின்னர் ‘கம்யூனிஸ்ட் கழகம்’ ஆயிற்று) செல்வாக்குச் செலுத்திவந்தார். 1848ஆம் ஆண்டுத் தொடக்கம்வரை பிரான்ஸில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ‘ஐகேரியன்கள்’, 1848 பெப்ரவரி புரட்சி வெடித்தபோது, அதிலிருந்து விலகி நின்றனர். கொந்தளிப்பான நிலைமைகளிலிருந்து தப்பிச்செல்ல விரும்பினர். 1848 டிசம்பரில் காபெ தனது இயக்கத்தைப் புதைத்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்று, அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் ‘ஐகேரியா’ குடியேற்றமொன்றை நிறுவ முயற்சி செய்து வந்தார். 1854இல் அமெரிக்கக் குடிமகன் தகுதி பெற்ற அவர் நிறுவிய ‘ஐகேரியா’ குடியேற்றம், அதிலிருந்தவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தகர்ந்து விழுந்தது.   கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய அடிக்குறிப்பொன்றில், “தனது கற்பனா உலகிற்கும், பின்னாளில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் குடியிருப்புக்கும் காபெ கொடுத்த பெயர் ‘ஐகேரியா’ ” என்று எங்கெல்ஸ் எழுதினார். 1890ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய அடிக்குறிப்பொன்றில், “ஐகேரியா என்பது, காபெவால் வர்ணிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் நிறுவனங்களைக் கொண்ட கற்பனா நாட்டின் பெயர்” என்று விளக்கினார்.

ஆனால் இந்தக் கற்பனாவாத சோசலிஸ்டுகளை முற்றிலுமாகப் புறக்கணித்த, கடுமையாக விமர்சித்த மார்க்ஸும் எங்கெல்ஸும் சேன் சிமோன், பூரியே, இராபர்ட் ஓவன் ஆகியோர்  முதலாளிய சமுதாயத்திலிருந்த வர்க்க முரண்பாடுகள், பகைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் சமூக ஆய்வுகளைச் செய்தனர் என்பதைக் குறிப்பிட்டு, அவர்களால் விமர்சிக்கப்படும்  பிற ‘சோசலிஸ்டுகளுக்கு’ மாறாக, இந்த  மூன்று விமர்சனப் பகுப்பாய்வு-கற்பனா சோசலிஸ்டுகள், பூர்ஷ்வா சமுதாயத்தின் வர்க்க அடிப்படையை மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தையும் அதன் காரணமாகவே  ‘விமர்சனப் பகுப்பாய்வு சோசலிசம்’ பிற  சோசலிசங்களை விட முக்கியமானதாக இருந்ததையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் நவீனப் பாட்டாளி வர்க்கம் வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே தோன்றியவர்களாதலால், பாட்டாளிவர்க்கத்தின்  உண்மையான புரட்சிகரமான உள்ளுறையாற்றல்களைப் பற்றிச் சிந்திக்க இயலாதவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் புரட்சிகரமானதாக இல்லாத, கற்பனாவாத முறையில் சோசலிசத்தை உருவாக்க முனைந்தனர். இவர்கள் காலம் கனிவதற்கு முன்பே   தோன்றியதால், தங்கள் சோசலிசத்துக்கான ஒரு சமூக அறிவியல், அந்த சோசலிசத்தை சாதிப்பதற்கான குறுங்குழுக்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்ததுடன், முதலாளிய சமுதாயத்தை விட சிறந்த சமுதாயத்தை ‘சோசலிச’ சமுதாயத்தைத் தாமாகவே முன்வந்து உருவாக்க வேண்டும் என்று அதிகாரமும் செல்வமும் படைத்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அரசியல் போராட்டங்களில் அவர்கள் அக்கறை காட்டாததற்குக் காரணம் அவை, தங்கள் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களை, ஆதரவாளர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து ஓடிவிடச் செய்யும் என்று கருதினார்கள். முதலாளிய வளர்ச்சி துரிதமடைய அடைய, பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கான சாத்தியப்பாடு திட்டவட்டமான வடிவங்களை எடுத்து வருகையில், கற்பனாவாத சோசலிஸ்டுகளின் ஆலோசனைகளும் திட்டங்களும் மேன்மேலும் பொருத்தப்பாடு அற்றவைவையாக அமைந்தன என்று கருதிய மார்க்ஸும் எங்கெல்ஸும் அவர்களின் கருத்துகளை, அவர்களது ஆதரவாளர்கள், சீடர்களின் குறுங்குழுவாத வறட்டுக் கோட்பாடுகள், வர்க்கப் போராட்டத்தைவிடத் தங்களது ஆசான்களின் கருத்துகளே முக்கியமானவை என்ற அவர்களது நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தவும்  அவர்களது ஆதரவாளர்கள், சீடர்கள் ஆகியோரைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர். அவர்கள் உருவாக்கிய முன்மாதிரியான சமூகங்கள், வர்க்கப் போராட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பும் என்று கருதினர்.

தற்போது நாம் மேற்சொன்ன மூவரின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் சற்று விரிவாகக் காண்போம்.

  1. சேன் – ஸிமோன் (Claude-Henri de Saint – Simon, 1760-1825)

“மாபெரும்  பிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர்களிலொருவர்” என்று எங்கெல்ஸால்  ‘டூரிங்குக்கு மறுப்பு’ நூலில் பாராட்டப்பட்ட (MECW 25:245) சேன் – ஸிமோனின் தத்துவத்தைப் பற்றிய  சுருக்கமான விளக்கம் பின்வருமாறு:

சேன் – ஸிமோனிசத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் கட்டம்: 1814-1815ஆம் ஆண்டுகளில் சேன் – ஸிமோன் எழுதிய கட்டுரைகளில்  காணப்படும் கருத்துகள். விஞ்ஞானம், பகுத்தறிவு, அறிவாளிகள் ஆகியோரைப் போற்றிப் புகழும் கருத்துகளுடன் அருவமான மனிதநேயக் கோட்பாடுகளும் அக்கட்டுரைகளில் காணப்படுகின்றன. ஸேன் – ஸிமோனிய சமூக – பொருளாதாரக் கருத்துகள் கருநிலையிலிருந்த கட்டம் அது.

Claude-Henri de Saint – Simon

இரண்டாவது கட்டம்: அவரது வாழ்நாளின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்ட படைப்புகளில் காணப்படும்  கருத்துகள். முதலாளித்துவம் என்பது உலகில் நிலவும்  இயல்பான, நிரந்தரமான அமைப்பு என்பதை மறுத்து, பகைமையும் போட்டியும் நிலவுகிற அமைப்புக்குப் பதிலாக மக்களிடையே ஒத்துழைப்பும் கூட்டுறவும்  நிலவுகிற சமுதாய அமைப்பு உருவாகும்; அதாவது நிலப்பிரபுக்கள், ஒட்டுண்ணிகளாக வாழ்க்கையை நடத்தும் பூர்ஷ்வா சொத்துடைமையாளர்கள் ஆகியோரின் பொருளாதார, அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு ‘தொழிலுற்பத்தியாளர்களின் சமுதாயம்’ (Society of the Industrialists) உருவாகும் என்னும் கருத்துகள் இப்படைப்புகளில் விரவியுள்ளன.

தான் வாழ்ந்த காலகட்டத்தில் சமுதாயம் சோம்பேறிச் சொத்துடைமையாளர்கள், உழைக்கும் தொழிலதிபர்கள் என்ற இரண்டு முதன்மையான வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாக சேன் – ஸிமோன் கருதினார். பெரும் நிலப்பிரபுக்கள், மூலதனத்தை வட்டிக்கு விடுதல், வீடுகளையும் கட்டடங்களையும் வாடகைக்கு விடுதல் என்பன போன்ற வழிகளில் வருமானம் ஈட்டும் முதலாளிகள், இராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலிருந்த அதிகாரிவர்க்கத்தினர் (இவர்கள் பிரான்ஸின் 1830 ஜூலைப் புரட்சிக்குப் பிறகு ஏற்றம் பெற்றதாக ஸேன் – ஸிமோன் கருதினார்) ஆகியோர் முதல் பிரிவினர்; அவர்களது வருமானங்கள் நியாயமற்றவை; சமூக ரீதியில் பயனுள்ள செயல்பாடுகளைச் செய்யும் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், கைவினைஞர்கள், வங்கித் தொழில் செய்பவர்கள், தொழிற்சாலை உடைமையாளர்கள், வாணிபர்கள், அறிவாளிகள், கலைஞர்கள் ஆகியோர் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது வருமானங்கள் நியாயமானவை.

தொழிலுற்பத்தியாளர்களும் தொழிலாளிகளும் பொருளுற்பத்தியில் பங்கேற்பதால் இவ்விருசாராருமே ஒரே வர்க்கமாக அமைகிறார்கள் என்று சேன் – ஸிமோன் கருதினார்.  தொழிலுற்பத்தியாளர்கள் அல்லது முதலாளிகள் என்பவர்களோ உற்பத்தி இயக்கத்தின் தலைவர்கள்; தொழிலாளிகளோ உற்பத்தியைச் செயல்படுத்துபவர்கள் என்பது ஸேன்- ஸிமோனின் கருத்து. இதனால்தான் சேன் – ஸிமோனிடம் ஒரு பாட்டாளி வர்க்கப் போக்கு, ஒரு வகை பூர்ஷ்வா போக்கு ஆகிய இரண்டுமே இருப்பதாக எங்கெல்ஸ் ஒரு முறை கூறினார். அரசியல் போராட்டம், புரட்சி ஆகியன மீது எதிர்மறையான  நிலைப்பாடுக்ளை சேன் – ஸிமோன் கொண்டிருந்ததால், ஏழைகள் மீது அன்பு காட்டும்படி செல்வந்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தார். பிரெஞ்சு மன்னனிடமும் ஆளும் வர்க்கங்களிடமும் திருச்சபை மூலம் மனமாற்றம் ஏற்படுத்தும் பொருட்டு, புதுப்பிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ மதத்தை உருவாக்குவதில் தனக்கு ஒத்துழைக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனினும், எண்ணிக்கையில் மிகப் பெரிய, எல்லோரையும் பார்க்க மிகவும் ஏழ்மைப்பட்டிருந்த வர்க்கத்தின் மீதே அவர் தனிக் கவனம் செலுத்தினார்.

தொழிலாளர்கள், கைவினைஞர்கள், தங்கள் சொந்த மூலதனத்தை முதலீடு செய்யும் முதலாளிகள் ஆகியோரடங்கிய இலட்சிய சமுதாயத்தை சேன் – ஸிமோன் உருவாக்க விரும்பினார். ஆனால், இந்த சமுதாயத்தில் முதலாளிகள் தங்கள் செல்வத்தைத் துய்த்து, வேலை செய்யாமல் காலத்தைக் கழிக்க முடியாது. இங்கு எல்லோரும் கட்டாயமாக வேலை செய்தாக வேண்டும். எதிர்காலச் சமுதாய அமைப்பில் செல்வந்தர்கள் மக்களின் சேவகர்களாக இருப்பர்; சமுதாயம் நிலைப்பதற்குத் தேவையான பணிகளை ஒழுங்கமைப்பர். அந்த சமுதாயத்தின் பொது நலன்களை விஞ்ஞானிகள், கலைஞர்கள், தொழிலுற்பத்தியாளர்கள் ஆகியோர் பேணிப் பாதுகாப்பர்; அரசு நிர்வாகத்தை மேற்கொள்வர். உலகியல் விடயங்களைத் ‘தொழிலுற்பத்தியாளர் குழு’வும் (Council of Industrialists), ஆன்மிக விடயங்களை ‘விஞ்ஞானங்கள் அகாதமி’யும் (Academy of Sciences)  நிர்வகிக்கும். இவையிரண்டும் சேர்ந்து தேசியப் பொருளாதாரம் முழுவதையும் திட்டமிட்ட முறையில் ஒழுங்கமைக்கும். இவ்வாறு,  தான் உருவாக்க விரும்பிய எதிர்கால சமூக அமைப்பை  சேன் – ஸிமோன் ‘சங்கம்'(Association)  என்றழைத்தார்.  இது பூர்ஷ்வா தனிமனிதவாதத்திலிருந்தும் முதலாளிய உற்பத்தியின் ஒழுங்கற்ற தன்மையிலிருந்தும் விடுதலை பெற்ற சமுதாய அமைப்பு. அனைத்து வகை உற்பத்திக்கும் மிகச் சாதகமான சூழலை உருவாக்கும் இச்சமுதாய அமைப்பில், மக்களின் நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்படுமாதலால், அங்கு கிளர்ச்சிக்கோ கிளர்ச்சி செய்பவர்களை ஒடுக்கும் போலீசுக்கோ தேவையிருக்காது. இத்தகைய சமுதாய அமைப்பை உருவாக்குவதற்கு வன்முறையை நாடக்கூடாது. செல்வந்தர்களிடம் மனமாற்றம் ஏற்படத் தீவிரப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்-இவ்வாறு அவர் சிந்தித்தார். அவர் கடைசியாக எழுதிய புதிய கிறிஸ்துவம் என்னும் நூலில், அவர் முழுக்க முழுக்கப் பாட்டாளி வர்க்கச் சார்பாளராகவே இருப்பதைப் பற்றி மார்க்ஸ், மூலதனம் மூன்றாம் பாகத்தில் பாராட்டி எழுதியுள்ளார். எனினும் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்குமிடையிலான முரண்பாட்டை ஸேன் –  ஸிமோன் பார்க்கவில்லை அல்லது அதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கருதலாம். தனியுடைமையை ஒழிப்பதற்குப் பதிலாக அது தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்தார். எதிர்காலத்தில் அது ஒழிக்கப்படும் என்று கருதுவதற்குப் பதிலாக அதனை சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நினைத்தார்.

மூன்றாவது கட்டம்: சேன் – ஸிமோனின் கருத்துக்கள் அவரது வாழ்நாளில் செல்வாக்குப் பெறவில்லை. எனினும், அவற்றை வளர்த்தெடுத்துப் புதிய விளக்கங்களைச் சொல்லக் கூடிய சீடர்கள் ஒருசிலரை அவர் உருவாக்கியிருந்தார். அவர்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதிப் போற்றி வந்தனர். ஸேன் – ஸிமோனின் கருத்துகள் அவரது மறைவுக்குப் பின்னர் கோட்பாட்டு வடிவம் பெற்றன. அவரது சீடர்களிலொருவரான அர்மாந்த் பஸார்ட் ( Armond Basard) என்பார், பாரிஸில் ‘சேன் – சிமோனியக் கோட்பாட்டு விளக்கம்’ என்ற தலைப்பில் 1828இல் ஆற்றிய சொற்பொழிவுகள்தான் சேன்-ஸிமோனியக் கோட்பாட்டின் தொடக்கமாக அமைந்தன. 1828-29ஆம் ஆண்டுகளில் பஸார்டும் சேன் – ஸிமோனின் மற்றொரு சீடரான பார்த்தலெமி ப்ராஸ்பர் ஆன்ஃபன்தெனும் (Barthelemy Prosper Enfantin) ஆற்றிய சொற்பொழிவுகள் ஒன்றுதிரட்டப்பட்டு, சேன் – ஸிமோனின் கோட்பாடுகள்ஒரு விளக்கம் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.

சேன் –  ஸிமோனின் இறப்புக்குப் பிறகு- 1837ஆம் ஆண்டு வரை -அவரது  சீடர்கள் எழுதியவை, பேசியவை, அவர்களது செயல்பாடுகள் ஆகியன சேன் – ஸிமோனியத்தின் மூன்றாவது கட்டமாக அமைகின்றன. அந்த கட்டத்தில்தான் சேன் –   ஸிமோனியம் உண்மையான  சோசலிசக் கோட்பாடாக மலர்ந்தது. உற்பத்திச் சாதனங்களின் தனியுடைமையை ஒழித்தல், உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்பப்  பொருள்களைப்  பகிர்ந்தளித்தல்,  உற்பத்தியை சமூகரீதியில் திட்டமிட்டு அமைத்தல் ஆகிய முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. வர்க்கங்கள், உடைமைகள் ஆகியன பற்றி சேன் – ஸிமோன் கூறிய கருத்துகளுக்கு அவரது சீடர்களும் ஆதரவாளர்களும் சோசலிச விளக்கங்கள் தந்தனர். ‘தொழிலுற்பத்தியாளர்கள்’ என்போர் தனியொரு வர்க்கமோ, ஒரேபடித்தான வர்க்கமோ அல்ல என்றும், தனியுடைமையாளர்கள் தொழிலாளர்களைச் சுரண்டுவதில்தான் போய் முடிகின்றனர் என்றும், முதலாளியத் தொழிலுற்பத்தியாளர்கள் சுரண்டல்வாதிகளே தவிர வேறல்லர் என்றும் அவர்கள் கூறினர்.

தனியுடைமையும் சுரண்டலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை; தனியுடைமையை வரம்புக்குட்படுத்த சொத்து  வாரிசு உரிமை ஒழித்துக்கட்டப்பட வேண்டும்; அரசு மட்டுமே நாட்டிலுள்ள எல்லா உடைமைகளுக்குமான ஒரே வாரிசாக ஆக்கப்பட வேண்டும்; அது பொருளுற்பத்திக்கான மூலவளங்களை தொழிலுற்பத்தியாளர்களுக்கு வாடகைக்குவிட வேண்டும்; தொழிலுற்பத்தியாளர்கள் சமுதாயத்தின் முகவர்களாக மாறுவர்; இவ்வாறு தனியுடைமை படிப்படியாக பொதுவுடைமையாக மாறும்; எதிர்காலச் சமுதாயத்திற்கான பொருளாயத அடிப்படை பழைய சமுதாயத்திலேயே உள்ளது; உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் தர்க்க ரீதியான விளைவாக சோசலிசம் உருவாகியே தீரவேண்டும்; முதலாளியக் கடன் வழங்கு வங்கி முறை, எதிர்காலத் திட்டமிடப்பட்ட மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது – இத்தகைய கருத்துகள் சேன் – ஸிமோனியவாதிகளால் பரப்பப்பட்டுவந்தன- இவை  ஸேன் –   ஸிமோனிடம் இருக்கவில்லை என்னும் போதிலும்.

உழைப்பின் மதிப்பு, மதிப்பின் உருவாக்கம், மதிப்பின் விநியோகம் ஆகியன பற்றிய விளக்கங்கள், முதலாளிய உற்பத்தி முறையின் காரணமாக ஏற்படக்கூடிய நெருக்கடிகள் பற்றிய ஆழமான புரிதல்கள் ஆகியன  சேன் -ஸிமோனியத்தில் இருக்கவில்லை என்றாலும் சோசலிசக் கருத்துகளின், இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவை பெரும் தூண்டுதலாக அமைந்தன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும், அதன் மீது கட்டுப்பாடு செலுத்துவதிலும்,  பொதுக் கணக்குகளைப் பராமரிப்பதிலும் முதலாளியத்தால் உருவாக்கப்பட்ட பெரிய வங்கிகள் வகிக்கும் பாத்திரம் சோசலிச சமுதாயத்திலும்கூட வேறு வடிவத்தில் தொடரவே செய்யும் என்பதை மார்க்ஸியம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் கடன் வழங்கு வங்கிமுறை பற்றிய சேன் – ஸிமோனியக் கருத்துகள் பிற்காலத்திய சேன் – ஸிமோனியர்களால் குட்டி-பூர்ஷ்வாத்தன்மை வாய்ந்த கடன் வழங்கு வங்கி முறையாக மாற்றப்பட்டு, அவர்கள்  உருவாக்க விரும்பிய  சங்கங்களின் குழாம்களின் மிக முதன்மையான அம்சமாக மாற்றப்பட்டது.

1830ஆம் ஆண்டில் பிரான்ஸில் புரட்சிகரக் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, சேன் -ஸிமோனியம் நாடு தழுவிய கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. அச்சமயம் பஸார்டும் ஆன்ஃப்ந்தானும் ஸேன் – ஸிமோனிய இயக்கத்தின் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர்.

1831ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சேன்-ஸிமோனிய  இயக்கத்தினர், அவ்வியக்கத்தில் சேர்ந்த பியர் லெரோ (Pierre Leroux) என்பவருடைய துணையுடன் ‘புவிக்கோளம்’ (Globe) என்ற பெயரைக் கொண்ட ஒரு கூட்டு வாழ்வில்லத்தை விலைக்கு வாங்கினார். அப்போது பிரெஞ்சு நாட்டின் மிகத் திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் அவ்வியக்கத்தில்  சேர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களில் பாரிஸ் நகரத்தின்  பல்கலைப் பள்ளி (Ecole Polytecnique)  மாணவர்களும் அடங்குவர். ஸேன் – ஸிமோனிய இயக்க உறுப்பினர்கள் மூன்று படிநிலைகளைக் கொண்ட கூட்டு வாழ்வு அமைப்பினை உருவாக்கி பாரிஸ் நகரத்தின் மோஸினி தெருவில் (Rue Mosigny)  ஒரு கூட்டு வாழ்வில்லத்தை (அதை ‘சங்கம்’ என்றும் ‘குடும்பம்’ என்றும் அழைத்தனர்) உருவாக்கினர்.

நான்காவது கட்டம்: 1831ஆம் ஆண்டு முதல் சேன் – ஸிமோனியத்தின் நான்காவது கட்டம் தொடங்கியது எனலாம். அந்தக் கட்டம் அதனுடைய வீழ்ச்சியைக் குறிப்பதாகவும் அமைந்தது. பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்திடையே அதற்கு உறுதியான ஆதரவு இல்லாமல் போனதால், அவ்வர்க்கத்தின் முதல்  புரட்சி நடவடிக்கைகள் சேன் – ஸிமோனியர்களிடையே திகைப்பை உண்டாக்கியது. மேலும், புதிய  கிறிஸ்துவம் நூலில் சேன் – ஸிமோன் எழுதியவற்றுக்கு விளக்கங்கள் தருவதில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. சங்கக் கோட்பாட்டை பஸார்ட், ஆன்ஃபந்தென் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டனர். அதே போல  சங்கச் சமுதாயத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள இடம், அவரவரது வேலைகளுக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும் என்பதிலும் அவர்களிடையே கருத்தொற்றுமை இருந்தது. எனினும், கூட்டுவாழ்வுச் சமுதாயத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செய்வதற்குத் தகுதியுடைய விஞ்ஞானிகளின், ஆன்மிகவாதிகளின் தலைமைக்கான தகுதி தன்னிடம் மட்டுமே இருப்பதாக ஆன்ஃபந்தென் கருதினார். அவரே ஒரு புதிய மதகுருவாக மாறினார். புதிய புரோகித முறையை உருவாக்கினார்.

குடும்பம், ஆண் – பெண் உறவுகள் ஆகியவற்றைப் பொருத்தவரை, பெண்களின் முழுமையான விடுதலை, ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே முழுமையான சமத்துவம் என்பன இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உடலை வருத்துதல், புலனடக்கம் ஆகிய கத்தோலிக்கக் கிறிஸ்தவக் கொள்கைகளுக்கு மாறாக, ‘உடலுக்கு அதற்குரிய கெளரவமான இடத்தைத் திரும்ப ஒப்படைத்தல்’ என்னும்  கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இக்கோட்பாட்டிற்கு விளக்கம் கொடுப்பதில் பஸார்ட், ஆன்ஃபாந்தென் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே தடையற்ற காதல், தடையற்ற உறவுகள் ஆகியவற்றை ஆன்ஃபந்தென் போற்றியொழுகத்தக்க சமய நெறி போலப் பிரசாரம் செய்தார். ‘திருமணத்தின் கொடுங்கோன்மை’க்குப் பதிலாக, சங்கச் சமுதாயத்தில் தடையற்ற ஆண்- பெண் உறவு இருக்கும் என்றார். அதேவேளை தாய்மையையும் போற்றினார். ஆண் – பெண் உறவுகள், கூட்டுவாழ்வுக் குழாமில் பெண்களுக்குரிய இடம் ஆகியன குறித்த அவரது இந்த நிலைப்பாடும், அவர் ஒரு சமய குரு போல நடந்துகொண்டதும் பஸார்டும் அவரது ஆதரவாளர்களும் சேன் -ஸிமோனியக் சங்க வாழ்வியக்கத்திலிருந்து விலகி வெளியேறும்படி செய்தன. அதனையடுத்து 1832-ஆம் ஆண்டில் கூட்டு வாழ்வு இல்லத்தினர் அடுத்தடுத்துப் பல ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் பாரிஸ் நகரில் ஆன்ஃபாந்தென்னுக்குச் சொந்தமானதாக இருந்த மொரிமோந்தான் (Merimontants)  என்னும் இடத்திற்குச் சென்று அங்கு கூட்டுவாழ்வில்லத்தை நடத்தி வந்தனர். அவர்கள் எல்லோரும் ஒரேவிதமான சீருடை உடுத்த வேண்டும் என்னும் விதி உருவாக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் முழுவதிலும் தனக்கு 40,000 ஆதரவாளர்கள் இருப்பதாகக் கூறிவந்த ஆன்ஃபந்தென் தனது உடையின் மார்புப் பகுதியில் ‘குரு’ (le pere) என்ற எழுத்துகள் பொறித்த பாட்ஜினை எப்போதும் அணிந்து கொண்டிருந்தார். அவரது சீடர்களால் ‘உயிர் வாழும் வேதம்’ என்றழைக்கப்பட்ட அவர்,  தான் ‘கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்’ என்று அறிவித்தார். ‘பெண் தீர்க்கதரிசி’யாகவும் ‘புதிய இரட்சகரொருவரின் தாயாகவும்’ இருக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளுக்குத் தன் தூதுவர்களை அனுப்பினார். தான் வெறும் இறைத்தூதர் மட்டுமல்ல, கடவுளின் வார்த்தையின் அவதாரமே என்றும் அறிவித்தார். தனது கருத்துகளை,  நிலையான வாழ்க்கைகடந்த காலம் – நிகழ்காலம் – எதிர்காலம் என்ற நூலில் விரிவாக விளக்கினார்.

1830ஆம் ஆண்டு ஜூலைப் புரட்சிக்குப் பிறகு ஆட்சிக்குவந்த ஆர்லியன்ஸ் முடியாட்சி அரசாங்கம், ஒழுக்கக்கேடான நடத்தை முறைகளைப் பின்பற்றியதாகவும் அபாயகரமான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஆன்ஃபந்தென் மீதும் அவரது குழுவினர் மீதும் குற்றம் சாட்டி ஆன்ஃபந்தெனுக்கு ஓராண்டுக் காலச் சிறைத் தண்டனை வழங்கியது. சிறைத் தண்டனை முடிந்து வெளிவந்த பிறகு ஆன்ஃபந்தெனும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் எகிப்துக்குச் சென்று அங்கு சிறிது காலம் வாழ்ந்தனர். அவர்களிற் பலர் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். கடைசி வரை தனது கொள்கைகளைக் கைவிடாதிருந்த ஆன்ஃபந்தென் பிரெஞ்சு நாட்டுக்குத்  திரும்பி வந்து 1864இல் காலமானார். இவ்வாறு 1832லேயே சேன் -ஸிமோனியத்தின் அமைப்பு வடிவமும் இயக்கமும் வீழ்ச்சியடைந்தன. அதன் உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக சோசலிசப் போக்குகளுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். மற்றவர்கள் ‘மரியாதைக்குரிய பூர்ஷ்வா குடிமக்களாக’ மாறினர். எனினும், பிரான்சிலும்  இதர நாடுகளிலும் சோசலிசக் கருத்துகளின் பிற்கால வளர்ச்சிக்கு ஸேன் -ஸிமோனியம் பெரும் பங்களிப்புச் செய்தது. உலகம் முழுவதையும் ஒன்றிணைத்து ஒரேவகையான அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்பிய ஸேன்-ஸிமோனிய இயக்கத்தில் உறுப்பினர்களாக  இருந்தவர்கள் பலர் புகழ்பெற்ற பொறியியலாளர்களாகவும், பொருளாதாரவாதிகளாகவும், வணிகர்களாகவும் மாறினர். சூயஸ் கால்வாய்த் திட்டத்தை முதலில் வகுத்தவர்களே சேன்-ஸிமோனியர்கள்தான். அத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய லெஸ்ஸெப்ஸ் (Lesseps) என்பவர், சேன்-ஸிமோனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2.சார்லெஸ் ஃபூரியெ (Charles Fourier, 1772 – 1837)

Charles Fourier

சோசலிச முன்னோடிகளிலொருவரான ஃபூரியெவும்  சேன்-ஸிமோனைப் போலவே ஒரு பிரெஞ்சுக்காரர்தான். முதலாளிய சமுதாயத்தின் பொருளாதார, அறவியல் சீரழிவை அம்பலப்படுத்திய ஃபூரியெ, அச்சமுதாயத்தில் நிலவிய பாலுறவு வடிவங்களையும், அங்கு பெண்களுக்கிருந்த நிலைமையையும் கடுமையாக விமர்சித்தார். “எந்தவொரு சமுதாயத்திலும் பெண்களுக்குக் கிட்டியுள்ள விடுதலையின் அளவு பொது விடுதலையின் அளவுக்கான இயற்கையான அளவுகோலாகும் என்று முதன்முதல் கூறியவர் அவர்” என்று கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்னும் நூலில் எங்கெல்ஸ் பாராட்டியுள்ளார்.  இதே கருத்தை மார்க்ஸின்  பொருளாதார, தத்துவக் கையெழுத்துப்படிகள் 1844’  (Economic and Philosophic Manuscripts 1844) என்ற தொகுப்பில் அடங்கியுள்ள  கட்டுரையிலும் காணலாம்.

ஃ பூரியெ மனிதகுல வரலாறானது தொன்மைநிலை (ஏடன்), காட்டுமிராண்டி நிலை (தேக்க நிலை), கட்டுப்பாடு உறவுகள் கொண்ட சமுதாயம் (சிறு தொழில்), அநாகரிக நிலை, நாகரிக நிலை (பெரிய அளவுத் தொழில்) என்ற கட்டங்களினூடாக வளர்ந்து வந்துள்ளது என்றும் நாகரிக நிலை என்பது குடிமைச் சமுதாயம் அல்லது முதலாளியச் சமுதாயம் என்றும் கூறினார். நாகரிகம் (முதலாளியம்), தான் சாதிக்க விரும்புவதற்கு நேர் முரணான ஒன்றையே வந்தடைகிறது என்றும்,  நாகரிக வாழ்வின் மிகையான செல்வத்திலிருந்தே வறுமை உதித்தெழுகிறது என்றும் கூறினார்.

சேன்-ஸிமோனிய இயக்கம்,  தான் உருவாக்க விரும்பிய எதிர்காலச் சமுதாயம் (உலக சமுதாயம்) மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் செயல்படும் என்று கூறியது. அரசு அமைப்பே அதன் தொடக்க முனையாக இருந்தது. ஆனால் ஃபூரியெ, அதிகாரப் பரவலை முதன்மைப்படுத்தினார். அவர் உருவாக்க விரும்பிய எதிர்காலச் சமுதாயத்தின் தொடக்க முனை அல்லது அடிப்படை அலகு, கூட்டுவாழ்வுக் குழாம் என்பதாகும். ஃபூரியெ தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளில், தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதியுதவி செய்யக்கூடிய தாராள மனதுடைய முதலாளிகள் வருவார்கள் என்று அவர்களுக்காகத் தன் வீட்டில் நாள் கணக்கில் காத்திருந்தார். எனினும் அத்தகைய புரவலர்கள் யாரும் வரவில்லை.

சேன்-ஸிமோனியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் அவருக்குச் சிறிது ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. அவரது கருத்துகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்த விரும்பிய ஆர்வலர்கள் சிலர் அவரைச் சூழத் தொடங்கினர். அவரது கருத்துகளைப் பரப்புவதற்காக 1832இல் ஒரு பத்திரிகையும் தொடங்கப்பட்டது.1832இல் பிரான்சிலுள்ள வெர்செய் நகரத்திலுள்ள நிலங்களில் ஒரு கூட்டு வாழ்வுக் குழாம் நிறுவுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியைத் தழுவியது. தனது கருத்துகளுக்குச் செவிமடுக்காத இவ்வுலகிலிருந்து 1832ஆம் ஆண்டு ஃபூரியெ நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார்.  நாம் வாழும் உலகம் பல்வேறு கட்டங்களைச் சந்திக்கிறது என்று கூறிய ஃபூரியெ, தான் வாழ்ந்த காலகட்டத்தின் உலகத்தை ‘நாகரிகம்’ என்றழைத்தார். செயற்கையான, கறைபடிந்த, ஊழல்படிந்த அனைத்தையும் குறிக்கவே ‘நாகரிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். மனிதர்களால் உருவாக்கப்பட்ட வக்கரித்த நிறுவனங்கள்தான் இந்த ‘நாகரிகத்தை’ உருவாக்கியதாகக் கருதினார். அத்தகைய நிறுவனங்கள் உருவாவதற்குக் காரணம், இவ்வுலகைப் படைத்தவரின் நோக்கங்களை நாம் தவறாகப் புரிந்து கொண்டதுதான் என்று கூறினார். இந்தத் தவறான புரிதலுக்கு அடிப்படையாக இருப்பது, நமது இயல்பான உணர்ச்சிகளை மோசமானவை என்றும் தீயவை என்றும் நாம் கருதுவதுதான் என்றார். நமது உணர்ச்சிகள் தடையின்றியும், ஆரோக்கியமாகவும், முழுமையாகவும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், இந்தச் சீரழிந்த நாகரிக உலகத்திலிருந்து நம்மால் விடுதலையடைய முடியும் என்று கூறினார்.

மூன்று வகைகளுக்குள் உள்ளடக்கப்படக்கூடிய பன்னிரண்டு  உணர்ச்சிகள் நமக்கு இருப்பதாக ஃபூரியெ கருதினார்:

  1. இன்ப நுகர்ச்சியை நாடும் ஐம்புலன் உணர்ச்சிகள் (பார்த்தல், கேட்டல், ருசித்தல், முகர்தல், தொடுதல்)
  2. உறவுகளை நாடச் செய்யும் உணர்ச்சிகள்: காதல், நட்பு, ஆசை, குடும்ப உணர்ச்சி அல்லது ஒருவர் குடும்ப உறுப்பினராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள உதவும் உணர்ச்சி.
  3. கட்டுப்படுத்தும் உணர்ச்சிகள்: இவை மனிதர்களிடையே ஒற்றுமையை நாடச் செய்யும் உணர்ச்சிகள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல், பிறரது உதாரணங்களைப் பின்பற்றுதல், முழுமையான ஆளுமை பெறுதல் ஆகியவற்றை நாடும் உணர்ச்சிகள். இவ்வகை உணர்ச்சிகளுக்குத்தான் ஃபூரியெ பிற எல்லாவற்றைக் காட்டிலும் அதிக அழுத்தம் கொடுத்தார்.

பல்வேறு வகைப் பொருள்கள், விடயங்கள் ஆகியவற்றுக்கான தேவையுடன் தொடர்பு கொண்டவையே முதல் வகை உணர்ச்சிகளாகும்.  இரண்டாவது வகை உணர்ச்சிகள்  போட்டி, பொறாமைக்கு இட்டுச் செல்லக் கூடியவை. மூன்றாவது வகை உணர்ச்சிகள், உள்ளக் களிப்பையும் தன்னை மறந்த நிலையையும் தரக் கூடியவை. மனமும் புலன்களும் இணைந்து ஒரேநேரத்தில் அனுபவிக்கப்படுகின்ற பல்வேறு இன்பங்களிலிருந்து பிறப்பவை இந்த உணர்ச்சிகள்.

முதலிரண்டு வகை உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வைப்பன இந்த மூன்றவது வகை உணர்ச்சிகள்தான்.  இவையும்கூட சிலவேளை மனிதர்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்படுவதற்கும் போர்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கக்கூடிய சில கூறுகளைக் கொண்டுள்ளன. எனினும், ஒற்றுமை உணர்ச்சி (uniteisme) என்னும் மாபெரும் சமூக உணர்ச்சியானது இறுதியில் எல்லா வகையான உணர்ச்சிகளையும் ஒன்றுக்கொன்று ஒத்திசையவைக்கும். எல்லா வகையான உணர்ச்சிகளும் தங்கு தடையற்ற வெளிப்பாடு காணும்போது ஒத்திசைவு (harmony) ஏற்படும் – ஏழு வண்ணங்கள் ஒன்று சேர்ந்து வெள்ளை நிறம் உருவாவது போல.

உலகளாவிய ஒத்திசைவு என்பது, மனித உணர்ச்சிகள் யாவும் தங்கு தடையற்று வளர்ச்சியடையும்போதுதான் சாத்தியம். இதன்பொருட்டு ‘நாகரிகம்’ என்பதிலிருந்து முழுமையான முறிவை ஏற்படுத்திக் கொண்டு, மனித இயல்புக்கு ஏற்றதும், இவ்வுலகைப் படைத்தவரின் நோக்கங்களுக்கு ஒத்திசைகின்றதுமான ஒரு புதிய சமூக ஏற்பாட்டினை உருவாக்க வேண்டும். இத்தகைய ஏற்பாட்டினை வழங்க வல்லதுதான் கூட்டு வாழ்வுக் குழாம். இங்கு தனிநபர் சுதந்திரமும் மனிதர்கள் அனைவரது ஒற்றுமையும் ஒன்றுக்கொன்று முரணற்ற வகையில் நிலவும்.

தான் உருவாக்க விரும்பிய எதிர்கால சமுதாயத்தை ‘முழுமையான ஒத்திசைவு அல்லது முழுமையான சங்கம்’ (Harmonism or Complete Association) என்று ஃபூரியெ அழைத்தார். அந்த இறுதி இலக்கை அடைவதற்கு முன்,  இரண்டு மாறுதல் காலகட்டங்களை, இடைநிலைக் கட்டங்களை (transition periods-guaranteeism, sociantism) மனிதகுலம் தாண்டிச் செல்ல வேண்டும். முதல் இடைநிலைக் கட்டத்தில் சமுதாய அலகாக இருப்பதுதான் கூட்டுவாழ்வுக் குழாம். அந்தக் கூட்டு வாழ்வுக் குழாமை உருவாக்கும் தனிநபர்கள் ஏழு அல்லது எட்டுப் பேர் அடங்கிய பல குழுக்களாக (groups) அமைவர். 24 முதல் 32 குழுக்கள் வரை ஒன்றிணைந்து தொடர் வரிசையாக (series) அமைவர். இவை ஒன்றிணைந்து ஒரு கூட்டு வாழ்வுக் குழாத்தை உருவாக்கும். இந்த மூன்று நிலைகளுமே சுயவிருப்பத்தின், இயல்பான உணர்ச்சியின்,  சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்ளும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும். பொருளாதார அடிப்படையில் கூறுவதானால் இந்தக் கூட்டு வாழ்வுக் குழாம், பங்கு மூலதன நிறுவனங்களின் (joint stock companies) அம்சங்கள் சிலவற்றையும் கொண்டிருக்கும். உற்பத்தியாளர், நுகர்வோர் கூட்டுறவுச் சங்கமாகவும் இருக்கும். ஒவ்வொரு கூட்டு வாழ்வுக் குழாமிலும் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவோரையும் அவர்களது குழந்தைகளையும் சேர்த்து 1500 முதல் 2000 பேர் இருக்கலாம் என்று ஃபூரியெ கருதினார்.

கூட்டு வாழ்வுக் குழாமை நிர்வகிக்கும் அலுவலர்கள், குழாம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டு வாழ்வுக் குழாம் என்பது உள்ளூர்  அளவில் அல்லது ஏதோவொரு இடத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுவப்படும் அமைப்பு ஆகும். அங்கு அது வெற்றியடையுமானால் உலகம் முழுவதிலும் அத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உலகத்தை ஒன்றிணைக்க முடியும். உலகின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படும் கூட்டு வாழ்வுக் குழாம்கள் தமது விருப்பத்தின்படி, சுதந்திரமாக ஆங்காங்கே ஒன்றிணைந்து கூட்டு வாழ்வுக் குழாம்களின் கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்தல்கள் மூலம் ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் உலகம்  முழுவதுமுள்ள கூட்டு வாழ்வுக் குழாம்கள் ஒன்றிணைந்து உலகப் பெருங்கூட்டமைப்பினை உருவாக்கும். அதன் தலைவரும்கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் உலகின் தலைநகராக விளங்கப் போகும் கான்ஸ்டாண்டிநோபிளில் வாழ்ந்து அங்கிருந்து செயல்படுவார்.

கூட்டு வாழ்வுக் குழாமில் ஆண்-பெண் உறவுகளுக்கும் கட்டுப்பாடு இராது. காதல், பாலுறவுச் சுதந்திரம் இருக்கும். ஆணும் பெண்ணும் சுதந்திரமாகச் சேர்ந்து வாழலாம் (Free Union). இத்தகைய ஐக்கியத்தை விருப்பப்பட்டால் கலைத்துவிடலாம் அல்லது அதனை நிரந்தரமான திருமண உறவாக மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

மக்களின் தேவைகள், திறமைகள், பயனுள்ள விளைவுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, பல்வேறு வகையான உழைப்புச் செயல்கள் கூட்டுவாழ்வுக் குழாமில் மேற்கொள்ளப்படும். விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி ஆகிய இரண்டும் அங்கு மேற்கொள்ளப்படும் என்றாலும் விவசாய உற்பத்திக்கே முதன்மை தரப்படும். தொழிலுற்பத்தி என்பதைப் பொருத்தவரை, ஒப்பீட்டளவில் சிறிய, ஆனால் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த தொழிற்கூடங்களையே (workshops) ஃபூரியெ விரும்பினார். தொழிற்சாலை உற்பத்தி முறை (Factory  system) என்பது ‘நாகரிக’ (முதலாளிய) கட்டத்திற்கு மட்டும் உரிய முறை என்று அதை நிராகரித்தார்.

ஃபூரியெ திட்டமிட்ட முறை கீழ்வருமாறு:

பங்குதாரர்கள் செலுத்தும் முதலீட்டைக் கொண்டு கூட்டுவாழ்வுக் குழாம் தொடங்கப்படும். எனவே முதலாளிகளை அது சேர்த்துக் கொண்டாக வேண்டும். ஏழைகளும் அதில் உறுப்பினர்களாக இருக்கலாம். தொடக்கத்தில் அவர்கள் பங்குதாரர்களாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தமது உழைப்பைக் கூட்டுவாழ்வுக் குழாமுக்கான பங்களிப்பாக வழங்கலாம். பங்குகள் தனித்தனி நபர்களின் உடைமையாக இருக்கும். ஏற்றத்தாழ்வான உடைமை நிலவும் என்றாலும் ஒரு முதலாளி, அதில் உறுப்பினராகிவிடுவாரானால் அவர் பழைய அர்த்தத்தில் இனி முதலாளியாக இருக்க மாட்டார். ஆக்க ரீதியான உழைப்பு நிலவுகிற சூழலில் அவர் நேரடியான உற்பத்தி இயக்கத்திற்குள் இட்டுச் செல்லப்படுவார்.  அவர் தன்னிடமுள்ள  திறமைக்கேற்றபடி கூட்டுவேலைக் குழாமின் மேலாளராகவோ, பொறியியலாளராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது வேறு வகையிலோ பணியாற்றலாம், சமுதாயம் அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட திறமை இல்லாவிட்டால், தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உழைப்பாளர் அணியில் (series)  சேர்ந்து ஏதாவதொரு உற்பத்தி உழைப்பைச் செய்து வரலாம். குழாமில் சேர்ந்துள்ள ஏழைகளின் குழந்தைகளுக்கும் செல்வந்தர்களின் குழந்தைகளுக்கும் பொதுவான ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் கல்வி கற்பிக்கப்படுவதால், மேற்சொன்ன வேறுபாடுகள் வாழையடிவாழையாக நீக்கப்படும். பெரிய அளவில் பங்குகள் வாங்கியுள்ளவர்களுக்குக் கூட்டு வாழ்வுக் குழாமை நிர்வகிப்பதில் சில சிறப்புரிமைகள் இருக்கும். ஆனால் நிர்வாகக் குழுவில் அவர்கள் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் அந்த நிர்வாகக் குழுவின் பாத்திரம் வரம்புக்குட்பட்டதாக இருக்கும்.

சமுதாய ரீதியான உழைப்பை ஒழுங்கமைப்பதில்  சிறப்புக் கவனம் செலுத்திய ஃபூரியெ, கூட்டு வாழ்வுக் குழாமின் உறுப்பினர்கள் ஒருவகை உழைப்பிலிருந்து மற்றொரு வகை உழைப்புக்குக் அடிக்கடி மாறுவதன் மூலம் முதலாளியச் சமுதாய உழைப்புப் பிரிவினையிலுள்ள எதிர்மறை அம்சங்களைக் களைந்தெறிய முடியும் என்று கருதினார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு குறிப்பிட்ட, குறைந்த அளவுக்கு உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருள்களும் சாதனங்களும் உத்தரவாதம் செய்யப்படுமாதலால் உழைப்பு என்பது கட்டாயமானது என்ற நிலை நீங்கி சுதந்திரமான செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். உழைப்பைச் செய்வதற்கான புதிய தூண்டுதல்கள் உருவாகும். பிறரது நல்லுதாரணங்களைப் பின்பற்றுதல், சமுதாயத்திற்குப் பயன்படும் தொழிலைச் செய்வதில் விருப்பம் கொள்ளுதல், மகிழ்ச்சியோடு படைப்புத் தொழிலில் ஈடுபடுதல் ஆகியன இங்கு கைகூடும்.

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதன் காரணமாக சமுதாயத்தின் செல்வமும் வருமானமும் விரைவாகப் பெருகும். மேலும், ஒட்டுண்ணி வாழ்வு மறைந்து அனைவரும் வேலை செய்யத் தொடங்குவர். இறுதியில், பழைய அமைப்பில் காணப்படுகிற பண விரயமும் பொருள் விரயமும் முற்றாக ஒழியுமாதலால் இழப்புகள் தவிர்க்கப்படும். எதிர்காலச் சமுதாயத்தில் அபரமிதமான பொருளுற்பத்தி இருக்கும். அது ஆரோக்கியமான, இயல்பான, மகிழ்ச்சி நிரம்பிய சமுதாயமாக இருக்கும்.

கூட்டு வாழ்வுக் குழாமில் கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகள் இருக்க மாட்டார்கள்; கூலி வழங்கும் முறையும் இருக்காது. உழைப்பின் உற்பத்தி, கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அவர்களது உழைப்பு, மூலதனம், திறமை ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு தனிவகை ஈவுத் தொகைகள் மூலம் பண வடிவத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.  நிகர வருவாய் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் 5/12 பங்கு ‘உழைப்பில் தீவிரப் பங்கேற்றோ’ருக்கும், 4/12 பங்கு ‘பங்குதாரர்களு’க்கும், 3/12 பங்கு ‘கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கு வேண்டிய அறிவு’ ஆகியவற்றைப் பெற்றிருப்போருக்கும் தரப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் மேற்சொன்ன பிரிவுகளில் ஏதேனும் இரண்டிலும் இருப்பவர்களாதலால் (சிலர் மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர்), அவரது வருமானம் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொரு உறுப்பினரதும் உழைப்பிற்கான ஊதியம் அவரது உழைப்பின் சமூக மதிப்பையும், அது மகிழ்ச்சி தரக்கூடியதா, இல்லையா என்பதையும் சார்ந்திருக்கும். எனினும், சாதாரண உழைப்பில் (முதன்மையாக உடல் உழைப்பில்) ஈடுபடும் உறுப்பினருக்கான ஊதியம், அவர் வெவ்வேறு வகை உழைப்பு அணிகளில் மாறிமாறிப் பங்கேற்பதன் காரணமாக, பிற உறுப்பினர்களின் ஊதியத்திற்கு ஏறத்தாழ சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தோட்ட வேலை செய்யக்கூடிய உறுப்பினருக்கு சராசரிக்கும் கீழ் ஊதியம் கிடைப்பதாக இருக்குமானால், அவர் பன்றி வளர்ப்புத் தொழிலோ, குதிரை வளர்ப்புத் தொழிலிலோ ஈடுபடுகையில் சராசரி ஊதியத்திற்கும் அதிகமாகப் பெறலாம்.

மூலதனம் செலுத்தியுள்ளோர்களைக் காட்டிலும் உழைப்பைச் செலுத்துவோர்களுக்கு வருமானத்தை அதிகம் பகிர்ந்தளிக்க ஃபூரியெ விரும்பினார். “தொழிலாளர்களின் பங்குகளுக்கு” அதிக அளவு ஈவுத் தொகை கொடுக்கப்பட வேண்டும்  என்றார். அதாவது, சிறு சேமிப்புகளிலிருந்து தொழிலாளர்கள் வாங்கும் பங்குகளுக்கு அதிக ஈவுத் தொகைகளும் முதலாளிகளின் சாதாரணப் பங்குகளுக்கு  குறைந்த ஈவுத் தொகைகளும் வழங்கப்படும். இத்தகைய வழிமுறைகளின் மூலம், சமுதாயத்தைத் துரிதமாக வளர்ச்சியடையச் செய்ய முடியும்; அது செழிப்படைவதற்குத் இதுவரை தூண்டுகோலாக இருந்துவந்த ஏற்றத்தாழ்வு படிப்படியாகக் குறைக்கப்பட்டு உலகளாவிய வளமையும் சமத்துவமும் ஏற்படும்.

கூட்டு வாழ்வுக் குழாமில் உறுப்பினர்கள் பெறும் பண ஊதியத்திலிருந்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களையும் சேவைகளையும் வர்த்தகத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வர்த்தகம் முழுக்க முழுக்க  சங்கம் அல்லது கூட்டமைப்பு (Association or Federation)  எனப்படும் கூட்டு வாழ்வு இயக்கத்தின் கையில் இருக்கும். கூட்டு வாழ்வுக் குழாம் சார்பில் செயல்படும் அந்த கூட்டுறவு இயக்கம், இதர கூட்டு வாழ்வுக் குழாம்களுடன் வாணிபம் புரியும்.

பண்டங்களின் விலைகளை சமுதாய நடுவர்கள் (arbitirators) நிர்ணயிப்பர். பொருள்கள் எவ்வெவ்வகையில் எந்த அளவிற்கு அவரவர் தேவைக்கு ஏற்பத் துய்க்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டு நுகர்வை ஒழுங்கமைக்க விரும்பினார் ஃபூரியெ. எல்லோரும் ஒரே அளவில் பொருள்களையும் சேவைகளையும் துய்க்க வேண்டும். ஆனால் ஏற்றத்தாழ்வான வருமானத்தின் காரணமாக  ஏற்றத்தாழ்வான  நுகர்வு இருக்கும். எனவே இம்முரண்பாட்டைத் தீர்க்க சில வழிமுறைகளைத் திட்டமிட்டார் ஃபூரியெ. அதன் பொருட்டு உறுப்பினர்கள், வீட்டுப் பணிகளைத் (குறிப்பாக உணவு சமைப்பதை) தவிர்க்க எல்லோருக்கும் பொதுவாக உணவு சமைத்து வழங்குதல், ஒவ்வொரு தனிநபரின் வருமானத்திற்கேற்றபடி சேவைகளை வழங்குதல் என்பனவற்றைத் திட்டமிட்டார். சேவைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் பொருட்டு சொகுசுகள், ஆடம்பரங்கள் என்பவை தனித்தனி நபர்களுக்குரியனவாக இருப்பதற்குப் பதிலாக அவற்றை எல்லோருக்கும் பொதுவானவையாக்க விரும்பினார். அதாவது, எல்லோருக்கும் பொதுவான கட்டடங்கள், கேளிக்கைகள், திருவிழாக்கள் முதலியன நுகர்வு அளவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வைப் போக்கும். கூட்டு வாழ்வுக் குழாமின் உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் வாழ்வதற்கான வசிப்பிடங்கள், நூலகங்கள், கேளிக்கை அரங்குகள், ஓய்வு நேரத்தைச் செலவிடுவதற்கான இடங்கள் ஆகியனவற்றைக் கொண்ட கட்டடங்கள் அமைக்கப்படும். இவற்றை ஃபூரியெ, ஃபலான்ஸ்தெரி (Phalanstery) என்று அழைத்தார். கூட்டு வாழ்வுக் குழாமில் உள்ள மிகவும் பணக்கார உறுப்பினருக்குக்கூட இங்கு மூன்று அறைகளுக்கு மேல் ஒதுக்கப்படாது. இவற்றை யாரும் தனிச் சொத்தாக்கிக் கொள்ள  முடியாது. மேலும், தனிநபரின் நுகர்வு ஆரோக்கியமானதாக, அர்த்தமுள்ளதாக, சிக்கனமுள்ளதாக மாறும். கூட்டு வாழ்வுக் குழாமில் உள்ள ஒவ்வொருவரினதும் உளவியல், நடத்தை முறைகள், ஒழுக்க நெறி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும். ஆண்-பெண் உறவு முறைகள், குழந்தை வளர்ப்பு, ஓய்வு நேரத்தை ஒழுங்கமைத்தல், விஞ்ஞானம், கலை ஆகியவற்றின் பாத்திரம் ஆகியன பற்றி ஃபூரியெ நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியுள்ளார். குழந்தைகள் எல்லோருக்கும் பொதுப் பள்ளிகள் இருக்கும். அந்தந்தக் குழந்தையின் வேட்கைகள், விருப்பத் தேர்வுகள், திறமைகள், உணர்வுகள் ஆகியவற்றை நிறைவு செய்யும் வகையில் கலைகளும் அறிவியலும் கற்றுத் தரப்படும்.

ஃபூரியெவின் பொருளாதாரக் கொள்கை பற்றிய மார்க்ஸிய விமர்சனம்: சுருக்கமாகக் கூறலாம்: மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறுகின்றனர்:

“நிலவுகின்ற சமுதாயத்தின் ஒவ்வொரு நெறிகயையும்  அவை தாக்குகின்றன. ஆகவே தொழிலாளிவர்க்கம் அறிவொளி பெறுவதற்கான மிகவும் மதிப்பு மிக்க விடயங்கள் அவற்றில் நிரம்பியுள்ளன. அவற்றில் முன்மொழியப்பட்டிருக்கும் நடைமுறைத் திட்டங்கள் – எடுத்துக்காட்டாக, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்குமுள்ள வேறுபாடு, குடும்ப அமைப்பு, தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக தொழிலுற்பத்தியை மேற்கொள்ளுதல், கூலி முறை ஆகியவற்றை ஒழித்தல்; சமுதாய நல்லிணக்கத்தைப் பிரகடனப்படுத்துதல்; அரசை உற்பத்தியை மேற்பார்வையிடும்படியாக மட்டுமே  இருக்கும்படி மாற்றுதல்  ஆகிய இத்திட்டங்கள் – வர்க்கப் பகைமைகள் மறைந்தொழிவதை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. இந்த வர்க்கப் பகைமைகள் அச்சமயத்தில்தான் தலைதூக்கிக் கொண்டிருந்தன” என்றும் இக்கருத்துகளும்கூட,

”வர்க்கப் பகைமைகளை மிகவும் தொடக்க காலத்திலிருந்த தெளிவற்ற, சரிவர வரையறுக்கப்படாத வடிவத்தில் மட்டுமே அறிந்துள்ளன. ஆகவே அவை  இன்னமும் முற்றிலும் கற்பனாவாதத் தன்மையுடையனவாகவே இருக்கின்றன. ஃபூரியெ தனியுடைமையை ஒழிக்க விருப்பவில்லை; மாறாக, சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களையும் உடைமையாளர்களாக மாற்றி, தனியுடைமையின் சுரண்டல் தன்மையையும் அதன் அழிவுமிக்க பின் விளைவுகளையும் ஒழிக்க விரும்பினார்.”

இவ் வழிமுறையின் மூலம் வர்க்கப் பகைமை விரைவில் மறைந்து வர்க்கங்கள் ஒன்றிணைந்துவிடும் என்று  கருதினார். கூட்டு வாழ்வுக் குழாம் பற்றியும் பல கூட்டு வாழ்வுக் குழாம்களை ஒன்றிணைக்கும் சங்க இயக்கம் (Association) பற்றியும் நிறைய எழுதிய ஃபூரியெ, அரசின் வர்க்கத்தன்மை மீது  எவ்விதக் கவனமும் செலுத்தவில்லை. கூட்டு வாழ்வுக் குழாம்களிடையே முனைப்பான பொருளாதாரத் தொடர்பும் பரிவர்த்தனையும் இருக்குமாதலால் அவற்றிற்கிடையே விரிந்த உழைப்பின் பிரிவினை நிலவவே செய்யும், கூட்டு வாழ்வுக் குழாமிற்குள் சரக்கு, பணம் ஆகியவற்றின் தன்மை எத்தகைய பாத்திரம் வகிக்கும்? கூட்டு வாழ்வுக்  குழாமிற்குள் உள்ள உள்பிரிவுகள் ஒவ்வொன்றும் தமது உழைப்பின் விளைபொருள்களை எவ்வாறு பரிவர்த்தனை செய்யும்? மூலப் பொருள்களும் ஓரளவிற்கு தயாரான பொருள்களும் (semi-finished products)  எவ்வாறு இறுதி உற்பத்திப் பொருள்களாக மாற்றப்படும்? ஃபூரியெ கூறுவதுபோல யாரும் எதையும் விற்பனை செய்ய வேண்டியதில்லை, எதையும் வாங்க வேண்டியதில்லை, மையப்படுத்தப்பட்ட கணக்குவழக்கு முறை இருக்கும் என்றால் கூட்டுவாழ்வுக் குழாம் சரக்கு பரிவர்த்தனை வணிகத்தில் ஏன் ஈடுபட வேண்டும்? கூட்டு வாழ்வுக் குழாமில் முக்கியப் பாத்திரம் வகிப்பதாக ஃபூரியெ கருதிய பொது நுகர்வு நிதியங்கள் (பள்ளிக்கூடங்கள், நாடக அரங்குகள், நூலகங்கள், கேளிக்கைக் கூடங்கள், பொது விழாக்கள், பொது சலவை அறைகள் முதலியவற்றை உருவாக்கவும் நடத்தவும் தேவையான நிதிகள்) எவ்வாறு உருவாக்கப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. கூட்டு வாழ்வுக் குழாமின் மொத்த வருமானத்திலிருந்து இவற்றுக்கு நிதி ஒதுக்குவது குறித்தோ, தனியார் வருமானங்கள் மீது வரி விதிப்பது குறித்தோ, ஃபூரியெ ஏதும் சொல்லவில்லை. இந்தப் பொதுத் திட்டங்களுக்குச் செல்வந்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்குவர் என்ற குறிப்பு மட்டும் ஃபூரியெவின் எழுத்துகளில் காணப்படுகிறது.

மூலதனத் திரட்டல் (capital accumulation) பற்றியும் அதன் சமூகக் கூறுகள் பற்றியும் ஃபூரியெ எவ்வித குறிப்புகளும் எழுதவில்லை. கூட்டு வாழ்வுக் குழாமின் மொத்த  வருமானத்திலிருந்து தொழில்களுக்கான முதலீடுகள் செய்வதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஏற்பாடுகள் ஏதும் இல்லாததால், மூலதனத் திரட்டல் என்பது தவிர்க்க முடியாதபடி கூட்டுவாழ்வுக் குழாம் உறுப்பினர்களின் சேமிப்பிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். பங்குகளை வாங்குவது மூலதனத் திரட்டலின் ஒரு வடிவமாகும். கூட்டு வாழ்வுக் குழாமில் உறுப்பினர்களாக உள்ள முதலாளிகளும் செல்வந்தர்களும் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகமான வருமானம் பெறுவார்களாதலால் மற்ற உறுப்பினர்களைவிட அவர்களால் அதிகப் பங்குகளை வாங்க முடியும். எனவே மூலதனமும் செல்வமும் ஒருசிலர் கைகளில் குவிவதைத் (Concentration of capital) தவிர்க்க இயலாது. ஃபூரியெ இந்த அபாயத்தை உணர்ந்திருந்தார். எனவேதான் பங்குகளை விற்பனை செய்வது குறித்த சில ஏற்பாடுகளைச் செய்தார். எனினும், ஒரு குறிப்பிட்ட கூட்டு வாழ்வுக் குழாமானது முதலாளிகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதால், அவர்கள் இதர கூட்டுவாழ்வுக் குழாம்களிலும் பங்குகளை வாங்கும் சாத்தியப்பாட்டை வரவேற்கவே செய்தார்.  எனவே கூட்டு வாழ்வுக் குழாம் என்ற அமைப்பு முதலாளிகளையும் முதலாளியத்தையும் தோற்றுவிக்கும் என மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரால் விமர்சிக்கப்பட்டது.

முதலாளிய உற்பத்திப் பிரிவினையின் கீழ் உழைப்பு சுவாரசியமற்றதாக, சலிப்பூட்டுவதாக அமைகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுவது ஃபூரியெவின் சிந்தனைத் தாக்கத்தின் காரணமாக எழுதப்பட்டதாகும் என மார்க்ஸிய அறிஞர் மிஷெல் லொவி (Michael Lowy) கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலுள்ள அக்குறிப்பிட்ட பகுதி கீழ்வருமாறு:

“விரிந்த அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், உழைப்புப் பிரிவினை ஆகிய காரணங்களால் பாட்டாளிகளின் உழைப்பு தனது தனித்தன்மை அனைத்தையும் இழந்துவிட்டது. அதன் காரணமாக, தொழிலாளிக்கு அவனது வேலையில் இருந்த கவர்ச்சி அனைத்தும் போய்விட்டது. அவன் இயந்திரத்தின் துணையுறுப்பாக ஆகின்றான், அவனிடமிருந்து தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டுகிற, மிக எளிதாகப் பிடிபடக்கூடிய கைத்திறன் மட்டுமே…”

மார்க்ஸ் பாரிஸில் வாழ்ந்தபோது எழுதிய குறிப்புகள் பின்னர் பாரிஸ் கையெழுத்துப் படிகள் (Paris Manuscripts) என்னும் தலைப்பிலும், 1844ஆம் ஆண்டு பொருளாதார. தத்துவக் கையெழுத்துப் படிகள் (Economic and Philosophic Notebooks 1844) என்னும் தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முதலாளிய உழைப்பின் பிரிவினையின் கீழ் அந்நியமாக்கப்பட்ட உழைப்பு (alienated labour) பற்றி மார்க்ஸ் எழுதியவற்றை ஒத்தவைதான்,  கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கையிலுள்ள வாசகங்களும். மேற்சொன்ன கையெழுத்துப் படிகளில் ‘அந்நியமாக்கப்பட்ட உழைப்பு’ பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:

“முதலில் உழைப்பு என்பது உழைப்பாளியைப் பொருத்தவரை புறப்பொருள்போல் உள்ளது. அதாவது, அது அவனது சாராம்ச வாழ்வுக்குரியதாக இருப்பதில்லை. எனவே அவன் தனது உழைப்பில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக, தன்னை மறுத்துக் கொள்கிறான். அவன் நிறைவடைவதில்லை. மாறாக மகிழ்ச்சியற்றவனாகிறான். தனது உடல், மன ஆற்றல்களைச் சுதந்திரமாக வளர்த்துக் கொள்வதில்லை. தன் உள்ளத்தை நாசம் செய்கிறான். எனவே இத்தகைய வேலைக்கு அப்பால் இருக்கும்போதுதான் தொழிலாளி, தான் தானாக இருப்பதாக உணர்கிறான். வேலையில் இருக்கும்போது தன்னை இவ்வாறு உணர்வதில்லை. அவனது உழைப்பு தானாக முன்வந்து செய்யப்படுவதல்ல, வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட, நிர்பந்தப்படுத்தப்பட்ட உழைப்பு. எனவே அது ஒரு தேவையின் நிறைவு அல்ல; அதற்கு வெளியே உள்ள தேவைகளை நிறைவு செய்வதற்கான சாதனமாக உள்ளது”

3.இராபர்ட் ஓவன் (Robert Owen 1771-1858)

இங்கிலாந்தைச் சேர்ந்த இராபர்ட் ஓவன், அங்கும் பின்னர் அமெரிக்காவிலும்  ‘உள்நாட்டுக் குடியேற்றங்கள்’ (Home Colonies) என்ற பெயரில் கூட்டு வாழ்வுக் குழாம்களை அமைத்துத் தனது கற்பனாவாத சோசலிசக் கருத்துகளை நடைமுறைப்படுத்த முயன்றார். ஓவன் செயல்பட்ட காலகட்டம் குறித்து எங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு (Anti Duhring) என்னும் நூலில் எழுதுகிறார்:

Robert Owen

“பிரான்ஸில் புரட்சிச் சூறாவளி வீசியடித்துக் கொண்டிருந்த  அதே நேரத்தில் இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அப்படி அமைதியானதாக இருந்த காரணத்தினாலேயே பேராற்றலில் சிறிதும் குறையாத புரட்சியொன்று நடந்துகொண்டிருந்தது. நீராவியின் ஆற்றலும் புதிய கருவியை உற்பத்தி செய்யும் இயந்திரங்களும் பட்டறைத் தொழிலை (Manufacture) நவீனத் தொழில்களாக மாற்றியமைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு, முதலாளியச் சமுதாயத்தின் அடித்தளம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைத்துக் கொண்டிருந்தன. பட்டறைத்தொழில் காலகட்டத்தில் இருந்த வளர்ச்சியின் மந்த கதியிலான முன்னேற்றம், புயல்வேகத்தில் உற்பத்தி நிகழும் கட்டமாக மாறியது. இடைவிடாது அதிகரித்துவரும் வேகத்துடன் சமுதாயம் பெரிய முதலாளிகள் என்னும்  பிரிவாகவும் உடைமை ஏதுமில்லாத பாட்டாளிகள் என்னும் பிரிவாகவும் தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டு வந்தது.  இவற்றுக்கு இடையே முன்பு இருந்த நிலையான நடுத்தர வர்க்கத்திற்குப் பதிலாக நிலையற்ற கைவினைஞர்கள் கூட்டமும் சிறு கடைக்காரர் கூட்டமும் – இவர்கள் சமுதாயத்தில் மிகவும் தடுமாற்றத்திலுள்ள மக்கள் பிரிவினர் – இப்போது மிகவும் நிச்சயமற்ற வாழ்வை நடத்த வேண்டியதாயிற்று.

புதிய உற்பத்தி முறை இன்னும் தனது வளர்ச்சிக் காலகட்டத்தின் தொடக்கத்தில் மட்டுமே இருந்த போதிலும் அப்பொழுது அது மிக மோசமான கேடுகளைப் புரிந்துகொண்டிருந்தது. அதாவது பெரிய நகரங்களில் மிக மோசமான பகுதிகளில் வீடற்ற மக்களை மந்தைகள் போல அடைத்து வைத்தல்; தந்தையிடம் பணிவு, குடும்ப உறவுகள், மரபான ஒழுக்கநெறிப் பண்புகள் ஆகியவற்றைத் தளர்த்துதல்; வேலை நாளை அளவுக்கு மீறி நீட்டித்தல் – குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் மிகப் பயங்கரமான அளவுக்கு வேலை செய்ய வைத்தல்; முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் (கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு, விவசாயத்திலிருந்து நவீனத் தொழில் துறைக்கு, நிலையான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து நாள்தோறும் மாறும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு) திடீரென்று தள்ளி பாட்டாளி வர்க்கம் முழுவதன் மனோதிடத்தை கலைத்தல் ஆகியனவே அந்தக் கேடுகளாகும்.

இத்தகையதொரு காலச்சூழலில்தான் பட்டறை உற்பத்தியாளரொருவர் சீர்திருத்தம் செய்வதற்கு முன்வந்தார். அவருக்கு அப்போது 29 வயது. குழந்தை போன்ற எளிய இயல்புடையவராகவும் அதே வேளை  பிறப்பிலேயே மனிதர்களின் தலைவராகத் திகழும் தகுதி படைத்தவராகவும் இருந்தார்.  மனிதனின் இயல்பு ஒருபுறம் மரபு வழியிலும் மறுபுறம் அவனது வாழ்க்கைக் காலத்தில் உள்ள சுற்றுச்சூழல்களாலும் – குறிப்பாக அவன்  வளர்ச்சியடையும் காலகட்டத்திலுள்ள சுற்றுச்சூழலாலும் – ஏற்படும் விளைவாகும் என்னும் பொருள்முதல்வாதத் தத்துவவாதிகளின் போதனையை இராபர்ட் ஓவன் ஏற்றுக் கொண்டிருந்தார். தொழிற் புரட்சியின்போது அவரது வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிற் பெரும்பாலோர் பெருங்குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் மட்டுமே கண்டனர். குழப்ப நிலையைப் பயன்படுத்தித் தங்கள் சுயநலனைப் பெருக்கிக் கொள்வதற்கும் விரைவாகப் பெருஞ் செல்வம் திரட்டவுமான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அவரோ (இராபர்ட் ஓவனோ) தமக்கு மிகவும் விருப்பமான தத்துவத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை அந்தத் குழப்ப நிலை வழங்குவதாகக் கருதினார். மான்செஸ்டரில் இருந்த ஒரு தொழிற்சாலையில் 500 தொழிலாளிகளுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். அவர்களது மேலாளர் என்னும் முறையில் அங்கு குழப்பத்தினை நீக்கி ஒழுங்கினைக் கொண்டுவரும் வெற்றிகரமான சோதனையைச் செய்திருந்தார். 1800 முதல் 1829 வரையில் அவர் இதே வழிகளில் ஆனால் மேலதிகச் செயல் சுதந்திரத்தோடு ஸ்காட்லாந்திலிருந்த நியூலனார்க்கில் இருந்த பெரிய பஞ்சாலையில் நிர்வாகப் பங்காளியாக இருந்து அதை இயக்கினார். இதில் அவரடைந்த வெற்றி ஐரோப்பா முழுவதிலும் அவருக்கு நற்பெயர் ஈட்டித் தந்தது… 2500 மக்களிருந்த நியூலனார்க்கை முன்மாதிரிக் குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அங்கு குடிப்பழக்கம், போலிஸ், நீதிபதிகள், சட்ட வழக்குகள், ஏழைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், தருமம் என்பன ஏதும் இல்லாமல் செய்தார்… குழந்தைப் பள்ளிகளின் நிறுவனராக இருந்து அவற்றை முதலில் நியூலனார்க்கில் முதன்முதலாகத் தொடங்கி வைத்தார். இரண்டு வயதிலேயே குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர், அங்கு அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு வீடு திரும்புவதற்கே மனம் இருக்காது. அவருடன் போட்டியிட்ட தொழிலதிபர்கள் தமது ஆள்களிடம் ஒரு நாளைக்கு 13 அல்லது 14 மணி நேரம் வேலை வாங்கினர். ஆனால்  நியூலனார்க்கில் வேலை நேரம் நாளொன்றுக்குப் பத்தரை மணிதான். பஞ்சுத் தட்டுப்பாட்டின் காரணமாக நான்கு மாதங்கள் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தபொழுது அவரது தொழிலாளிகள் அந்தக் காலம் முழுவதற்கும் முழு ஊதியம் பெற்றார்கள்…

இவையனைத்தும் இருந்தபோதிலும் அவர்… தொழிலாளர்களுக்குத் தான் கிடைக்கச் செய்த வாழ்க்கை நிலைமை மானுடப் பிறவிகளுக்கு  போதிய தகுதியுடையது என்ற நிலையை எட்டவில்லை என்று கருதினார். ‘மக்கள் என் தயவில் அடிமைகளாக இருக்கிறார்கள்’”.

இந்த நிலையை மாற்றுவதற்காக, ஓவன் கம்யூனிசக் குடியிருப்புகளை உருவாக்க முயற்சி செய்ததை எங்கெல்ஸ் விளக்குகிறார். 1828இல் அயர்லாந்தில் ஏழ்மையை நீக்குவதற்குக் கம்யூனிஸ்ட் குடியிருப்புகளை நிறுவத் திட்டமிட்டார் ஓவன். அவர் செல்வந்தராக இருந்து ஏழை மக்களுக்கு ஆதரவு காட்டும் ஒரு புரவலராக இருந்தவரை அவருக்கு அவரது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்கூட பாராட்டுத் தெரிவித்து வந்தனர்.  எங்கெல்ஸ் கூறுகிறார்:

“ஆனால் அவர் தமது கம்யூனிஸ்டுத் தத்துவங்களுடன் முன்வந்தபோது, நிலைமை முற்றிலும் வேறாகிவிட்டது. தனிச்சொத்து, சமயம், இன்றைய திருமண முறை ஆகிய மூன்று மாபெரும் முட்டுக்கட்டைகள் சமூக சீர்திருத்தத்திற்கு எதிரான பாதையைத் திட்ப்படுத்துகின்றன என்று கருதினார். ஆனால் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவற்றைத் தாக்கினார்… ஆதலால் அதிகாரப்பூர்வமான சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டரர். பத்திரிகைகள் அவரை எதிர்த்துத் திட்டமிட்டு மெளனம் சாதித்தன. அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றி பெறாத கம்யூனிஸ்ட் பரிசோதனைகளால் நொடித்துப் போய் தமது செல்வம் முழுவதையும் தியாகம் செய்து, பின்னர் தொழிலாளி வர்க்கத்திடம் நேரடியாகச் சென்றார். முப்பதாண்டுகள்  அவர்களிடையே தொடர்ந்து பணியாற்றினார். இங்கிலாந்தில் தொழிலாளிகள் சார்பான எல்லா சமுதாய இயக்கங்களும் உண்மையான அனைத்து முன்னேற்றங்களும் இராபர்ட் ஓவனின் பெயருடன் இணைந்தவையாகும். ஐந்தாண்டுகள் போராடி தொழிற்சாலைகளில் பெண்களும் சிறுவரும் வேலை செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் முதல் சட்டம் 1818இல் கொண்டு வரும்படி நிர்பந்தப்படுத்தினார். இங்கிலாந்திலிருந்த தொழிற் சங்கங்கள் எல்லாம் தனியொரு மாபெரும் தொழிலாளர் அமைப்பில் ஒன்று சேர்ந்த முதல் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். சமுதாயம் முழுவதையும் கம்யூனிச முறையில் ஒழுங்கமைக்கும் பொருட்டு இடைக்கால நடவடிக்கைகள் என்னும் முறையில் ஒருபுறம் சில்லறை விற்பனையையும் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களையும் புதிதாகத் தொடங்கி வைத்தார். இவை… வணிகர்களும் பட்டறை உரிமையாளரும் சமுதாயரீதியாக முற்றிலும் தேவையற்றவர்கள் என்பதை நடைமுறையில் மெய்ப்பித்தன. மறுபுறம்  அவர் உழைப்புச் சீட்டுகளை (Working Notes) [உழைப்புச் சீட்டுகள்: பண்ட விற்பனை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றிய தொழிலாளிகளுக்கான ஊதியம் பண வடிவத்தில் தரப்படுவதற்குப் பதிலாக உழைப்புச் சீட்டுகள் தரப்பட்டன. ஒரு மணி நேர உழைப்புக்கு ஒரு உழைப்பு சீட்டு. அதனைக் கொடுத்துவிட்டு அந்தச் சங்கங்களில் விற்பனை செய்யப்படும்  பண்டங்களை வாங்கிக் கொள்ளலாம்-எஸ்.வி.ஆர்.] பண சாதனமாகக் கொள்வதன் மூலம் உழைப்பின் உற்பத்திப் பொருள்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான தொழிலாளர் கடைகளைப் புதிதாகத் தொடக்கி வைத்தார். இந்த உழைப்பு நோட்டுகளின் அலகு ஒரு மணி நேர வேலையாகும்”.

ஓவனும், ஓவனின் காலத்திற்குப் பிறகு அவரது சீடர்களும் இத்தகைய உள்நாட்டுக் குடியேற்றங்களை (Home Colonies) உருவாக்கினர். ஓவன் போன்ற சோசலிச முன்னோடிகளை எள்ளி நகையாடிய ஜெர்மானியக் குட்டி-பூர்ஷ்வா சோசலிஸ்ட்டான டூரிங் என்பவருக்கு எங்கெல்ஸ் ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்ற நூலில் ‘சோசலிசம்’ என்ற பகுதியில்கீழ்க்கண்ட பதிலை வழங்கினார்:

“ஓவன் தெள்ளத்தெளிவான கம்யூனிசத்தைப் பரப்புரை செய்வதோடு மட்டும் நிற்கவில்லை. ஐந்தாண்டுகள் ஹாம்ப்ஷயரில் நல்லிணக்க மண்டபக் குடியேற்றத்தில் (Harmony Hall Colony) அதைச் செயல்படுத்தினார். அவரது கம்யூனிசத்தின் தெளிவான தன்மையில் எவ்வித மாசும் இருக்கவில்லை.  இந்தக் கம்யூனிஸ்ட் முன்மாதிரித் திட்டத்தின் முன்னாள் உறுப்பினர் பலருடன்  நான் பழகியிருக்கிறேன்”.

எனினும், இராபர்ட் ஓவன் போன்றவர்கள் கற்பனாவாதிகளாகவே இருந்தனர் என்பதை எங்கெல்ஸ் வலியுறுத்துகிறார். இராபர்ட் ஓவன், சேன்-ஸிமோன், ஃபூரியெ ஆகிய விமர்சனப் பகுப்பாய்வு-கற்பனாவாத சோசலிஸ்டுகளின் நிறைகுறைகள் பற்றிய மதிப்பீட்டையும் அவர்களது சீடர்கள் பற்றிய எதிர்மறையான விமர்சனத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் காணலாம். மேற்சொன்ன மூவரைப் போன்ற கற்பனா-சோசலிஸ்டுகள் எல்லோரும் பாட்டாளிவர்க்கத்தின் அரசியல்  நடவடிக்கைகளை எதிர்த்தனர். அதற்கான காரணத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் விளக்கினர்:

“பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு போர்க் குணமிக்க வர்க்கமாக அமைத்துக் கொள்வதை அனுமதிக்கின்ற சமூக நிலைமைகள் போதுமான அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. அதன் காரணமாக முதல் சோசலிஸ்டுகள் (ஃபூரியெ, ஓவன், சேன்-ஸிமோன் முதலானோர்) பாட்டாளிகள் தமது வாழ்க்கை நிலைமைகளில் சில மேம்பாடுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட வேலை நிறுத்தங்கள், அவர்கள் உருவாக்கிக் கொண்ட அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் போன்ற முயற்சிகள் அனைத்தையும் கண்டனம் செய்து, எதிர்கால முன்மாதிரி சமுதாயங்கள் பற்றிய கனவு காண்பதுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர்”.

தரவுகள்:

Karl Marx, Economic and Philosophical Manuscripts 1844, Foreign Language Publishing Press, Moscow, 1961.

Karl Marx, Frederick Engels, The Communist Manifesto, A Modern Edition with an introduction by Eric  Hobsbawm, Verso, London, 1998.

Karl Marx and Frederick Engels, Collected Works, Vol 25, Progress   Publishers, Moscow.

A.Anikin,  A Scince in its Youth: Pre-Marxian Political Economy,Progress Publishers, Moscow, 1975     .

Barthelemy Propser Enfantin, Life Eternal : Past-Present-Future (Translated by Fred Rotherwell, The Open Country Publishing House, London, 1930 .

Hal Draper, Karl Marx’s Theory of Revolution, Volume IV Critique of Other Socialisms, Monthly Review Press, New York, 1990.

Michael Lowy, Globalisation and Internationalism:How Up-to-date  the Communist Manifesto, Monthly Review ,Volume 50 No 6 (November 1998), New York.

Thomas Kirkup, A History of Socialism, Adam and Charles Black, London, 1909 (Fourth Edition).

Valavoi and H. Lapshina,  Names of An Obelisk, Progress Publishers, Moscow, 1983.

பிரெடெரிக் எங்கெல்ஸ்,  டூரிங்குக்கு  மறுப்பு:  தி  ஒய்கேன்  டூரி்ங்  விஞ்ஞானத்தில்  நிகழ்த்திய புரட்சி, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979 (தமிழாக்கம்: கே. ராமநாதன்).

Tags: