மானுட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த மாமேதை லெனின்!

என்.குணசேகரன்

ஜனவரி 21: மாமேதை லெனின் 99வது நினைவு தினம் இன்று!

கோடானுகோடி மக்களின் ஆண்டாண்டுக் கால அடிமைத்தனத்தை ஒழித்து, விடுதலை காண்பதற்கான பாதை கண்ட மாமேதை லெனின். இந்த வரலாற்றுப் பெருமை மானுட வரலாற்றில் யாருக்கும் இல்லை.

அன்றாட அரசியல், சமூக, பொருளாதார, சித்தாந்த நிகழ்வுகள் அனைத்தையும் சரியாகப்  புரிந்து கொள்வதற்கும், அதற்கு ஏற்ப செயல்படுவதற்கும் அனுதினமும் வழிகாட்டு கிற சிந்தனைகளாக தோழர் லெனினது சிந்தனைகள் அமைந்துள்ளன. ஜனவரி, 21- லெனின் நினைவு தினம். அவரது நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வது எதற்காக? லெனினை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்  கொள்வது, புரட்சி என்கின்ற மகத்தான இலட்சியத்திற்கு நம்மை மீண்டும் மீண்டும் அர்ப்பணிப்பதாகும். சுரண்டும் வர்க்கங்களின் அதிகார பீடத்தை சுக்கு நூறாக்கி, பாட்டாளி வர்க்க அதிகாரம் என்கிற மிக உயர்ந்த அமைப்பினை நிலை நிறுத்துவதே புரட்சி என்பதை லெனினியம் எடுத்துரைக்கிறது. அதுவே லெனினது வாழ்க்கையாகவும் அமைந்திருந்தது.

கொடூரத்திற்கு ஒரே சான்று

முதலாளித்துவத்தின் வன்முறை, சுரண்டல், இயற்கையை அழித்திடும் குரூரம் என  அதன் ஒட்டுமொத்த கோரத்தாண்டவத்தை, மணிக்கணக்கில் முடிவே இல்லாமல் விளக்கிட முடியும். அதன் கொடூரத்தை விளக்க ஒரே சான்று போதும். மகாகவி பாரதி பாடுகிற போது ‘‘பிள்ளைக் கனிய முதே-! பேசும்பொற் சித்திரமே!… அள்ளியணைத்திடவே – என் முன்னே ஆடி வருந்தேனே!’’ என்றெல்லாம் குழந்தையை களிப்புடன் கொஞ்சுகிறார். இந்த மேலான உணர்ச்சிகள் ஏதும் முதலாளித்துவத்திற்கு இல்லை. தனது மூலதன வேட்டைக்கு  குழந்தை களையும் அது விட்டு வைக்கவில்லை. ஆசிய நாடுகளில் உள்ள  குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக் காமல் ஊட்டச்சத்து குறைவு, எடை குறைவு  கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிகமான குழந்தைகள் ஐந்தாவது பிறந்த நாளை காணாம லேயே மரித்துப் போகிறார்கள். இது முதலாளித்துவத்தின் கொடுமை அல்லாமல் வேறென்ன!

எது தடை?

பட்டினி, வறுமை, வேலையின்மை என நெருக்கடிகளே தொடர்கதையாகக் கொண்டுள்ள  முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு எது தடை? லெனினியத்தில் ‘‘வர்க்க உணர்வு’’ எனும் கருத் தாக்கம் முக்கியமானது. முதலாளித்துவத்தை ஒழித்திட வேண்டிய வரலாற்றுக் கடமையை பாட்டாளி வர்க்கம் உணர்வது அவசியம். கம்யூனிஸ்டுகளுடைய அன்றாடப்  பணியே சுரண்டப்படுகிற மக்களிடம் வர்க்க உணர்வு மட்டத்தை   உயர்த்துவதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் இதற்காகவே செலவிட்ட மகத்தான தலைவர் லெனின். பல வரலாற்று ஆசிரியர்கள் மானுட மேன்மைக்கு வித்திட்ட பல தலைவர்களின் வரலாறுகளைப் போற்றி, புகழ் பாடி எழுதியுள்ளனர். ஆனால் முதலாளித்துவப் பாசம் கொண்ட  வரலாற்று ஆசிரியர்கள் லெனினை  ‘வெறி கொண்ட சர்வாதிகாரி’ எனத்  தூற்றி எழுதி யுள்ளனர். கோடானுகோடி மக்களின் ஆண்டாண்டுக் கால அடிமைத்தனத்தை ஒழித்து, விடுதலை காண்பதற்கான பாதை கண்ட மாமேதை லெனின். இந்த வரலாற்றுப் பெருமை மானுட வரலாற்றில் யாருக்கும் இல்லை.

மானுட இலக்கு

‘வர்க்க அதிகார மாற்றம்’ ‘பாட்டாளி வர்க்கப் புரட்சி’ போன்றவை இன்றைய மானுட இயக்கத்தின் அடிப்படை இலக்குகள். இவையே  மானுடத்தின் முன்னுள்ள நிகழ்ச்சி நிரல். இந்தக் கடமையை சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் செவ்வனே நிறைவேற்றிட வேண்டும் என்பதை லெனினியம் எடுத்துரைக்கிறது.   இந்த கருத்தாக்கங்களை  முதலாளித்துவ முகாம் நடைமுறைக்கு ஒவ்வாதது என சிறுமைப்படுத்தக்  கூடும். ஆனால் இது அறிவியல். இது, மார்க்சின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல் வாதம்; உலக வரலாற்றின் இயக்கத்தினை அறிவியலாக பார்க்கிற பார்வை. இந்த அறிவியலிலிருந்து பெறப்படுகிற முடிவு, தவிர்க்க முடியாதவாறு எதிர் நிற்கும்  மானுட நிகழ்ச்சி  நிரலே புரட்சி என்பது. மார்க்சின்  பிரதான மாணவரான லெனின் இதை நன்கு உணர்ந்து கொண்டவர். ரஷ்யாவில் சோசலிசத்தை நிறுவுவது வரலாற்று ஓட்டத்தில் இன்றியமையாத ஒரு கட்டம் என்று லெனின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்; தனது செயல்திட்டங்களும் தன்னுடைய செயல்பாடுகளும் வரலாறு நிர்ணயம் செய்தது; தான் வரலாற்றின் கருவி என்கிற உணர்வுடன் லெனின் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். லெனின் ஒரு மகத்தான இயக்கவியல்வாதி; ரஷ்யப் புரட்சியின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றத்தையும் இயக்கவியல் கண்ணோட்டத்துடன் முன்னெடுத்து கொண்டு சென்றவர். எனவே தான் லெனினை வாசிக்க வேண்டியது அவசியம்.  அவரது எழுத்துகளுக்கு வயது 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம்; ஆனால், இன்றும் உலகம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு லெனினையே நாட வேண்டும்.  சமகால பிரச்சனைகளுக்கு வர்க்க நலன் சார்ந்து தீர்வு கண்டிட லெனினியமே வழிகாட்டி. லெனின் எழுத்துக்களை உருப்போடுவது அல்லது மேற்கோள்காட்டுவது மட்டும் பயன்தராது. சமகால இயக்கத்தில் லெனினின் கோட்பாடுகளை பொருத்திப் பார்த்து புரட்சிகர இயக்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தியாவும் லெனினியமும்

இந்திய பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைப்பது மக்கள் ஜனநாயகப் புரட்சி. அதை சாதிக்க வேண்டிய கடமை தொழிலாளி-விவசாயி உள்ளிட்ட வர்க்கங்களுக்கு உள்ளது. இதற்கு அவர்களை வர்க்க உணர்வு கொள்ளச் செய்வது முக்கிய கடமை. ஆனால், இந்துத்துவா மதவாத அடையாள உணர்வுகளை சிந்தனையில் பதிய வைப்பதில் வகுப்புவாத சக்திகள் வெகுவாக முன்னேறியுள்ளனர். வகுப்புவாதம் காலனிய சூழலில் உருவானது. அன்றைக்கு ஆங்கிலேய ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளைக்கும், மக்களை பிளவுபடுத்தவும் வகுப்பு வாதம் அவர்களுக்கு உதவியது. விடுதலைக்குப் பிறகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அந்நிய ஏகாதி பத்திய சுரண்டலுக்கு மிகவும் உதவியாக வகுப்பு வாதம் இருந்து வருகிறது.

வகுப்புவாத உணர்வு உழைக்கும் மக்களிடையே பரவி வருகிற ஒரு நச்சுக்காற்று. இதிலிருந்து உழைக் கும் மக்களை விடுவிக்க வேண்டும். வர்க்க ஒற்று மைக்கான போராட்டத்தை பலப்படுத்த வேண்டும். அது லெனின் போதித்த வர்க்க உணர்வினை வலுப் படுத்தும். இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாட்டில் ஆட்சி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு லெனின் உருவாக்கிய தேசிய இனக் கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளன. சுரண்டலற்ற சமூகத்திற்கான மாற்றத்தை நாடுகிற யாரும் லெனினியத்தைப் புறக்கணிக்க முடியாது. லெனினியம் வெல்லட்டும்! லெனினை வாசிப்போம்!

கட்டுரையாளர் :  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்

Tags: