அமெரிக்க – உலக முரணில் இந்திய ஒன்றியத்தின் நகர்வு என்ன? – பகுதி 4

-பாஸ்கர் செல்வராஜ்

ற்பத்தியில் அமெரிக்க நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எரிபொருள், தொழில்நுட்பம், மூலப்பொருள்களின் விலையை டொலரில் தீர்மானிப்பதில் அது கொண்டிருந்த ஏகபோகத்தை சீன, ரஷிய நாடுகள் உடைத்ததை அடுத்தும், அதனைத் தடுத்து நிறுத்தச் செய்த போர்களில் கண்ட தோல்வியை அடுத்தும், இதுவரையிலும் இணைந்து நிதி மூலதனமாக இயங்கிய தொழிற்துறை, வங்கி மூலதனங்களுக்கு இடையிலான முரணைக் கூர்மைப்படுத்தி இருக்கிறது. அது அமெரிக்க அரசியல் குழப்பமாகவும் கொலை முயற்சியாகவும் வெளிப்பட்டு இருக்கிறது.

வங்கி பணக்குவியல் ஊக பேர மூலதனத்தின் நலனைப் பலி கொடுத்து நிற, இனவெறி மதவாத அரசியலைக் கொண்டு மறு தொழிற்துறை மயமாக்கத்தை முன்வைத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைகிறது அமெரிக்கத் தொழிற்துறை மூலதனம். ஒரு போராட்டத்தின் ஊடாக அமெரிக்கப் பொருளாதார அடிப்படை மாற்றத்தைக் கோரும் இந்தப் பணியை டிரம்பின் அரசியல் செய்யாது. எனவே, இது வெற்று அரசியல் கோஷமாகவே இருக்கும். நடைமுறையில் ஒரு பொருளாதார தேக்கம் அல்லது நெருக்கடியையே கொண்டுவரும்.

அமெரிக்க வீழ்ச்சியைத் தொடர்ந்த உலகின் பாதை, உற்பத்தியையும் மூலதனத்தையும் பகுதியளவேனும் சமூகமயமாக்கும் சோசலிச பாதை. நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பான  பொதுத்துறை வங்கி மூலதனத்தை அரசே சமூகத்துக்கு அவசியமான துறைகளில் முதலிட்டு நிர்வகிப்பது; சமூகத்துக்குள்ளும் சமூகங்களுக்கு இடையிலும் சமமான நியாயமான மதிப்பீட்டு முறையை உருவாக்கிக்கொண்டு பொருள்களைப் பரிமாறிக் கொள்வது.

அடிப்படையில் தனியாரின் கட்டுப்பாட்டில் அவர்களின் இலாபத்தைப் பெருக்கும் நோக்கிலான மேற்கின் ஆதிக்க நிதி மூலதனம் சமூகத்தின் நலனை முன்னிறுத்திய பகுதியளவேனும் சமூகமயமாக்கப்பட்ட சமூக மூலதனம் என்னும் இரு வகை மூலதனங்களின் மோதலாக இது மாற்றம் கண்டிருக்கிறது. இதில் எந்த மூலதனம் வெல்லும் என்பதில் எவருக்கேனும் ஐயம் எழுந்தால் அந்தத் தன்னலவாதிக்குக் காலம் தக்கமுறையில் பாடம் கற்பிக்கும்.

இந்திய மூலதனத்தின் தன்மையும் பொருளாதாரச் சூழலும் என்ன?

மிகைமதிப்பிடப்பட்ட சொத்துகள், அதிக விலையில் விற்கப்படும் பொருள்கள், குறையும் மக்களின் நுகர்வு, சுருங்கும் சந்தை, ஒரு சிலரிடம் செறிவடையும் செல்வம் என்ற அமெரிக்கப் பொருளாதார நிலையில் இருந்து இந்தியாவின் சூழல் பெரிதும் மாறுபடவில்லை.

இந்த ஒற்றுமையும் மாற்றமும் தொண்ணூறுகளில் தொடங்கி 2008 நெருக்கடிக்குப்பின் அதிகரித்த டொலர் நிதி மூலதனத்துக்கு இந்தியாவின் சந்தையைத் திறக்க காங்கிரஸ் காட்டிய தயக்கத்தை இந்துத்துவர்களை ஆட்சியில் அமர்த்தியதில் வேகம் பெற்று 2016 அமெரிக்கத் தேர்தலின்போது அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி முறையில் அடிப்படை பொருளாதாரம் மாற்றம் கண்டு, கொரோனாவையும் அப்போது திடீரென ஏற்பட்ட (ஏற்படுத்தப்பட்டதா?) சீன மோதலையும் காரணம் காட்டி அவர்களைச் சந்தையில் இருந்து வெளியேற்றியதில் இந்த டொலர் ஆதிக்கமும், ரூபாய் வீழ்ச்சியும், சந்தையில் சிறு, குறு நிறுவனங்களின் வெளியேற்றமும், பெருநிறுவனங்களின் ஏகபோகமும், விலைவாசி கூடி, வேலைவாய்ப்பு குறைந்து செல்வம் ஓரிடத்தில் செறிவடைவதும் முழுமை பெற்றது.

இந்த மாற்றத்திற்கு முன்பு டொலர் அல்லாத பணத்தில் சோவியத்திடமும் மற்றவரிடமும் எரிபொருள், தொழில்நுட்பம் வாங்கி உழைப்பாளர்கள் உழைத்து உருவாக்கிய ரூபாய் மூலதனம் நடுத்தர வர்க்க வங்கி சேமிப்பாகவும், காப்பீடாகவும், வருங்கால வைப்புநிதியாகவும் இருந்தது. அது விவசாயம், முறைசாரா மற்றும் முறையான தொழிற்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மதிப்பைத் தெரிவித்தது. அதைக் கொடுத்தால் இந்தப் பொருள்களை எவரும் கொடுப்பார்கள் என்ற சமூகச்சூழல் அதற்கான மதிப்பை வழங்கியது.

பின்பு தொண்ணூறுகளில் உற்பத்திக்கான எரிபொருளையும் கணினி உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் அதிக மதிப்பிடப்பட்ட டொலர் கடன் பணத்தில் வாங்கி அவர்களுக்கான மென்பொருள், துணி, தோல் பொருள்களைச் செய்து கொடுத்தபோது டொலர் கடன் பணத்தின் மதிப்பைத் தெரிவிக்கும் மலிவான ரூபாயாக பகுதியளவு மாற்றம் கண்டது.

பின்பு படிப்படியாக இந்திய வங்கி, காப்பீடு உள்ளிட்ட மூலதன நிதித்துறைகளில் டொலர் புகுந்து ரூபாய் மூலதனத்தைப் பதிலீடு செய்தது. இந்தியாவின் பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றவும் அவற்றைச் சந்தைப்படுத்தும் செயலிகளைக் கொண்டுவந்த நிறுவனங்களை அனுமதித்தும் ஏற்கனவே உருவான மூலதனத்தைப் போட்டியாளர்களை வெளியேற்றி, சந்தையைச் செறிவாக்கி பொருள்களை மிகை மதிப்பிட்டு நுகரவைத்து அழித்ததோடு ரூபாயை புதிய முதலீட்டுக்கு அனுமதிக்காமல் அது வெற்று மூலதனப் பொதியாக்கப்பட்டது.

பங்குச்சந்தை ஊகபேர வணிகத்தில் ரூபாய் மூலதனத்தை ஈடுபடுத்தி இந்தியத் தரகு முதலாளிகளின் நிறுவனங்களின் மதிப்பு உயர்த்தப்பட்டது. அந்த மதிப்பு உயர்வுக்கு ஏற்ப வருமான உயர்வைக் கூட்ட பொருள்களின் விலைகள் தொடர்ந்து கூட்டப்படுகிறது. இங்கே உழைத்து உருவாக்கப்படும் செல்வம் அனைத்தையும் இலாபமாக இந்த வழியில் மொத்தமாக உறிஞ்சிக் கொள்வதில் மூலதன உருவாக்கமே இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அது நடுத்தர வர்க்க வருமானத்தைச் சரித்து செலவைக் கூட்டி சேமிப்பைக் குறைத்து மக்களைக் கடனாளி ஆக்கியிருக்கிறது.

அரிதிற் முயன்று உருவாக்கிய பொதுத்துறை ரூபாய் மூலதனம் மதிப்பிழந்து உற்பத்தியில் இருந்து விலகி தனிநபர்களால் கைப்பற்றப்பட்டு இப்போது மக்களிடம் கந்து வட்டி வசூலிக்கும் மூலதனப் பொதியாகவும் ஊகபேர வணிகத்தால் ஊதிப்பெருக்கப்பட்ட பெருநிறுவனங்களின் மதிப்பைச் சரியாமல் தாங்கி நிற்கும் பணக் குவிப்பாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

இப்போது இந்தப் பொதுத்துறை மூலதனத்தைக் கொண்டு முதலீட்டு உற்பத்தியைப் பெருக்கி, சந்தையில் போட்டியை உருவாக்கி பொருள்களின் விலைகளைக் குறைத்தால் மிகை மதிப்பிடப்பட்ட அந்த நிறுவனங்களின் மதிப்பு உடைந்து நொறுங்கி அதனுடன் பிணைக்கப்பட்டிருக்கும் பொதுத்துறை மூலதனப் பொதியின் மதிப்பும் வீழ்ந்து காற்றில் கரையும். இப்படி இந்திய நிறுவனங்களின் சொத்தைக் கைப்பற்றி இருக்கும் அமெரிக்க தனிநபர்களின் பணக் குவியலின் நலனும் இந்தியப் பொதுத்துறை மூலதனப் பொதியின் நலனும் ஒன்றாக பிணைக்கப்பட்டு இருக்கிறது.

பணக்குவியல் அமெரிக்க உற்பத்தியைப் பெருக்க அனுமதிக்காமல் அடைகாத்து தனது மதிப்பை இழக்காமல் காத்து நிற்பதைப்போல இந்தியாவிலும் தடுத்துக்கொண்டு நிற்கிறது. அது வேலைவாய்ப்பைக் குறைத்து சந்தையை மேலும் மேலும் சுருக்குகிறது. அதைச் சரிசெய்ய பொருளின் விலையைக் கூட்டி பொருளாதார வளர்ச்சி எண் (GDP) உயர்த்திக் காட்டப்படுகிறது. அதற்கு ஏற்ப அரசின் வரி வருவாய் அளவு உயர்வதைச் சாதனையாக சொல்லப்படுகிறது; தரம் வீழ்வதைச் சொல்லாமல் மறைக்கப்படுகிறது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் வரலாறு காணாத உச்சத்தைத் தொடுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அந்தப் பங்குச்சந்தை நலன் சார்ந்த பொருளாதார பலூன் ஊதிப்பெருக்கப்படுகிறது அவ்வளவே!

ஓரிரு ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கும் நிவிடியா (NVDIA) போன்ற அமெரிக்க நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் இந்தக் காலத்தில் எவ்வளவு பொருள் விற்பனையைக் (Volume) கூட்டி இருக்கிறார்கள். இனிவரும் காலத்தில் விற்பனை வானளவு உயர வழியேதும் இருக்கிறதா என்று பார்த்தால் இந்த மிகை மதிப்பீட்டின் பின்னிருக்கும் அபத்தம் புரியும். ரெஸ்லா(TESLA)வைவிட அதிக மின்னுந்துகளை விற்கும் சீனாவின் பி.ஒய்.டி (BYD) அதைவிடக் குறைவாக மதிப்பிடப்படுவதன் அடிப்படையை எவரேனும் விளக்க முடியுமா?

டிரம்ப் அதிபரானால் இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்தலாம்?

இப்போது அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்து அங்கே ஒரு பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்பட்டால் நிச்சயம் இந்தியப் பங்குச்சந்தையும் வீழும். அதனுடன் தொடர்புடைய அமெரிக்க பணக் குவியலின் மதிப்பு ஆவியாவதைப்போல இந்திய பொதுத்துறை மூலதனப் பொதியின் மதிப்பும் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பும் ஆவியாகும். புதிதாக முதலீட்டு உற்பத்தியை பெருக்கும் திறனை இந்தியா இழக்கும். மிகச்சிறிய வாங்கும் திறனுடைய நடுத்தர வர்க்கத்தின் அளவும் சுருங்கும்.

இது நடக்காமல் இப்போதைய பொருளாதார தேக்கம் தொடர்ந்தால் அமெரிக்காவுடன் இந்தியா கொண்டிருக்கும் ஏற்றுமதி இறக்குமதி சமமின்மையைச் சரிசெய்ய டிரம்ப் நெருக்கடி கொடுப்பார். இந்தியா மென்பொருள் ஏற்றுமதி செய்து அதிக டொலர் ஈட்டுவதால் அவர்களின் ஆயுதங்கள், எரிபொருள்களையும், இறைச்சி, தானியங்கள் உள்ளிட்ட இறக்குமதியைக் கூட்டச் சொல்வார். விலை அதிகமான அந்தப் பொருள்களின் இறக்குமதி இந்தியாவில் விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கும்.

வரப்போகும் பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் கூடிய பொதுத்துறை ரூபாய் மூலதன நெருக்கடியோடு இப்போது உச்சத்தை எட்டியிருக்கும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவை ஓர் அரசியல் அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தி இந்துத்துவர்களை இருந்த இடம் தெரியாமல் அழிக்கும் ஆபத்தை அவர்கள் அறியாமல் இல்லை.

இந்திய பொருளாதாரத்தில் இன்னுமொரு முக்கிய காரணியானதா ரஷ்யா?

உக்ரைன் போரின்போது வணிக நோக்கில் டொலர் அல்லாத பணத்தில் எரிநெய் இறக்குமதி செய்து ரிலையன்ஸ் லாபம் கொழிக்க அனுமதித்த ஒன்றியம் அதன்மூலம் டொலர் வெளியேற்றத்தைக் குறைத்து அமெரிக்கர்களின் பங்குச்சந்தை நிதியத் தாக்குதலைத் தடுத்து எதிர்கொள்ளும் ஆயுதமாகவும் பயன்படுத்தியது. அது எட்டு பில்லியனில் இருந்து அறுபது பில்லியன் டொலர் வணிகமாக வளர்ந்து அமெரிக்க சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகப் பரிணமித்து இருக்கிறது.

அதற்குப் பதிலாக இந்தியாவிடம் கொடுக்க ஏதுமில்லாத நிலையில் அதில் ஈடுபடும் ரூபாய் கொடுப்பனவு கடன் பணமாகத் தேங்குகிறது. அவர்களை மற்றுமொரு கடன் கொடுத்து முதலீடும் முதலாளிகளாக இந்தியா மாறச் சொல்கிறது. அப்படியான வாய்ப்புள்ள சீனர்களின் நாணயத்தைக் கொடுத்து, மூவழி வணிகமாக அவர்கள் மாற்றக் கோருகிறார்கள். அதாவது தேங்கிக் கிடக்கும் ரூபாய் கொடுப்பனவை யுயன் கடனைத் தெரிவிக்கும் பணமாக மாற்றக் கோருகிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் சீனர்களின் பொருளை வாங்கிக் கொள்வார்கள்.

இது நடைமுறையில் ரஷியர்களின் ரூபிள் கடன் பண எரிபொருள், சீனர்களின் யுவான் கடன் பண மாற்று எரிபொருள், மின்னணு தகவல் தொழில்நுட்பம் கொண்டு அந்த கடன் பண ரூபாய் ஊடான பொருள் உற்பத்தி சுழற்சி நடந்து அவர்களுக்கும் உலகுக்கும் நமக்கும் விற்று கடனை அடைத்து மீண்டும் ரூபாய் மூலதனத்தைப் பெருக்கி, முதலீட்டு இந்த தொழில்நுட்பங்களை அடைந்து தற்சார்பை அடைவது என்பதாக மாற்றம் காணும். அதாவது ஒரு தலைமுறை காலத்திய உழைப்பை அடுத்த தலைமுறை காலத்தில் இழந்து மீண்டும் ஒரு தலைமுறை காலம் உழைக்கப் போகிறோம்.

இந்த ரூபிள் – யுவான் – ரூபாய் கடன் பண மூலதனம் வழியான பொருளாதார சுழற்சி ஏற்கனவே சிதைக்கப்பட்டிருக்கும் ரூபாயின் மதிப்பிழப்பிற்கு ஒத்தடம் கொடுத்து இந்தியா எதிர் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து இந்துத்துவர்களின் அரசியலை நிலைப்படுத்திக் காக்கும் நோக்கில் பூகோள அரசியல் பொருளாதார நகர்வுகளைச் செய்கிறது ஒன்றியம்.

மாற்றை நோக்கி நகர்வதில் இந்திய ஒன்றியம் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன?

இந்தியாவின் இந்த மாற்று மூலதன, தொழில்நுட்ப சுழற்சி ஏற்பாடு இந்துத்துவர்களுக்கு உவப்பானது என்றாலும் இந்திய உற்பத்தியின் டொலர் மூலதனத்தின் ஏகபோகத்தைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களின் இலாப விகிதத்தைக் குறைக்கும். நடைமுறையில் இது கூட்டுக் களவாணிகள் எரிபொருள், தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்புத் துறைகளில் கொண்டிருக்கும் ஏகபோகத்தை உடைக்காமல் மாற்று எரிபொருள், மின்னணு பொருள் உற்பத்தி, வங்கி, நிதி நிர்வாகத்திலும் ஏகபோகத்தை ஏற்படுத்தித் தருவதாக இருக்கலாம். எனவேதான் அமெரிக்கர்களின் ஏகபோகத்தை உடைக்க முயலும் ஒன்றியத்தின் இந்த நகர்வுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள்.

சீனர்களின் உற்பத்தி சங்கிலியில் இணையாமல் இங்கே எந்த உற்பத்தியும் செய்ய முடியாத யதார்த்தம் ஒருபுறம், அவர்களுடனான வணிகத்தை எங்களது டொலர் பணத்தில் எங்களின் வழியில்தான் செய்ய வேண்டும் என்ற அமெரிக்கர்களின் நிர்பந்தம் மறுபுறம் டொலர், யூரோ தவிர்த்த நாணயத்தில்தான் வணிகம் வேண்டும் என்ற ரஷியர்களின் தேவையும் அழுத்தமும் இன்னொரு புறம் என மூவகை கடும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது இந்திய ஒன்றியம்.

2008 நெருக்கடிக்குப் பிறகு இப்படியான அரசியல் பொருளாதார நெருக்கடி எழுந்தபோது இந்தியாவின் நலனில் இருந்து மன்மோகன் அரசு ‘பிரிக்ஸ்’ (BRICS) நாடுகளுடன் இப்படியான ஒரு மாற்று நாணய நகர்வைச் செய்தபோது, அந்த ஆட்சியை இந்துத்துவர்களைக் கொண்டு பதிலீடு செய்து அதனைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா. பிரேசில், இந்திய நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி பிரிக்ஸ் கூட்டமைப்பை உடைத்ததைப் பெருமை பொங்கச் சொன்னார் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பொம்பேயோ (Mike Pompeo).

இப்போதும் அப்படியான ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றும் வாய்ப்புடனே இருக்கிறது இந்திய அரசியல் சூழல். எலும்புத் துண்டை வீசினால் எதையும் செய்யும் அரசியல் தரகர்களால் நிரம்பிய இந்தியாவில் அப்படிச் செய்வது அவ்வளவு கடினமும் அல்ல. ஆதலால் அப்படியான அரசியல் சூழலை நாம் எதிர்பார்க்க இங்கே இடமிருக்கிறது.

அப்படியான சூழலில் கூட்டுக் களவாணிகளின் ஏகபோகம் கொண்டிருக்கும் துறைகளில் மற்றவர்களை அனுமதித்து அமெரிக்க நிறுவனங்களின் இணையதள வணிக மின்னணு தொழில்நுட்ப ஏகபோகம், டொலரில் மட்டுமே வணிகம் என்பதான திசையில் புதிய அரசைச் செலுத்த அமெரிக்கர்கள் முற்படலாம்.

அப்படியான அரசியல் மாற்ற சூழல் வந்தாலோ இந்தியா மாற்று ரூபிள் – யுயன் – ரூபாய் மூலதன சுழற்சி முயற்சியில் வெற்றி பெற்றாலோ… நாம் அதனை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு நம்மிடம் வேண்டும். இல்லை இரண்டுமே நடக்காமல் இப்போதைய பொருளாதாரத் தேக்கம் தொடர்ந்தால் எப்படி இந்தத் தேக்கத்தை உடைப்பது என்ற திட்டம் வேண்டும். என்ன செய்யலாம்?

அடுத்த கட்டுரையில் காணலாம்…

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! – பகுதி 1

அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? – பகுதி 2

டிரம்ப் மீதான அரசியல் படுகொலை முயற்சிக்கு அவசியம் என்ன? – பகுதி 3