சிந்துச் சமவெளி நாகரிகம் எவ்வகையிலும் ஆரிய நாகரிகமல்ல!
அ.அன்வர் உசேன்

சங் பரிவாரம் தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒருபுறம் அன்றாட அரசியல் தளத்தில் இதற்காக செயல்படுவதும் மறுபுறத்தில் சித்தாந்த தளத்தில் இந்துத்துவா கருத்துகளுக்கு அடித்தளமிடுவதும் தொடர்ந்து செய்யப்படுகிறது. அவர்களின் சித்தாந்த முயற்சிகளில் ஒன்று, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிமக்கள் என நிலைநாட்டுவது ஆகும். அதற்கு சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் அல்லது வேத நாகரிகம் என கட்டமைப்பது அவர்களுக்கு அவசியமாகிறது. இதற்காகவே சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என பெயர் மாற்றி அதனை என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்களின் சிந்தனையில் இந்த பொய்யை இடம் பெறச்செய்வது அவர்களது திட்டம். மாணவர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களின் நாகரிகம் என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர்.
ஹரப்பா தொல்லியலின் நூற்றாண்டு
சிந்து சமவெளி அல்லது ஹரப்பா நாகரிகம் பற்றிய அகழாய்வு கண்டுபிடிப்புகள் 1924 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இன்றைக்கு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கண்டுபிடிப்புகள் பழங்கால இந்தியாவை அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் எனில் மிகை அல்ல. இந்த நாகரிகத்தின் பல தரவுகள் அதன் அகழ்வாராய்ச்சியிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டன. முதன் முதலில் 1853 ஆம் ஆண்டு பிரிட்டன் அகழாய்வாளர் ஏ.கன்னிங்ஹாம் ஒரு முத்திரையை கண்டுபிடித்தார். ஒரு எருதும் 6 எழுத்துகளும் அதில் இருந்தன. எனினும் இந்த ஆய்வுகள் 1920களில்தான் வேகம் பிடித்தன. ஜோன் மார்ஷல் எனும் ஆய்வாளரின் மேற்பார்வையில் தயாராம் சஹானி/ ஆர்.டி.பானர்ஜி/ மக்கேய்/ வாட்ஸ் ஆகியோர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். விடுதலைக்கு பின்னர் சூரஜ் பான்/ தவாலிக்கர்/ ஜே.பி.ஜோஷி/ பி.பி.லால் போன்றோர் இந்த பணியை தொடர்ந்தனர். பாகிஸ்தான் தொல்லியல் துறையும் அமெரிக்கா/ பிரான்ஸ்/ பிரிட்டன்/ இத்தாலிய ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டது. இந்த ஒட்டு மொத்த பணியின் காரணமாக ஹரப்பா/ மொகஞ்சதாரோ/ கோட் டிஜி/ சானு தாரோ (நான்கும் பாகிஸ்தானில் உள்ளன) / லோதல் (குஜராத்)/ காலி பங்கன் (ராஜஸ்தான்)/ பனாவாலி (ஹரியானா)/ தொலா விரா (குஜராத்)/ராகிகாரி (ஹரியானா) என பல இடங்களில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கான தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. எனவே சிந்து சமவெளி நாகரிகம் இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலங்கள்/ ஹரியானா/ மேற்கு உத்தரபிரதேசம்/ வடக்கு ராஜஸ்தான்/ சிந்த் மாகாண பகுதி/ குஜராத்/ பலுசிஸ்தானில் சில பகுதிகள் என வியாபித்திருந்தது.
இந்த தொல்லியல் ஆய்வில் ஏராளமான பொருட்களும் தரவுகளும் கிடைத்தன. இந்த ஆய்வுகளின் பலனாக சில முக்கிய முடிவுகளை ஆய்வாளர்கள் கட்டமைத்தனர். அவற்றில் சில:
* ஹரப்பா நாகரிகம் வளமான நகர நாகரிகமாக இருந்தது. (ஹரப்பா நாகரிகம் மறைந்த பின்னர் மீண்டும் நகர நாகரிகம் உருவாவதற்கு 600 ஆண்டு
கள் ஆயின)
* நகரங்களின் தெருக்களும் வீடுகளும் மிகவும் நேர்த்தியாக சீரான முறையில் அமைக்கப்பட்டிருந்தன.
* கட்டடங்களுக்கு சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
* தெருக்களில் எங்கும் ஆக்கிரமிப்புகள் இருக்கவில்லை.
* கழிவு நீர் வெளியேற்றுவதற்கான முறைகள் சிறப்பாக அமைந்திருந்தன.
* நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்த கிணறுகள் வெட்டப்பட்டன.
* சமகால மெசபடோமியா மற்றும் எகிப்து நாகரிகங்களைக் காட்டிலும் முன்னேற்றம் கொண்டிருந்தது.
* பெரிய கோவில்கள் அல்லது பெரும் கட்டடங்கள் இல்லை.
* மெசபடோமியா போன்ற இடங்களுடன் வர்த்தகம் நடைபெற்றது.
* துல்லியமான எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில எடைக்கற்கள் மிகச்சிறிய அளவில் இருந்தன.மிகவும் மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்ட சில உலோகங்களின் எடைக்கு இவை பயன்படுத்தப்பட்டன.
இவையெல்லாம் சாதகமான அம்சங்கள் எனில் சில பாதகமான அம்சங்களும் சிந்து சமவெளியில் இருந்தன:
* சிந்து சமவெளி சமூகம் ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருந்தது. ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு வர்ணாசிரமம் அல்லது சாதியம் அடிப்படையாக இருக்கவில்லை.
* சிந்து சமவெளி சமூகம் விவசாயிகள்/ உணவு சேகரிக்கும் நாடோடிகள்/அடிமைகள்/ நகர்ப்புற ஏழைகள்/ கை வினைஞர்கள்/ வணிகர்கள்/ மதகுருமார்கள்/ ஆளும் வர்க்கங்கள் என ஆழமான வர்க்க பேதம் உள்ள சமூகமாக இருந்தது.
* நகரங்களைப் பராமரிக்க கிராமங்களின் விவசாயத்துறையிலிருந்து உபரி மதிப்பு பறிக்கப்பட்டது.
* மெசபடோமியாவுடன் அடிமைகள் வணிகம் நடைபெற்றது.
* ஏற்றத்தாழ்வுகள் பெரிய வன்முறைகளை உருவாக்கவில்லை. அதற்கு ஆன்மீகம் அல்லது மதம்காரணமாக இருந்திருக்கலாம்.
* பெண் தெய்வங்கள் இருந்தன என்றாலும் ஆணாதிக்க சமூகமாகவே இருந்தது.
* பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டனர்.
* வளமான நாகரிகம் இருந்தும் ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி விரிவடையவில்லை.
இத்தகைய சாதக மற்றும் பாதக அம்சங்களை கொண்டதாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது.

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி
அகழாய்வுகள் மூலம் பல தரவுகள் கிடைத்தி ருந்தாலும் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய மொழியை இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஹரப்பா எழுத்துகள் உலகில் முதலில் தோன்றிய நான்கு எழுத்து வடிவமைப்புகளில் ஒன்று. கடந்த 100 ஆண்டுகளாக இந்த எழுத்துகளின் பொருளை புரிந்துகொள்ள பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. சில ஆய்வாளர்கள் இந்த மொழி மிகவும் தொடக்க கால எலமைட் மொழி என கருதுகின்றனர். பெரும்பாலான ஆய்வாளர்கள் இது மிக மிக தொடக்க கால திராவிட மொழியாக இருக்கலாம் என கருதுகின்றனர். சிலர் எலமைட்டும் திராவிடமும் கலந்த மொழி எனவும் கருதுகின்றனர். சிலர் ஹரப்பா மக்கள் பயன்படுத்தியது மொழியே இல்லை; அது குறியீடுகள்தான் எனவும் கருதுகின்றனர். எனவே பெரும்பாலான ஆய்வாளர்கள் ஹரப்பாவின் மொழி தொடக்ககால திராவிட மொழி என மதிப்பிட்டாலும் இன்னும் தீர்மானகரமான முடிவு ஏற்படவில்லை. எனவே ஹரப்பா மொழியின் பொருள் எனும் சூத்திரத்தை உடைக்க முயற்சிகள் தொடர்கின்றன.
ஹரப்பா மொழியை புரிந்துகொள்வதில் சிக்கல் இருப்பதால் அந்த நாகரிகத்தின் முழு அரசியல் சமூக விழுமியங்களை மதிப்பிட இயலவில்லை. அகழாய்வுகள் பிரமிக்கத்தக்க தரவுகளை முன்வைத்திருந்தாலும் ஹரப்பா நாகரிகத்தின் உள்அம்சங்களை ஒட்டு மொத்தமாக கட்டமைப்பதில் உள்ள சவால்கள் தொடர்கின்றன. சுமார் 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள நாகரிகத்தையும் அரசியல்-பொருளாதார கட்டமைப்பையும் சமூகத்தின் இயங்குதலையும் மதிப்பிடுவது சவால்மிக்க ஒன்றுதான்! இந்த இடைவெளியைத்தான் தங்களது கருத்தாக்கத்துக்கு பயன்படுத்திக்கொள்ள சங் பரிவாரத்தினர் முயல்கின்றனர்.
ஆய்வாளர்களின் ஒருமித்த முடிவு
ஹரப்பா உட்பட சிந்து மக்களின் மொழி குறித்த மதிப்பீடில் பல கருத்துகள் இருந்தாலும் கீழ்கண்ட மிக முக்கிய மதிப்பீடுகளில் ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்துகள் உள்ளன:
1. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்ல.
2. சிந்து சமவெளி மக்கள் ஆரியர்கள் அல்ல; அல்லது ஆரியர்களின் கலப்பினமும் அல்ல. சிந்துசமவெளி மக்கள்-ஆரியர் கலப்பினம் பிற்காலத்தில்தான் உருவானது.
3. சிந்து நாகரிக மக்களின் மொழி சமஸ்கிருதம் அல்ல.
ஆய்வாளர்களின் இந்த ஏகோபித்த முடிவு சங் பரிவாரத்தினரின் கருத்தாக்கத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது எனவும் அவர்கள் பேசிய மொழி சமஸ்கிருதத்தின் வடிவம் எனவும் நிலை நாட்ட கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றனர். அகழாய்வு நிபுணர்கள் சிலரை தமது ஆரிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளனர். அத்தகைய அகழாய்வு நிபுணர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கும் ஆரியத்துக்கும் உள்ள தொடர்பை நிலைநாட்ட அகழாய்வு தரவுகளை திரிக்க முயல்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த சில நாசா விஞ்ஞானிகளிடம் தமது சித்தாந்தத்தை புகுத்தி ஹரப்பாவிற்கும் ஆரியத்துக்கும் உள்ள தொடர்பை நிலைநாட்ட முனைகின்றனர். இத்தகைய முயற்சிகள் சங் பரிவாரத்துக்கு இதுவரை பலன் அளிக்கவில்லை.
சிந்து சமவெளி நாகரிகமும் சரஸ்வதி நதியும்
சங் பரிவாரம் முன்வைக்கும் சரஸ்வதி நதி ஒரு சிறிய ஆறாகவே இருந்துள்ளது. அதில் அனைத்து காலங்களிலும் நீர் இருந்தது இல்லை. சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே நீர் இருந்தது. சிந்து சமவெளியின் ஒரு பகுதி சரஸ்வதி நதியின் அருகில் இருந்தாலும் சிந்து அளவுக்கு சரஸ்வதி பெரிய ஆறு இல்லை. மேலும் சரஸ்வதி ஆறு நாளடைவில் மறைந்து விட்டது. பின்னர் ஹக்ரா- காகர் நதிதான் சரஸ்வதி நதி என சங் பரிவாரத்தினர் நிலைநாட்ட முயல்கின்றனர். ஹக்ரா-காகர் நதியின் ஒரு துணை நதிதான் சரஸ்வதி நதி. மேலும் ஹக்ரா- காகர்தான் சரஸ்வதி நதி என வாதத்துக்காக வைத்து கொண்டாலும் சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும்பாலான குடியிருப்பு கள் இந்த ஆற்றின் அருகே அல்ல; அதனைவிட்டு தள்ளிய பகுதிகளில்தான் இருந்தன என்பதையே தொல்லியல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இதனை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என அழைப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. அதற் கான வலுவான ஆதாரங்களும் இல்லை.

சிந்து சமவெளி நாகரிகம் – ஆரிய நாகரிகம் : வேறுபாடுகள்
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் ஆரிய அல்லது வேத நாகரிகத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் சில:
* சிந்து சமவெளி நாகரிகம் நகர நாகரிகமாக இருந்தது. வேத நாகரிகம் நகரங்களை கொண்டிருக்கவில்லை.
* சிந்து சமவெளி மக்கள் விலங்குகளை தெய்வமாகவணங்கினர். ஆரியர்கள் அதீத ஆற்றல் படைத்தமனிதர்களை தெய்வமாக வணங்கினர். உதாரணத்துக்கு இந்திரன்.
* சிந்து சமவெளியில் எருதுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் வேத காலத்தில் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
* சிந்து சமவெளியில் குதிரை அறவே இல்லை. ஆரியர்களின் முக்கிய விலங்கு குதிரை. குதிரை ரதங்கள்மூலம்தான் அவர்கள் எதிரிகளை வீழ்த்தினர்.
* சிந்து சமவெளியில் பெண் தெய்வங்களின் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் ரிக் வேதத்தில்பெண் தெய்வம் என்பது இல்லை.
* சிந்து மக்கள் இறந்தவர்களை புதைத்தனர். வேத கால மக்கள் இறந்தவர்களை எரித்தனர்.
* வேதங்களில் பழமையான ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500. ஆனால் சிந்து சமவெளியின் காலம் கி.மு.3000 முதல் 1900.
மரபணு சோதனை நிரூபணம்
தொல்லியல் அடிப்படையில் உருவான இத்தகைய வேறுபாடுகள் மட்டுமின்றி மிக நவீனமாக மரபணு சோதனை மூலமும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ராகிகரி எனும் சிந்து சமவெளி அகழாய்வு இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டிலிருந்து பெறப்பட்ட மரபணுவை ஸ்டெப்பி சமவெளி (ஆரியர்களின் பூர்வீகம்) பழங்கால மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது அது ஒத்திசைந்து இல்லை. எனவே சிந்து சமவெளி மக்கள் ஆரியர்கள் அல்ல என்பதை இது மேலும் உறுதியாக நிலைநாட்டியுள்ளது. சங் பரி வாரத்தினர் இந்த மரபணு ஆய்வையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இவ்வாறாக அனைத்து அறிவியல் ஆதாரங்களும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய அல்லது வேத நாகரிகம் இல்லை என்பதையும் சிந்து நாகரிகத்தின் மொழி சமஸ்கிருதம் இல்லை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளன. எனினும் சங் பரிவாரம் தனது முயற்சிகளை கைவிடுவதாக இல்லை. அதன் ஒரு பகுதியாகவே என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் மூலம் பள்ளி மாணவர்களின் சிந்தனைகளில் பொய்யை புகுத்த முனைகின்றனர். இது மிக ஆபத்தானது. சில தலைமுறைகள் இப்படி பொய்யான சிந்தனைகளில் வளர்ந்தால் என்ன ஆகும் என்பதை பலஸ்தீன இனப்படுகொலையை 82% இஸ்ரேல் மக்கள் ஆதரிப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் இல்லை என்பதை வலுவாக முன்னெடுக்க வேண்டிய கடமை மதச்சார்பின்மை சக்திகளுக்கு உள்ளது.
ஆதாரங்கள்:
1. இந்தியாவின் கடந்த காலம்/ ராம் சரண் சர்மா.
2. சிந்து சமவெளி நாகரிகம்/ இர்ஃபான் ஹபீப்
3. இந்திய வரலாற்று ஆய்வுக்கு ஒரு அறிமுகம்/ டி.டி.கோசாம்பி.
4. மரபணு குறித்து ஆய்வுக்கட்டுரை/ வசந்த் ஷிண்டே,
டேவிட் ரீச், வகீஷ் நரசிம்மன் முதலியோர்.