முதலாளித்துவம் வெல்ல முடியாது; தொழிலாளர் வர்க்கமே முன் செல்லும்!

(செப்டம்பர் 7ந் திகதி வெளியாகிய ‘ஆழமாகும் நெருக்கடி திணறும் முதலாளித்துவம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி)

(ஈ)
மிகப் பெரிய அளவு வேலையின்மையை ஏற்படுத்துவது

உலக அளவில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் இரண்டு விநோதமான குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் தோன்றியுள்ளன. முதலாவது அம்சம் – உள் கட்டமைப்பு துறைகளில் அரசு முதலீடுகளை ஊக்குவிக்கும் போக்கு; கூடவே சொத்து நிர்வாக கம்பெனிகள் பெருமளவில் முதலீடு செய்வது. இது உற்பத்தித் திறனில் குறைவான வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக ஏற்படுத்துகிறது. அரசுக் கொண்ட்ராக்ட்களைப் பெறுவதன் மூலம், உலக அளவில் சில தனியார் கோர்ப்பரேட்டுகள் வசம்  இலாபம் எல்லாம் குவிகிறது. பொருளாதாரத்தில் அனைத்து உற்பத்தி துறைகளும் வளர்வது என்ற நிலை இல்லாததால், வேலைவாய்ப்பும், வாங்கும் சக்தியும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சரக்குகளுக்கு கிராக்கி குறைகிறது; இதன் விளைவாக உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை  உருவாக்கும் தனியார் முதலீடுகள் குறைகின்றன.

இரண்டாவது அம்சம்– உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நிலையான/ முறையான வேலை வாய்ப்பு  குறைவது, தொழிலாளர் சந்தையில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. 

செயலி வழித் தொழிலாளர் (கிக் தொழிலாளர்) நியமனம், பயிற்சியாளர் அல்லது பழகுநர் அல்லது குறிப்பிட்ட கால வேலை என பணி உறவுகள் மாறுகிறது. கூடவே அவுட்சோர் சிங் மற்றும் கொண்ட்ராக்ட்மயமும் அதிகரித்து, வேலைவாய்ப்பின் தரம் மற்றும் சம்பளம், உரிமைகள் சீர்கேடு அடைகிறது.

வேலைவாய்ப்பு /வேலையின்மை- புதிய அம்சங்கள்

மோசமான வாழ்நிலை காரணமாக, தொழிலாளர் பாதுகாப்பற்ற, நிலையற்ற முறைசாராத் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். உலக அளவில் 58 % பேர் சுய வேலைவாய்ப்பு என்ற வரையறைக்குள் வருகின்றனர். ஐ.எல்.ஓ கணிப்பு என்னவென்றால், 2024 மற்றும் 2025  இல் தரமான வேலைகள் குறையும், உலக அளவில் வேலையின்மை மேலும் உயரும், அமைப்பு ரீதியாக தொழிலாளர் சந்தை பலவீனப்பட்டு வருகிறது.

உழைப்பின் மீது செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

கோல்டுமேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர்கள்,  தொழிலாளர் சந்தையில் சீர்குலைவுகளை ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு வரும் என்கின்றனர். பிரதான நாடுகளில் 30 கோடி முழு நேரத் தொழி லாளர்  பாதிக்கப்படுவர். ஏ.ஐ நவீனமயமாக்கல் உலகளவில் ஐந்தில் ஒரு வேலையைப் பறிக்கும்; உலகளவில் 40% பணிகள் ஏ.ஐ- யினால் பாதிக்கப்படும்; முன்னேறிய பொருளாதார நாடுகளில் 60%  பணிகள் பாதிக்கப்படும். அசமத்துவம் மேலும் வளரும் என ஐ.எம்.எப் கூறுகிறது.

நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள  ஏ.ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்  போது, தொழிலாளரை  நிர்வாகம் கூடுதல் துல்லியமாக கண்காணிக்க முடியும்; தொழிலாளரின் கூட்டுப் பேர சக்தியை குறைக்க முடியும். உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் பெருமளவில் மனித இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் பணி நிலைமைகள் மேலும் மோசம் அடையும். உலகின் இரண்டாவது பெரிய தனியார் நிர்வாகமான அமேசான் 7.5 இலட்சம் மனித எந்திரங்களைப் பயன்படுத்தி, ஒரு இலட்சம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக வேலை இழப்பு, அசமத்துவம், குறைந்த ஊதியம், கூடுதல் வேலைப்பளு, நிலையற்ற வேலை என நிலைமைகள் கடுமையானதாக மாறும்.

இயற்கையின் மீது செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: 
இயற்கை (எதிர்) முதலாளித்துவம் 

செயற்கை நுண்ணறிவை கூடுதலாக பயன்படுத்தும் முதலாளித்துவத்தின் உத்திகளால், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உலகம் வெப்பமயமாகி வருகிறது; எரிசக்தி பயன்பாடு சீர்கேடு அடைகிறது. மைக்ரோசாப்டின் தரவு வசதிகள் மையத்தில், சாட் ஜி.பி.டி- 3 பயிற்சிக்கான எந்திரங்களை குளிர்விக்க மட்டும் ஒரு நாளைக்கு 7 இலட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஒரு ஐரோப்பிய நகரத்திற்கு எரிசக்தி வழங்கும் அளவிற்கு 6 ஆயிரம் மடங்கு எரிசக்தியை ஏ.ஐ பயிற்சி மாடல்கள் பயன்படுத்துகின்றன. தரவு மையங்களில், லித்தியம் மற்றும் கோபால்ட் தாதுப் பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தாதுப் பொருட்களை வெட்டி எடுக்கும் செய்முறைகளில் ஏராளமான தண்ணீர் செலவாகிறது.

(உ)
சுமைகளை தொழிலாளர்க்கு மடை மாற்றுவது

ஏற்கனவே, முதலாளித்துவ வர்க்கங்கள் கடிவாளம் இன்றி இயற்கையை பயன்படுத்துவது, தொழிலாளரின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் 70 சதவீத தொழிலாளர் பருவ நிலை மாறுதல் காரணமாக சுகாதார சீர்கேடுகளை அனுபவிக்கின்றனர். வெப்ப அழுத்தம் காரணமாக,  குறைந்த, நடுத்தர வருமானம் உடைய நாடுகளில், பெண்கள் தலைமை வகிக்கும் இல்லங்களில், பருவ நிலை மாறுதல் 3700 கோடி டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியது. மழை, வெள்ளம் காரணமாக 1600 கோடி டொலர் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் 4.31 கோடி  குழந்தைகள்  பருவநிலை பேரிடர்களால் உள்நாட்டில் புலம்பெயர்ந்தனர். இவர்களில் 95 சதவிகிதம் பேர்  மழை வெள்ளம் மற்றும் புயலினால் இடம்பெயர்ந்தனர்.

(ஊ) 
முதலாளித்துவத்தை  காப்பாற்ற யுத்த விரிவாக்கம்

நெருக்கடிக்குத் தீர்வு காணும் வழிகளில் முதலாளித்துவம் அடிக்கடி சோதித்துப் பார்த்தது, புதிய புதிய போர்கள் ஆகும். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், சுரண்டல், பறிமுதல் மூலம்  யுத்தப் பொருளாதாரம் ஏற்படுத்துவது. நமது காலத்தில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய புவி அரசியலின் அப்பட்டமான நடைமுறைகள்,  யுத்த அச்சுறுத்தல், யுத்தம், சீர்குலைவுகள், பொருளாதாரத் தடைகள், மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது ஆகியவைகளாகும். குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இதை காண முடியும்.

கடந்த பத்து மாதங்களாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆதரவுடன், யூத வெறி பிடித்த நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு, பலஸ்தீன  மக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை காட்டுமிராண்டித்தனமாக இனப்படுகொலை செய்து வருகிறது. 

1946 -2023 இல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு செய்த இராணுவ நிதி உதவி மொத்தம் 26, 300 கோடி டொலர். 2023 இல் மட்டும் 380 கோடி டொலர் உதவி. 2022 இல் அமெரிக்காவின் ஐந்து பெரிய இராணுவ தளவாட கொண்ட்ராக்டர்கள், 19,600 கோடி டொலரை இராணுவம் சம்பந்தப்பட்ட வகையில் வருவாயாக ஈட்டினர். அயல்நாடுகளுக்கு அமெரிக்க இராணுவ தளவாட விற்பனை 49 சதவிகிதம் உயர்ந்து, 20560 கோடி டொலர் ஆனது. 

இஸ்ரேலிய இராணுவ தளவாட கம்பெனிகளில், இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி பெருமளவில் முதலீடு செய்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேலின் கேந்திரமான ஹைஃபா துறைமுகத்தை வாங்க, 120 கோடி டொலர் அதானி செலவிட்டார் . கிரீஸிலும் மூன்று துறைமுகங்களை கையகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஜோர்டானை கேந்திர (முக்கியப்) பங்காளிகளாக கொண்டு, இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார வளாகம் என்ற திட்டத்தின் குவி மையமாக அதானி துறை முகங்கள் உள்ளன.

கிழக்கு நோக்கி  நேட்டோ  ஆக்கிரமிப்பு

உலகம் முழுவதும் தனது பொருளாதார இராணுவச்  செல்வாக்கை விரிவுபடுத்த அமெரிக்கா எப்போதுமே முயன்று வருகிறது. ஆனால் புதிதாக வளர்ந்து வரும் புவி அரசியல் எதார்த்தத்தில், உக்ரைனில் நேட்டோவின் சமீபத்திய விரிவாக்கச் செயலுக்கு, ரஷ்யா வலுவாக எதிர்வினை ஆற்றி வருகிறது. நீண்ட யுத்தம் மற்றும் ரஷ்யா மீதான தன்னிச்சையான அமெரிக்கத் தடைகள், உலகளவில் உணவு, எரிபொருள் பெருமளவில் தட்டுப்பாடு மற்றும் நிதி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழப்பமான புவி – அரசியல் நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் எரிசக்தி மற்றும் இராணுவத் தளவாட கோர்ப்பரேட்டுகள், பல்வேறு வழிகளில் தேசங்களை, மக்களை கொள்ளை அடிக்க துவங்கியுள்ளது. எக்ஸான் மொபில் (Exxon Mobil) என்ற அமெரிக்க எரிசக்தி கம்பெனி, 2023 இல் 5,500 கோடி டொலர் இலாபம் ஈட்டி சாதனை புரிந்துள்ளது. யுத்தத்தை தொடர்வதற்காக, பைடன் நிர்வாகம் 7,500 கோடி டொலர் நிதி உதவியை 2022 இல் உக்ரைனுக்கு வழங்கியது. 

உக்ரைன் – ரஷ்யா மோதலால் கச்சா எண்ணெய் விலைகள் கூடியுள்ளன. இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் நடைபெறும் எதிர்த்தாக்குதலால், கப்பல் சரக்கு கட்டணம் 40% கூடியுள்ளது. உலக வணிகத்தில் 12% இந்த பிராந்தியம் வழியே மேற்கொள்ளப்படுகிறது. 

புதிய எதிர்வினைகள்

உக்ரைன் யுத்தத்தில்  ரஷ்யாவை தோல்வி அடையச் செய்ய, அமெரிக்க நிர்வாகம் 2000 வகையான மனிதாபிமானமற்ற தடைகளை திணித்துள்ளது. ரஷ்யாவின் அந்நியச் செலாவணி 63,000 கோடி டொலரை, அமெரிக்கா முடக்கியது. அமெரிக்காவின் இந்த அநீதியான செயல் மற்ற நாடுகளுக்கும் அவற்றின் டொலர் இருப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்ய- சீன ஒத்துழைப்பு கூடியுள்ளது; சீனாவிற்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே ஒப்பந்தம்; சீனாவிற்கும், வியட்நாமிற்கும் இடையே ஒப்பந்தம்; ஈரான், சவூதி அரேபியா இடையே சமாதான உடன்பாடு; சிரியா மீதான தடையை அரபு நாடுகள் நீக்கியது என இருதரப்பு, பல நாடுகளுக்கு இடையேயான பொருளாதார முயற்சிகள், வணிக ஒப்பந்தங்களை டொலர் அல்லாத பிற நாணயங்களில் மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றுள்ளது. டொலர் இருப்பு 50%-க்கு கீழ் குறைந்தது.

அமெரிக்கா அல்லது ஐ.எம்.எப் வழங்கும் நிபந்தனைகளுடன் கூடிய கடன்கள் காரணமாக  பல நாடுகள் சீனா பக்கம் சாய்கின்றன. 2012 இல் சீனா பல நாடுகளுக்கு வழங்கிய கடன் 33,300 கோடி டொலர்; இது 2022 இல் 95,200 கோடி டொலராக உயர்ந்தது. டொலர் அல்லாத வேறொரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்க சீனா முன்முயற்சி எடுத்து வருகிறது. இவற்றின் விளைவாக அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலகம் பலவீனம் அடைந்து வருகிறது.

தெற்கு உலக எதிர்ப்பு

நெருக்கடியில் சிக்கியுள்ள சர்வதேச நிதியின் இருப்பை நிலை நிறுத்த, கடைசி முயற்சியாக கடிவாளமற்ற வகையில், தெற்குலக நாடுகளை சுரண்டுகிறது முதலாளித்துவம். தற்கால உலகமய சகாப்தத்தில், ஐ.எம்.எப் /உலக வங்கி ஆதிக்கத்தில் நிதி சுதந்திரமாக நடமாடுகிறது; எல்லைகளைக் கடந்து சரக்குகளும்,மூலதனமும் செல்வது தாராள மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உழைப்பு தேச எல்லைக்குள் நின்று விடுகிறது. சர்வதேச உழைப்புச் சந்தை பிளவுபட்டுள்ளது. வடக்கு உலகிற்கும், தெற்குலகத்திற்கும், உழைப்பு சக்திக்கு கிடைக்கும் விலைகளில் பெரிய இடைவெளி உள்ளது. காலனி ஆதிக்க கால ஊதிய வித்தியாசங்கள் தற்போதும் நிலவுகின்றன.

உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் தெற்கு உலகிலும், மூலதன மையங்கள் வடக்கு உலகிலும் குவிந்துள்ளன. வடக்குலக மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 21% மட்டுமே. ஆனால் இங்கு 69%  தனியார் செல்வம் உள்ளது. இடைநிலை உற்பத்தி அல்லது பாகங்களை ஒன்றிணைக்கும் வேலைகள் நடைபெறும் வளாகமாக தெற்குலகம் விளங்குகிறது. பிராண்ட் மூலம் மதிப்பு கூட்டுவது வடக்குலக கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்குலக அனைத்து நாடுகளும், மனிதாபிமானமற்ற தொழிலாளர் கொள்கைகளை அமுலாக்க, சர்வதேச நிதி மூலதனம் கட்டளையிடுகிறது. உபரி மதிப்பை உயர்த்துவது, சிறு அளவிலான உற்பத்தி முறையை ஒழிப்பது போன்றவை மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் சீரழிக்கப்படுகிறது.

வடக்குலகில் இது சந்தேகத்திற்கு இடமின்றி தொழில்களை ஒழிப்பது, வேலைவாய்ப்புகளை பெருமளவில் குறைப்பதற்கு இட்டுச் செல்கிறது. மேற்கு நாடுகளின் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் குறைகளை மட்டுப்படுத்த சில சமூக பாதுகாப்பு திட்டங்களை அங்குள்ள அரசுகள் அமுலாக்குகின்றன. ஆனால் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், நிதி மூலதனம் சிக்கனச் சீரமைப்பு நடவடிக்கைகளை திணிக்கிறது. அதிருப்தியுற்றோர் தெருக்களில் இறங்கிப் போராடுகின்றனர். தற்கால ஏகாதிபத்தியம் இத்தகைய அடிப்படை முரண்பாடுகளுக்கு நிச்சயமாக தீர்வு காண முடியாது.

முதலாளித்துவம் தானாக வீழாது: தெற்குலக நாடுகளின் தொழிலாளர்கள், தங்கள் போராட்டங்களை வடக்குலக நாடுகளின் தொழிலாளர் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். அதேபோல் ஒரு சரக்கு பல்வேறு நாடுகளில் உற்பத்தியான போதிலும், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் ஒற்றுமை முக்கியம். பல நாடுகளில் உள்ள ஒரே கம்பெனி தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும்.

ஒன்றுபடுவோம்!  களம் காண்போம்! 

நவயுக தீவிர வலதுசாரி /நவீன பாசிசம் உலக அளவிலானது. தேச எல்லைக்குள் நிதி மூலதனம் நிற்பதில்லை.  நெருக்கடியின் மையம் தொடர்ந்து  மாறி வருவதுடன், தேக்க நிலையும் தீவிரமடைகிறது. சமூக ஜனநாயக சக்திகளின் ஊசலாட்டங்கள், சமரசங்கள், தாராளவாத ஜனநாயகத்தின் திவால் தன்மை, உலகம் முழுவதும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமான களம் அமைத்துக் கொடுக்கிறது.

மக்களின் நிர்வாக எதிர்ப்பை, தீவிர வலதுசாரி சக்திகள் பயன்படுத்தி ஆதாயம் அடைகின்றன. சமூக ஜனநாயக சக்திகள், நவீன தாராளமயத்தின் முன்னால் சரணடைந்துள்ளன. 

இத்தகைய பின்னணியில், நமது அனைத்து அன்றாடப் போராட்டங்களையும், சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்க வேண்டும். முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்  நெருக்கடிக்கு தீர்வு இல்லை. முதலாளித்துவத்தின் வக்கிரமான, காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக, திட்டவட்டமான மாற்றை முன்னிறுத்தி, உலக தொழிலாளி வர்க்கம் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும். நெருக்கடியை சமூக மாறுதல்களுக்கான உணர்வாக மாற்றும் தேவைகளை புரிந்து கொண்டு, உணர்வுப்பூர்வமான முன் முயற்சிகளை கூர்மைப்படுத்த வேண்டும்.

Tags: