‘மக்கள் விடுதலை முன்னணி இன்று முதலாளிகளின் பொக்கற்றுக்குள்’ – குமார் குணரட்ணம்

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

குமார் குணரட்ணம்: ஜனாதிபதி தேர்தலுடன் அரசியல் சூழல் குறிப்பிடக்கூடிய அளவில் சிக்கலாகியுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் தாம் வெற்றி பெறுவோம் என ஒவ்வொருவராகக் கூறிவருகின்றனர். கடன் மீளச் செலுத்தல் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே சிக்கலான நிலைமை உருவாகும். 21ஆம் திகதிக்குப் பிறகு வெற்றிக்கான போராட்டம் ஆரம்பமாகும்.

அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெறுவோம், எனவே எமக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றார்கள். அரசியல் கோணத்தில் இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

குமார் குணரட்ணம்: தான் நாட்டை கட்டியெழுப்பியதால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சக்தியை தனக்கு கொடுங்கள் என ஜனாதிபதி கூறுகின்றார். சிறந்த திறமைசாலிகள் தன்னிடம்தான் உள்ளார்கள், எனவே தனக்கு ஆதரவு தாருங்கள் என சஜித் பிரேமதாச கூறுகிறார், நாட்டில் மாற்றத்தை உருவாக்க தனக்கு ஆதரவு தாருங்கள் என்றும், பழைய மேட்டுக்குடிகளை விரட்டி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான அதிகாரத்தை தமக்கு வழங்குமாறு அநுர குமார திசாநாயக்கா கூறுகின்றார்.

இந்த வேட்பாளர்களின் கொள்கை அறிக்கைகளை ஆய்வுக் கண்ணோடு பார்த்தால்…?

குமார் குணரட்ணம்: சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தப் பயணத்தைத் தொடரும் வகையில் எல்லோருமே ஒரே வகையிலான உறுதிமொழிகளையே வழங்கியிருக்கின்றார்கள்.வரிக் கொள்கையை மாற்றுவதற்கு எவரிடத்திலும் தெளிவான வழிகள் இல்லை. எனவே நாம் நினைக்கிறோம்; மக்கள் தரப்பிலிருந்து, குறிப்பாக இந்திய அரசியலுக்கு, அதேபோன்று அதானி, அம்பானி போன்றவர்கள் இந்த நாட்டில் சக்தியை பெறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவர்களிடத்தில் தீர்வுகள் இல்லை. எல்லா அறிக்கைகளிலும் ஒரே விஷயம் வெவ்வேறு வழிகளில் விளக்கப்பட்டுள்ளது.எனவே, வெற்றி பெற மக்கள் வித்தியாசமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிலை மேலும் விளக்கினால்…?

குமார் குணரட்ணம்: ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கின்றார், இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கைகளுக்காக தொடர்ந்தும் முன்நிற்பதாக. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, ​​ திடீரென பொருளாதாரம் நின்று போனது. அதற்கு மேலதிக சக்கரங்களைப் பொருத்தி ஜனாதிபதி அங்கிருந்து கட்டியெழுப்பினாலும் மக்கள் மீதான சுமைகள் குறையவில்லை. அதனால்தான் மின்சாரக் கட்டணம், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு நாம்தான் முதலில் கூறினோம் என சஜித் பிரேமதாச கூறுகிறார். அதாவது பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்கி சாமானியர்களின் மீது சுமையேற்றுவதுதான் இதன் மூலம் இடம்பெறுகின்றது. அவர்களின் திட்டம் இருப்பதும் அதில்தான்.

இன்றைய நிலையில் அநுரகுமார திசாநாயக்கவும் அந்த இடத்திற்கே வந்துள்ளார். அவர்கள் நேரடியாகச் சொல்லாவிட்டாலும், சர்வதேச நாணய நிதியம் மூலம் மக்களை ஒடுக்குவதே இவர்களின் கொள்கை. மக்கள் விடுதலை முன்னணி பழைய மார்க்சிச நிலையில் இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்த சஜித் பிரேமதாச முயற்சிக்கிறார். ஆனால் அநுரகுமார திஸாநாயக்க கூட தற்போது வர்த்தகர்களிடம் இலவசக் கல்வி, சுகாதாரத்தை தனியார்மயமாக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார். எந்தவொரு அரசியல் தலைவரும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது எப்படி என்று சரியாக கூறவில்லை. சர்வதேச நாணய நிதியம் காட்டிய பாதையில் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார நோக்கினை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

குமார் குணரட்ணம்: பொருளாதாரத்தை சரியான முறையில் கையாள்வது பற்றி ஜேவிபிக்கு தெளிவான பார்வை இல்லை. கடன் மறுசீரமைப்பு பகுப்பாய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எப்படி என்று தெரியவில்லை.

அவர்கள் மேல் நடுத்தர வர்க்கத்தினர் மீதே கவனம் செலுத்தியுள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் நிலத்தை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப எதிர்பார்க்கின்றனர். அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அதைச் செய்யலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜே.வி.பி கொள்கைகளின்படி, இந்த நாட்டில் கடைசியாக நடக்கப்போவது இலவச சுகாதாரம்; இலவசக் கல்வி இரண்டுமே முதலாளிமார்களின் கீழாவதாகும்.

அதாவது ஜேவிபி கடந்த காலத்தை மறந்துவிட்டதா? அல்லது கடந்த கால வீரர்களை மறந்துவிட்டார்களா?

குமார் குணரட்ணம்: உண்மையில் இன்று ஜேவிபி இல்லையே. ஒவ்வொருவராக இணைந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியே உள்ளது. முன்னாள் ஜேவிபி உறுப்பினர்கள் அந்த வரலாற்றை நேசிப்பார்கள். ஆனால் ஒன்றுமே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள், பல்வேறு கலாநிதிகள், பேராசிரியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இலக்குகள் உள்ளன. ஆனால் ஜேவிபி செங்கொடியைக் கைவிட்டுவிட்டது.

இந்தப் பயணத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குமார் குணரட்ணம்: நாம் மக்களைப் பற்றியே பார்க்கின்றோம். மக்களின் எதிர்காலத்தைப் பற்றியே பார்க்க வேண்டும். இன்று தேசிய மக்கள் சக்தி இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துடனாகும். பொது மக்களுக்கான வெற்றி கிடைக்க இருக்கும் ஒரே வழி, வேலைத்திட்டத்துடன் குறுகிய கால சீர்திருத்தங்களை நாம் முன்வைத்திருக்கின்றோம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறை திருத்தம், வரி முறை மாற்றம் என 5 வருடங்கள் கடந்தும் மக்கள் பிரதிநிதிகளை மாற்ற முடியாத முறைமையை மாற்றியமைத்து மக்களை ஈடுபடுத்தக்கூடிய முறைமையை முன்வைத்துள்ளோம்.

இந்த வரிகளை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பொருளாதாரத்தில் இருந்து நாடு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் முடியும் என்று நினைக்கிறீர்களா?

குமார் குணரட்ணம்: சம்பாதிக்கும் தொகைக்கு ஏற்ப வரிவிதிப்பு முறை இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் சிறிய தரப்பினரை நசுக்கும் வரிக் கொள்கையை பணக்காரர்களுக்காக இன்னும் உயர்த்த முயற்சிக்கின்றனர். எரிபொருளைப் போலவே, மின் கட்டணத்திற்கும் ஒரு கொள்கை தேவை. இன்று அதிசொகுசு வாகனங்களைப் போன்று முச்சக்கரவண்டிகளுக்கும் அதே விலையில் எரிபொருளும் வழங்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற சிறிய வாகனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதோடு, சொகுசு வாகனங்களுக்கு அதிக விலையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.

மின்கட்டணமும் அதேபோன்றுதான். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முதல் 30 யூனிட் இலவசமாகவும், 60 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மானிய விலையும், அதிக நுகர்வோருக்கு குறிப்பிடக்கூடிய கட்டணத்தையும் வசூலிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் சில வேட்பாளர்கள் பில்லியன் கணக்கில் செலவு செய்வதை நாம் அறிவோம்.

அப்படியானால், சில வேட்பாளர்களுக்குப் பாடசாலைகளுக்கு பஸ்களை வழங்குவதற்கும், நட்பு வகுப்பறைகள் அமைத்துக் கொடுப்பதற்கும் எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? அதேபோன்று, இன்னும் சிலர் இன்று இடதுசாரிகள் என்று தம்மைக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் முதலாளி வர்க்கத்தைப் பாதுகாப்பவர்களாக ஆகியிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு தேர்தலில் யார் செலவு செய்கிறார்கள் என்பதைத் தேடிப் பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்கள் முழுவதும் விளம்பரங்களை வெளியிட பணம் எங்கிருந்து வருகிறது? அந்தச் செல்வத்தை வழங்கும் வணிக வர்க்கம் இல்லாமல் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. இடதுசாரி முற்போக்காளர்கள் வடிவில், முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் பயணம் நடைபெறுகிறது.

நீங்கள் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள் எவை?

குமார் குணரட்ணம்: நாங்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். இது சோவியத் யூனியன் அல்லது சீனா போன்ற சோசலிச வேலைத்திட்டம் அல்ல. 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறான ஒரு வேலைத்திட்டமாகும்.

காலாவதியான சோசலிச கொள்கைகளை நாங்கள் முன்வைக்கவில்லை. ஒரு புதிய தொடக்கத்திற்கு ஒரு புதிய பொருளாதார நோக்கினை முன்வைக்க வேண்டும். ஏழை, பணக்காரன் என அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

குமார் குணரட்ணம்: 21ஆம் திகதி மக்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று மக்களை எச்சரிக்கிறோம்.

Tags: