அஞ்சலி: சீதாராம் யெச்சூரி – ஒரு ஞானச் சூரியன் மறைந்தது!

அருணன்

.மு.எ.ச.வின் (இப்போது த.மு.எ.க.ச – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) வெள்ளிவிழா மாநாடு கோவையில் 1999 மே மாதம் நடைபெற்றது. மாநாட்​டையொட்டி அமைத்​திருந்த கருத்​தரங்கில் பேச தோழர் சீதாராம் யெச்சூரியை அழைத்​திருந்​தோம். அப்போது தமுஎசவின் பொதுச்​செய​லாளர் நான். கோவைக்கு வந்தவரை வரவேற்று, நானும் சில தோழர்​களும் பேசிக்​கொண்​டிருந்​தோம்.

அப்போது, “இன்றைய அரசியல்​-பொருளா​தாரம் பற்றி எழுத்​தாளர்​களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஓர் ஆலோசனை வந்திருக்​கிறது. அதைப் பேசவா அல்லது பின்-நவீனத்துவம் உள்ளிட்ட இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசவா?” என்று யெச்சூரி கேட்டார். நாங்கள் அனைவரும் ஒரே குரலில், “தோழர், நீங்கள் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசுங்கள்; அதுவே பொருத்தமாக இருக்​கும்” என்றோம். அவர் மெலிதாகச் சிரித்​தார்.

இலக்கி​யத்தின் அரசியலில்… கருத்​தரங்கம் தொடங்​கியது. நான்தான் மொழிபெயர்ப்​பாளர். ‘இவர் அரசியல் பேசுவாரா, இலக்கியம் பேசுவாரா?’ என்று எனக்குள் ஒரே பரபரப்பு. பேச ஆரம்பித்தவர் தேச அரசியலின் சாரத்தைச் சொல்லி​விட்டு, இலக்கியத்தின் அரசியலுக்குள் புகுந்​தார். புகுந்தார் என்றால்… புகுந்து விளையாடி​னார்.

இலக்கியக் கோட்பாடு​களுக்குள் இருக்கும் அரசியலைப் புட்டுப் புட்டு வைத்தார். பின்-நவீனத்துவம் எனப்பட்டதன் உள்ளிருக்கும் அரதப் பழசான அரசியலைப் பிரமாதமாக அடையாளம் காட்டி​னார். யதார்த்​தவாதம் என்னும் இலக்கியக் கோட்பாடே முற்போக்கு எழுத்​தாளர்​களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு எழுத்​தாள​ருக்கும் ஏற்றது என்றார். அதேநேரத்​தில், அதை விரிந்த நோக்கில் புரிந்​து​கொள்ள வேண்டும், கைக்கொள்ள வேண்டும் என்றார். ஓர் அரசியல் தலைவர் இவ்வளவு ஆழமாக இலக்கிய நடப்புகளை அறிந்து வைத்திருப்​பாரா, இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்வாரா என்று அனைவரும் அசந்து​போனார்கள். ஒரு சரியான அரசியல்வாதி உள்ளார்ந்த இலக்கிய​வா​தி​யாகவும் இருப்பார் என்பது அன்று உறுதி​யானது. அந்தப் பேச்சு, ‘இலக்கைத் தேடும் இலக்கியம்’ என்று சிறு பிரசுர​மாகவும் வெளிவந்தது.

அரசியல் யதார்த்​தங்களை எதிர்​கொண்டவர்: 1975 இல் வந்த நெருக்​கடிநிலை எனும் சர்வா​தி​காரத்தை எதிர்த்த அரசியலில் முகிழ்த்த தலைவர்​களில் ஒருவர் யெச்சூரி. அப்போது அவர் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்​பட்​டார். ஆனால், உறுதி குலைய​வில்லை. டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்​கழகம் (ஜேஎன்யூ) இடதுசாரி இளைஞர்​களின் பிறப்​பிட​மாகத் திகழ்ந்த காலத்​தில், இவர் அந்த மாணவர்​களின் உறுதியான தலைவராக உயர்ந்​தார். பின்னர், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அதற்கு முழுமை​யாகத் தன்னை ஒப்படைத்​துக்​கொண்​டார்.

வாழ்க்கை வினோத​மானது. எதை எதிர்த்துப் புறப்​பட்டோமோ அதன் துணையைத் தேடும் காலமும் வரலாம். காங்கிரஸை எதிர்த்துப் புறப்பட்ட அந்த இளம் தலைவர், பா.ஜ.க என்னும் பெரும் எதிரி கண் முன்னால் எழுந்​தவுடன் அதை வீழ்த்தப் புறப்​பட்டார். இப்படி மாறுவது ஒரு தனிமனிதருக்குச் சாதாரண விஷயமல்ல; உளவியல் பிரச்​சினைகளை உருவாக்கக் கூடியது. ‘இன்றைய பிரதான எதிரி பா.ஜ.க என்பதால், அதை முறியடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும்’ என்னும் கருத்து எழுந்த​போது, ஒரு மூத்த தோழர், “அருணன், காங்கிரஸ் எதிர்ப்​பிலேயே வந்த எனக்கெல்லாம் இதை ஏற்பது கடினம்” என்று என்னிடம் சொன்னார். தனிமனித உணர்வின் இயல்பான, நேர்மையான வெளிப்பாடு அது.

தோழர் யெச்சூரியும் இதை எதிர்​கொண்​டிருப்​பார். ஆனால், அதை எல்லாம் சட்டென்று தாண்டிப் புதிதாக எழுந்​துள்ள யதார்த்த நிலைமையைப் புரிந்​து​கொண்டு, அதற்கேற்ப அரசியல் வியூகம் வகுப்பதே மார்க்​சியச் செயல்முறை என்பதை உள்வாங்​கியவர் அவர்.

அகில இந்திய மாநாடு​களில் யெச்சூரி ஆற்றிய உரைகள் கடந்த காலம் உருவாக்கிய தனிமனித உணர்வைத் தாண்டி, அவர் சமகாலம் காட்டும் நிதர்​சனங்களை ஏற்ற மகத்தான தலைவர் என்பதைப் பறைசாற்றின. இன்று ‘இண்டியா’ எனும் எதிர்க்​கட்​சிகளின் கட்டமைப்பு ஒன்று உருவாகி, அது பாஜகவைப் பலவீனப்​படுத்​தி​யிருக்​கிறது என்றால், அதில் தோழர் யெச்சூரியின் மகத்தான பங்களிப்பு உள்ளது.

சித்தாந்தக் கலங்கரை விளக்கு: இந்தியாவில் பா.ஜ.கவின் எழுச்​சியைப் போல உலகில் சோவியத் ஒன்றியம் தகர்ந்​ததும், அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வீழ்ந்ததும் மார்க்​சி​யர்​களாகிய எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தந்த நிகழ்வுகள். இந்தச் சரிவைப் புரிந்​து​கொள்ளக் கட்சி முயன்றது. அவரவர் தனிப்பட்ட முறையிலும் அதற்கான ஆய்வினை மேற்கொண்​டனர்.

1992 இல் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்​டில், ‘சில சித்தாந்தப் பிரச்​சினைகள்’ என்னும் ஆவணத்தைத் தோழர் யெச்சூரி முன்வைத்த விதமும், தொகுப்புரை தந்த வகையும் அவர் இந்த விஷயத்தில் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்​திருக்​கிறார் என்பதை உணரவைத்தன. 2012 இல் நடந்த அகில இந்திய மாநாடும் சித்தாந்த நிலைப்பாடுகளைச் செழுமைப்​படுத்​தியது. அதை முன்வைத்​தவரும் அவரே.

தோழர்கள் இ.எம்​.எஸ்​.நம்​பூ​திரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற​வர்​களுக்குப் பிறகு, கட்சியின் சித்தாந்தக் கலங்கரை விளக்காக ஜொலித்​தவர். உலக அளவில் வலதுசாரிச் சக்தி​களின் கை பெரிதும் ஓங்கி நின்ற வேளையிலும், இந்தியாவில் மார்க்​சி​யத்​துக்​கும், அதன் கட்சிக்கும் ஒரு தனித்த மரியாதை இருக்​கிறது என்றால், அதன் காரணி​களில் ஒருவர் தோழர் யெச்சூரி.

‘ஆமாம், நான் சீதாராம்​தான்!’ – யெச்சூரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்​கழகத்தில் பொருளா​தாரம் படித்​தவர். ஆனால், அரசியல் பல்கலைக்​கழகத்தில் வாழ்வின் அனைத்துப் பாடங்​களையும் படித்​தவர். ஒருவருக்கு தர்க்க நியாயம் கைவரப்​பெற்றால், அவரால் எந்தத் துறையின் உண்மை​களையும் உணர முடியும்.

அப்படி நாட்டின் தொன்மங்களை விமர்சன நோக்கோடு படித்து, அவற்றை மார்க்​சியப் பரப்பு​ரைக்குப் பயன்படுத்​தியவர் தோழர் யெச்சூரி. அவருடைய முழுப் பெயர் சீதாராம் யெச்சூரி. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அவரை அழைத்​தவர்கள் “நீங்கள் சீதாராம்; ஆகவே அவசியம் வர வேண்டும்” என்றார்கள். அதற்கு அவர், “ஆமாம், நான் சீதாராம்​தான். அதனால், ராமரை வைத்து நீங்கள் நடத்துகிற பிளவுவாத அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும். நான் வரமாட்டேன்” என்றார்.

தமிழ் மீதான பற்று: தமிழ் மீதும், தமிழர் மீதும் அலாதியான பிரியம் கொண்டிருந்​தார். அவர் பிறந்தது சென்னையில் என்பது ஒரு காரணமாக இருக்​கலாம்.

அத்தோடு தமிழின் வளமை, தமிழரின் தொன்மை பற்றி அவருக்கு தெளிவான ஞானம் இருந்தது. 2010 இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அதற்கான அழியா சாட்சியம்.

“தேசிய இனத்தை வரையறை செய்யும் நான்கு அவசியமான அம்சங்​களில் ஒன்றாக மொழியை நாங்கள் கருதுகிறோம். விடுதலைப் போராட்டம் நடந்து​கொண்​டிருந்த காலத்​தில், இத்தகைய உணர்வின் அடிப்​படை​யில்தான் மொழிவழி மாநிலம் என்ற முழக்​கத்தை முன்வைத்​தோம்” என்றார். “தமிழுக்குப் பழமையான மரபு உண்டு; இன்றைக்கும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கி​யங்​களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது” என்றும் குறிப்​பிட்​டார்.

தமிழ்​நாட்டின் சிறப்பு அரசியல் இயக்கங்​களின் வரலாற்றுப் பாத்திரத்தை அவர் உணர்ந்​திருந்​தார். “தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்​களால் செழுமையடைந்த ஒன்று” என்று கச்சிதமாக எடுத்​துரைத்​தார்.

அதேநேரத்​தில், இன்றைய கால வேகத்தில் மனிதர்கள் ஏற்கெனவே போடப்பட்ட வட்டத்தைத் தாண்டி, பன்முகப்​பட்டு நிற்பதைத் தன்னையே உதாரண​மாகக் காட்டி விளக்​கினார். “இங்கு நின்று​கொண்​டிருக்கும் நான் தமிழ்​நாட்டில் பிறந்​தேன். என் தாய்மொழி தெலுங்கு. இந்தி மொழி பேசும் டெல்லியில் பணியாற்றுகிறேன். நாடாளுமன்​றத்தில் மேற்கு வங்க மாநில மக்களைப் பிரதி​நி​தித்து​வப்​படுத்து​கிறேன். இப்போது உலகம் முழுவது​மிருந்து இங்கு குழுமி​யுள்ள தமிழ் மக்களிடையே உரையாற்றிக்​கொண்​டிருக்​கிறேன். இதுதான் இந்தியா.”

இவர்தான் தோழர் யெச்சூரி. அவரது மறைவால் உலகம் ஒரு ஞானச் சூரியனை இழந்தது. நான் எனது குருநாதரை இழந்தேன். ஒருவருடைய ஆங்கில உரையைப் பல்லாயிரம் மக்கள் முன்பு மொழிபெயர்ப்பது உள்ளூரப் பெரும் பதற்றத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், தோழர் யெச்சூரியின் உரையை மொழிபெயர்ப்பது சுகமாக இருந்தது. வாக்கினிலே அவ்வளவு தெளிவு. மதுரைக்கு வரும்​போதெல்லாம் சந்திப்​பேன், தொலைபேசி​யிலாவது பேசுவேன். அடுத்து எப்போது வருவார் எனக் காத்திருப்​பேன். இனி?

– அருணன், பேராசிரியர், ‘இந்திய கம்யூனிச இயக்க வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Tags: