ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்
எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் எதிர்பாராத திருப்பம் இருக்கும். இந்த ஆண்டு கான் சியே (Can Xue) எனும் சீன எழுத்தாளருக்குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று உலகிலுள்ள ஏறக்குறைய அனைத்து இலக்கிய ஊடகங்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஐம்பத்து மூன்று வயதுடைய தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹன் காங் (Han Kang) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர்தான் தென் கொரியாவில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர்.
இவர் இலக்கிய உலகுக்குப் புதியவரல்ல. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டில் இவருக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இலக்கிய விருதான ‘மெதிசிஸ்’ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
நோபல் பரிசுக் குழு “மனித பலவீனங்களையும் வரலாற்றுப் பேரதிர்வுகளையும் அழுத்தமான கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறார் என்பதற்காக இவ்விருது கொடுக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது. ஹன் காங் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருந்தாலும், மூன்று நாவல்கள் அவரது முக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன – ‘புலால் மறுத்த பெண்’ (The Vegetarian), கிரேக்கப் பாடங்கள் (Greek Lessons), மனிதச் செயல்பாடுகள் (Human Acts).
‘புலால் மறுத்த பெண்’ (தமிழில் சமயவேலால் ‘மரக்கறி’ என்கிற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, தமிழ்வெளி வெளியீடு) – இந்த நாவல்தான் அவரை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது. மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் இயோங் ஹை திருமணம் ஆனவள். அவள் புலால் உண்பதைத் திடீரென நிறுத்திக் கொள்கிறாள். காரணம் அவள் கண்ட ஒரு கொடுங்கனவு – “இருண்ட காடு. மனித சஞ்சாரமில்லை…வழி தெரியாமல் தவித்தேன்…எங்கு திரும்பினாலும் இரத்தம் சொட்டும் மாமிசத் துண்டுகள்.”(ப. 18-19) என்று அந்தக் கனவு வர்ணிக்கப்படுகிறது. மறுநாள் காலை விழித்தெழுந்ததிலிருந்து இனிமேல் புலால் உண்ணுவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.
அவள் கணவன் “அவளிடம் தனிப்பட்ட ஈர்ப்பு ஒன்றுமில்லை. அதுபோல் வெறுக்கத்தக்க விஷயம்கூட ஒன்றுமில்லை,” (பக்கம் 11) என்று சொல்கிறான். அவளை அவன் மணந்ததற்குக் காரணம் அவள் அடக்கமான பெண் – தான் சொல்வதை அப்படியே கேட்பாள் என்பதுதான். அந்த பிம்பம் இப்போது உடைந்துவிட்டது. அவன் என்ன சொல்லியும் புலால் உண்ண மறுக்கிறாள். அவள் கண்ட கனவின் தாக்கத்தாலும், உணவு பழக்கவழக்க மாற்றத்தாலும் அவள் உடல் மெலிய ஆரம்பிக்கிறது. கணவன் அவளைவிட்டு விலகுகிறான். அவளது அக்கா ஈன் ஹையின் கணவன் (அவன் பெயர் குறிப்பிடப்படவில்லை) ஓர் ஒளிப்படக் கலைஞன். அவன் இயோங் ஹையைப் பல்வேறு கோணங்களில் நிர்வாணமாகப் படம் எடுப்பதில் ஈடுபடுகிறான். பின்பு அவளிடம் அத்துமீறித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறான். அவன் மட்டுமன்றி அவன் நண்பன் ஒருவனும் அவளிடம் உறவு கொள்வதைப் படம் எடுக்க முயற்சிக்கிறான். ஆனால், அந்த நண்பன் மறுத்துவிடுகிறான். கடைசியில் மனோநோய் மட்டுமல்லாமல், உடல் நோயாலும் அவதிப்பட்ட அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்குகிறாள்.
‘கிரேக்கப் பாடங்கள்’ (2011) வாசகர் நெஞ்சைத் தொடும் ஒரு சோக நாவல். ஓரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கல்விக்கூடத்தில் சந்திக்கிறார்கள். அவன் பண்டைய கிரேக்க மொழி சொல்லிக்கொடுப்பவன். அவள் அங்குப் படிக்க வந்தவள். இருவருக்குமே குறைபாடுகள் இருக்கின்றன. அவனுக்கு கண் பார்வை மங்கிக்கொண்டு வருகிறது. அந்தக் குறை பரம்பரையால் அவனுக்கு வந்தது. அவன் அப்பாவுக்கும் அதே நோய் இருந்தது. பார்வை இருக்கும் வரையில் வாழ்க்கையில் சுகமாக வாழ்ந்துவிடலாம் என்றிருக்கிறான். அந்தப் பெண்ணுக்கோ பேச்சு வரவில்லை. தாயின் மரணம், விவாகரத்து, பிள்ளைக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பது போன்ற பல்வேறு சோக நிகழ்வுகள் அவள் வாழ்க்கையில் நிகழ்ந்து அவளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்திவிட்டது. அதனால், அவள் பேசும் திறனை இழந்துவிட்டாள். அந்த ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் உறவுதான் இக்கதையின் கருப்பொருள்.
‘மனிதச் செயல்பாடுகள்’ (2014) 1980ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ‘குவாங்ஜு ’ எனும் மக்களாட்சி இயக்கத்தின் எழுச்சியைப் பின்னணியாகக் கொண்ட நாவல். நூலின் அறிமுக உரையில் மொழிபெயர்ப்பாளர் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார். 1980களின் தொடக்கத்தில், தென் கொரியா ஒரு குப்பை மேடாகக் கிடந்தது. 1961 இல் நடந்த ஓர் ஆட்சிக் கலைப்பில் பதவிக்கு வந்த பார்க் சுங் – ஹி என்ற வலிமை வாய்ந்த இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன்னர்தான் அவருடைய பாதுகாப்பு அதிகாரியால் கொல்லப்பட்டிருந்தார். ஆயினும் இது மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஏனென்றால், கொல்லப்பட்ட பார்க் சுங் ஹியை அடுத்து பதவிக்கு வந்தவன் சூன் துவான் என்பவரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்தான். வட கொரியாவின் ஊடுருவல் இருப்பதாகச் சொல்லி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இத்தகைய சூழலில் மக்களாட்சிக்காகக் குரல் கொடுப்பவர்கள் படும்பாட்டை ஹன் காங்க் முக்கியக் கதாபாத்திரங்கள் மூவரை வைத்து நுட்பமாக விளக்குகிறார். நிறைவுரையையும் சேர்த்து ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் மக்களாட்சிக்காகப் போராடும் இளைஞர்களின் வாழ்க்கை நரகமாக மாறுவது சித்திரிக்கப்படுகிறது.
சிறை வாழ்க்கை, தற்கொலை முதலானவை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிடுகின்றன. கடைசி அத்தியாயத்தில் நூலாசிரியரே கதைசொல்லியாக வந்து முடிவுரை வழங்குகிறார். “என்னுடைய கைப்பையிலிருந்து மூன்று மெழுகுவத்திகளை எடுத்தேன். இறந்த மூவரின் கல்லறைக்கற்களின் முன் மண்டியிட்டு, ஒவ்வொன்றாக மெழுகுவத்திகளை ஏற்றிவைத்தேன். பிரார்த்தனை செய்யவில்லை. கண்களை மூடிக்கொள்ளவில்லை. ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கவில்லை. ஆனால், அந்த மெழுகுவத்திகள் ஆடாமல் அசையாமல் சுடர்விட்டுக் கொண்டிருந்ததையே பார்த்துக்கொண்டிருந்தேன்…” (பக்கம் 165). இந்த நாவலில் ஆசிரியரின் சிந்தனை தத்துவார்த்தமாக எடுத்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அவர் ஓரிடத்தில் சொல்கிறார் “சில நினைவுகள் மறக்க முடியாமல் போய்விடுகின்றன. காலப்போக்கில் அவை கரைந்துபோகாமல், மற்றதெல்லாம் மறைந்து போகும்போது அவை மட்டுமே வாழ்க்கையில் சாஸ்வதமாக நிலைத்துவிடுகின்றன.”
ஹன் காங் படைப்புகள் இன்னும் வரவிருக்கின்றன. அவர் கடைசியாக எழுதிய ‘பிரிந்து போகாதே’ எனும் நாவல் அடுத்த ஆண்டுதான் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது. ஆகையால், அவரைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்புரையை இப்போதே வழங்கிவிட முடியாது. ஆயினும் இதுவரை அவரது படைப்புகள் பெற்ற வெற்றியினால் தென் கொரியாவின் பண்பாடும், அரசியல் வரலாறும், உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன என்பதை உறுதியாகச் சொல்லலாம்.