அம்பேத்கர் – பெரியார் தத்துவப் பாதையில் இந்தியாவை செலுத்துவதுஎப்படி?
–ராஜன் குறை
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு “நல்ல” காரியம் செய்தார். இந்துத்துவத்தின் ஆன்மாவில் பதுங்கியிருக்கும் அம்பேத்கரிய வெறுப்பை அவரே அறியாமல் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் பெயரில் போலித்தனமான அரசியல் செய்கிறார்கள் என அவர் குற்றம்சாட்ட விரும்பியதாகச் சொல்கிறார். அவர் பேசிய தருணம் அப்படிக் கூறுவதற்கானதாக இருந்தது. ஆனால், அவர் சொன்னவிதம் அம்பேத்கர் மீதான இந்துத்துவ ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக அமைந்து விட்டது.
நான்கு முறை அம்பேத்கர் பெயரை வெற்றொலியாகச் சொல்லிக் காட்டியதுடன், அப்படி அவர் பெயரைச் சொல்வதற்கு மாறாக இறைவன் பெயரைச் சொல்லியிருந்தால் சொர்க்கத்திற்குப் போகலாம் என்றும் கூறிவிட்டார். இது ஏகப்பட்ட பிரச்சினைகளை எழுப்புகிறது. ஏன் அம்பேத்கர் பெயரைச் சொல்பவர்கள் சொர்க்கத்திற்குப் போக முடியாது என்று கேட்டால் பல விரும்பத்தகாத விடைகள்தான் கிடைக்கும்.
பல நேரங்களில் நகைச்சுவையாகப் பேச முனையும்போது நம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் சில மன அவலங்களே, வெறுப்புகளே வெளிவரும். ஒருவேளை அமித் ஷா, இந்துத்துவ கருத்தியலின் மூலாதாரமான பார்ப்பனீய உளவியலை மகிழ்விற்பதற்கும் இவ்வாறு பேசியிருக்கலாம். தேர்தல் அரசியலுக்கு அம்பேத்கர் தேவைப்பட்டாலும், கருத்தியலின் மூல பலத்தை இழந்துவிடக் கூடாதல்லவா. அதனால் காங்கிரஸை சாக்கிட்டு அவரையும் எள்ளலாகப் பேசினால் பார்ப்பனீய உளவியலுக்கு உற்சாகமாக இருக்கும் என்பதாக இருக்கலாம்.
அம்பேத்கர் பெயர் நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சரால் இவ்விதம் திட்டவட்டமாக அவமதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன. நாடெங்கும் பல்வேறு கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தை நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் நிகழ்த்தியுள்ளார்கள். அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது இந்திய மக்களாட்சியின் தாரக மந்திரமாகிவிட்டது.
இந்த நிகழ்வுகளுக்கிடையில் தந்தை பெரியாரின் நினைவு தினமும் வந்தது, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் அம்பேத்கர் – பெரியார் அரசியலின் இணையுறவுகளை சிறப்பித்துப் பேசினார்கள். இன்றைய நிலையில் அவர்களது கருத்தியல் பங்களிப்புகளைக் குறித்து அறிந்துகொள்ள இளைஞர்களிடையே மிகுந்த ஆர்வம் இருக்கிறது. இந்தக் கட்டுரையில் என்னுடைய நோக்கம் என்னவென்றால் எதனால் அம்பேத்கர் – பெரியார் தத்துவப் பாதையில் இந்தியா பயணிப்பது கடினமாக உள்ளது என்பதை சிந்திப்பதுதான்.
வர்ண தர்மத்தை வேரறுப்பதே அம்பேத்கர் – பெரியார் தத்துவம்!
இந்திய அரசியலின் முக்கிய பிரச்சினை மனு தர்மம்தான் என்றால் பலருக்கும் ஏற்பது கடினமாக இருக்கும். சமஸ்கிருதத்தில் என்றோ எழுதப்பட்ட நூல், இப்போது நடைமுறையில் இல்லாத சாத்திரங்கள், எப்படி இன்றைய அரசியலின் முக்கிய பிரச்சினையாகும் என்ற கேள்வி எழும். மேலும், இப்போது வர்ண அமைப்பு என்பது இல்லை. ஜாதிகள் உள்ளன என்றாலும், ஜாதிகளின் படிநிலை என்பது எவ்வளவு தூரம் வர்ண தர்மத்துடன் தொடர்புடையது என்பதில் பலருக்கும் தெளிவில்லை. குறிப்பாக நில உடமை ஜாதியினர் தலித் மக்கள் தொகுதிகளை தீண்டாமைக்கு ஆளாக்குவது வர்ண தர்மம் சார்ந்த பிரச்சினையா என்றும் பலருக்கும் ஐயம் வருகிறது.
இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் ஒரு சுலபமான விடை இருக்கிறது. அது என்னவென்றால் ஒருவரது பிறப்பே அவருடைய சமூக வகிபாகத்தைத் தீர்மானிக்கிறது என்ற சிந்தனைதான் அது; ஆனால், அது மட்டுமே பிரச்சினையல்ல. அவ்விதமாக பிறப்பது என்பது முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் முழுமையான கருத்து.
அதாவது ஒருவன் பார்ப்பனனாக பிறந்து பல சலுகைகளை அனுபவித்தால், உயர் பிறப்பாகக் கருதப்பட்டால் அதற்கு அவனது ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால்தான்; ஒருவன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் பிறந்து சமூக விலக்கத்தை, புறக்கணிப்பை அனுபவித்தால் அதற்கு முற்பிறவியில் செய்த பாவம்தான் காரணம் என்பது.
வர்ண தர்ம நூல்களில் இவ்விதம் எழுதப்பட்டுள்ளதா என்றால், ஆமாம் இவ்விதம் எழுதப்பட்டுள்ளது. அந்த நூல்களை அனைவரும் படிக்கவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த எண்ணம் பிரச்சாரம் செய்யப்பட்டு, அனைவரது பொதுப்புத்தியிலும் பதியப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர்கூட ஏழேழு ஜன்மங்களுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்பது போலக் கூறினார் அல்லவா? அதனால் மறுபிறவி, சொர்க்கம், நரகம் எனப் பல கற்பிதங்கள் இந்த வர்ண தர்மத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளன. இத்தகைய நம்பிக்கைகள் இந்து மத நம்பிக்கைகள் என்று கூறப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் பிறந்து இயங்கிய பல்வேறு சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், தேசிய தலைவர்கள் அனைவரும் இந்த வர்ண தர்மம் சார்ந்த நம்பிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் தெளிவின்றி திணறினார்கள். வர்ண தர்மம் என்பது வேலைப் பிரிவினைதான்; அதில் ஏற்றத்தாழ்வு கிடையாது. பிறப்பிலேயே இழிவு கிடையாது என்றெல்லாம் கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதும், காலத்திற்கொவ்வாத கருத்தியலுக்கு வெள்ளையடித்து அலங்கரித்து இந்தியப் பண்பாடாகக் காட்டுவதுமாக பலவிதமான செயல்களைச் செய்தார்கள்.
அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் தத்துவப் புலங்கள் இணையும் புள்ளி என்னவென்றால் அது வர்ண தர்மத்தை முற்றிலுமாக மறுதலிப்பது, வேரறுப்பது என்பதில்தான் அடங்கியுள்ளது. அது ஏன் இவர்கள் இருவர் மட்டும் அதனை தீவிரமாக வலியுறுத்த வேண்டும், அனைத்து தலைவர்களும் அதை ஏன் செய்யக் கூடாது என்று கேட்டால்தான் சில தெளிவுகள் பிறக்கும்.
வர்ண தர்மம் பிராமணர்களை முன்னிட்டது
வர்ண தர்மத்தை சமஸ்கிருத மொழியில் எழுதியவர்கள் பிராமணர்கள். சமஸ்கிருத மொழி பயின்றவர்கள் ஆரியர்கள் என்ற அடையாளத்தைப் பெற்றதால், இவர்கள் ஆரியர்கள் என்றும் மொழி சார்ந்து அறியப்பட்டார்கள். ஆரியர்கள் இந்திய நிலப்பகுதியில் இருந்தவர்களுடன் கலந்துவிட்டதை ரொமிலா தாப்பர் (Romila Thapar) உள்பட பல ஆய்வாளர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், மொழி என்ற அளவில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியதால் ஆரியர் என்று அறியப்பட்டார்கள் என்பதே அறிஞர் கருத்து.
இந்த ஆரியப் பண்பாட்டிலே பிராமணர்களின் பிறப்பின் அடிப்படையிலான உயர்வை வலியுறுத்தி எழுதப்பட்டதுதான் மனு தர்மம். இது புத்த மதத்தின் எழுச்சிக்குப் பிறகு அதனை எதிர்கொள்ளும் பொருட்டு உருவானது என்று பாட்ரிக் ஒலிவெல் (Patrick Olivelle) உள்ளிட்ட முக்கியமான ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வர்ண தர்மம், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தெய்வங்கள் என பிராமணர்கள் உருவாக்கிய சொல்லாடல்களும், கதையாடல்களும் அரசமைப்பை, முக்கியமாக பேரரசுக் கட்டமைப்புகளை நிலைநிறுத்த அரசர்களுக்கு உதவிகரமாக இருந்தன. அதனால் இந்திய பகுதியில் எங்கெல்லாம் பேரரசுகள் உருவாயினவோ அங்கெல்லாம் பிராமணர்கள் அவற்றுக்கான கருத்தியல் கட்டமைப்பை உருவாக்க அரசர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.
இந்த நீண்ட வரலாற்றில் அகமண முறையை மேற்கொண்ட இனக்குழுக்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை வர்ண அடுக்கில் ஏதோவோர் இடத்தில் பொருத்தி ஜாதியாக்குவது பரவலாக நிகழ்ந்தது. அதனால்தான் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பிராமண ஜாதிகள் கூட வித்தியாசமான பெயர்களில் வழங்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் இறுதியாகத் தோன்றிய முக்கியமான பேரரசுகளான விஜய நகரப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசில் பிராமணர்களின் அதிகாரம் உச்சத்தில் இருந்தது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்யத் துவங்கியபோது பிராமணர்களின் பங்களிப்பு இரண்டு முக்கிய போக்குகளை சாத்தியமாக்கியது. ஒன்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த வழிபாட்டு முறைகள், பக்தி பண்பாட்டுக் கூறுகளை தொகுத்து இந்துமதம் என்ற பொதுவான மதத்தை உருவாக்கியது. இதற்கு வேதங்களே ஆதாரம் என்று கூறப்பட்டது. வேத மரபிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்த சித்தாந்தங்களும், தமிழ் சைவம், பசவரின் வீரசைவம் போன்றவை, சில மேலோட்டமான பொதுமைகளைக் கொண்டு இந்து மதம் என்ற வரலாற்று வண்டியில் ஏற்றப்பட்டன.
இதனோடு இணைந்த மற்றொரு பெருநிகழ்வு, இந்துக்களின் தனிப்பட்ட வாழ்வினை நிர்வகிக்கும் சட்டங்களாக தர்ம சாத்திர நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப் பட்டன. இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் போன்ற தனித்த மத அடையாளம் இல்லாத அனைவரும் இந்துக்கள் என்று வரையறுக்கப்படுவதும், அவர்கள் தனி வாழ்வினை இந்த தர்ம சாத்திர நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சட்டங்கள் கட்டுப்படுத்தும் என்ற நிலையும் உருவாகியது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பார்ப்பனீய கருத்தியலை முழுமையாக அரியணையில் ஏற்றியது.
இந்திய தேசியத்தின் உருவாக்கத்தில் பார்ப்பனர்கள்
இவ்வாறாக பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் உருவாக்கிய இந்து அடையாளம் என்பதன் அடிப்படையில் இந்தியா என்ற தேசமும் உருவகம் செய்யப்பட்டது. இந்த உருவாக்கத்தில் தேசத்தின் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும், அதன் அடையாளமாகவும் ஆரிய, பார்ப்பனீய கருத்தியலே மையப்படுத்தப்பட்டது. உடன்கட்டை ஏறுதல் போன்ற நவீன காலத்திற்குப் பொருந்தாத நடவடிக்கைகளைச் சீர்திருத்த நோக்கில் எதிர்த்தவர்களும், அவற்றுக்கு சாத்திரங்களில் ஆதாரம் கிடையாது என்று கூறி எதிர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் ஒரு சிக்கலை சந்தித்தனர். ஒருபுறம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை நவீன நோக்கில் சீர்திருத்த வேண்டும்; அதே நேரம் தங்களது உயர்ந்த பண்டைய கலாச்சாரம் என்று பார்ப்பனீய கலாச்சாரக் கூறுகளை உயர்த்திக் கூறவும் வேண்டும். இதனால் மனு தர்ம சாத்திரம் போன்ற நூல்களை அதிகம் பேசாமல் கடந்து போகவே விரும்பினர். வர்ணாசிரமத்திற்கு புதிய விளக்கங்கள் கொடுத்துவிடலாம் என நம்பினர்.
பார்ப்பன சமூகத்திலும் மூன்று முக்கிய போக்குகள் உருவாயின. ஒன்று சனாதனவாதம் எனப்படும், முழுமையாக வர்ண சமூக உள்ளிட்ட அனைத்து மரபுகளையும் விமர்சனமின்றி தங்கள் உரிமையாக, சுதந்திரமாக முன்னிறுத்தி காப்பாற்றும் போக்கினர். விதவை மறுமணம், பால்ய விவாகம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்டவற்றில் சனாதன நோக்குள்ளவர்கள் மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
இரண்டாவது போக்கு, சீர்திருத்த தேசியவாதம். இந்தப் போக்கினர் தொடர்ந்து பிற்போக்கு சிந்தனையாளர்களுடன் பேரங்களில் ஈடுபட்டு ஒரு சில பழக்க வழக்கங்களை மாற்றியும், அதே நேரம் சில மரபுரிமைகளை ஆதரித்தும் செயல்பட்டார்கள்; இவர்களில் பொருளாதார வாழ்வில் நவீனமடைந்தவர்கள் பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை என்ற பிரிவினை பயன்படுத்தி சில பழக்கங்களை தங்கள் தனிப்பட்ட நம்பிக்கை என்று நியாயப்படுத்தினர்.
மூன்றாவது போக்கு, உண்மையிலேயே தீவிரமாக மாற்றங்கள் தோன்ற வேண்டும் என நினைப்பது. இந்தப் போக்கினை குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களே மேற்கொண்டனர்; வேறு பலர் அரைகுறை மனதுடன் ஆதரித்தனர். இவர்களுக்குமே கூட வர்ண தர்மம் போன்றவற்றை முற்றிலும் நிராகரிப்பது, எரிப்பது போன்றவை மிகுந்த சங்கடத்தையே தருவதாக இருந்தது.
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வரலாற்றில் பேரரசு உருவாக்கங்களில் பணியாற்றியது போலவே, காலனீய கால நவீன சமூகத்தை கட்டமைப்பதிலும் பார்ப்பனர்களே பெருவாரியாக பங்கேற்றதால், வர்ண தர்ம எதிர்ப்பு, நிராகரிப்பு போன்றவற்றை முன்னெடுக்க பலரும் தயங்கியதாகவே தோன்றுகிறது.
அம்பேத்கர் – பெரியார் தனித்துவமும், தத்துவமும்
அம்பேத்கர், பெரியார் இருவருமே இந்த வர்ண தர்ம சிந்தனையை முற்றிலும் எதிர்த்து அழிக்க விரும்பினர். எல்லாவகையான பிறப்பின் அடிப்படையிலான மேன்மை மற்றும் இழிவு கற்பித்தலுக்கும் வர்ண தர்ம சிந்தனையே பின்னணியில் இருப்பதை உணர்ந்தனர். இருவரும் வெவ்வேறு வழிகளில் இந்தச் சிந்தனையை முற்றிலும் வேரறுக்கும் தத்துவ நோக்குகளை வளர்த்தெடுக்க விரும்பினர்.
இந்து மதம் சார்ந்த துறவிகள், மடாதிபதிகள், தத்துவவாதிகள் யாருக்கும் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தின் வர்ண சிந்தனை அடிப்படைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஆற்றல் இல்லை. பிறப்பு சார்ந்த உயர்வு, தாழ்வை முற்றிலும் அகற்றும் ஆற்றல் இல்லை. அவ்வாறு அகற்ற வேண்டும் என்று கூறுவதைக் கூட மரபு என்ற பெயரில் எதிர்க்கும் உளவியலே நிலவுகிறது.
பிராமணர்கள் என்று யாரும் தங்களை கூறிக்கொள்ளக் கூடாது என சுதந்திரவாத அரசு கூற முடியாது. ஆனால், பிராமணர்களைப் போல அனைவரும் அனைத்து கோயில்களிலும், தலங்களிலும் பூஜைகள் சடங்குகள் செய்யலாம் என வலியுறுத்த வேண்டும். அகமணமுறை என்ற பண்பாடற்ற மூடப்பழக்கத்தை வேரறுத்து, விருப்பமுள்ள யாரும் யாரையும் மணந்து கொள்ளலாம் என்பதை அனைவரும் ஏற்கும்படி செய்வதை அரசும், குடிமைச் சமூகமும் தன் முதற் கடமையாகக் கொள்ள வேண்டும்.
இந்த லட்சியங்களுக்கு எதிராக இன்றைய நிலையிலும்கூட பொதுமக்களிடையே பிறப்பின் அடிப்படையிலான புனிதவாதம் நிலவத்தான் செய்கிறது. உதாரணமாக காசியிலோ, ராமேஸ்வரத்திலோ இறந்தவர்களுக்கான சடங்குகளை செய்ய முற்படும் பார்ப்பனரல்லாத ஒருவர், பார்ப்பனரல்லாத பூசாரி அந்த சடங்குகளை செய்விப்பதை ஏற்றுக்கொள்வாரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சடங்குகளுக்கான மந்திரங்களை யார் வேண்டுமானாலும் பயின்று சொல்லலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமல்லவா? ஏன் பார்ப்பனர்கள் சொன்னால்தான் மந்திரங்கள் வேலை செய்யுமென நினைக்க வேண்டும்?
ஏதோ ஒரு வகையில் பார்ப்பனர்கள் பூசாரி வர்க்கத்தினராக தங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சரி… இது கோயில்கள், சடங்குகள் சார்ந்த பிரச்சினைதானே, அதைத் தவிர பொதுவாழ்வில் சமத்துவம் நிலவுகிறதே என்று ஒருவர் வெகுளித்தனமாகக் கூறலாம். பல்வேறு நுண் சமூகவியல் அம்சங்களிலும், அன்றாட வாழ்விலும் ஜாதீய ஏற்றத்தாழ்வு சிந்தனை நீக்கமற பரவியுள்ளது. இதுகுறித்து பகிரங்கமாகப் பேசி ஒரு மனமாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் இறையியல் சிந்தனையாளர்களுக்கும் இருப்பதில்லை; பிற அறிஞர்களுக்கும் இருப்பதில்லை.
பல்வேறு விதங்களில் தூய்மை x அசுத்தம், புனிதம் x புனிதமின்மை போன்ற எதிர்வுகள் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் நிலவத்தான் செய்கின்றன. குறிப்பாக மாமிசம் உண்பது, அதிலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுவது ஆகியவற்றை புனிதமற்றதாகக் கருதும் போக்கும், பொதுவெளியில் அவற்றை தவிர்க்க நினைப்பதும் தொடர்கிறது. இவ்வாறான விலக்கங்களை தேசிய கலாச்சாரமாகக் கட்டமைக்கும் அரசியல் முனைப்பும் நிலவுகிறது.
இந்த நிலையில் இந்திய தேசிய வாழ்வை அம்பேத்கர் – பெரியார் தத்துவ நோக்கில் கட்டமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது எனலாம். ஒரு நம்பிக்கையூட்டும் அம்சம் என்னவென்றால் முன்னெப்போதையும்விட அதன் தேவை அதிகமாக உணரப்படுகிறது என்பதுதான். நாம் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும்போது தொடர்ந்து அம்பேத்கர் – பெரியார் தத்துவ தரிசனங்களை முன்னெடுக்க உறுதி பூண வேண்டும்.