பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத் தனித்துவமும்

ராஜன் குறை

மீண்டும் பெரியார் குறித்த அவதூறுப் பேச்சும், அதைத்தொடர்ந்த விவாதங்களும், கண்டனங்களும் சமூக ஊடகங்களையும், பொதுவெளியையும் நிரப்புகின்றன. பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விவாதங்கள் நிகழ்கின்றன. என்னளவில் நான் தத்துவத்துறையில், குறிப்பாக அரசியல் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்து வருவதாலும், பெரியாரின் வழியில் சிந்திக்க விழைவதாலும் சில கருத்துகளைக் கூறுவது அவசியம் என நினைக்கிறேன்.

பெரியாரிடம் ஒரு திட்டவட்டமான தத்துவ நோக்கு இருந்ததா என்பது பலரும் பல்வேறு காலகட்டங்களில் கேட்டுவரும் கேள்வி. சில மார்க்சீய சிந்தனையாளர்கள் அவரை “கொச்சைப் பொருள் முதல்வாதி” என்று அழைத்திருக்கின்றனர். ஒரு சிலர் தத்துவத் துறை சார்ந்து நூல்களை எழுதவில்லை என்பதால் தத்துவவாதி அல்ல என்று கூறுகின்றனர்; ஒரு திட்டவட்டமான தத்துவக் கோட்பாட்டை எழுதாததால் அவரை “எதிர்-தத்துவவாதி” என்று வர்ணிக்கலாம் எனக் கூறுவதும் நிகழ்கிறது. அரசியலில் தற்போது அவரை இகழ முற்படுபவர்கள் அவரிடம் தத்துவம் இருக்கவில்லை, தன்முனைப்புதான் இருந்தது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார் எனச் சுட்டிக்காட்டுவது வழக்கம். அவருடைய 50-60 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் அவர் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் எடுத்திருப்பதால், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் பல தீவிரமான கூற்றுகளை வெளிப்படுத்தியிருப்பதால், ஒவ்வொருவரும் ஒரு சில கூற்றுகளை எடுத்துக்கொண்டு அவரை அடையாளப்படுத்த, விமர்சிக்க, கொண்டாட, இகழ முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது.

மற்றொருபுறம் தமிழ் சிந்தனையாளர்கள் பலர் அவரை பல்வேறு தத்துவ சிந்தனைகளுடன் தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள முற்பட்டிருக்கிறார்கள். தாம்ஸ் பெய்ன் போன்றவர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்றவர், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் ஒப்புகோக்கத் தக்கவர், நீட்சே போன்றவர், சித்தர் மரபின் தொடர்ச்சி, பெளத்த சிந்தனை தொடர்ச்சி என்றெல்லாம் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள். இந்தியாவின் நவீன அரசியலைப் பொறுத்தவரை பார்ப்பனீய எதிர்ப்பில் “புலே, பெரியார், அம்பேத்கர்” என்ற பெயர்கள் இணைத்து உச்சரிக்கப்படுவது வழக்கம்.

அவருடைய பணியின் சிறப்பினை நினைத்துப் பார்ப்பவர்கள் அவர் “ஒப்பாரும், மிக்காரும்” இல்லாத தனித்துவமான சிந்தனையாளர், சமூக மாற்றப் போராளி என்று கருதுகின்றனர். தனித்துவத்தை அங்கீகரிப்பது ரேங்க் போடுவதல்ல. எல்லா சிந்தனையாளர்களும், கலைஞர்களும், ஏன் சாமானிய மனிதர்களுமே கூட தனித்துவம்மிக்கவர்கள்தான். ஆங்கிலத்தில் Singular, Singularity என்று சொல்வார்கள். எனவே, பிற தலைவர்களுடன் ஒப்பிட்டு அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்று பேசுவதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

இந்தக் கட்டுரை… இன்றைக்கு உருவாகியுள்ள அவதூறுப் பேச்சு, அதையொட்டி அவரிடம் தத்துவ நோக்கு இல்லை, தன்முனைப்புதான் இருந்தது போன்ற குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க எழுதப்படுகிறது. இதனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோம். முதல் பகுதி பெரியாரின் தத்துவம் குறித்தது. இரண்டாவது பகுதி முரண்கள அரசியல் இயக்கம் குறித்தது. மூன்றாவது அவரது முரண்கள அரசியல் இயக்கத்தின் வரலாற்றுத் தனித்துவம் குறித்தது.

முதல் பகுதி: பெரியாரின் தத்துவம்

பெரியாரின் தத்துவத்தை சுயமரியாதை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயர். ஆனால், சுயமரியாதை என்பதை அவர் எப்படி பொருள்கொண்டார் என்பதை சிந்திக்க வேண்டும். அவருடைய கூற்றுகளைத் தொகுத்து நாற்பதுகளிலேயே ‘பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம்’ என்ற சிறு நூல் அவர் ஒப்புதலுடன் வெளிவந்தது. அதில் அவர் சுயம் என்பதை என்னவென்று வரையறுக்க முடியாது என்பதையே கூறுகிறார். அது சிந்திக்கும் ஆற்றல் என்பதைத் தவிர அதனை என்னவென்று சாராம்சப்படுத்த முடியாது என்பதே அந்தக் கட்டுரையில் கூறப்படுகிறது.

உதாரணமாக ‘நான் ராஜன் குறை” என்றால் ராஜன் குறை என்பது என்னுடைய பெயர் என்றுதான் பொருள். மருத்துவரிடம் சென்று என் உடலில் நோய் இருப்பதைச் சொல்லும்போது என் உடலும் நான் அல்ல என்றாகிறது. நண்பர்களிடம், மாணவர்களிடம் என்னுடைய சிந்தனை என்று சொல்லும்போது சிந்தனை என்பதும் நான் அல்ல என்றாகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளிடம் “என் ஆன்மாவிற்கு” மோட்சம் கொடு என்னும்போது ஆன்மா என்பதும் நான் இல்லை என்றாகிறது. என்னுடைய என்ற தற்சுட்டால் நான் அனைத்தையும் குறிப்பதால் “நான்” என்பது வெற்றுக் குறிச்சொல்லாக என் சிந்தனையின் முரணாற்றலாகத்தான் இருக்கிறது.

இந்த சுயத்திற்கு மரியாதை செய்வது என்பது என் சிந்திக்கும் ஆற்றலை தொடர்ந்து செயல்படுத்துவதுதான். என் சிந்தனைகளையே நான் தொடர்ந்து மறுவிசாரணை செய்ய வேண்டும். அதற்கேற்றபடி செயல்பட வேண்டும். அதுதான் சுயமரியாதை எனப்படுவது. பிறர் கூறுகிறார்கள், ஆன்றோர் கூறுகிறார்கள், சான்றோர் கூறுகிறார்கள் என்றெல்லாம் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன் தனக்குத் தோன்றுவதையே அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்து சிந்திப்பதுதான் சிந்திக்கும் ஆற்றலாலான சுயத்திற்கு மரியாதை செய்வது. இவ்வாறு தன் சிந்தனையையே தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதை Askesis என்று சமகால தத்துவ சொல்லாடலில் அழைக்கிறார்கள்.

இவ்வாறு சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், Rationalism என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அவர் நூலுக்கு பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் என்றுதான் தலைப்புக் கொடுக்கிறார். மானுட சிந்தனை என்பது மானுட உடலில் உள்ள நரம்புக் கூட்டமைப்பின் விளைவுதான் என்று கூறுகிறார். யானைக்கு தும்பிக்கையும், தேளுக்கு கொடுக்கும் போல மனித இனத்திற்கான ஓர் ஆற்றல்தான் சிந்தனையாற்றல் என்பதைத்தவிர அதற்கு இயற்கையில் தனிப்பட்ட முக்கியத்துவம் கிடையாது என்று கூறுகிறார். ஒரு பூச்சியின் செய்கைக்கு பாவ, புண்ணியம் உண்டானால்தான் மனிதர்களின் செய்கைகளுக்கும் பாவ, புண்ணியம் இருக்க முடியும் என்றும் கூறிவிடுகிறார். மானுடவாத சாராம்சத்தை மறுக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அவர் மானுட குணாதிசயத்திற்கு அனைவருக்கும் பொதுவான, எல்லா காலங்களுக்கும் பொருத்தமான சாராம்சங்கள் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். சார்பு நோக்கு அல்லது ஒப்பியல் நோக்கு என்று சொல்லப்படக்கூடிய, ஆங்கிலத்தில் Relativism என்று சொல்லக்கூடிய பார்வையைத்தான் முன்வைக்கிறார். அந்தந்த காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்பவே அறம் குறித்த சிந்தனையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அவர் கடந்தகால நிகழ்வுகள், விழுமியங்கள், தர்மங்கள் எதையும் புகழ்வதோ, விசாரணையின்றி கொண்டாடுவதோ இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் பெரியாரை நிலைக்கட்டுமான மறுப்பு, சாராம்ச மறுப்பு (Anti-foundationalist, Anti-essentialist) தத்துவவாதி எனலாம். சமகால ஐரோப்பிய  தத்துவத்தில், அரசியல்   தத்துவத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள இத்தகைய சிந்தனைகளுடன் பெரியாரை இணைத்துக் காண்பது என் போன்றோருக்கு இயல்பானதாகவே அமைகிறது.

அப்படியானால் மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றலை வைத்துக்கொண்டு, சுயமரியாதையை கைக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் சகவாழ்வை மேம்படுத்த வேண்டும், சமதர்மத்தை நாட வேண்டும், பொது நன்மைக்காக செயல்பட வேண்டும் என்பன போன்ற விழுமியங்கள்தான். அதனை அறவியல் போதனையாகச் சொல்லாமல் சமூக அரசியல் விழுமியங்களாக பெரியார் நிலை நிறுத்த முனைந்தார்.

சமூகத்தில் சமதர்ம நோக்கும், சமத்துவ வடிவங்களும் பெருக வேண்டும், ஆற்றல்கள் விடுதலை பெற்றுப் பெருக வேண்டும் என்பதையே அவர் சுயமரியாதையின் விளைவாக எடுத்துக் கொண்டார் என்பதை அவருடைய வாழ்நாள் முழுவதுமான செயல்பாடுகளில், கூற்றுகளில் காணலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ஆற்றலையுமே அவர் நம்பினார் என்பதால் அவர் பேச்சுகளில் யாரையும் மேற்கோள் காட்ட மாட்டார். மாறாக சிந்தனையை நிகழ்த்திக் காட்டுவார்.      

முரண்கள அரசியல்

அவர் முதன்மைப்படுத்திய அரசியல், முரண் வர்ண தர்மத்திற்கு எதிரான சமதர்மம்தான். அவருடைய அரசியல் ஆட்சி அதிகாரத்தை நோக்கியதல்ல என்பதால் அது முற்றிலும் கருத்தியல் முரண்கள அரசியலாகவே அமைந்தது. காங்கிரஸ் தீவிரவாதிகள் இறையாண்மை நோக்குடனும், காங்கிரஸ் மிதவாதிகள் ஆட்சியில் பங்கேற்கும் நோக்குடனும் செயல்பட்டபோது, காந்தி வெகுமக்களிடையே அரசியல் தன்னுணர்வை தோற்றுவிக்க முற்பட்டதும், அவருடைய அகிம்சையும், சமூக நிர்மாணத் திட்டமும் பெரியாரைக் கவர்ந்ததால் காங்கிரஸில் இணைந்து அந்தத் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

காங்கிரஸில், கட்சியிலேயே மக்களிடையே வேலை செய்வதை விட ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க நினைப்பவர்கள் மீது அவருக்கு கடும் விமர்சனம் இருந்தது. அவர் வாழ்நாள் முழுவதும் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க மறுத்ததுடன், அதற்கான எந்த இயக்கத்தையும் அவர் நடத்தியதில்லை. வெகுமக்களிடையே பிரசாரம் செய்வது, அவர்களை சிந்திக்க வைப்பது என்பதே அவருடைய அரசியல் செயல்பாட்டின் முக்கிய வடிவம். ஒரு குடியரசை எத்தகைய விழுமியங்கள் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய முக்கிய கேள்வியாக இருந்தது.

வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல பிரச்சினை, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஏற்க மறுப்பது ஆகிய அனுபவங்கள் வர்ண தர்ம சிந்தனையை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், முற்பிறவியின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட வர்ணத்தில் பிறப்பு நிகழும் என்பது போன்ற பார்ப்பனீய கருத்தியல் அடிப்படைகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய தேவையை உணர்த்தியதால்தான் காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். வர்ண தர்ம சிந்தனை இறைவழிபாட்டுடன், வாழ்வியல் சடங்குகள் சார்ந்த நம்பிக்கைகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்தார்.

வெகுமக்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டால்தான் குடியரசுக்கான சரியான விழுமியங்களை உருவாக்க முடியும் என நினைத்தார். அதற்கான பிரச்சாரம், பல்வேறு கிளர்ச்சி வடிவங்களை அவர் உருவாக்கினார். அவருடைய பேச்சு எளிய மக்களின் சிந்தனையைத் தூண்டும்படியான அதிர்வெடிப் பேச்சுகளாக இருந்தது. ஆங்கிலத்தில் பிரொவொகேடிவ் என்று சொல்லும்படியான அதிர்ச்சியளிக்கும் பேச்சாக இருந்தது. இந்த முறையை அவர் திட்டமிட்டே மேற்கொண்டார் என்பதனை விடுதலையில் 1956-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வெளியான உரையில் காண முடிகிறது (ஆனைமுத்து தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.)

நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டு இருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதனாலேதான் பலவற்றில் உலக மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும்; சரி என்பதை தப்பு என்றும்; தேவை என்பதை தேவையில்லை என்றும்; கெட்டது என்பதை நல்லது என்றும்; நல்லது என்பதை கெட்டது என்றும்; காப்பாற்றப்பட வேண்டும் என்பதை ஒழிக்க வேண்டும் என்றும்; மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்ராயங்களைக் கூறுவோராக, செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால், நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், பழிக்கப்படாமல்குற்றம் சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.

பெரியார் புதிய குடியரசின் அரசியலமைப்பு சட்டம் முழுமையாக வர்ண சிந்தனையை மறுதலிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்பினார். மரபு, மத நம்பிக்கை என்ற பெயரில் பார்ப்பனர்கள் பிறப்பால் தனித்தகுதி பெற்றவர்களாக இருப்பதை அவர் மாற்ற விரும்பினார். அதே சமயம் கூடியவரை அனைத்து மக்களும் கல்வி பெறுவதையும், அதிகாரத்தில் பங்கெடுப்பதையும் உறுதி செய்ய விரும்பினார்.

தீவிர சமூக புத்துருவாக்க லட்சியங்களைக் கொண்டிருந்தாலும், உடனடியாக நிகழக்கூடிய ஒவ்வொரு சிறிய மாறுதல்களையும் ஏற்படுத்தும் நடைமுறைவாதியாகவும் இருந்தார். இதையெல்லாம் குடியரசின் பொதுமன்ற அரசியலில் இயங்கியபடியேதான் செய்ய வேண்டும் என்றும் நினைத்தார், அதுவே அவரது பலவிதமான அரசியல் நிலைபாடுகளுக்கும், கூற்றுகளுக்கும் காரணமாக இருந்தது. அவருடைய தத்துவ பின்புலத்தையும், நீண்டகால நோக்கத்தையும், அன்றாட செயல்முறையையும் புரிந்து கொள்ளாமல் அன்றைக்கு இதைச் சொன்னார், இன்றைக்கு அதைச் சொன்னார் என்று தனியாக எடுத்து விவாதிப்பதில் அதிகம் பயனிருக்காது. அவர் சிந்திக்கச் சொன்னார் என்பதுதான் முக்கியம்.

வரலாற்றுத் தனித்துவம்

பொதுவாக சமூக மாற்றத்தை விரும்பிய பலரும் தங்கள் சிந்தனைகளை நூலாக எழுதுவார்கள். கோட்பாட்டாக்கம் செய்வார்கள். அறிஞர்கள், சிந்தனையாளர்களிடம் விவாதிப்பார்கள். சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களின் மனங்களைக் கவர்ந்து புதிய சட்டத்திட்டங்களை வகுக்க நினைப்பார்கள்.

பெரியார் அந்த வழக்கமான முறையில் செயல்படவில்லை. அவர் பட்டிதொட்டியெல்லாம் சென்று மக்களிடையே பேசுவதையே விரும்பினார். எந்த அமைப்பினர், எந்த ஊருக்கு அழைத்தாலும் அங்கே சென்று அந்த சூழ்நிலைக்குத் தக்கபடி தன் கருத்துகளை அவர்கள் மனதில் தைக்கும்படி பட்டவர்த்தனமாகப் பேசினார். தான் கூறுவதால் எதையும் ஏற்க வேண்டாம், நீங்களாக சிந்தித்துப் பாருங்கள் என்றார். ஒரு நவீன சாக்ரடீஸ் போல தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார்.

அவர் நினைத்த சமதர்ம விழுமியங்களின் அடிப்படையில் அமையும் குடியரசு இந்தியக் கூட்டாட்சிக் குடியரசா, திராவிட நாடு என்ற கூட்டாட்சிக் குடியரசா, தமிழ்நாடு என்ற குடியரசா என்பது அவருக்கு இரண்டாம்பட்சமாகவே இருந்தது. அவர் தேசியவாதியாக இருக்கவில்லை, குடியரசுவாதியாகவே இருந்தார். நடைமுறை அரசியலை, அது தேர்தலானாலும் சரி, பல்வேறு கிளர்ச்சி வடிவங்களானாலும் சரி, மக்களிடையே சிந்தனைகளை விதைத்து சமதர்ம விழுமியங்களை விளைவிப்பதையே நோக்காகக் கொண்டிருந்தார்.  

அவரை முழுமையாகப் புரிந்துகொண்டதால்தான் அண்ணா அவரிடமிருந்து விலகி, தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து, வெகுஜன கருத்தொப்புமை அரசியலை வடிவமைத்து, பதினெட்டு ஆண்டுக்காலம் கழித்து ஆட்சிக்கு வந்தவுடன், அவரை சென்று சந்தித்து அவருக்கு அந்த வெற்றியை சமர்ப்பித்தார். ஒப்பற்ற வரலாற்று நிகழ்வு இது. வன்முறையற்ற முரண்கள அரசியலில் முரணை தீவிரப்படுத்தும் அரசியலும் தேவை, கருத்தொப்புமையை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்தும் அரசியலும் தேவை. அதனால்தான் அண்ணா தி.க, தி.மு.க ஆகிய இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று நம்பினார். இந்தியக் குடியரசில், அரசியலமைப்பு சட்டத்தின் இண்டு இடுக்குகளில் மீண்டும் வர்ண தர்ம கருத்தியல் தழைத்துவிடாமல் தடுக்க இந்தியாவின் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு ஒரு வெகுஜன முற்போக்குக் கருத்தியலை அந்த இரட்டைக் குழல் துப்பாக்கி சாதித்துக் காட்டியுள்ளது கண்கூடு. உலக மக்களாட்சி வரலாற்றில் அந்தத் தனித்துவத்தின் சிறப்பை கோட்பாட்டாக்கம் செய்ய நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.  

Tags: