இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!

ராஜன் குறை

னவரி 24ந் திகதியன்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research) என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றும் , பிபிசி (BBC – British Broadcasting Corporation) எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றும் இந்தியாவில் பரவலான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

வெறுப்பரசியலுக்கு எதிராக ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட பாரத் ஜாடோ யாத்திரை முடிவடைந்த தருணத்தில் அந்த பிரமாண்டமான முயற்சியின் அவசியத்தை  இந்தியக் குடியரசை நேசிக்கும் எல்லா தேசபக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் இந்த இரண்டு வெளிப்பாடுகள் அமைந்துள்ளன.

ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாவின், ஆசியாவின் ஆகப்பெரிய பணக்காரர், ஏன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட தொழிலதிபர், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கெளதம் அதானியின் பல்வேறு பொருளாதார, பங்குச்சந்தை முறைகேடுகளை பட்டியல் இட்டதுடன், அவற்றின் மீதான நடவடிக்கைகள் ஏன் இந்திய  நிதி மேலாண்மை நிறுவனங்களால் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  

பிபிசி ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வலுப்பெற்றுள்ள வெறுப்பரசியல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, அதில் மோடிக்கு உள்ள பொறுப்பு என்ன என்பதை விவாதிக்கிறது. குறிப்பாக நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றதும் நிகழ்ந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் படுகொலைக்கு அவருடைய திட்டமிட்ட செயலின்மை காரணமா என்ற கேள்வியை மீண்டும் வலுவாக எழுப்புகிறது.

அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கும் அமெரிக்க நிறுவனம் அந்தக் குழுமத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது எப்படி இந்தியா மீதான தாக்குதலாகும்?  இப்போது கூட இஸ்ரேலிய துறைமுகம் ஒன்றை நிர்வகிக்க அதானி குழுமம் ஒப்பந்தம் போட்டுள்ளதே? சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற்று, உலகெங்கும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் குழுமத்தைக் கேள்வி கேட்டால், அந்த நிறுவனம் இந்தியா என்ற அடையாளத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது எப்படி முறையாகும்?

அதே போல இங்கிலாந்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தின் உறுப்பினர்கள் குஜராத்தில் கொல்லப்பட்டார்கள்; அதற்கான நீதி கிடைக்கவில்லை என்னும்போது பிபிசி ஆவணப்படம் எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆகும்போது ஏன் இந்தியாவில் பரவும் வெறுப்பரசியல், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை குறித்து சர்வதேச சமூகம் கேள்வி கேட்கக் கூடாது?

இங்கே நாம் புரிந்துகொள்ள முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. அது என்னவென்றால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும், அதாவது அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கும், மோடி அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு மோடி, அதானி என்ற தனி நபர்களுக்கு இடையேயுள்ள தொடர்பு அல்ல. அது இந்துத்துவம் என்ற அரசியல் தத்துவம் ஏற்படுத்தும் தொடர்பு என்பதையே நாம் கவனிக்க வேண்டும்.

இந்துத்துவம் என்பது என்ன?

இந்துத்துவம் என்றால் அது ஓர் அரசியல் கோட்பாடு. அது இந்து மதம் எனப்படும் எதுவும் குறித்தது அல்ல. முருகன், சிவன், ராமன், கிருஷ்ணன், மாரியம்மன், மாசாணத்தம்மன் போன்ற எண்ணிறைந்த தெய்வங்களை வழிபடுவதோ, பக்தி செலுத்துவதோ அல்ல. இந்துத்துவத்தின் நோக்கம் இந்துக்களை காப்பதோ, காப்பாற்றுவதோ அல்ல. அப்படி ஓர் ஆபத்து எதுவும் நூறு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் எனப் பெயரிடப்பட்ட மக்களுக்கு ஏற்படவில்லை.

இந்துத்துவம் என்பது இந்திய குடியரசானது இந்து ராஷ்டிரம் என்ற மத அடையாளம் கொண்ட அரசாக மாற வேண்டும் என்று கருதுவது. இன்னும் சொன்னால் இந்து மத அடையாளம் கொண்டவர்கள்தான் இந்தியாவின் முதன்மை குடிமக்கள், முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தவர் இந்திய குடிமக்களே அல்ல அல்லது இரண்டாம் நிலை குடிமக்கள் என்று கருதுவது. இந்த வெறுப்பரசியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாசிச அரசை உருவாக்குவது.    

இந்துத்துவம் மத அடையாளவாதம் பேசுவதால் அது மதவெறி அல்ல. அதுவோர் அரசியல் அதிகாரக் குவிப்புக்கான வெறி. இந்திய ஒன்றிய அரசிடம் எல்லா அதிகாரங்களையும் குவிக்க வேண்டும் என்று நினைக்கும் வெறி. அப்படிச் செய்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?

முதல் விளைவு, ஏழை மக்கள், உழைக்கும் மக்கள் அவர்கள் தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட முடியாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சுட்டது போல எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் ஆகியோரும் தங்கள் உரிமைகளுக்காகவும், இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கோரிக்கைகளுக்காகவும் போராட முடியாதபடி செய்துவிடலாம். முந்தைய காலம் போல முன்னேறிய வகுப்பினரே, பார்ப்பன-பனியா கூட்டணியே தங்களிடம் அதிகாரத்தைக் குவித்துக்கொள்ளலாம். அங்கேதான் சனாதனம் வருகிறது.

இந்தியக் குடியரசு மாநில அரசுகளின் ஒன்றியம் என்ற நிலையை மாற்றிவிடலாம். மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் பறித்து ஒன்றிய அரசிடம் குவித்துவிட்டால் ஒரு பேரரசைப்போல குடியரசை மாற்றிவிடலாம்.

இத்தகைய அதிகாரக் குவிப்புக்குத் துணையாக மிகப்பெரிய முதலீட்டியக் குவிப்பும் நிகழ்ந்தால்தான் அது பூரணமடையும். அதற்கான ஒரு குழுமம்தான் அதானி குழுமம். நாட்டின் எரிசக்தி தேவையெல்லாம் அவர்களே பூர்த்தி செய்வார்கள். நாட்டிலுள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என அவர்களே போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவார்கள்.  பின்னாளில் ரயில்வே தனியார் வசமானால் அதையும் அதானியே வாங்கி நடத்துவார்கள்.

முதலீட்டியக் குவிப்பின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் ஒரு புள்ளியில் கட்டுப்படுத்தப்படும். அரசியலதிகாரக் குவிப்பின் மூலம் அரசியல், சமூக வாழ்க்கையெல்லாம் ஒரு புள்ளியில் கட்டுப்படுத்தப்படும். இப்படியான ஒரு முற்றதிகார பாசிச சூழலை உருவாக்கிவிட்டால் நாடு வல்லரசாகி விடும் என்ற ஒரு சிந்தனையே இந்துத்துவம். அதற்காகத்தான் இந்த வெறுப்பரசியல் படுகொலைகளும், இமாலய கார்ப்பரேட் ஊழல்களும்.

இமாலய ஊழல்

ஊழல் என்றால் என்ன? அது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் பெறும் கையூட்டு என்பது மட்டுமல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி யாருக்கு எந்த விதமான பொருளாதாரப் பலன்களை கிடைக்கச் செய்தாலும் அது ஊழல்தான். அரசியலதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு முதலாளியின் வளர்ச்சிக்கு உதவுவது. பின்னர் அந்த முதலாளியின் உதவியுடன் அரசியல் வளர்ச்சியை முன்னெடுப்பது. இந்தக் கூட்டணி, தொழில்துறையிலும், அரசியலிலும் பிற பங்கேற்பாளர்களை முறையற்ற வகைகளில் செயல் இழக்கச் செய்யும்  கூட்டணியாகும்.

கெளதம் அதானியின் வளர்ச்சி என்பது நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. நரேந்திர மோடி 2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு இந்திய தொழில்துறை சம்மேளனத்தால் (CII) கண்டிக்கப்பட்டபோது,  அதானி மோடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அவருடன் நண்பரானார். வைர வியாபாரிகளாக இருந்தது அவர் குடும்பம். அதிலும் பல முறைகேடுகள்; வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.  

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தின் நிர்வாகத்தை எடுத்து நடத்தத் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சியின் முதல் புள்ளி. பின்னர் மோடி குஜராத் முதல்வராக இருந்த 13 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சி கண்டது அதானி குழுமம். அதற்கு சாதகமாக பல வசதிகளை செய்து கொடுத்தார் மோடி. அதன் பலனாக மோடி பிரதமர் வேட்பாளரானபோது நாடு முழுவதும் அதானி குழுமத்தின் விமானங்களிலேயே பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமரான பிறகும் அவரது வெளிநாட்டுப் பயணங்களிலெல்லாம் அதானியும் உடன் சென்றார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேசினார்; வர்த்தக உறவுகளை மேற்கொண்டார். இந்தத் தகவல்களெல்லாம் அவ்வப்போது செய்தித் தாள்களில் எழுதப்பட்டவைதான்.  

சரி, இதிலெல்லாம் என்ன பிரச்சினை, எல்லாம் தொழில் வளர்ச்சிதானே, நாட்டுக்கு நன்மைதானே என்ற கேள்வி எழும். ஆனால் எங்கே பிரச்சினை வருகிறது என்றால் அதானி பெற்றுள்ள பிரமாண்டமான வங்கிக் கடன்கள்; அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி செய்துள்ள பிரமாண்டமான முதலீடு.

வங்கிகளில் ஸ்டேட் பாங்க் 27,000 கோடி ரூபாய் அதானிக்கு கடன் கொடுத்துள்ளது. பிற வங்கிகளும் கொடுத்துள்ளன. அதானி குழுமத்துக்கு மொத்தம் 70,000 கோடி முதல் 80,000 கோடி வரை வங்கிக்கடன்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதனாலென்ன, எல்லா நிறுவன ங்களும் கடன் வாங்கும்தானே என்றால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதானி குழுமம் கடன்கள் வாங்க அடிப்படையாக இருப்பது அதன் சொத்தின் மதிப்பு. அந்த சொத்தின் முக்கிய வடிவம் அதன் பங்குகளின் மதிப்பு. இதில்தான் பிரச்சினை.

அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளில் இறக்கை கட்டி பறக்கத் துவங்கியது. எட்டு மடங்கு வளர்ச்சி அல்லது 800% வளர்ச்சி. எப்படி பங்கின் மதிப்பு அதிகரித்தது என்று பார்த்தால், ஷெல் கம்பெனிகள் எனப்படும் மொரிஷீயஸ் போன்ற வரிவிலக்கு நாடுகளில் இயங்கும் லெட்டர் பேட் கம்பெனிகள் அதானியின் பங்குகளை கொள்ளை விலைக்கு வாங்குவதுதான் காரணம். அந்த கம்பெனிகள் அதானி பங்குகளை வாங்குவது தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவை.

இந்த கம்பெனிகள் பலவற்றுக்கும் அதானியின் அண்ணன் வினோத் அதானிக்கும் தொடர்பு இருக்கிறது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்று பார்த்தால் அதானி நிறுவனத்தில் அவருக்குள்ள பங்குகள் மூலம் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள். அதாவது அதானி குடும்பத்தினரே தங்கள் பங்குகளையே அயல்நாட்டு ஷெல் கம்பெனிகள் மூலம் அதிக விலைக்கு வாங்கி பங்கின் மதிப்புகளை அதிகரிக்கிறார்கள். பின்னர் அந்த அதிக மதிப்பைக் காட்டி கடன் வாங்குகிறார்கள்.

இப்படி செய்வது மிகப்பெரிய பங்கு சந்தை முறைகேடு. பங்கு சந்தை வர்த்தகத்தைக் கண்காணிக்கும், மேற்பார்வை செய்யும் செபி (SEBI – Securities and Exchange Board of India) என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. இது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பதால் அரசாங்கத்தினை நோக்கித்தான் விரல்கள் நீளுகின்றன.

அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட பங்கு மதிப்புகளைக் குறித்து கடந்த ஜூலை மாதம்  நானும் “பணத்தோட்ட பூபதி கெளதம் அதானி” என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் எழுதியுள்ளேன். அது கென் என்ற பத்திரிகையில் வெளியான விவரங்களின் அடிப்படையில் எழுதியது.  ஆனால் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து ஆணித்தரமான தரவுகளுடன் எழுதியுள்ளது.

இப்போது இந்த அறிக்கையின் விளைவாக அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட பங்கு சந்தை மதிப்புகள் வேகமாக சரிகின்றன. இது எந்த அளவு அந்த குழுமத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம், இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல்கள் வலுக்கின்றன. நிதியமைச்சகம் எத்தனை நாளைக்கு முகத்தை திருப்பிக்கொண்டு பார்க்காமலேயே இருக்க முடியும் என்பது கேள்விக்குரியது.

அதே சமயம், பிபிசி ஆவணப்படமும் மோடியின் தீவிர இந்துத்துவ வெறுப்பரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதனை சமூக ஊடகங்களில் தடை செய்வதாலோ, கல்லூரிகளில் மாணவர்களைத் திரையிட விடாமல் தடுப்பதாலோ மட்டும் பொது மன்றத்திலிருந்து அகற்றி விட முடியாது. குஜராத் முதல்வராக 2002ஆம் ஆண்டு மோடி எப்படி கொலைவெறி தாண்டவத்தை மூன்று நாளுக்கு அனுமதித்தார் என்று சாட்சி சொன்னதற்காக பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவல் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்கத்தான் வேண்டும்.

இந்தியா நரேந்திர மோடியின் ஊழல்-வெறுப்பரசியல் வழியில் செல்லுமா, அல்லது ராகுல் காந்தியின் அன்பு-சகவாழ்வின் வழியில் செல்லுமா என்பதை எதிர்வரும் ஆண்டு முடிவு செய்யும்.  

Tags: