அமெரிக்கா சூழ்ச்சியால் உருவானதே உக்ரைன் நெருக்கடி!

-ச.அருணாசலம்

உக்ரைன் மீது ரஷ்யா படை போர் தொடுத்தது என்று மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் ரஷ்யாவை குற்றம் சாட்டுகின்றன! அப்படியானால், உக்ரைனில் உள்ள ஒரு பகுதி மக்கள் ரஷ்யாவை ஏன் வரவேற்கிறார்கள்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தது உக்ரைன்? அவர்களின் சூழ்ச்சி என்ன?

இந்தச் சூழலில், உக்ரைனின் இனப்படுகொலையைத் தடுக்கவே இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் ; நாங்கள் ஒருபோதும் உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதில்லை‘ என்று ரஷ்யா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது!

ஒரு வகையில், இந்தச்சூழல் நமக்கு வங்க விடுதலையை நினைவூட்டுகிறது. ஏனெனில், அன்று வங்க தேச மக்களை பாகிஸ்தான் ராணுவப்படுகொலையினின்றும் காப்பாற்ற இந்தியா முனைந்தது. இந்திய அரசை அன்று ஆக்கிரமிப்பாளர்கள் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இந்தியாவை பயமுறுத்த அன்று அமெரிக்கா கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது. இந்திய படைகள் கிழக்கு பாகிஸ்தானில் நுழைந்தவுடன் இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடைகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏற்படுத்தியதை நாம் மறக்க இயலாது.

கடந்த எட்டு வருட காலமாக நேட்டோவின் கிழக்கு நோக்கிய ஆபத்தான விரிவாக்கத்தை செய்து வந்தது அமெரிக்கா! மேற்கு ஐரோப்பிய–ரஷ்ய பொருளாதார கூட்டுறவையும் , வணிகத்தையும் மேம்படுத்த ரஷ்யா எடுத்த சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையானது அமெரிக்கா! உக்ரைனில் ரஷ்ய மொழிபேசும் மக்கள் படும் அடக்குமுறைகளையும், வேதனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வரும் போதோ அதை “பொய்யான பரப்புரை” என்று அமெரிக்க புறம் தள்ளியது. இன்றோ, ரஷ்யாவை போர் தொடுக்கும் வில்லனாக சித்தரித்து உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது.

தற்போது, ரஷ்யா நாட்டின் பாதுகாப்பை கேலிகூத்தாக்கும் விதமாக மேற்கத்திய நாட்டைச்சேர்ந்த அன்னிய துருப்புக்கள், ஏவுகணைகள் இன்று உக்ரைனில் குவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் மொத்த மக்கள் தொகையான 4.41 கோடியில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 1.8 கோடியாகும் ; இவர்கள் வாழும் டானெட்ஸ்க் மற்றும் லுகானஸ்க் பகுதி எல்லைகளில் கிட்டத்தட்ட 1,25,000 போர்வீர்களை உக்ரைன் அரசு குவித்துள்ளது . மேலும், ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பல வருடங்களாக மறுக்கப்பட்டு அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டனர். இப்பகுதிவாழ் மக்களுக்கு ‘தனி அந்தஸ்து‘ Special Status வழங்கி, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 2014ம் ஆண்டே மின்ஸ்க் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இன்றுவரை எட்டு ஆண்டுகள் கழிந்தும் அவை நிறைவேற்றப்படவில்லை, உக்ரைன் ஆட்சியாளர்களும் ‘பன்டேராஸ்‘ என்றழைக்கப்படும் உக்ரைன் பாசிஸ்ட்களும் அம்மக்களை அழித்தொழிப்பதில் குறியாக உள்ளனர்; இதை கண்டிக்க முயலாத அமெரிக்கா இவர்களை பயன்படுத்தி ரஷ்யாவை பலவீனப்படுத்தலாம் என்ற நப்பாசையில் அவர்களுக்கு உதவ போர்தந்திர நிபுணர்களையும் , ராணுவ தளவாடங்களையும், பண உதவிகளையும் அளித்து வருகிறது.

1.8 கோடி ரஷ்ய மொழி பேசும் மக்களில் சுமார் 6 லட்சம் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெற்றவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் , டான்பாஸ் பகுதிகளான டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததன் காரணம் விளங்கும்! கடந்த எட்டு வருடங்களாக மின்ஸ்க் ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவர போராடி எந்த பலனும் கிடைக்காத போது அம்மக்கள் பிரிவினை நோக்கி நகர்ந்ததில் வியப்பில்லை. அதனால் தான் ரஷ்ய தலையீடை ஆதரிக்கின்றனர்.

ஆனால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் நேட்டோவை விரிவு படுத்துவதிலும் ரஷ்யாவை அச்சுறுத்தி மண்டியிட வைப்பதையே குறிக்கோளாக கொண்டு காய்களை நகர்த்தினர் .

சோவியத்யூனியன் சிதையுண்டதோடு, வார்சா உடன்படிக்கையும் (Warsaw Pact) காலாவதி ஆகிவிட்டது.

ஆனால், இன்றுவரை நேட்டோ ( North Atlantic Treaty Organisation) கூட்டமைப்பு மட்டும் இன்றும் தொடர்வது ஏன்? என்ற வினா உலகெங்கிலும் குறிப்பாக ஐரோப்பாவில் எழுப்பபடுகிறது, இதற்கு பதிலளிக்க அமெரிக்காவிற்கோ, பிரிட்டனுக்கோ நேர்மையில்லை!

ஆனால், இன்று நேட்டோ கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் – முந்தைய சோவியத் குடியரசு நாடுகள்– தன் வளையத்திற்குள் கொண்டு வருகிறது, அதற்கு இடையூறாக இருக்கும் ஆட்சியாளர்களை கவிழ்பதிலும் குறியாக உள்ளது. இத்தகைய போக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து ஐரோப்பிய நாடுகளின்– ரஷ்யா உட்பட அனைவரின்– நலன்களை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு சமனை ஏற்படுத்தாமல் ஒருதலை பட்சமாக ரஷ்யாவிற்கெதிரான ஒரு கட்டமைப்பை அமெரிக்கா ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி முழு ஐரோப்பா கண்டத்தையும் பாதுகாப்பு மற்றும் சந்தை கட்டமைப்புகளில் உட்படுத்தி தனது ஆதிக்கமே அங்கு (ஐரோப்பாவில்)நிலைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலையாகும் .

ஐரோப்பா சுதந்திரமாக செயல்படுவதையோ, தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்வதையோ அமெரிக்கா விரும்பவில்லை என்பது வெளிப்படையான உண்மை! . பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர், ‘அமெரிக்க தலைமை‘ என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் ஐரோப்பா எரிசக்தி தேவையில் தன்னிறைவு அடைவதை தடுப்பதும், ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்தும் போர்வையில் அமெரிக்காவின் ராணுவ தளவாட விற்பனை சந்தையாக ஐரோப்பாவை மாற்றுவதும் தான்.

ரஷ்யாவின் நோர்டுஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை அழித்துவிட்டு, விலை கூடுதலான அமெரிக்க திரவ எரிவாயுவின் -Liquified Natural Gas- மீதான சார்புத்தன்மையை நிலைநிறுத்தி, கொள்ளை லாபம் அடிக்க அமெரிக்கா முனைவது அனைவரும் அறிந்ததே! இந்த சூட்சும்ம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினுக்கு நன்கு தெரியும்!

இதன்விளைவாகத்தான் உக்ரைன் நாட்டையும், மக்களையும் பலிகடாவாக்கி, ரஷ்யாவை போர்குழிக்குள் தள்ளுவதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்தி ஐரோப்பாவின் ஒரே தலைவனாக, ஆபத்பாந்தவனாக தன்னை நிலைநிறுத்த அமெரிக்கா முயல்கிறது. இந்த கூக்குரல்கள்,முன்னேற்பாடுகள் அனைத்தும் அதை நோக்கியே நகருகின்றன.

பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை சீர்குலைப்பதும், ஐரோப்பிய சந்தையை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதும் அமெரிக்க நோக்கம் . இதற்கு உக்ரைன் ஒரு பகடைக்காய் ஆகவும் ,ரஷ்ய மொழி பேசும் மக்கள் பலிகடாக்களாகவும் உக்ரைன் ஆட்சியாளர்களும் பன்டேராஸ் கும்பலும் அமெரிக்க கைக்கூலிகளாக இயக்கப்படுகின்றனர்.

இதற்கு ஆதரவாக கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரக் கூச்சலில் ஒன்றுதான் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பதாகும் .இரண்டாம் உலகப்போருக்குப்பின் நாடுகளின் எல்லைகளை ரஷ்யாதான் முதலில் மீறுகிறது என்று கூச்சலிடும் இந்த மேதாவிகள் யுகஸ்லோவியா சிதைக்கப்பட்டு துண்டாடப்பட்ட போது எங்கிருந்தனர் ? அப்பொழுது யுகஸ்லாவாவிய தேச எல்லைகள் மாற்றப்பட வில்லையா,மீறப்படவில்லையா?

செர்பியா, குரோஷியா,பொஸ்னியா என்ற பல கூறுகளாக சிதைக்கப்பட்ட பின்பும், எவர் பேச்சையும் கேட்காமல் செர்பியாவிலிருந்து கொசோவோ பிரித்தெடுக்கப்பட்டதே! அப்பொழுது இந்த கேள்வி கேட்கப்படவில்லை. ஏனெனில், இதை முன்னின்று செய்ததே அமெரிக்காதான்!

இன்று ரஷ்ய மொழி பேசும் மக்கள் பகுதிகளை (லுகான்ஸ்க் – Lugansk, டொனெஸ்க் – Donetsk) ரஷ்யா அங்கீகாரம் செய்தவுடன் , ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து முடக்க முனைகிறது. உலக நாடுகளை தன்பக்கம் இழுக்க தன் அனைத்து வலிமைகளையும்–படை, பண, ஊடக மற்றும் பிரச்சார– கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய முயற்சிக்கு ஐ.நா சபையும் அமெரிக்காவுக்கு துணைபோகிறது.

கோணங்களும் பார்வைகளும்!

ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும் இந்நேரத்தில் இதற்கு மாற்று என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்திய அரசின் அறிக்கையில் ரஷ்ய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, ஐ. நா ஓட்டெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவிற்கும், நேட்டோ அணிக்கும் இடையிலான வேறுபாடுகளை “உண்மையான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் ” என்று இந்தியா நம்புகிறது என்றுள்ளது. பிரதமர் மோடியும் இதையே வலியுறுத்தி உள்ளார்!

சீன நாடோ, உக்ரைன் விவகாரம் பல கோணங்கள உள்ளடக்கியது, சரித்திர கூறுகளை உள்ளடக்கிய இவ்விவகாரத்தில் ரஷ்யாவின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை சீனா புரிந்து கொண்டுள்ளது. இன்றைய நடவடிக்கை மேற்கத்திய நாடுகளின் இடையறாத தாக்கத்தின் எதிர்வினையே என்று கூறியுள்ளது. ரஷ்யாவை எந்த இடத்திலும் கண்டனம் செய்யாத சீனா பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டது.

இந்தியாவும் சீனாவும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரி நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை என்ன விளைவை ஏற்படுத்தும் என்று இப்பொழுது நம்மால் கணிக்க முடியாவிட்டாலும் இதனுடைய தீர்வு என்பது ஒரு நியாயமான, நேர்மையான நீடிக்க கூடிய தீர்வாக ஐரோப்பாவில் அமைய வேண்டுமெனில், அதற்கு ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதிக்காத அணுகுமுறையே தீர்வாகும்!

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) ”ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் சுயாதீனம் என்பது ரஷ்ய நலன்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் . நேட்டோ என்பது மூளைச்சாவு (Brain Dead) அடைந்த ஒரு அமைப்பு. ஐரோப்பா ஒரு சுயாதீனமான சார்பற்ற அரசியல் அதிகாரமாக உருவெடுக்க வேண்டுமெனில், அது தனது தலைவிதியை தானே நிர்ணயிக்க வேண்டும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க வேண்டும். முந்தைய சோவியத் நாடுகளின் கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று ஆணித்தரமாக கூறுகிறார் . பழைய பஞ்சாங்க பனிப்போர் (Cold War) மனநிலை இனி உதவாது என்பதை இதைவிட தெளிவாக யாரால் கூறவியலும்?

Tags: