மலையக இலக்கியச் சுடர் அந்தனி ஜீவா காலமானார்

எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அந்தனி ஜீவா 10.01.2025 அன்று காலமானார்.
இவர் மலையகத்தில் நீண்ட காலமாக ‘கொழுந்து’ சஞ்சிகையை 31 ஆவது இதழ் வரை 20 இற்கும் மேற்பட்ட வருடங்கள் தனிமனிதனாக இருந்து வெளியிட்டு வருவது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வரும் அந்தனி ஜீவா 1944 மே 26 இல் பிறந்தார்.
கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக இல்லாமல், சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டு வந்தவர்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளரும் கவிஞருமாக அந்தனி ஜீவா விளங்குகிறார். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்ற அந்தனி ஜீவாவின் தந்தை செபஸ்டியன், தாயார் லட்சுமி அம்மாள்.1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
தினகரன், சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் பங்களித்துவரும் இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார்.
மலையக இலக்கியங்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் அந்தனி ஜீவாவுக்கு உண்டு. மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.
அந்நூலில், மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளான கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மையார், பெரி. சுந்தரம், இராமானுஜம், ஜெ.எஸ். பெரோ, ஜார்ஜ் ஆர். மேத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை, ஏ. அஸீஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி. ராஜன் ஆகியோர் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்புளோமா பட்டம் பெற்ற அந்தனி ஜீவா தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 31.10.1984 அன்று சுட்டுகொல்லப்பட்டதன் எதிரொலியாக தினகரன் இதழின் வாரமஞ்சரியில் ‘அன்னை இந்திரா’ தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பானது நூலாகவும் வெளிவந்தது.
அத்துடன் ஈழத்தில் தமிழ் நாடகம் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசையர் (1990), மலையகமும் இலக்கியமும் (1995), முகமும் முகவரியும் (1997), மலையக மாணிக்கங்கள் (1998), அக்கினிப் பூக்கள் (1999), சி. வி. சில நினைவுகள் (2002) குறிஞ்சிக் குயில்கள் (2002), மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகம் வளர்த்த கவிதை (2002), கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002), திருந்திய அசோகன் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2003), மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம் (2007), ஒரு வானம்பாடியின் கதை (2014) போன்ற நூல்களை அந்தனி ஜீவா எழுதியுள்ளார். மலையக பெண்களின் எழுத்துக்களை தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மலையகத்தின் தேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘குறிஞ்சிக் குயில்கள்’ என்னும் நூலினை 2002 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கொண்டு வந்தார்.
‘அம்மா’ என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தார். பெண் படைப்பாளர்களை கொழுந்து இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா.
மலையகத்தில் 1980 களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையே சேரும். அத்துடன் அவர் 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.