போர்நிறுத்தத்திற்கான வரைவு ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்குமா?

ஸ்ரேல் – காசா போர் நிறுத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுவந்துள்ள  வரைவு அறிக்கையை ஹமாஸ் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்குமா என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது.  

2023 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்துவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ்  அமைப்பினர் ஏற்றுக்கொண்டனர் எனவும் ஆனால் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்த பல தகவல்களை வெளியிடவில்லை எனவும்  பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கு வதன் மூலம் 15 மாத கால இனப்படுகொலையை  முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும், ஹமாஸ் வசம் தற்போது உள்ள 100 இற்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்க வாய்ப்புள்ளது எனவும்  கூறப்படுகின்றது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்ரனி பிளிங்கன் (Antony Blinken) பேசியபோது “நாங்கள் போர் நிறுத்தத்தை அடைவோம் என  நான் நம்புகிறேன். அதற்கான முன்னெடுப்பு முன்பை விட முக்கிய கட்டத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வகுக்கப்பட்ட, ஐ.நா அவையின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மூன்று கட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் ஆறு வார காலத்திற்குள் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. எனினும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மதித்து தாக்குதலை நிறுத்துமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகும் கூட 50 இற்கும்  மேற்பட்ட முறை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் இராணுவம் லெபனான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளும் இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டிக்கவில்லை. அதேபோல காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு அவையில் பெரும்பான்மையான உலக நாடுகளால் ஆதரிக்கப்பட்ட தீர்மானத்தை கடந்த 5 மாதங்களாக அமெரிக்க மட்டும் தனது இரத்து அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது கண்டிக்காத, இஸ்ரேலின் இனப்படுகொலையை அனைத்து வகையிலும் ஆதரித்து வந்த அமெரிக்கா தற்போது எவ்வாறு இஸ்ரேல் – போலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக நிலைநாட்டும் எனவும் கேள்விகள் எழுப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்ததற்கு ஹமாஸ் இஸ்ரேலைக் குற்றம்சாட்டியது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஹமாஸ் மத்தியஸ்தர்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோதும் இஸ்ரேல் அதை நிராகரித்தது என்றும் புதிய ராணுவ நவடிக்கையைத் தொடங்கியது என்றும் தெரிவித்தது. 

ஐ.நா. நிவாரண வாகனங்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து கொள்ளையடித்து வரும் நிலையில் சுமார்  20 இலட்சத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் செயற்கை பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல லான்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கை காசாவில் படுகொலை செய்யப்பட்டுள்ள பலஸ்தீனர்களின் எண்ணிக்கை, காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள 46,000 என்ற  அளவை விட 41 சதவீதம் அதிகம் (64,000)  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: