இலங்கையின் தற்போதைய நிலவரம்

“சொந்தமாக இருந்த ஒரே வீடும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான இல்லமும் முற்றுகையிடப்பட்டது. பிரதமருக்கு சொந்தமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தன் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, ”எனக்குச் சொந்தமாக இருந்த ஒரே ஒரு வீடும் இப்போது முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. என்னுடைய மிகப்பெரிய செல்வமும் பொக்கிஷமுமான எனது நூலகத்தில் இருந்த 2,500 புத்தகங்களும் அழிக்கப்பட்டன. 200 வருட ஓவியமும் அழிக்கப்பட்டது. நான் சேகரித்து வைத்திருந்த ஓவியங்களும், கலை பொருட்களும் அழிக்கப்பட்டுவிட்டன. ஓரே ஒரு ஓவியம் மட்டும் மீட்கப்பட்டது” என்றார்.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு 20ஆம் திகதி வாக்கெடுப்பு

புதிய ஜனாதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நியமிப்பதற்கு நேற்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அரசியலமைப்புக்கு அமைய புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் அடுத்தவார செவ்வாய்க்கிழமையன்று நிறைவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து எதிர்வரும் வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளைய தினம் (13.07.2022) ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யப் போவதாக பிரதமருக்கும் சபாநாயகருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்தபின் புதிய ஜனாதிபதியொருவரை நியமிப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

மிக விரைவாக இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதமரின் தலைமையில் அமைச்சரவை கூடியதாகவும் இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்யவேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அறிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளும்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க- ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியஸ்தர்கள் 25 பேரை தெரிவுசெய்து குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இன்றைய தினம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம்

லரிமாளிகையின் ஊடகப் பிரிவிலுள்ள பொருள்கள் பல திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதற்கமைய, ஊடகப் பிரிவிலிருந்த  மடிக்கணினிகள் இரண்டு, வீடியோ கமெரா ஒன்று உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் அலரி மாளிகைக்குக் செல்லாத நிலையில், அவரது ஊடகப் பிரிவின் ஒரு பகுதி மாத்திரம் அலரிமாளிகைளில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் நுழைந்த பின்னரே குறித்த பொருள்கள் காணாமல் போயிருப்பதாக பிரதமரின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அலுவலகத்தின் சுவர் துளையிடப்பட்டுள்ளதுடன், கதவு, யன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகிறது

ந்த வாரத்தில் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் அதற்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் தற்போதைய எரிபொருளுக்கான நெருக்கடி நிலை ஓரளவு தணியும் என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டீசல் கப்பலொன்று எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்றும் அத்துடன் மசகு எண்ணெய் கப்பலொன்று இம்மாதம் 14 – 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலுமொரு சுத்திகரிக்கப்படாத எரிபொருளைத் தாங்கிய கப்பலொன்று எதிர்வரும் 15 – 17ஆம் திகதிக்கிடைப்பட்ட காலத்தில் நாட்டை வந்தடையுமென்றும் அந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்ததும் அதற்கான நிதியை செலுத்தவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இம் மாதம் 17 – 19ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டுக்கு வரவுள்ள பெற்றோல் கப்பலுக்கான மீதமான தொகையை இன்று செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: