நிழலின் காதல்… நிஜத்தில் கானல்!

கோ.ரகுபதி

ல்லற இணையர்களிடம் அன்றாட வாழ்வில் அன்னியோன்னியம் இருக்கிறதா எனப் பேராசிரியை ஒருவரிடம் அலைபேசியில் வினவினேன். “அய்யய்யோ” என்று அதிர்ச்சியான அவர், “அவ்வார்த்தை மிகப் பெரியது; ‘கருவிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கனிவுகூட மனைவிகளுக்குத் தரப்படுகிறதா?’ என்று கேளுங்கள்” என்றார். தான் அறிந்த நபர்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவலங்களைச் சிறு சிறு கதைகளாகக் கூறினார்.

ஆணாதிக்கம், சாதி, வர்க்கம், மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படை அலகான குடும்பம் என்கிற நிறுவனம், திருமணம் என்ற சங்கிலித் தொடர் செயலால் நிலைநிறுத்தப்படுகிறது. காதல் என்பது இந்தச் சங்கிலித் தொடரைத் துண்டிக்கிறது. காரணங்கள் இன்றியும், கணக்குகளற்றும், முன்நிபந்தனை இன்றியும், சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒன்றுபட்டும், முரண்பட்டும் எதிர்பாலினத்திடமும் தன்பாலினத்திடமும் ஏற்படுகின்ற இயல்பான ஈர்ப்பு காதலாகப் பரிணமிக்கிறது.

இதை அறிவிய​லாலும் பகுத்​தறி​வாலும் சம்பந்​தப்பட்ட நபர்களாலேயே நியாயப்​படுத்த இயலாது. நியாயம் கற்பிப்​ப​தானது காதலையே அநியாய​மாக்​கும். வண்ண, வாசனை விருப்​பங்​களைப் போல் வாஞ்சையும் வியாக்​கி​யானமற்றது. காதலானது ஒருவகையில் ஆன்மிக உணர்வுக்கு ஒப்பானது​தான். இன்ப, துன்பங்​களுக்குக் கடவுளை நினைப்பதுபோல் காதலன், காதலியைக் கருதுகின்​றனர்.

தாங்கள் நம்பு​கின்ற கடவுளைப் பக்தர்கள் உணர்வதும், உருகு​வதும் அந்தந்தத் தனிநபர்களின் உணர்வுக்கு உட்பட்​டது​போல், தங்களுக்குள் பகிர்​கின்ற வார்த்தைகளும் தொடுதல்​களும் காதலர்​களால் மட்டுமே உணரப்​படு​கின்றன. கடவுளிடம் நம்பிக்கை​யுடன் கவலைகளை, உண்மைகளை, விருப்​பங்​களைக் கூறித் தங்களைத் தாங்களே ஆற்றுப்​படுத்து​வதுபோல் காதலிலும் நிகழ்​கிறது. காதலும் கடவுளும் ஆத்மார்த்த, ஆன்மிக உணர்வு வகைப்​பட்டவை. காதலானது திருமணம் வழி இல்லற​மாகலாம். அது நிகழாமலும் இருக்​கலாம்.

காதலிக்கும் சூழல் இல்லை: குடும்பத்தில் காதல் செயற்​கை​யாகக் கற்பிக்கப்படுகிறது; இயல்பாக முகிழ்ப்பது அரிது. காதலை​விடவும் மனைவியின் கடமைகளுக்கே கூடுதலான முக்கி​யத்துவம் தரப்படு​கிறது. “குடும்பத்​துக்குத் தலைவன் கணவன். அவன் சொற்படி மனைவி நடந்து, அவனுடைய வருமானத்​துக்குத் தக்கவாறு செலவு செய்து, அவன் சந்தோஷப்​படும்படி நடக்க வேண்டும். மனைவி​யானவள் தன் கணவனுடைய இதயத்தில் தன் அன்பாகிய வித்தை நட வேண்டும்.

அது ஓங்கி வளர்ந்து விருட்​ச​மாவதற்கு அவன் மனப்படி நடந்து, செடிக்குத் தண்ணீர் பாய்ச்சி வளர்ப்​பதுபோல் இருக்க வேண்டும். மாமரத்தைத் தண்ணீர் வார்த்து வளர்த்தால் அது பெரிய​தானவுடன் எப்படி ருசியான கனியைக் கொடுக்​கிறதோ, அதைப் போலக் கணவன் இதயத்தில் அன்பை ஊன்றி வளர்த்து வந்தால், அவன் பிரீதியாகிய கனியைப் புசிக்​கலாம்” என்று டி.எம்​.ஜானகி அம்மாள் 1930 இல் ‘தாம்பத்தியம்’ என்கிற கட்டுரையில் எழுதி​னார்.

கணவர்களே காதலர்​களென்று கருதி அவர்களிடத்தில் எந்நேரமும் அன்பு பாராட்டல், அவர்கள் ஏவிய பணிவிடைகளைச் செய்தல், அவர்களுக்கு அறுசுவை​யுண்டி அமைத்து அருந்தச் செய்தல், அவர்கள் நித்திரை செய்த பின்னர் தாங்கள் நித்திரை செய்தல், அவர்கள் எழுந்​திருக்கும் முன்னர் எழுந்​திருத்தல், அவர்களது பாதங்களை வருடல், புஷ்பம் மஞ்சள் சந்தனம் நல்ல வஸ்திரம் ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்​து​கொண்டு தட்டத்தில் தாம்பூலமெடுத்துப் புருஷர்கட்கெதிரில் நின்றுகொண்டு அவர்களை உபசரித்தல்; இவையே இந்திர​பாக்கியமென்று மகிழ்தல், புருஷர்​களுடைய சுகம், துக்கம், இலாபம், நஷ்டம் ஆகியவ​ற்றுக்குத் தாங்களும் பாத்தி​யப்​பட்​டிருத்தல், புருஷர்கள் சினங்​கொள்​ளும்போது நற்குணங்​காட்டி அவர்களது கோபத்தை ஆற்றுதல், மாமியார், மாமனார், மைத்துனன்​மார், மைத்துனிமார் முதலானோர் மகிழ்ச்​சிபெற ஒழுகுதல், புருஷன் வீட்டுக்கு வரும் சுற்றத்​தார், விருந்​தினர் முதலானவர்களை வரிசை தந்து உபசரித்தல்; அந்நிய புருஷர்​களுடன் உறவாடாமல் அவரைப் புகழாமல் மகிழாமல் இருந்து எப்போதும் தங்கள் சொந்தப் புருஷர் பேரிலே அன்பு ​வைத்து அவர்களையே தெய்வ​மெனக் கொண்டாடுதல் எனப் பெண்களுக்​குரிய கடமைகளாக ‘வித்​தி​யா​பானு’ 1894 மே இதழில் வரையறுக்​கப்​பட்டன.

இத்தகைய எதிர்​பார்ப்புகள் தற்காலத்​திலும் கணவர்​களிடம் தொடர்​வதற்குச் சில தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சிகளும் காணொளி​களும் சாட்சிகளாயிருக்கின்றன. “மனையாள் எவ்வளவுக் கெவ்வளவு தன்புருஷன் மீது அன்பு பாராட்டு​கிறாளோ அவ்வளவுக்​கவ்வளவு புருஷனும் அவள்மீது அன்பு பாராட்ட வேண்டும்” என்று கணவர்களிடமும் ‘வித்​தி​யா​பானு’ அறிவுறுத்​தியது. “பெண் மக்களிடம் பெண்மை, தாய்மை, இறைமை ஆகிய மூன்று இயல்பு​களிருக்​கின்றன.

அவை முறையே மலர்ந்து, காய்த்து, கனியும் முறையில் அவர்கள் வாழ்வு நடத்து​வதற்கு ஆணுலகம் துணைபுரிதல் வேண்டும்” என்று திரு.​வி.கல்​யாணசுந்தரம் ‘பெண்​ணுலகு’ என்கிற கட்டுரையில் 1937 இல் எழுதி​னார். எனினும் மனைவி​களைப் போல் கணவர்களுக்கு வேறு கடமைகள் கட்டளை​யிடப்​பட​வில்லை. கணவர்​களுக்கு மனைவிகளைக் காதலிக்கும் சூழலும் நேரமும் தாராளமாக இருக்​கின்றன. கணக்கற்ற கடமைகளால் கட்டப்​பட்​டுள்ள மனைவி​களுக்குக் கணவர்​களைக் காதலிக்க நேரமும் சூழலும் இல்லை. கணவர்​களின் அன்பும் காதலும் காமமாகவே வெளிப்​படு​வதால் அவற்றையும் தன் கடமைகளில் ஒரு செயலாக மனைவி கடக்கிறாள்.

அன்னியோன்னியமும் அந்நிய​மாதலும்: ‘இம் மண்ணுலகின் மனமொத்த தோழருடன் அளவளாவி மகிழ்​வெய்​வதைவிட மானிடர்க்கு வேறு இன்பம் யாதும் இலது’ என ஏ.சந்தன சுவாமி 1928 இல் ‘இணக்​கமறிந்​திணங்கு’ கட்டுரை​யிலும், ‘காதலன் காதலியையும் காதலி காதலனை​யுமாக, இவர்பால் இரண்டுடலுக்கு ஓருயி​ராகக் கருத்தொரு​மித்து வாழ்வதே இப்பரந்​த-பூவுலகின் வாழ்வெனில், பேரின்ப வாழ்வன்றோ? அது இல்லறத்​தில்தான் பிறக்​கும்’ என செ.கு.இ​ராம​சாமிப்பிள்ளை 1938 இல் ‘இயற்கை அழகு’ கட்டுரை​யிலும் எழுதினர்.

குடும்பத்தில் மனைவிக்குக் கடமைகளும், கணவருக்குச் சுகபோகமும் என வெவ்வேறாக வரையறுத்​திருப்​ப​தானது அவர்களிடையே அன்னியோன்னி​யத்​தையும் அந்நிய​மாதலையும் தீர்மானிக்​கின்றன. சொந்த​பந்​தங்​களின் விருந்​துகளாலும், இளமை ஊஞ்சலாடு​வ​தாலும் ஒரு குறிப்​பிட்ட காலம் வரையிலும் இணையர்​களிடம் அன்னியோன்னியம் காதலும் காமமு​மாய்த் ததும்​பு​கிறது.

இளம் மனைவிகள் கடமைகளைக் கணவனுக்கும் குடும்பத்​தா​ருக்கும் ‘மருமகளாய்’ சளைக்காது நிறைவேற்றுகிறாள். பொருளீட்டுதல், பிள்ளைப்​பேறு, வளர்ப்பு என ஓடியாடி ஓயாது உழைக்​கிறாள். இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண் ஆனவள், குழந்தை​களைப் பள்ளியில் விடுதல், பொருள்கள் வாங்குதல் போன்ற கூடுதல் பளுவையும் சுமக்​கிறாள்.

கடமைகள்தான் அன்றாட வாழ்க்கை​யாகிறபோது உடலும் உள்ளமும் தளர்ந்து கணவனின் ஒத்தாசையை எதிர்​பார்க்​கிறாள். கணவர்​களில் ஆணாதிக்கமற்று மனைவிகளுக்கு ஒத்தாசை​யுடன் இருப்​பவர்​களும், குடும்பத்​தினரின் உடுப்பு​களைச் சலவை செய்தல், பாத்திரம் தேய்த்தல், வீட்டைச் சுத்த​மாக்​குதல் என இயங்கு​வோரும், ஆணாதிக்கச் சுகபோகங்​களுடன் உலாவு​பவர்​களும் உண்டு.

ஆணாதிக்​கர்​களுடன் ஒப்பிடு​கையில் ஒத்தாசை, வேலைக்​காரக் கணவர்​களின் எண்ணிக்கை குறைவு. ஆணாதிக்கக் கணவர்​களில் சிலர் மனைவி​களை​விடவும் குறைந்த பொருளீட்டு​பவர்​களாக​வும், முற்றிலும் வேலையில்​லாதோ​ராக​வும், குடிகாரர்களாக​வும், குடும்பப் பொறுப்​பற்​றவர்​களாகவும் இருந்​தா​லும்கூட மனைவிகள் அவர்களை ஏற்கின்​றனர்.

தன்னை மனுஷி​யாகவே மதிக்க மறுப்​ப​தா​லும், அவளைப் புரிந்​து​கொள்ளத் தவறுவதாலும் மன உளைச்​சலுக்கு ஆளாகின்ற மனைவிகள் ஆணாதிக்கக் கணவர்களிடம்​ இருந்து அந்நியப்​படு​கின்​றனர். குடும்பத்தின் ஆணாதிக்கச் சூழலானது பெண்களின் பொருளா​தா​ரத்தைச் சுரண்​டு​கிறது; உளவியல், உடலியல் வன்முறைகளை ஏவுகிறது. குடும்ப​மானது பாதுகாப்பான புகலிடம் என்கிற நிலைமாறி, அது ஊறு விளைவிப்பதாக அவள் உணர்கிறாள். இறுதி​யில், காதல் முற்றிலும் அழிந்தொழிகிறது.

முதலா​ளித்துவ அரசியல் பொருளா​தா​ர​மானது கணவர்​களின் பொறுப்பு​களையும் மனைவிகள் சுமக்கும் நிலையை உருவாக்கி​யுள்ளது. குடும்பச் சுமையைத் தானும் தாங்கிக்​கொள்ள வேண்டு​மென்று கணவர்கள் தாமாகவே முன்வந்தால் மனைவிகளுக்கும் காதலிக்கும் சூழல் உருவாகும்.

அது நிகழ்​வதற்குள் மனைவி, கணவனுக்​கிடையேயான காதலானது உளவியல் நிலையில் கண்ணாடி போல் நொறுங்கி ஒருபோதும் பொருத்த இயலாத நிலைக்கு நகர்கிறது. குடும்பத்தில் காதல் கானலாக உருமாறு​வதால் நிழலில் ​காதலைக் ​கொண்டாடு​கிறோம். குடும்பத்தின் ஆணா​திக்கச் சூழல் சமத்துவம் ஆகாத வரை​யில், ​காதல் ​கானலாகவே நீடிக்​கும்.

Tags: