ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வருமா?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடங்கி எதிர்வரும் பெப்ரவரி 22ந் திகதியுடன் 3வது ஆண்டு நிறைவடைய உள்ளது. பல இலட்சம் உயிரிழப்புகளின் மத்தியில், தொடர்ந்து தீவிர மோதல் இடம்பெற்று வரும் சூழலில், கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின்போது ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் மோதல் நடந்திருக்காது எனவும் தான் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் மோதலை நிறுத்துவேன் எனவும் கூறியிருந்தார். இதில் 24 மணி நேரத்தில் மோதலை நிறுத்துவதென்பது சாத்தியமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
2010 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். இவர் ரஷ்யா சார்பாளராக மேற்குலகினரால் முத்திரை குத்தப்பட்டார். இவரது ஜனாதிபதி பதவிக் காலம் 2015 வரை இருந்த போதிலும், இவரது ஆட்சிக்கு எதிராக 4 மாத காலமாக உக்ரைனின் தலைநகரில் (Kyiv) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு, 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ந் திகதி அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். மைடான் (Maidan) சதிப்புரட்சி என்றழைக்கபட்டு வரும் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னரே உக்ரைனின் தீவிர தேசியவாதப் படைகள் (AZOV) ரஷ்ய இனத்தவர்களுடன் நேரடி யுத்தத்தை ஆரம்பித்தனர்.
உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது, அத்தோடு ரஷ்ய இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்தததையும், டொன்பாஸ் மற்றும் டொனெஸ்க் பிராந்தியங்களின் குடியரசுப் பிரகடனங்களையும் உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதாக ரஷ்யா திரும்பத்திரும்பக் கூறி வந்திருக்கின்றது.
கடந்த மூன்று வருடங்களாக எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப்போர் ஒன்று மூண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. அடுத்த உலகப் போர் என்பது உலகை மயானமாக்கும் என்பதை எல்லா உலகத் தலைவர்களும் மிகத்தெளிவாக புரிந்தே வைத்துள்ளனர். மேற்குலக நாடுகளும் (நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்) ரஷ்யாவும் பனிப்போர் காலத்தின் பின்னர் மீண்டும் பரம விரோதிகளாக மாறிவிட்டனர். உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கி ரஷ்யாவின் நிலப்பரப்பைத் தாக்கும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்துவது என்ற ரஷ்யாவின் அறிவிப்பை எவரும் வெறும் எச்சரிக்கையாக மாத்திரம் பார்க்கக்கூடாது.
இந்த நிலையில் ஜனவரி 20ந் திகதி ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் உக்ரைன் – ரஷ்யா மோதலை 100 நாட்களில் நிறுத்துவேன் என கூறினார். ‘ட்ரம்ப் இப்படித்தான் அடிக்கடி ஏதாவது சொல்வார்’ என்றே பலரும் இதனை பொருட்படுத்தாது கடந்து போய்க்கொண்டிருந்தனர். பின்னர் ட்ரம்பின் வழமையான பாணியில் ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசிவிட்டோம் என்று அவர் திடீரென்று ஊடகங்களுக்குத் தெரிவித்த செய்தி வெளிவந்தது.
ட்ரம்பின் அறிவிப்பினை ரஷ்யா உறுதிப்படுத்தினால் மாத்திரமே நம்பலாமென உலகம் முழுவதும் காத்துக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்கர் ஒருவர் ரஷ்யச் சிறையிலிருந்தும் ரஷ்யர் ஒருவர் அமெரிக்கச் சிறையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, ட்ரம்பும் புட்டினும் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும், உக்ரைன் – ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்தன. மேலும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பேற் ஹெக்செத் (Pete Hegseth) பிரஸ்ஸலில் (Brussels) வைத்து ரஷ்யா கைப்பற்றி வைத்துள்ள பகுதியையும் நேட்டோவில் சேரும் எண்ணத்தையும் உக்ரைன் கைவிட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இதனால் உக்ரைன் – ரஷ்யா மோதல் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு அருகில் கூட ட்ரம்ப் நிர்வாகம் இல்லை என்பது தெளிவானது. மேலும் இழப்புகளின் மத்தியிலும் ரஷ்யாவே ஒட்டுமொத்த வெற்றியை நோக்கிச் செல்வதால், நிரந்தரமான தீர்வுக்கு ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் இருந்து வரும் எதிலும் ரஷ்ய மக்களுக்கு பூச்சிய நம்பிக்கை இருப்பதாலும், உக்ரைனியர்கள் விருப்பமில்லாத பங்காளிகளாக இருப்பதாலும், பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மோதலைத் தொடர விரும்புவதாலும் ட்ரம்பின் நிர்வாகத்தின் முயற்சியை முன்னோக்கி நகர்த்துவது என்பது ஒரு பாரிய மலையை நகர்த்துவது போன்றதாகும்.
ட்ரம்பின் அண்மைக்கால கனடா, மெக்சிகோ வளைகுடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான மிகவும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை வரிசைப்படுத்தினால், ரஷ்யா-உக்ரைன் தொடர்பான அவரது நிலைப்பாட்டை எவரும் நேர்மறையாக பார்க்க முடியாது. எனினும் உக்ரைனுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி ரஷ்யாவிற்கு எதிராக மேற்குலக நாடுகள் நடத்திய நிழல் யுத்தத்தில் (proxy war) மேற்குலக நாடுகள் தோற்றுவிட்டதாக அவர் உணரலாம். அதனால் தோல்வியுற்ற தரப்பினர் வெற்றிபெற்ற தரப்பினரின் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லையென்ற கட்டத்திற்கு அவர் வந்திருக்கலாம். சவூதி அரேபியாவில் ட்ரம்பும் புட்டினும் சந்தித்து பேசவுள்ளனர். பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
-ஆசிரியர் தலையங்கம், வானவில் இதழ் 170
வானவில் இதழ் நூற்றெழுபதினை முழுமையாக வாசிப்பதற்கு: