ஆழ்துளைக் கிணறுகளால் முல்லைத்தீவுக்கு ஆபத்து!

ந.கிருஷ்ணகுமார்

Afbeeldingsresultaat voor ஆழ்துளைக் கிணறு படங்கள்"

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளையிலும், முள்ளியவளையின் புதரிக்குடாவிலும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இப்பகுதி பொது அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற போது, ஆழ்துளைக் கிணறுகளுக்கான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. முல்லைத்தீவு நகரம் மற்றும் அதனை அண்டிய கிராமங்களுக்கான குடிநீர்த் திட்டத்திற்கென உலக வங்கி உதவியுடன் வற்றாப்பளையில் இரு ஆழ்துளைக் கிணறுகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் அமைக்கப்பட்டன.

இக்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்ட போது, அதன் தாக்கம் இப்பகுதி மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் குறித்த குழாய்க் கிணறுகளில் இருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக பரீட்சார்த்தமாக நீரினைப் பெற்ற போதே அதன் தாக்கம் வெளிப்படத் தொடங்கியது.

வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் குடிநீர்க் கிணறு முற்றாக நீர் வற்றியதையடுத்து, பிரதேச சபையின் மூலம் குடிநீரைப் பெற்று மாணவர்களுக்கு வழங்கிய போதே இரு ஆழ்துளைக் கிணறுகளினால் ஏற்பட்ட பாதகமான தாக்கம் வெளிப்படத் தொடங்கியது.

வற்றாப்பளை, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளைச் சூழவுள்ள திறந்த கிணறுகளின் நீர் மட்டம் விரைவாக அடிநிலைக்குச் சென்றது. இதனையடுத்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு எதிரான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் மனுக்கள் மூலமும் நேரடியாகவும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரினால் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விடயங்கள் ஆராயப்பட்டன.

இக்குழுவில் இடம்பெற்றவர்கள், வற்றாப்பளையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர். வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, மாமூலை, தண்டுவான் வரையில் எதிர்காலத்தில் ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்தும் போது உவர்த் தன்மை பரவக் கூடிய நிலைமை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

முத்தையன்கட்டு குளம் உட்பட பெருமளவு நீர் நந்திக் கடல் வழியாக பெருங்கடலையைச் சென்றடையும் நிலையில் இப்பகுதியில் பொருத்தமான இடத்தில் நீர்த் தேக்கம் ஒன்றினை உருவாக்கி முல்லைத்தீவு நகரத்திற்கான குடிநீர் வழங்கலை மேற்கொள்ளலாம். அதனை விட முள்ளியவளை வடக்கில் இயற்கை ஊற்றுகள் கொண்ட குஞ்சுக் குளத்தினைப் பயன்படுத்தி குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்தலாம் என்ற விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆழ்துளைக் கிணற்றின் மூலம் தான் முல்லைத்தீவு நகரத்திற்கு குடிநீர் வழங்குவோம் என செயற்படுவதாக பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.

குறித்த திட்டத்தைத் தொடங்கும் போது கிராமங்களின் மக்களுடனோ பொது அமைப்புகளுடனோ கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை. ஆழ்துளைக் கிணறுகளினால் ஆபத்து உள்ளதன் காரணமாக குஞ்சுக் குளத்தை முல்லைத்தீவு நகரத்திற்கான நீர் மூலமாகப் பயன்படுத்தலாம்.

ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னைகள் அழிவடையும். முல்லைத்தீவு நகரத்திற்கான குடிநீர்த் திட்டத்திற்கு பொது அமைப்புகள் வலியுறுத்தும் குஞ்சுக் குளத்தினைப் பயன்படுத்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

-தினகரன்
2020.01.28

Tags: