பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: முன்பைவிட மோசமாகிறதா சூழல்?
-கோ.ரகுபதி

சமூக அங்கீகாரத்துடன் பெண்ணுடலில் நிகழ்த்தப்பட்ட குழந்தை மணம், பருவம் எய்தும்முன் பாலுறவு, விதவைக்கோலம், சதி போன்ற ஆணாதிக்கப் பண்பாடுகளை நவீனத்துவம் அசைத்தது. சென்னை மாகாணத்திலும் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் கிறிஸ்துவ மிஷனரி பெண்களின் சேவை, நவீனக் கல்வி, ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோர் ஆணாதிக்கத்தை உலுக்கினர். இச்சிக்கல்களைப் பெண் / பொதுப் பத்திரிகைகள் விவாதித்தன.
அரங்கநாயகி, அன்னபூரணி, நீலாம்பிகை, குஞ்சிதம், முத்துலெட்சுமி ரெட்டி, மீனம்பாள்சிவராஜ், பாலம்மாள், மகேஸ்வரி, ஜயலட்சுமியம்மாள், நாகலட்சுமியம்மாள், ரங்கநாயகி, ராஜேஸ்வரி அம்மாள், கிரிஜா, புதுவை ராஜலட்சுமி போன்றோர் முன்னணியில் செயல்பட்டனர். பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் இச்செயல்பாட்டை முழு வீச்சில் பரவலாக்கினர். பெண் கல்வி, தேவதாசி ஒழிப்பு, இணக்க வயது, காதல் மணம், விவாகரத்து, மறுமண விவாதங்கள் உக்கிரமாகின. ஆணாதிக்கத்துக்கு எதிரான ‘ஆண் மக்களல்லாதோர் மாநாடு’ உள்பட இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இச்செயல்கள் ஆணாதிக்கப் பண்பாட்டைச் சமூகக் கேடு என்றும், குற்றம் என்றும் இச்சமூகத்தை உணர வைத்தன. பிரிட்டிஷ்- இந்திய ஏகாதிபத்தியமும் அவற்றைக் குற்றமெனச் சட்டமாக்கியது. 1925 ஆம் ஆண்டு திருத்திய சட்டத்தின்படி மனைவியிடம் 13 வயதுக்குள் கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமெனக் கூறியது. ‘ஒருவன் எட்டு வயதுள்ள மனைவியை வாயில் துணியடைத்துப் பலாத்காரித்ததான வழக்கு விசாரணையிலுள்ளது’ என்ற ‘ஆனந்தகுணபோதினி’ (1926 நவம்பர்) செய்தியானது, ஆணாதிக்கப் பண்பாட்டைக் குற்றமாக்கியதற்குச் சாட்சி.
பாலினப் போர்: பிரிட்டிஷ்-இந்திய ஏகாதிபத்தியம் 1863 முதல் குற்றங்களைப் புள்ளிவிவரங்களாக ஆவணப்படுத்தியது. சென்னை மாகாணக் காவல் துறை ஆண்டறிக்கைகளின்படி 1878 முதல் 1888 வரை கொலை, தற்கொலை உள்படப் 10 வகைகளில் வன்முறையாலும் இயற்கைக்கு மாறாகவும் இறந்தவர்களை ஆண்கள், பெண்கள், ஆண்-பெண் குழந்தைகள் என வகைப்படுத்தி, மாவட்டங்கள் வாரியாகப் புள்ளிவிவரங்கள் பதிவுசெய்யப்பட்டன. இம்மாகாணத்தில் 1878 இல் 6,893 பெண்களும், 2,408 பெண் குழந்தைகளும் இறந்தனர்.
இவர்களில் நீரில் மூழ்கியும், விஷம் அருந்தியும், கொடிய ஆயுதங்களாலும், பிற வகையிலும் 1,697 பெண்களும் 49 குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாறு வகைப்படுத்திய விவரங்கள் 1898 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இல்லை. சென்னை மாகாணத்தில் 1919-1950 ஆண்டுகளில் சுமார் 32,000 பெண்களும் ஆண்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் காதல், பாலியல் உறவு தொடர்புடையவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தனியாக வகைப்படுத்தாதது பிரிட்டிஷ்-இந்தியக் காவல் துறையின் பெருங்குறைதான்.
சுதந்திர இந்தியாவின் தேசிய, மாநில காவல் துறைகளின் குற்றத் தரவுப் பணியகங்களின் ஆண்டறிக்கைகள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தனித்து வகைப்படுத்தின. இவ்வகையில், 1950களில் வகைப்படுத்தப்பட்ட ஆள்கடத்தல்தான் முதல் புள்ளிவிவரமாகும். சுதந்திரம் அடைந்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 1971 இல் பாலியல் வல்லுறவும், 48 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் வரதட்சிணைக் கொலைகள், துன்புறுத்தல்கள், பாலியல் தொல்லைகள், கணவரும் உறவினர்களும் ஏவுகின்ற கொடுமைகளும் குற்ற வகைமைகளாகச் சேர்க்கப்பட்டன.
இச்சமூகக் கேடுகள் 1920களிலேயே விவாதிக்கப்பட்ட போதிலும் அவற்றைக் குற்றங்கள் என வகைப்படுத்த 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், 1961 இல் நடைமுறைக்கு வந்தும்கூட அக்குற்றங்களை 1995 வரை கணக்கில் எடுக்கவில்லை. இதற்குக் காரணங்கள், ஆளும் வர்க்கத்தின் ஆணாதிக்கச் சிந்தனையும் பொதுச் சமூகத்தின் இயக்கமற்ற நிலையும் எனக் கருதலாம். இருப்பினும், தாமதமாக வகைப்படுத்தப்பட்ட இப்புள்ளி விவரங்கள் பெண்களின் நிலையை அறிய உதவுகின்றன.
ராஜஸ்தானில்தான் 1950களில் ஆள்கடத்தல்கள் நிகழ்ந்தன. இது அக்காலத்தில் பிற மாநிலங்களில் குறிப்பிட்டுக் கூறும்படியாக இல்லை. பின்னர்தான் இந்தியா முழுமைக்கும் பரவியது. உத்தரப் பிரதேசத்தில் 2020 இல் 12,913 பேரும் 2021 இல் 14,554, 2022 இல் 16,623 பேரும் கடத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் 2020 இல் 765, 2021 இல் 821, 2022 இல் 737 பேர் கடத்தப்பட்டனர். தமிழ்நாட்டுக் குற்றத் தரவுகளின்படி, பாலியல் வல்லுறவுகளும் வரதட்சிணைச் சாவுகளும் நூற்றுக்கணக்கிலும், பொதுவான துன்புறுத்தல்களும் கணவரும் உறவினர்களும் துன்புறுத்துவது ஆயிரக்கணக்கிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சென்னை நகரமே முன்னணியில் இருக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் கூடுதலான குற்றங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவான குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை ஒரு லட்சம் மக்கள்தொகைக்குக் கணக்கிட்டதாகத் தேசியக் குற்றத்தரவுகள் பணியகம் கூறுகிறது. அவ்வாறென்றால், மொத்த மக்கள்தொகைக்கும் கணக்கிட்டால் அவற்றின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அப்பெண்களின் சொந்தபந்தங்கள் எனக் குடும்பத்தினரும், நண்பர், சக பணியாளர் என நன்கறிந்தவர்களும் செய்கின்றனர். 2022ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில், நன்கறிந்தவர்கள் 419 பேரும், குடும்பத்தினர் 25 பேரும், உத்தரப் பிரதேசத்தில் நன்கறிந்தவர்கள் 3,507 பேரும், குடும்பத்தினர் 25 பேரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிற மாநிலங்களிலும் இத்தகைய குற்றங்களைச் செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்களை நன்கறிந்தவர்கள் கூடுதலாகவும், குடும்பத்தினர் குறைவாகவும் இருந்தனர். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழ்கின்றன. தமிழ்நாட்டுக்கு இணையாகவும் குறைவாகவும் நிகழ்கின்ற மாநிலங்களும் உண்டு.
அதேவேளை, வரலாற்றுரீதியாகக் கணக்கெடுத்தால் கொலைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிப்பதைக் காண முடிகிறது. கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளையும் மொத்தத் தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய அக்கால சென்னை மாகாணத்தில் 1863 முதல் 1868 வரை ஆண்டுதோறும் தோராயமாக 248 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், 2022 இல் மட்டும் தமிழ்நாட்டில் குழந்தைகள், யுவதிகள் உட்பட 423 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1877 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 150 ஆண்டுகளாகப் பல்வேறு வடிவங்களில் பெண்கள் மீது ஆணாதிக்கம் ஏவப்படுகின்ற புள்ளிவிவரங்களை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால், இதை ஆணாதிக்கத்தின் பாலினப் போர் என்று வரையறுக்கலாம்.

அம்பேத்கரும் ஆனந்தரும்: நிலவுடைமை, ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை ஒழிக்க பிரிட்டிஷ்-இந்திய சென்னை மாகாணத்தில் கிறிஸ்துவ மிஷனரி, பெரியாரிய, பெண்ணிய, பொதுவுடைமை, சாதி இயக்கங்கள், ஊடகங்கள் ஆகியோரின் பெண் விடுதலைச் செயல்பாடுகளின் விளைவுகள்தான் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்குக் காரணங்களாகும்.
அதேவேளை பாரம்பரிய ஒடுக்குமுறைகளுடன் மேற்கூறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி தனிநபர், கூட்டு வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல், வரதட்சிணைச் சாவு, தற்கொலைக்குத் தூண்டுதல், கணவரும் உறவினர்களும் வன்முறையை ஏவுதல், கருச்சிதைவு, அமில வீச்சு, பெண் குழந்தைகளை விற்றல், சமூக ஊடகங்களில் மார்பிங்கில் ஆபாசப் படமேற்றுதல் போன்ற நவீன, பின்நவீனக் குற்றங்களும் இணைந்துள்ளதால், சிக்கல்கள் வலுக்கின்றன.
சட்டங்களின்படி குற்ற வகைமைக்குள் இடம்பெறாத இன்னல்களையும் பெண்கள் அனுபவிக்கின்றனர். அவை பொதுவெளியில் விவாதத்துக்கு வருவதில்லை. சட்டங்கள் வகைப்படுத்திய குற்றங்களை அனுபவிக்கும் பெண்கள் அனைவரும் அதைப் புகார்களாகப் பதிவுசெய்வதில்லை. குற்றங்களைச் சமூகத்துக்கு உணர்த்திய நிலை மாறி, உள்ளுக்குள் அடக்கி அவற்றைச் சகித்துக்கொள்கின்றனர்.
தற்காலக் காவல் குற்றத் தரவுகளில், பாலியல் வல்லுறவை 6 வயதுக்குக் கீழ், 6-12, 12-16, 16-18, 18-30, 30–45, 45–60 வயதுகளுக்குள், 60 வயதுக்கு மேல் எனப் பிரித்துக் காட்டுவது – கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட – 8 வயதுள்ள மனைவி மீது கணவன் ஏவிய பலாத்காரத்தைவிட இழிவான நிலைக்குச் சமூகம் சறுக்குவதைக் காட்டுகிறது.
இவற்றைத் தடுக்கும் வழிகளைக் குறித்துப் பொதுச் சமூகம் விவாதிக்க வேண்டும். சித்த மருத்துவத்தை நிறுவனமாக்கிய எஸ்.எஸ். ஆனந்தம் பண்டிதர், பாலினக் கல்வியை வலியுறுத்தினார். 1928 இல் இணக்க வயதுக் குழுவில் அவர் முன்வைத்த, ‘விளைச்சலுக்கு முதிர்ந்த விதைகளையும், கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்குத் தக்க வயதையும் கணக்கில் கொள்வதைப் போல மனித வாழ்வும் மாற வேண்டும்’ என்கிற கோரிக்கையும், ‘நாட்டின் வளர்ச்சியைப் பெண்களின் முன்னேற்றத்திலிருந்து அளவிட வேண்டும்’ என்கிற அம்பேத்கரின் முறையியலும் தவிர்க்க இயலாத இக்காலத் தேவைகள்!