மோடி அரசு பாசிசமா இல்லையா? கம்யூனிஸ்டுகளுக்குள் ஏன் இந்த குழப்பம்?  

எஸ்.வி.ராஜதுரை

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக, பா.ஜ.கவின்  பிரதமர் வேட்பாளராக  நரேந்திர மோடி நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடனேயே ‘வாசல் படியில் பாசிசம்’ என்ற கட்டுரையை, இடதுசாரி ஏடான ‘புது விசை’  ஜனவரி 2014 இதழில் எழுதியிருந்தேன். அதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தேன். எனது நோக்கம், இந்தியாவிலுள்ள இடதுசாரிக் கட்சிகள், முற்போக்குச் சக்திகள் ஆகியன விழித்துக் கொண்டு பாசிசத்தை முறியடிப்பதற்கான செயல்தந்திரங்களை வகுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், எந்தக்  கட்சியையும் சேராத ஒரு சாமானிய மனிதன் எழுதிய கட்டுரை என்பதால் அக்கட்டுரையிலிருந்த செய்தி எந்த வட்டாரங்களுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவற்றுக்குப் போய்ச் சேர்ந்திருக்கவில்லை. எனினும், எனக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் சி.பி.ஐ கட்சியும் சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் கட்சியும் மோடி அரசாங்கத்தை பாசிசத்தின் இன்னொரு வகை என்று அடையாளப்படுத்தியுள்ளன என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அது என் கட்டுரையின் தாக்கத்தினால் அல்ல!

2014 ஜனவரியில் வெளிவந்த மேற்சொன்ன கட்டுரையிலுள்ள சில பகுதிகள் பின்வருமாறு: இராணுவம் போல செயல்படும் மோடி

பா.ஜ.கவின்  நாடாளுமன்ற விவகாரக் குழு மோடியைத் தனது  கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த இரு நாள்களுக்குப் பிறகு, அதாவது  2013 செப்டம்பர் 15 அன்று  முன்னாள் இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் நடத்திய பேரணியொன்றில் கலந்து  கொண்டார்.

முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் மோடியும் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். ‘பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் மீது இந்தியா மென்மையாக நடந்துகொள்வதை’ கண்டனம் செய்வதற்காக நடத்தப்பட்ட பேரணி அது.

2011 மார்ச் 14 அன்று அகமதாபாத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. ‘உங்கள் எதிரிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்பதுதான் அந்தக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெயர். அந்தக் கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல்களிலொருவரான ஐ.எஸ்.சிங்கா, குஜராத்தில் மோடி மேற்கொண்டு வரும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வெகுவாகப்  புகழ்ந்தார்.

‘மோடி தொலை நோக்குப் பார்வையுடையவர்’ என்று பாராட்டிய அவர், “நாங்கள் இராணுவத்தில் எவ்வாறு செயல்படுகிறோமோ, அவ்வாறே மோடி செயல்படுகிறார். அவர் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அந்தக் காலக்கெடுவிற்குள் குறியிலக்குகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்துகொள்கிறார். இராணுவத் தளபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளே இவை.

கோர்ப்பரேட்டுகளின் கதாநாயகர்

இராணுவத் தளபதிகளுக்குச் சிறிதும் சளைத்தவர்களல்லர் தொழில்துறைத் தளபதிகள் என்பதும் தெரியவந்தது. கோர்ப்பரேட், பன்னாட்டு முதலீடுகளைக் குஜராத்திற்குள் கொண்டுவருவதற்காக 2013 ஜனவரியில் அகமதாபாத்தில்  நடந்த உச்சி மாநாட்டில் (Vibrant Gujarat summit), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் முதன்மை நிர்வாக அதிகாரியும் (CEO) இந்தியாவின் பெரும் செல்வந்தர்களிலொருவருமான முகேஷ் அம்பானி, “சகோதரர் மோடி, மகத்தான தொலைநோக்குப் பார்வையுடையவர்” என்று பாராட்டினார். அவரது சகோதரரும் அனில் திருபாய் அம்பானி பிஸினஸ் குரூப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியுமான அனில் அம்பானி, இன்னொரு படி மேல் சென்று, மோடியை ‘அரசர்களின் அரசர்’ என்று வர்ணித்தார்.

மேலும், ’அர்ஜுனனைப் போன்ற பார்வையும் குறிக்கோளுமுடையவர் மோடி’ என்று புகழ்ந்து தள்ளினார். 1991 முதல் 2012 வரை டாட்டா குருப்பின் முதன்மை  நிர்வாக அதிகாரியாக இருந்த ரட்டன் டாட்டா,  குஜராத்தில் ‘முதலீடு செய்வதற்கான  அருமையான சூழல்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கு மோடியின் தலைமையே காரணம் என்றும்  இன்று முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைச் செய்வதற்கான மிகத் தோதுவான இடம் குஜராத் மாநிலம்தான் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதற்கான பெருமை முழுவதற்கும் உரியவர் மோடிதான்” என்றும் புகழ்ந்து தள்ளினார்.

ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் முன்னோடியான ஹிந்து மகா சபாவும் ஹிட்லரையும் முஸோலினியையும் தங்கள் ‘ஆதர்ச மனிதர்க’ளாக போற்றியதை மறக்க முடியாது.

ஊடகங்களின் கரசேவை!

இந்தியக் கோர்ப்பரேட் முதலாளிகளின் கூடவே, ஊடகங்களும் மோடிக்கான கர சேவையில் ஈடுபடத் தொடங்கின. மோடி கேட்கத்தொடங்குவதற்கு முன்பே அவருக்கு இலவச ஆலோசனைகள் வழங்கின.

’ஒவ்வொரு டீக்கடைக்காரனும் வாழ்க்கையில் முன்னேறி மேலே வரும் வகையில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தியதாக மோடியின் பிரசாரம் அமைய வேண்டும்’ என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 16.9.2013 இல் எழுதியது. ‘டீக்கடைக்காரனிலிருந்து முதலமைச்சர் வரை’ என்று அந்தப் பிரசாரத்திற்குப் பெயரிட வேண்டும் என்று அது கூறிய ஆலோசனையையெல்லாம் தாண்டி, “இந்தியாவிலுள்ள ஒவ்வொரு டீக்கடைக்காரரும் பிரதமராக வர வேண்டும்’ என்னும் தனது ஜனநாயக வேட்கையைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார் மோடி.

மோடிக்கு வலுவான ஆதரவு தருகின்றவர்கள் கோர்ப்பரேட் முதலாளிகள், கோர்ப்பரேட் ஊடகங்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள். நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை வரவேற்ற இந்தியக் கோர்ப்பரேட் சக்திகள், நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் உற்சாகத்தோடு வரவேற்றுள்ளன. பா.ஜ.கவின் வெற்றியோடு சேர்த்து பங்குச் சந்தைப் புள்ளிகளும் உயர்ந்தன.  

இந்தியத் தொழில், வர்த்தக முதலாளிகளின் முதன்மையான அமைப்பான ‘அஸ்ஸோகாம்’ (Associated Chambers of Commerce and Industry) கூறியது : “ மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவான செய்தியொன்றைக் கூறியுள்ளன. நிர்வாகத்தின் தன்மைதான் எல்லாவற்றிலும் முக்கியமானது என்பதுதான் அந்த செய்தி”.

மோடியை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக ஆக்கியது ஆர்எஸ்எஸ். எனவே மோடியின், பா.ஜ.கவின் அரசியல் திட்டங்கள் யாவும் ஆர்எஸ்எஸ்ஸாலேயே வகுக்கப்படும். இது கோர்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்துதான் அவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கோர்ப்பரேட் சக்திகள் மிக முக்கியப் பாத்திரம் வகிப்பர்.

பாசிசமா? பிரகாஷ் காரத் சொல்வது என்ன?

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஒன்றிய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை மோடி ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியாவில் பாசிச ஆட்சி தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்க மேலும் பல கட்டுரைகளை எழுதினேன்.  

ஆனால், அவற்றில் முக்கியமானது, ‘உயிர் எழுத்து’ ஒக்ரோபர் 2016 இதழில் வெளிவந்த ‘அரை பாசிசமா, முழு பாசிசமா’ என்ற கட்டுரை.அதற்குத் தூண்டுதல் தருவதாக இருந்தது  தோழர் பிரகாஷ் காரத் எழுதிய கட்டுரை.

மோடி அரசாங்கம் அமைந்துவிட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, அதாவது  6.9.2016 இல் அவர் எழுதிய ‘உங்கள் எதிரியை அறிந்து கொள்ளுங்கள்’ (Know Your Enemy)  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளிவந்தது. அதில் அவர் கூறியிருந்த முக்கிய கருத்துகள் பின்வருமாறு;

மோடி அரசாங்கம் வந்திருப்பது, நாட்டில் வலதுசாரி நவ –பொருளாதாரவாதத் தாக்குதல் விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. வலதுசாரி நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளும் பலவந்தத் தன்மைகொண்ட இந்ததுத்துவச் செயல் திட்டமும் இணைந்துள்ளதை இந்தத்  தாக்குதல் குறிக்கிறது.

இந்தியாவில் இன்று, இந்துத்துவக் கருத்தியல் ( ideology  என்ற ஆங்கிலச் சொல்/கருத்தாக்கம் என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் ‘கருத்துநிலை என்பதுதான். ஆனால் ‘கருத்தியல்’ என்ற சொல் மிக அதிகமாக புழங்கப்படுவதால் இங்கு நானும் அதையே பயன்படுத்துகிறேன்) வெறித்தன்மைகொண்ட தேசியவாதம் ஆகியவற்றின் கூட்டிணைப்பு மக்களை மத அடிப்படையில் எதிரெதிர் துருவங்களாகப் பிளவுபடுத்தி மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

மோடி அரசாங்கம் இந்துத்துவக் கருத்தியலையும் வெறிகொண்ட தேசியவாதத்தையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால் இவற்றை பாசிசம் என்று கருதக்கூடாது.

மோடி அரசாங்கம் வெளிப்படுத்துவது ‘எதேச்சாதிகாரமேயன்றி (‘authoritarianism) பாசிசம் அல்ல. இந்தியாவில் இன்று பாசிசம் நிறுவப்படவுமில்லை; அதை நிறுவுதற்கான நிலைமைகளும் – அதாவது  அரசியல், பொருளாதார நிலைமைகள், வர்க்க   நிலைமைகள் –  இல்லை.

மோடி அரசாங்கம், துருக்கியில் எர்ட்கான் தலைமையில் உள்ள அரசாங்கத்தை ஒத்ததுதான். ஆனால் இந்த இரண்டும் பாசிச அரசாங்கங்கள் அல்ல; மாறாக எதேச்சாதிகார அரசாங்கங்களே. அவற்றை வலதுசாரி எதேச்சாதிகாரம் என்று கூறலாமேயன்றி, பாசிசம் என்றல்ல.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க கூட்டிணைப்பை எதிர்க்க இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஆகியவை இணைந்த பரந்துபட்ட ஐக்கிய முன்னணி தேவை.

பாசிசமும் தேசியவாதமும்

இந்தக் கட்டுரை வெளிவந்த ஏறக்குறைய அதேசமயத்தில்தான் (2016இல்) மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைப் பற்றிய விவாதத்தின் போது சீத்தாராம் யெச்சூரி பேசுகையில் ”வளர்ந்து  வரும் சகிப்பின்மையும் தேசியவாதத்தைப் பயன்படுத்துவதும் 1930களில் ஐரோப்பாவில் பாசிசத்தை நிறுவுவதற்காக ஹிட்லர் தேசியவாதத்தைப் பயன்படுத்தியதை   நமக்கு அச்சமூட்டுகிற வகையில் நினைவூட்டுகின்றன” என்று கூறினார்.

ஆக, சிபிஐ (எம்) கட்சித் தலைமைக்குள் மோடி அரசாங்கத்தை பாசிசம் என்று வரையறுப்பதில் கருத்து முரண்பாடு இருப்பது தெரியவந்தது.

அப்போது பிரகாஷ் காரத் மேற்கொண்ட  நிலைப்பாடு பின்வரும் கருத்துகளைக் கொண்டிருந்தததாகச் சொல்லப்பட்டது :

”கருத்தியல் என்ற வகையிலும்  ஆட்சி  வடிவம் என்ற வகையிலும் பாசிசம் 20ஆம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கிடையில் தோன்றியது. முதலாளித்துவ அமைப்பு ஆழமான நெருக்கடியால்  சூழப்பட்டும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திடமிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுமிருந்தபோது, ஜெர்மனியின் ஆளும் வர்க்கங்கள் பூர்ஷ்வா ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் அதிதீவிர ஆட்சி வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. முஸோலினியின் இத்தாலியும் ஜப்பானும்கூட பாசிச ஆட்சிகள்தாம்”.

இதே காலகட்டத்தில் ஸ்பெயினிலும் போர்ச்சுகல்லிலும் தோன்றிய பாசிச ஆட்சி முறைகளும் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு  ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய பாசிசமும் இங்கு குறிப்பிடப்படவில்லை (இவை யாவும் ஜெர்மன் பாசிசத்திற்கு அடிமை சேவகம் புரிந்தவை)

பாசிசம் என்றால் என்ன?

பாசிசம் பற்றி உலகிலுள்ள கம்யூனிஸ்டுகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறையொன்றை அவர் மேற்கோள் காட்டினார்:

”(அதிகாரத்தில் உள்ள) பாசிசம் என்பது  நிதி மூலதனத்தின் மிகப் பிற்போக்கான, மிகப்பெரும் தேசியவெறியுடைய, மிகவும் ஏகாதிபத்தியத்தன்மையுடைய கூறுகளின் வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்”.

அவர் மேலும் கூறினார்:

”இந்தியாவில் இன்று பாசிசம் நிறுவப்படவுமில்லை,  பாசிச ஆட்சியை நிறுவுவதற்கான அரசியல், பொருளாதார, வர்க்க நிலைமைகளும் இல்லை. முதலாளிய அமைப்பு தகர்ந்து விழும் வகையில்  அதனை அச்சுறுத்துகின்ற நெருக்கடி ஏதும் இல்லை; ஆளும் வர்க்கங்கள், தமது வர்க்க ஆட்சிக்கு சவாலிடுகின்ற எதனையும் எதிர்நோக்கவில்லை. பூர்ஷ்வா  ஜனநாயக அமைப்பைத் தூக்கியெறிய ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவும் தற்போது வேலை செய்துகொண்டிருக்கவில்லை.

ஆளும் வர்க்கங்கள் முனைவதெல்லாம், தங்கள் வர்க்க நலன்களுக்கு சேவை புரிவதற்காக எதேச்சாதிகார (authoritarian) வடிவங்களைப் பயன்படுத்துவதுதான்”.

மேலும், “இந்தியாவில் இன்று, மக்களை மத  அடிப்படையில் எதிரெதிர் துருவங்களில் நிற்க வைப்பதற்காகவும் மதச் சிறுபான்மையினரைத் தாக்குவதற்காகவும் இந்துத்துவக் கருத்தியலும் வெறித்தன்மை கொண்ட தேசியவாதமும் பயன்படுத்தப்படுகின்றன… அரசு நிறுவனங்களின் மூலம் மேலே இருந்தும், இந்துத்துவப் படைகளின் மூலம் கீழே இருந்தும் இந்துத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்தையும் அரசியல் அமைப்பையும் மாற்றியமைப்பதற்குத் தீர்மானகரமான  முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது …

இந்த நடவடிக்கைகளெல்லாம், ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள போதிலும், அவை தம்மளவிலேயே பாசிச அமைப்பை நிறுவக்கூடியவை அல்ல”.

பாசிசத்தை நோக்கி…

தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாகச் சொல்லப்பட்ட கருத்து பின்வருமாறு:

“பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு முன், பூர்ஷ்வா அரசாங்கங்கள் ஏராளமான பூர்வாங்கக் கட்டங்களைக் கடந்து சென்று, ஏராளமான பிற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இவை பாசிசம் ஆட்சிக்கு வருவதற்கு நேரடியாக வழிவகை செய்கின்றன”.

இருவரது  கருத்துகளும், ’மூன்றாம் அகிலம்’ என்று சொல்லப்படும் ‘கம்யூனிஸ்ட் அகிலத்’தின் (Communist International-Comintern)  செயற்குழுவில் (Executive Committee) , பல்கேரியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜி டிமிட்ரோவால் வரையறை செய்யப்பட்டு, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே பரவலாகச் சுற்றுக்கு விடப்பட்டதும் 1935 ஆம் ஆண்டு நடந்த அந்த அகிலத்தின் சர்வதேச மாநாட்டில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டதுமான அறிக்கையில்  ‘பாசிசம்’ பற்றித் தரப்பட்டிருந்த வரையறையை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டவை.

கடைசியில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘இண்டியா கூட்டணி’ என்ற ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான கூட்டணி அமைந்தது, சிபிஐ (எம்) கட்சியில் சீத்தாராம் யெச்சூரியின் கருத்து மேலோங்கியிருந்ததைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறினர். அந்தத் தேர்தல் நடந்த இரண்டாண்டுக்கு முன் 2022ஏப்ரலில் சி.பி.ஐ (எம்) கட்சியின் 23ஆவது காங்கிரஸ் நடந்தது. அப்போது சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

அதில்  நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்களில் இரண்டை இப்போது பார்ப்போம்:

தீர்மானம் எண் 01 இன் பகுதி:

”The period since the 22nd Congress has seen the further consolidation of the BJP, which being in government is aggressively pursuing the Hindutva communal agenda of the fascistic RSS”.

(சிபிஐ (எம்) கட்சியின்) 22ஆவது காங்கிரஸுக்குப் பிந்திய காலகட்டத்தில், பா..., அரசாங்கத்தில் இருந்துகொண்டு, பாசிச ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவ வகுப்புவாதச் செயல்திட்டத்தை தீர்மானகரமாகவும் வலுக்கட்டாயமாகவும் கடைப்பிடித்து வருவதன் காரணமாக மேலும் வலுப்பட்டுள்ளது.

தீர்மானம் 2.1

“The nearly four years of the Modi Government has led to the onset of a right-wing authoritarian-communal regime. This regime is characterised by an intensified pursuit of neo-liberal policies, resulting in all round attacks on the working people; the concerted effort to implement the RSS’s Hindutva agenda which threatens the secular democratic framework of the State, accompanied by attacks on the minorities and dalits; a reinforcement of the strategic alliance with the United States and playing the role of a subordinate ally; and building the architecture of authoritarianism by curbing parliamentary democracy, subverting constitutional institutions and democratic rights.” (2.1)

”கிட்டத்தட்ட நான்காண்டுக் கால மோடி அரசாங்கம் ஒரு வலதுசாரி எதேசாதிகார-மதவாத ஆட்சி முறையின் தொடக்கத்துக்கு வழிவகுத்தது. இந்த ஆட்சியின் தனித்தன்மை (characteristic) என்பது: உழைக்கும் மக்கள் மீது அனைத்துவகையான தாக்குதலுக்கு வழிவகுக்கும் வகையில் நவ-தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்தல்; அரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பை அச்சுறுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ செயல் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு தீர்மானகரமான, ஒழுங்கமைக்கப்பட்ட, தீவிரமான முயற்சியை மேற்கொள்ளுதல்.

இத்துடன் கூடவே சிறுபான்மையினர் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல்களை நடத்துதல். பொதுக் குறிக்கோள்களுக்காகவும் பரஸ்பர நலன்களுக்காகவும்  அமெரிக்காவுடனான கூட்டணியை வலுப்படுத்திக்கொள்ளும் அதே வேளை அமெரிக்காவுக்குக் கீழ்ப்படிந்துள்ள பாத்திரத்தை வகித்தல்;

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு வரம்பிட்டு, அரசமைப்புச்சட்டரீதியான நிறுவனங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் குழிபறித்து எதேச்சாதிகாரத்தின் கட்டுமானத்தை எழுப்புதல்”.

2.2  ”Since then, there has been the intensification of the above right wing offensive. However, with the return of the Modi government with a larger number of seats and vote share began the aggressive furthering of the Hindutva communal agenda of the fascistic RSS. What is unfolding, particularly, in the post 2019 period is on the lines laid down in our Party Programme: The Bharatiya Janata Party is a reactionary party with a divisive and communal platform, the reactionary content of which is based on hatred against other religions, intolerance and ultra-nationalist chauvinism. The BJP is no ordinary bourgeois party as the fascistic Rashtriya Swayamsevak Sangh guides and dominates it. When the BJP is in power, the RSS gets access to the instruments of State power and the State machinery. The Hindutva ideology promotes revivalism and rejects the composite culture of India with the objective of establishing a Hindu rashtra.” (7.14)

2.2. அப்போதிருந்து மேலே குறிப்பிட்ட வலதுசாரித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. முன்பைவிடக் கூடுதலான  பாஜக நாடாளுமன்ற  உறுப்பினர்களுடனும் முன்பைவிடக் கூடுதலான வாக்கு விகிதத்துடனும் மீண்டும் ஏற்படுத்தப்பட்ட  மோடி அரசாங்கம் பாசிச ஆர்,எஸ்.எஸ்.-இன் மதவாத செயல்திட்டத்தை வலுக்கட்டாயமான முறையில் வளர்ச்சியடையச் செய்யத் தொடங்கியது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலகட்டத்தில் படிப்படியாக வெளிப்பட்டு வருபவை  நமது கட்சித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஒத்ததாகவே உள்ளன.

அதாவது: ” பாரதிய ஜனதாக் கட்சி, மக்களைப் பிளவுபடுத்துகின்ற, மதவாதக் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது, இந்துக்கள் அல்லாத மற்ற மதங்கள் மீதான வெறுப்பு, சகிப்பின்மை, அதிதீவிர தேசிய வெறி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதுதான் அதன்  பிற்போக்குத் தன்மையாகும் .

பா.ஜ.க சாதாரணமான முதலாளியக் கட்சி அல்ல.  ஏனெனில் அது  பாசிச ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கால் வழிநடத்தப்பட்டும் ஆதிக்கம் செலுத்தப்பட்டும் வருகின்ற கட்சியாகும். ஆட்சியில் பா.ஜ.க இருக்கும்போது, அரசு அதிகாரம், அரசுப் பொறியமைவு ஆகியவற்றுக்குள் ஆர்.எஸ்.எஸ் நுழைந்துகொள்கிறது.

இந்துத்துவக் கருத்தியல், மீட்புவாதத்தை ஊக்குவிப்பதுடன் ஓர் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை நிராகரிக்கிறது. (7.14)

“The threat to the secular foundations has become menacing with the rise of the communal and fascistic RSS-led combine and its assuming power at the Centre. Systematic efforts are on to communalise the institutions of the State, the administration, the educational system and the media. The growth of majority communalism will strengthen the forces of minority communalism and endanger national unity. The support of sections of the big bourgeoisie for the BJP and its communal platform is fraught with serious consequences for democracy and secularism in the country.” (5.7)

மதச்சார்பற்ற அஸ்திவாரங்களுக்கான அச்சுறுத்தல்!

”மதவாத மற்றும் பாசிச ஆர்.எஸ்.எஸ்.அமைப்பால் வழிநடத்தப்படும் கூட்டமைப்பு ஏற்றம் பெற்று ஒன்றியத்தில் அதிகாரத்துக்கு வந்தள்ளதன் காரணமாக மதச்சார்பற்ற அஸ்திவாரங்களுக்கான அச்சுறுத்தல் பீதி தரக்கூடிய வகையில் ஏற்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், நிர்வாக அமைப்பு, கல்வி முறை, ஊடகங்கள் ஆகியவற்றை மதத்தன்மையாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பான்மை மதவாதத்தின் வளர்ச்சி, சிறுபான்மை மதவாதச் சக்திகளை வலுப்படுத்தி தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பெருமுதலாளி வர்க்கத்தின் சில பிரிவுகள் பாஜகவுக்குத் தரும் ஆதரவும் அக்கட்சியின் மதவாதச் செயல்திட்டமும் நமது நாட்டின் ஜனநாயகத்துக்கும் மதச்சார்பற்றதன்மைக்கும் கவலை தரக்கூடிய பாரதூரமான பின்விளைவுகளைக் கொண்டுள்ளன.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சிபிஐ (எம்) கட்சிக்குள் மோடி அரசாங்கத்தின் தன்மை பற்றிய விவாதங்கள் நடந்து வந்தன. அப்போதும்கூட மோடி அரசாங்கத்தை ‘பாசிச அரசாங்கம்’ என்று  சிபிஐ (எம்) கூறவில்லை. எனினும், 2024  ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது சீத்தாராம் யெச்சூரியின் நிலைப்பாடு மேலோங்கி,  காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கிய  இண்டியா கூட்டணி உருவாயிற்று.  

யெச்சூரியின் மறைவும் கம்யூனிஸ்ட் கட்சியின் விவாதங்களும்!

தோழர் சீத்தாரம் யெச்சூரியின் மறைவு, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடையே தோழர் பிரகாஷ் காரத்தின் கருத்துகளுக்கு மாறான கருத்துகளை வலுவாக முன்வைக்ககூடிய ஒரு சாத்தியப்பாட்டை  இல்லாமல் செய்துவிட்டது.

தோழர் பிரகாஷ் காரத் எழுதிய  ‘உங்கள் எதிரியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற கட்டுரை வெளிவந்து  கிட்டத்தட்ட எட்டாண்டுகளாகின்றன (சரியாகச் சொல்வதென்றால்  ஏழரை ஆண்டுகளாகின்றன.) மோடி அரசாங்கத்தின் ஆட்சி  கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அந்த அரசாங்கத்தின் தன்மை பற்றி தற்போது சிபிஐ (எம்) கட்சியின் வரையறையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள,அக்கட்சியின் 24ஆவது காங்கிரஸில் விவாதிக்கப்படவிருக்கும் அரசியல் தீர்மானங்களின் அறிமுகத்தின் தொடக்கப் பத்தியைப்  பார்ப்போம்( தமிழாக்கங்கள் யாவும் அக்கட்சியால் செய்யப்பட்டவை) :

பத்தி 0.1

“கட்சியின் 23வது காங்கிரசுக்குப் பிந்தைய காலகட்டம், மோடி அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்கிற இந்துத்துவ-கார்ப்பரேட் ஆட்சியின் சக்திகளுக்கும், அதனை எதிர்த்த மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளுக்கும் இடையே வளர்ந்து வந்த போராட்டத்தினால் குறிக்கத்தக்கதாக உள்ளது”

 பத்தி 2.20:

”இந்துத்துவத்தை அரச சித்தாந்தமாக்குவதற்கும், மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்குமான ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு பின்பற்றப்பட்டு வருகிறது என்பதற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் போதுமான சான்றுகளையும் ஆதாரத்தையும் வழங்குகின்றன”.

பத்தி 2.69:

”பா.ஜ.க: பாசிசத் தன்மை  கொண்ட  ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் முன்னணியாக உள்ள பா.ஜ.க, கடந்த பத்து ஆண்டுகளில், பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. அது பெருமுதலாளி-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் முதன்மையான பிரதிநிதியாகி அந்த வர்க்கங்களின் ஆதரவை, குறிப்பாக பெரும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இந்துத்துவ சித்தாந்தத்தின் செல்வாக்கும், கார்ப்பரேட் கூட்டணியும் இணைந்து முன்னெப்போதும் காணாத பணபலத்தையும், ஊடக பலத்தையும்  பயன்படுத்திக் கொண்டு தனது வலதுசாரி தளத்தை பாஜக வலுப்படுத்திக் கொண்டுள்ளது”

அரசியல் நிலைப்பாடு என்ற தலைப்பின் கீழுள்ள பத்தி 2.85:

”சுமார் பதினொரு ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார சக்திகள் நவீன பாசிச குணங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்திருப்பதைக் காட்டுகிறது. மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது.  எனவே, நமது பிரதான கடமை என்பது ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதற்கு அடித்தளமாக இருக்கும் இந்துத்துவா/கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பை எதிர்த்துப் போராடி முறியடிப்பதேயாகும்”. ( இங்கு ‘neo-fascistic characterestics’  என்பதுநவீனபாசிசத் தனித்தன்மைகள்என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரிட்டானியா அகராதியில்  characterestics என்ற சொல்லுக்கான பொருள்:  a special quality or trait that makes a person, thing, or group different from others.)

இந்தியாவிலுள்ள அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி சிபிஐ (எம்) கட்சியின் 23 ஆம் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே மோடி அரசாங்கத்தை பாசிசம் என வரையறுப்பதற்குப் போதுமானவை.  ஆனால், கெடுவாய்ப்பாக அப்படி வரையறை செய்யப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க, மோடி அரசாங்கத்தை  ‘நவீன-பாசிச அரசாங்கம்’ என்று  கட்சி அணிகள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று கருதிய அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் (polit beareu)  ஒருங்கிணைப்பாளராக இப்போது பணியாற்றிவரும் தோழர் பிரகாஷ்  காரத் கட்சியின் மாநிலக் குழுக்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

காரத்தை குறைக்கும் பிரகாஷ் காரத்  

அதில் அவர் மோடி அரசாங்கத்தை நவீன பாசிச அரசாங்கம் என்று சொல்லக்கூடாது; மாறாக, நவீன-பாசிச அம்சங்களை அல்லது போக்குகளைக் கொண்ட அரசாங்கம் என்றுதான் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும், நவீன-பாசிச  அம்சங்கள் அல்லது போக்குகளை எதிர்த்துப் போராடி தோற்கடிக்காவிட்டால்  மோடி அரசாங்கம் நவீன-பாசிசமாக மாறும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்.

ஆனால்அவர், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாசிசத்தின் தன்மைகளையும், அவற்றிலிருந்து இப்போதுள்ள நவீன பாசிசம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் விளக்குகையில் இன்னொரு புதிய விஷயத்தைக் கொண்டுவருகிறார்: ”

இந்தியாவில் உள்ள நவீன-பாசிசத்தை  ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் இந்துத்துவக் கருத்தியல் ஆகியவை வடிவமைக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாசிசத்தன்மை கொண்டது என்றும் அது , பா.ஜ.க.வின் ஆட்சியில்  அரசியல் அதிகாரத்தின் உறுப்புகளை தன்  செல்வாக்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்திக் கொள்கிறது  (exercise the levers of power) என்றும் நமது கட்சித் திட்டம்  கூறுகிறது.

மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் இந்துத்துவக் கருத்தியல், நவ தாராளமயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, பெருமுதலாளிகளுக்கு சேவை புரிவதற்காக மக்கள் மீது  செலுத்தப்படும் எதேச்சாதிகாரத் திணிப்பு  ஆகியவை அனைத்துமே நவபாசிசத்தின் மூல முதல் வடிவத்தின்  கூறுகளாகும்” ( ingredients of a proto neo-fascism).

தோழர் பிரகாஷ் காரத், நவ-பாசிசத் தனித்தன்மை பற்றியும் ஒரு அது எவ்வாறு பழையவகை (ஜெர்மானிய, இத்தாலிய) பாசிசங்களிலிருந்து வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் விளக்கிவிட்டு , பின்னர் ’நவ-பாசிசம்’ என்பதற்குப் பதிலாக ‘நவ-பாசிசத்தின் மூல முதல் வடிவம்’ என்ற கருத்தை முன்வைக்கிறார்.

மோடி அரசாங்கத்தை ‘பாசிசம்’  என வரையறுக்கக்கூடாது என்று 2016ஆம் ஆண்டிலிருந்தே சொல்லி வந்த அவர் கட்சியின் 24 ஆவது காங்கிரஸில் விவாதிக்கப்படவுள்ள தீர்மானம், ”சுமார் பதினொரு ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார சக்திகள் நவீன பாசிச குணங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்திருப்பதைக் காட்டுகிறது” என்று கூறுவதற்குப் புதுவிளக்கம் கொடுக்கிறார்.

அதாவது  மோடி அரசாங்கம், நவீனபாசிச அம்சங்கள் அல்லது போக்குகள் கொண்ட அரசாங்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். பிறகு அதையும் மறுதலித்துவிட்டு நவீனபாசிசத்தின் மூல முதல்வடிவத்தின்  கூறுகள் என்கிறார்.

பாசிசத்தை வரையறுப்பதில் ஏன் குழப்பம்? மதுரை மாநாடு தீர்வு சொல்லுமா?

ஏன், இந்தக் குழப்பம்? இந்தியாவிலுள்ள மோடி அரசாங்கத்தை ‘பாசிசம்’ என்று சொல்லக்கூடாது, ‘எதேச்சாதிகாரம்’ என்றேதான் சொல்ல வேண்டும் என்று 2016 முதல் விடாப்பிடியாக வாதாடி வந்த  தோழர் கடைசியில்  ’நவீன-பாசிசத்தின் மூல முதல் வடிவத்தின் கூறுக’ளுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் நடக்கவிருக்கும் 24 ஆவது  காங்கிரஸில் இந்தக் குழப்பத்திற்குத் தீர்வு காணப்படக்கூடும்.

இது ஒருபுறமிருக்க ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளையும் செயல்களையும் எதிர்த்து சிபிஐ (எம்) கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளும்  நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில்   ’பாசிச மோடி அரசு ஒழிக’ (அரசாங்கமும் அரசும் ஒன்றல்ல என்றாலும்  பொதுவாக அரசாங்கத்தை அரசு என்று அழைக்கின்ற பழக்கம் வேரூன்றி விட்டது) என்று இனி முழக்கமிட முடியாது;

’நவ பாசிசத்தை நோக்கிச் செல்லும் போக்குகளை அல்லது அம்சங்களைக் கொண்ட மோடி அரசே’ என்றோ, அல்லது ‘நவீன-பாசிசத்தின் மூலவடிவத்தின் கூறுகளைக் கொண்ட மோடி அரசு ஒழிக’ என்றோ முழக்கமிட வேண்டும்.

Tags: