தாராளவாதம் பின்வாங்கிக் கொண்டிருக்கும் சகாப்தத்தில் பாசிசம்!
–ஷிவசுந்தர் (SHIVASUNDAR)

இந்தியாவில் இன்றுள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல்களில் பா.ஜ.கவை எதிர்க்கலாம். ஆனால், இந்திய பாசிசத்தின் பார்ப்பனிய, கோர்ப்பரேட் அடிப்படைகளை எதிர்ப்பதில்லை.
பாசிசத்திற்கோ அல்லது இது போன்ற கருத்தியலுக்கோ குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் அது தோன்றுவதற்கான சில தனித்தன்மைகள் உள்ளன. ஆனால், உலகுதழுவிய பாசிசங்கள் பல உள்ளன. அதற்குக் காரணம், பாசிசம் தோற்கடிக்கப்பட்டதா என்ற விவாதத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் ழான் – பவுல் சார்த்தர் (John-Paul Sartre) கூறியதுபோல பாசிசக் கருத்தியல், பாசிச இயக்கம், பாசிச ஆட்சிமுறை ஆகியவற்றைத் தோற்றுவித்த சமூக – பொருளாதார நிலைமைகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன.

1925 இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ்., உலகில் இன்று மிக நீண்டகாலமாகவே இருந்துவரும் பாசிச இயக்கங்களில் ஒன்றாகும். பாசிசம் பற்றிய உலக வரலாறு, பாசிசக் கட்சியோ, பாசிச அமைப்போ ஒரு பாசிச இயக்கத்தின் மூலமே இருந்து வருகிறது என்றும், சமுதாயத்தையும் அரசமைப்பு முறையையும் பாசிசத்தன்மையாக்குவதில் வெற்றியடைவதன் மூலமே அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்றும் கூறுகிறது. அதாவது, கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மட்டுமின்றி மனிதர்கள் மீதும் அவர்களது உடைமைகள் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜனநாயக விழுமியங்களை ஒழித்துக் கட்டுவதாகும்.
சமூக நெருக்கடிகள், மோதல்கள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் முதலாளியப் பொருளாதார நெருக்கடியால் துன்புறுகிற சமுதாயங்களிலும் பாசிசம் தோன்றுவது சாத்தியம்.
நரேந்திர மோடியின் தலைமையின் கீழுள்ள பா.ஜ.க அரசாங்கம், தன் சொந்த பலத்தை மட்டுமே கொண்டு 2014 ஆம் ஆண்டு அரசாங்க அதிகாரத்துக்கு வந்தது. மக்களை மிகவும் பிளவுபடுத்துகின்ற செயல்திட்டத்துடன், அது 2019 இல் நடந்த தேர்தலில் மேலும் வலுவான தீர்ப்பைப் பெற்றபோது, இந்தியாவின் இடதுசாரி மற்றும் முற்போக்கு வட்டாரங்களில் பாரதூரமான விவாதங்கள் எழுந்தன. இந்தியாவில் இப்போதுள்ள ஆட்சியதிகாரத்தின் பாசிசத் தன்மையைக் குவிமையப்படுத்தி, அதைத் தோற்கடிப்பதற்குத் தேவையான மூலோபாயங்கள் பற்றிய விவாதங்களே அவை.
அந்த விவாதங்கள், அதிதீவிர வலதுசாரிக் கொள்கையால் உத்வேகம் பெற்றுள்ள மோடி ஆட்சியை , கடந்த காலத்தில் இருந்த பாசிசம் போன்றது என அழைக்கலாமா, அல்லது நவ-பாசிசம் என்றோ அல்லது இந்திய பாசிசம் என்ற புதிய வகை என்றோ அழைக்கலாமா என்ற பிரச்சினையைச் சுற்றியே நடந்தன. ஆகவே, பாசிசத்தின் இந்திய வடிவம், அதனுடைய அலாதியான தன்மை, அதற்கும் கடந்த காலத்தில் இருந்த பாசிசங்களுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அது தோன்றுவதற்கான காரணம், அது அடைந்துள்ள வளர்ச்சி, அதனுடைய வரலாற்றுரீதியான வடிவங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியம்.
மனிதர்கள் மீது மூர்க்கத்தனமான வன்செயல்களை செய்யும் எதேச்சதிகாரத்தன்மை கொண்ட அரசாங்கங்களையும் அமைப்புகளையும் ”பாசிச” என்று முத்திரையிடும் போக்கொன்று உள்ளது. இது பாசிசம் என்பது மூர்க்கத்தனமான அரசு ஒடுக்குமுறைதான் என்ற பொதுவாகவே தவறாகப் புரிந்து கொள்வதற்கு வழி வகுத்தது.
பாசிசம் என்பது மூர்க்கத்தனம் மட்டுமேயானது அல்ல
பாசிசம் என்பது அடிப்படையிலேயே ஜனநாயகத்திற்கும் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கும் எதிரானது. அது எதேச்சாதிகார ஆட்சி மட்டுமல்ல. அது “மக்களின் ஆதரவுடனும் அவர்களது ஈடுபாட்டுடனும்” நிலவுகின்ற ஆட்சி முறையாகும். அது மூர்க்கத்தனமும் வெறுப்பும் கொண்ட ஒரு மாற்று நாகரிகமாகத் தோன்றுகிறது.
இந்த நாகரிகத்தில் உலக முதலாளியப் பொருளாதாரத்திற்குள்ளிருந்தே – அதுவும் குறிப்பாக முதலாளிய ஜனநாயகங்களைப் பொருளாதார நெருக்கடிகள் அச்சுறுத்தும்போது அவற்றுக்கு எதிர்வினையாக மக்கள் ஏற்றுக்கொள்கின்ற சொல்லாடலாக- அதிதீவிர தேசியவாதம் தோன்றுகிறது.

ரோஜர் கிரிஃபின் (Roger Griffin) தனது தலைசிறந்த படைப்பான ‘பாசிசத்தின் இயல்பு’ (The Nature Of Fascism) என்ற நூலில் கூறுகிறார்: “பாசிசம் என்பது ஓர் அரசியல் கருத்தியல். அது ஒரு கலாசார நம்பிக்கை அமைப்பைக் கொண்டிருக்கிறது. அந்தக் கலாச்சார நம்பிக்கையின் அடிப்படையாக இருப்பது பல்வேறு மாற்றங்கள், வடிவங்கள் ஆகியவற்றின் ஊடாக இருந்துவரும் அதீத தேசியவாதத்தின் ஒரு வடிவமான தேசியப் புத்துயிர்ப்பு என்ற கருத்து ஆகும்”.
ஆக, பாசிசம் என்பதை தனியொரு கட்சியாகவோ, அமைப்பாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வன்முறை நிகழ்வாகவோ குறுக்குவது, அதனுடைய உண்மையான அபாயத்தைக் கிரகித்துக் கொள்ளத் தவறுவதாகும். மேலும் இப்படித் தவறுவது, பாசிசத்துக்கு எதிரான வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளை வலுக்குன்றச் செய்யும்.
வேறு சகாப்தங்களிலும் நாடுகளிலும் இருந்த பாசிசம்
வரலாற்று ரீதியாக, மனிதகுலம் முதன் முதலில் எதிர்கொண்ட பாசிச அச்சுறுத்தல், இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் முஸ்ஸோலினியின் தலைமையின் கீழ் இருந்த பாசிசமாகும்.
அதுவும் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் இருந்த ஆட்சியும் பாசிசத்தின் பழம்பெரு வடிவத்திற்கான (Classical) எடுத்துக்காட்டுகள். இவற்றுக்கு அப்பால் ஃப்ராங்கோவின் ஆட்சியின் கீழ் 1939 முதல் 1975 வரை ஸ்பெயினிலும் ஸலாசரின் ஆட்சியின் கீழ் போர்ச்சுகல்லிலும், மற்றும் பல்வேறு இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் பாசிசத்திற்கு ஆதரவு கிடைத்தது.
முதல் உலகப் போரை அடுத்து ஏற்பட்ட பெருங்கேடான பொருளாதார நிலைமைகளும் தாராளவாத முதலாளிய அரசாங்கங்கள் எவற்றைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் தவறியதும், பாசிச சக்திகள் தலையெடுப்பதற்கான பரிபூரணமான நிலைமைகளை வழங்கின.
பாசிச ஆட்சிமுறைகள், ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதற்குப் பதிலாக, தம் தேசியவாத, இனவாதக் கருத்தியல்களை சோசலிச சொற்ஜாலத்துடன் ஒன்று கலந்தன. எடுத்துக்காட்டாக நாஜி கட்சி, பெயரளவில் ‘தேசிய சோசலிசக் கட்சி’ என்றழைக்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகள், ஆட்சி மறுப்பியர்கள் (anarchists) உள்ளிட்ட சோசலிச இயக்கங்கள் தொழிலாளி வர்க்கத்திடையே குறிப்பிடத்தக்க வலிமையை அடைந்து கொண்டிருந்தது மட்டுமின்றி, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உள்ளுறை ஆற்றலைக் கொண்டிருந்த நிலைமைக்கான எதிர்வினையாகத்தான் அது அப்படி அழைக்கப்பட்டது.

1918 ஆம் ஆண்டு இரஷியப் புரட்சியின் வெற்றியின் காரணமாக, சர்வதேச சோசலிச, கம்யூனிச இயக்கங்கள் முதலாளியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகின. அந்த நிலைமையில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்த ஆளும் வர்க்கங்கள் – சோசலிச அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த தாராளவாத ஜனநாயகத்தை சார்ந்திருக்க இயலாமல் போய், பாசிச சக்திகளைத் தீவிரமாக ஆதரித்தன.
அந்த பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்தவுடன், கம்யூனிஸ்டுகளையும் சோசலிஸ்டுகளையும் அதீதமான வன்முறையைக் கொண்டு நசுக்கினர். அவர்களது ஆட்சியின் கீழ் முதலாளியம் வளர்ந்தோங்குவதற்காக, தங்கள் அணிகளுக்குள் இருந்த முதலாளிய –எதிர்ப்பாளர்களையும் கூட ஒழித்துக்கட்டினர்.
எடுத்துக்காட்டாக, ஹிட்லர், யூத-விரோத, கம்யூனிச-விரோதக் கருத்தியல்களையும் அறிவாளிகளையும் சிந்தனையாளர்களையும் எதிர்க்கும் கருத்தியல்களையும் முக்கியமான தேசிய விழுமியங்களாக ( National Values) ஆக்கி, படுமோசமான இன அழிப்புக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் வழிவகுத்தான்.
பாசிசத்துக்கு உடந்தையாக இருந்த தாராளவாத ஜனநாயகம்
ஹிட்லர் தங்களது தேசங்களையே அச்சுறுத்தும்வரை, ’தாராளவாத ஜனநாயக அரசாங்கங்கள்’ என்று சொல்லப்படுவனற்றைக் கொண்டிருந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தொடக்கத்தில் ஹிட்லரின் பாசிச ஆட்சியை ஆதரித்து வந்தன. இறுதியில், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பாசிச எதிர்ப்பு புரட்சிகர இயக்கங்களின் ஆதரவுடன் பாசிசத்தைத் தீர்மானகரமான முறையில் தோற்கடித்தது சோவியத் செஞ்சேனைதான்.
நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட போதிலும், ஆயிரக்கணக்கான பாசிசப் போர்க் குற்றவாளிகளை மேற்கு நாடுகளும் அர்ஜெண்டினாவும் பாதுகாத்து அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கின. முதலாளிய ஆளும் வர்க்கங்களுக்கு, சோசலிச சவால்களை எதிர்கொள்வதற்கான ‘சேம அரசியல் கருவியாக’ (reserve political tool) பாசிசம் இருந்து வருகின்றது.

இன்றைய பாசிசம்: இந்தியாவிலுள்ள அலாதியான வடிவம்
இந்தியா உள்பட உலகம் இப்போது மீண்டும் ஒரு கடுமையான பாசிச அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. பாசிசம் பற்றிய வரலாறு பல பாடங்களைக் கற்பிக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இன்றைய இந்தியாவிலுள்ள குறிப்பிட்ட பாசிசத்தின் தனித்தன்மைகளையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயக சமுதாயத்தை நாசப்படுத்தி ஒடுக்குமுறைத் தன்மை கொண்ட, எதேச்சாதிகார ஆட்சியை மக்கள் ஆதரவுடன் கோர்ப்பரேட் மூலதனத்துக்கு சேவை புரிதல் என்பது பாசிசத்தின் சாராம்சம். ஆக, பாசிசம் என்பது மாற்றமடையாமல் இருக்கும்போதிலும், அதனுடைய வெளித் தோற்றம் நாட்டுக்கு நாடும் சகாப்தத்துக்கு சகாப்தமும் வேறுபடுகின்றது.
ஆகவே, ஒரு நாடு பாசிச நாடாக ஆகிவிட்டதா என்பதைத் தீர்மானிக்க நாம் அதன் சாராம்சத்தின் மீது கவனம் குவிக்க வேண்டுமேயன்றி அதன் வடிவத்தின் மீதல்ல.
இந்திய பாசிசம் பழம்பெரும் (classical)பாசிசத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இந்தியா இன்று அதி தீவிர வலதுசாரி ஆட்சியால் நிர்வகிக்கப்படுகின்றது என்றாலும், அது ஜனநாயகத்தின் சாராம்சத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு ஜனநாயகக் கட்டமைப்புகளையே பயான்படுத்துகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த ஐரோப்பா போலன்றி, இன்றைய உலகம் பல கட்சிகள் இயங்கும் முதலாளிய ஜனநாயகங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. ஆயினும், இந்தியாவில் ஜனநாயகம் என்பது எப்போதுமே ஆழமாக வேரூன்றியுள்ள பார்ப்பனிய சாதிப் படிநிலை அமைப்பின் மீதான மேலோட்டமான பூச்சாகவே இருந்து வந்துள்ளது.
மட்டுமீறிய சமூக ஒடுக்குமுறையையும் வன்முறையையும் செலுத்துகின்ற சாதி அமைப்பு இப்போது ”இந்து நாகரிகம்”, ”ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு வன்முறை” ஆகியவற்றின் பிரிக்க முடியாத பகுதியாகியுள்ளது.
இது தவிர,1991 முதல் இந்தியாவின் ஆளும் வர்க்கம் தழுவிக்கொண்ட நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் பரவலான சமூக, பொருளாதாரத் துன்பங்களை விளைவித்துள்ளன. இந்த நெருக்கடி, பாசிச சக்திகள் அதிகாரத்திற்கு வருவதை அனுமதித்தது. ஆனால் இது இந்தியாவில் மட்டுமே உள்ள நிகழ்வுப்போக்கு அல்ல. உலகம் முழுவதிலும் பல முதலாளிய ஜனநாயகங்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமல் போனதன் காரணமாக, எதேச்சதிகாரங்களாக மாறியுள்ளன.

ஆகவே, இந்தியாவிலும் இதேபோன்ற பாசிச சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் அது இன்னும் முழுமையான பாசிச நாடாக மாறவில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள். அதன் பொருட்டு அவர்கள் பின்வரும் காரணங்களைச் சொல்கிறார்கள்:
1. ஜனநாயகம் இன்னும் முற்றிலுமாகத் தகர்க்கப்படவில்லை.
2. பாசிச சக்திகள் அல்லாத கட்சிகளும் நிறுவனங்களும் இன்னும் பாசிசத்தை எதிர்த்து நிற்கின்றன.
3. பாசிச சக்திகள் இன்னும் அதிகாரத்தை முழுமையாகத் திரட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், இந்திய பாசிசம் அதிதீவிர – தேசியவாதத்திற்கு முக்கியத்துவமும் அழுத்தமும் கொடுப்பதாலும், அது இந்திய அரசமைப்பு, சமுதாயம் ஆகியவற்றில் ஊடுருவுவதில் வெற்றிகள் அடைந்துள்ளதாலும், சமகால உலகத்தில் அது மிக வெற்றிகரமான பாசிச இயக்கமாக உள்ளது.
ஆனால், இந்தியாவிலுள்ள ஆட்சி அமைப்பு பாசிசமாக மாறிவிட்டதா? எப்போது இந்த ஆட்சியை முழுமையான பாசிச ஆட்சி என்று சித்தரிக்க முடியும்? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஹிட்லரும்கூட 1933 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த போதிலும் அவன் ஜனநாயக விரோத, பாசிசக் கொள்கைகளைக் கட்டம் கட்டமாகத்தான் நடைமுறைப்படுத்தினான்.
’பாசிசம் எவ்வாறு செயல்படுகிறது’ என்ற தனது புகழ்பெற்ற நூலில் ஜேசன் ஸ்டான்லி (Jason Stanley), கற்பனையான, பொற்காலம் போன்ற ஒரு கடந்தகாலம் பற்றிய நிறுவன ரீதியான பரப்புரை, பொய்மை, அறிவாளிகள் மீதும் அறிவுத்தேடல்களின் மீதும் காட்டப்படும் எதிர்ப்பு, மேல்-கீழ் வரிசையில் சமுதாயத்தைக் கட்டமைத்தல், தாங்கள் ஏதொவொன்றால் பாதிக்கப்பட்டதாகவோ பலியாகிவிட்டதாகவோ சமுதாய உறுப்பினர்களை நம்பச் செய்தல் ஆகியனவாகும்.
யூதர்களை ஒட்டுமொத்தமாக மடகாஸ்கர் நாட்டுக்கு அனுப்பிவிடுவதுதான் ‘யூதப் பிரச்சினை’க்குத் தீர்வு என்பது நாஜிகள் 1938 வரை கொண்டிருந்த திட்டமாகும். ஆனால் அசாதாரணமான இரண்டாம் உலகப் போர்ச் சூழலில்தான், யூதர்களைப் பூண்டோடு அழிக்கும் இறுதித் தீர்வை நாஜிகள் கடைப்பிடித்தனர்.
ஆக சமுதாயத்தையும் அரசமைப்பையும் பாசிசமயமாக்குதல் என்பது அரசு அதிகாரம் கைப்பற்றப்பட்ட பிறகு படிப்படியாக வளர்ச்சியடைந்துவரும் நிகழ்முறைதான். ஆகவே, சமுதாயத்தையும் அரசமைப்பையும் பாசிசம் கையகப்படுத்துவது முழுமைபெற்றுவிட்ட கட்டம் என்று எதையும் நாம் திட்டவட்டமாகக் கூறிவிட முடியாது. இருப்பினும், அரசு யந்திரத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் பாசிச அதிகாரத்தின் தொடக்க முனை.
பாசிச அரசாங்கமா அல்லது பாசிச ஆட்சி முறையா?

ஆயினும் மோடி அரசாங்கம் பாசிசமா இல்லையா என்ற விவாதத்தில் எழுப்பப்பட வேண்டிய பொருத்தமான சில கேள்விகள் உள்ளன. அதாவது, பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உள்ளுறை ஆற்றல் இந்திய ஜனநாயக அரசியலுக்கு உள்ளதா? பா.ஜ.க அல்லாத “மதச்சார்பற்ற” கட்சிகள், இயல்பாகவே “பாசிச எதிர்ப்புக்” கட்சிகளாகத் தொடர்ந்து இருக்குமா? பெரும் பாசிச-எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்குதற்கு இந்திய அரசியலுக்கான உள்ளுறையாற்றல் இன்னும் உள்ளதா? என்பதுதான் அந்தக் கேள்விகள்.
21 ஆம் நூற்றாண்டு பாசிசம் அல்லது நவ பாசிசம் என்பது முதலாளியத்தில் ஏற்படுள்ள நெருக்கடி, ஜனநாயகத்தின் பின்வாங்கல் என்ற யதார்த்த நிலைமையில் வளர்ச்சி பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இரு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் பாசிசம் தோன்றிய நாடுகளில் இருந்த அரசியல் கட்சிகளில் இடதுசாரிக் கட்சிகளும் ஓரளவு சோசலிசக் கருத்துகளைக் கொண்ட, ஆனால் இடதுசாரிகள் அல்லாத கட்சிகளும் (left of the centre) இருந்தன. அவை அரசு அதிகாரத்தை பாசிசம் எடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
ஆனால் 1991 ஆம் ஆண்டுக்குப் பிந்திய நவ-தாராளவாத ஒழுங்கமைப்பில், ஓரளவு சோசலிசக் கருத்துகளைக் கொண்டிருந்த கட்சிகளும்கூட வலதுசாரித் திசைக்கு இடம் பெயர்ந்தன. ஆக, இந்திய பாசிஸ்டுகளுக்கு, தாராளவாத அரசமைப்புச் சட்டத்தையோ, தாராளவாதக் கட்சிகளையோ களையெடுப்பதற்கோ, ஒழித்துக்கட்டுவதற்கோ உடனடித் தேவை இல்லை.
இப்போதிருப்பது 21 ஆம் நூற்றாண்டு நவ பாசிச அரசியல் சூழலாகும். ஆக, இந்திய பாசிசத்தால், தேர்தல் முறையைக் கடைப்பிடிக்கும் ஜனநாயகத்துடன் – அதன் சாராம்சத்தை அடிப்படையிலேயே மாற்றி அமைத்து – சகவாழ்வு நடத்த முடியும். கோர்ப்பரேட் மூலதனம், பார்ப்பனிய சமூகக் கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் கூடவே பா.ஜ.கவால், பெயரளவுக்கான ஜனநாயகக் கட்டமைப்பை தக்கவைத்துக் கொண்டே அக்கட்டமைப்பின் ஜனநாயகத் தன்மையை அழிக்க முடியும்.
தாராளவாத ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்களும்கூட, நெருக்கடிக் காலங்களில் பாசிசத்துடன் அணி சேர்ந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். இந்தியாவில் இன்றுள்ள முதன்மையான அரசியல் கட்சிகள் பா.ஜ.கவைத் தேர்தலில் எதிர்க்கின்றன. ஆனால் இந்திய பாசிசத்தின் பார்ப்பனிய மற்றும் கோர்ப்பரேட் அடிப்படைகளுக்கு எதிராகப் பெரும் முயற்சியுடன் போராடுவதில்லை.
எனவே, இப்போதுள்ள ‘ஜனநாயக’ அமைப்புக்குள் பாசிசத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் போராட முடியும் என்ற நம்புவது நிலைமையை சரியாக மதிப்பிடுவது அல்ல. தாராளவாதக் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு அல்லது முரண்பாடு பா.ஜ.கவுடன்தானேயன்றி, நவதாராளவாதம், பார்ப்பனிய இந்துத்துவம் ஆகியவற்றுக்குக் காட்டும் எதிர்ப்போ அல்லது முரண்பாடோ அல்ல. மறுபுறம், தாராளவாதக் கட்சிகள் என்று சொல்லப்படுபவையும்கூட தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாசிசத்தன்மை வாய்ந்த சமுதாய. பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் அதேவேளை பாசிச சட்டங்களைக் கொண்டுவர நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரிப்பதற்கும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
ஆகவே, பா.ஜ.கவைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்றாலும், மாற்று அரசியல் சக்திகளால் தகர்க்கப்படும் வரை ஆட்சிமுறை பாசிசத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
இந்தியாவில் பாசிச எதிர்ப்பு போராட்டம் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:
இந்து தேசியவாதத்திற்கு ஊட்டம் அளித்துவருவதும், ஆழமாக வேரூன்றியுள்ளதுமான சாதிய ஒடுக்குமுறையைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கும் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம்.
பாசிசத்தைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டம்; அதாவது, கோர்ப்பரேட் மூலதனத்துக்கு எதிரான போராட்டம்.
இது சமுதாயத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் ஆகியோரால் தலைமைத் தாங்கப்படுவதும் உழைக்கும் வர்க்கம் முன்னணியில் இருப்பதுமான போராட்டமாக இருக்க வேண்டும்.

யூதர்களைக் கொன்றுகுவித்த பேரழிவு (Holocaust) என்பது ஓர் அதீதமான பாசிச நடவடிக்கையாகும். ஆனால் இனக்கொலை பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள அமெரிக்க அறிஞர் கிரிகொரி ஸ்டான்டன் (Gregory Stanton) இப்போது இந்தியா ’இனக்கொலை அவசரநிலைகாலத்’தினூடே (Genocide Emergency) சென்று கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். எந்தவொரு சமுதாயத்திலும் பாசிசம் பெருமளவுக்கான மக்கள் கொல்லப்படும் கட்டத்தை அடைவதற்கு முன் பத்து கட்டங்களில் இனக் கொலை நடக்கும் என்று கூறுகிறார். அவை பின்வருமாறு:
வகைப்படுத்துதல் : குறிப்பிட்ட மக்கள் பிரிவினை ‘மற்றவர்கள்’ என்று வரையறை செய்தல்.
அடையாளப்படுத்துதல் : குறிப்பிட்ட மக்கள் பிரிவினருக்கு ஓர் அடையாளத்தைச் சூட்டுதல்.
பாரபட்சம்: குறிப்பிட்ட மக்கள் பிரிவினரைத் திட்டமிட்டு விலக்கிவைத்தலும் அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதும்,
அமைப்பாக்குதல் : இந்தப் பாரபட்சத்தை அரசாங்கத்தின் கொள்கைகளாகக் கட்டமைத்தல்.
மக்களைப் பிளவுபடுத்துதல் : சமுதாயத்திலுள்ள பிரிவினையை ஆழப்படுத்துதல்.
ஆயத்தப் பணிகள்: வன்முறைக்கான முன்னேற்பாடுகளைச் செய்தல்.
ஒடுக்குதல்: சட்டரீதியான ஒடுக்குமுறையும் அரசு வன்முறையும்.
பூண்டோடு ஒழித்தல்: ஒரு சமூகப் பிரிவினரை ஒட்டுமொத்தமாகக் கொன்றழித்தல்.
மறுப்புத் தெரிவித்தல்: ஒரு சமூகப் பிரிவினரைக் கொன்றழித்தற்கான தடயங்கள், சான்றுகள் ஆகியவற்றை அழிப்பதும் அந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்களை மூடிமறைத்தலும்.
மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா இந்தப் பத்துக் கட்டங்கள் அனைத்தினதும் ஊடாகத் துரிதமாகச் சென்று கொண்டிருக்கிறது. முழு அளவிலான இனக்கொலை இதுவரை நடக்கவில்லை என்றாலும் சமுதாயத்தைப் பாசிசத்தன்மையாக்குவது நடந்து கொண்டிருக்கிறது: முஸ்லிம்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்குதல்; தலித்துகளையும் சூத்திரர்களையும் விளிம்பு நிலைக்குத் தள்ளுதல்; ஜனநாயக நிறுவனங்களைப் படிப்படியாக அழித்தல்.
இந்திய பாசிசமும் அதைக் கடந்து செல்வதும்
இந்தியாவில் இப்போது நிலைத்து நிற்கும் ஒரு பாசிசத்தைப் பார்க்கிறோம். அது சாதி அமைப்பின் வழியாகவும் சம்பிரதாயத்துக்கான ஜனநாயகத்தின் வழியாகவும் பாசிச விழுமியங்களை சுவீகரித்துக் கொண்டு, சமுதாயத்தில் ஆழமாக ஊடுருவியுள்ளது. அதைத் தோற்கடிக்க வேண்டுமானால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிலைத்து நிற்கிற , சோசலிசப் போராட்டம் தேவை.
இந்தப் போராட்டத்தை மேட்டுக்குடி எதிர்க்கட்சிகளால் வழிநடத்த முடியாது; மாறாக பார்ப்பனிய மேன்மை, கோர்ப்பரேட் முதலாளியம் ஆகியவற்றிற்கு எதிரான வேர்க்கால மட்ட இயக்கத்தாலேதான் முடியும். அப்போதுதான் இந்திய பாசிசம் சென்றுகொண்டிருக்கும் பாதையை நேரெதிராகத் திருப்ப முடியும். எந்தவொரு பாசிச எதிர்ப்பு அரசியல் முன்னெடுப்பும், ஏமாற்றம் தருகிற மேல்தட்டுச் சக்திகளின் பா.ஜ.க எதிர்ப்புக் கூட்டணியை அமைப்பதாக அன்றி உண்மையான, பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக் கட்டுவதாக இருக்க வேண்டும்.
குறிப்பு:
தாராளவாதம், தாராளவாத அரசாங்கம் என இக்கட்டுரையில் கூறப்படுபவை சுருக்கமாகச் சொல்வதென்றால் அவை முறையே முதலாளிய ஜனநாயகம், முதலாளிய ஜனநாயக அரசாங்கம் ஆகியவற்றைக் குறிக்கும். கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், இதழியலாளரும் களப்பணியாளருமான ஷிவசுந்தர் (SHIVASUNDAR) ‘தி ஒயர்’ மின் நாளேட்டில் 24.3.2015 அன்று எழுதிய Indian Fascism in the era of Liberal Retreat என்றகட்டுரையின் தமிழாக்கம்.
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை