பொருளாதார போர்: உலக வர்த்தக மையம் என்ன செய்கிறது?

-எம்எஸ்

மெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியதுடன், உலக வர்த்தகத்தையே உலுக்கியுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது. அமெரிக்காவை பாதுகாக்கப் போகிறேன் என்ற பெயரில் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அமெரிக்க பங்குச் சந்தை 8 டிரில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சரிந்து அந்நாட்டு முதலீட்டாளர்களை நஷ்டமடையச் செய்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியைவிட மூன்று மடங்கு அதிகம். பொருளாதார வளர்ச்சியடைந்த அமெரிக்கா பின்விளைவுகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் எடுத்துவரும் நடவடிக்கைகள் அமெரிக்கர்களுக்கு மட்டு மின்றி உலக மக்களுக்கும் எதிராக அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், உலகம் முழுக்க பொருளாதார மந்தநிலை இருந்தபோது, உலகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் உலக வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Tariffs and Trade – GATT) 1947 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 23 நாடுகள் அப்போது கையெழுத்திட்டன. நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு இடையூறாக உள்ள வரிவிகிதம், மானியம் உள்ளிட்டவற்றை களைந்து உலக வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

இந்தியாவும் இதில் சேர முயன்றபோது எதிர்ப்புகள் கிளம்பின. வர்த்தக ஒப்பந்தம் நீண்ட விவாதங்களுக்குப் பின் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization – WTO) என 1995 இல் உருமாறியபோது, அதில் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவும் இணைந்தது.

அப்போது உலகில் சராசரியாக இருந்த 22 சதவீதம் வரி 5 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்ததால், நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் அதிகரித்தது. பல்வேறு உலக நாடுகளுக்கு வர்த்தகம் மேற்கொண்டதன்மூலம் இந்தியாவும் பலனடைய முடிந்தது. தற்போது உலக வர்த்தக மையத்தில் 164 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவ்வளவு போராட்டங்கள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவுக்கு அமெரிக்காவின் நடவடிக்கை இருப்பது உலக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை கடந்த சில தினங்களாக பெரும் சரிவைச்சந்தித்திருப்பது பொருளாதார மந்தநிலைக்கான முதற்கட்ட அறிகுறி என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக மையத்தில் சீனா வழக்கு பதிவு செய்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடி, அமெரிக்கா துவக்கி வைத்துள்ள வர்த்தகப் போருக்கு உடனடியாக முடிவுகட்டுவது அவசியம். அதன்மூலம் இன்றைய காலகட்டத்தில் தனிநாட்டை விட உலக நாடுகளின் வளர்ச்சி முக்கியம் என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்த வேண்டும்.