தரையில் தவழத் துடிக்கும் திமிங்கலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க! வானில் பறக்க விரும்பும் வான்கோழி அ.இ.அ.தி.மு.க!!
-ராஜன் குறை

சென்ற வாரம் தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் பரபரப்பான ஒரு வாரம். திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒரு மகத்தான தருணத்தை சட்டப் போராட்டத்தின் மூலம் செதுக்கியது. அதுதான் ஆளுனர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்கு கடிவாளமிட்டு, கூட்டாட்சி, மக்களாட்சி விழுமியங்களை உறுதி செய்த தருணமாகும்.
சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை, சட்டங்களை ஆளுனர் கால வரம்பின்றி கிடப்பில் போட முடியாது என்பதையும், சரியான காரணங்களின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதும், குடியரசுத் தலைவர் காலம் கடத்துவதும் தவறானது என்றும் கூறி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. இது மட்டுமன்றி திராவிட மாடல் அரசின் சிறப்பான செயல்பாட்டிற்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பதை புள்ளி விவரங்கள் கூறியுள்ளன.
இந்த செய்திகள் ஒரு புறம் மக்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்ய, மற்றொருபுறம் வேறு சில பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. திரைப்படங்களில் கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் அனைவரும் காத்திருக்க எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேறுவதைப் போல ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னைப் பயணக் காட்சிகள் அரங்கேறின. அவரை யாரெல்லாம் சந்திப்பார்கள், என்.டி.ஏ கூட்டணி கட்டியமைக்கப்படுமா, பா.ஜ.க மாநிலத் தலைவர் தேர்தலில் என்ன நடக்கும் என பலத்த யூகங்கள், இழுபறிக்களுக்கு இடையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கடந்த சில ஆண்டுகளாக அகில இந்திய ஊடகங்களால் ஆற்றல் வாய்ந்த இளம் தலைவர் என்று கடுமையாக பிம்பக் கட்டமைப்பு செய்யப்பட்ட அண்ணாமலை பதவி விலகினார். புதிய தலைவருக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டாலும், ஒருவருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கபடாத நிலையில் உட்கட்சி ஜன நாயகத்தின் உன்னத உதாரணமாக நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தி அவசரமாக உறுதி செய்யப்பட்டதும், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வர, அவரை அருகில் அமர வைத்துக்கொண்டு அமித்ஷா அ.இ.அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியை அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும்படி பணித்தார்.
எடப்பாடியும் அவருக்கு பழக்கமான விதத்தில் பணிவுடன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமித் ஷாவின் ராஜதந்திரம் என்று சிலர் புல்லரிக்க, சிலர் எடப்பாடி கறாராக அண்ணாமலை அகற்றப் படவேண்டும் என்று கூறியதில் தன்னுடைய வலிமையைக் காட்டிவிட்டார் என்றனர். அமித் ஷா ஏதோ கூட்டணி ஆட்சி என்று சொன்னதாகத் தோன்றியது. மொழிபெயர்த்த ஸ்ரீகாந்த் கருணேஷ் கூட்டணி ஆட்சி என்று உறுதிப்படச் சொன்னார். எடப்பாடி எதுவும் சொல்லவில்லை. ஒரு திரைப்பாடலில் வருவது போல “பேச்சுவார்த்தை முடிந்தும் கூட்டணி அறிவிக்கலாம், கூட்டணி அறிவித்துவிட்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம்” என்றுதான் தெரிகிறது.
உடனே விவாதங்கள் தொடங்கி விட்டன. எடப்பாடியை கூட்டணிக்குக் கொண்டுவந்ததில் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் வெளிப்பட்டதா, அல்லது அண்ணாமலை நீக்கம், ஓபிஎஸ் இணைப்புத் தவிர்ப்பு ஆகியவற்றை சாதித்ததில் எடப்பாடியின் பேர வலிமை வெளிப்பட்டதா என்று, மொத்தத்தில் இரண்டு தரப்புமே மகிழ்ச்சியில் இல்லை என்பதுடன், இரண்டுமே அவர்கள் உண்மையாக விரும்பியபடி அரசியலில் பயணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

தரைக்கு வந்த திமிங்கலம் பாஜக!
திமிங்கலம் பெறும் ஆற்றலுள்ள உயிரிதான். கடலில் அதனை எதிர்கொள்வது பெரும் சவால். அதனால்தான் எதிர்ப்பட்டவர்களை விழுங்கிச் செரிக்கும் ஆற்றல் மிக்க சக்திகளை திமிங்கலம் என்று வர்ணிப்பது உண்டு. அத்தகைய திமிங்கலத்தால் தரையில் தவழ்ந்து வர முடியாது. அது போல தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் பாஜக வேறு பல மாநிலங்களில் நுழைந்தது போல நுழைய முடியாது. அதற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னால் பாஜகவின் பலம் ஆரிய மாயை; தமிழ்நாட்டு அரசியலோ ஆரிய மாயை இருளை பகுத்தறிவு என்ற உதய சூரியனின் கதிர்களால் முற்றிலும் விலக்கிய திராவிடப் புலம்.
ஆரியம், திராவிடம் என்றால் பலருக்கும் குழப்பம். அது இனவாதமா, உண்மையில் அப்படியெல்லாம் இனங்கள் இருந்தனவா என்றெல்லாம் கேள்விகள். இதற்கான விடை எளிமையானது. சமஸ்கிருதம் பேசிய மக்கள் உருவாக்கிய பண்பாடு ஆரியம். அதன் முக்கியமான அம்சம் நால் வர்ண அடுக்குகளை கொண்ட சமூகம். மனு சுமிருதி முதலிய சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்களை பார்ப்பனர்கள் எழுதி உருவாக்கி பரப்பியதால், அவர்களே பூசாரிகளாகவும், அரசாங்கத்தை வழி நடத்தும் அமைச்சர்களாகவும் விளங்கியதால் அத்தகைய ஏற்றத்தாழ்வு படிநிலை சமூக சிந்தனை பார்ப்பனீயம் என்றும், ஆரியம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆரியத்திற்கு மாற்றான திராவிடப் பண்பாடு என்பதன் அடையாளமாக தென்னிந்திய மொழிக்குடும்பமும், அதன் சீரிய வெளிப்பாடுகளாக தொல் தமிழ் இலக்கியமும் இருந்ததால் இங்கே பன்னெடுங்காலமாக தொடர்ந்து வந்த பூசக எதிர்ப்பு மரபின் தொடர்ச்சியாக பார்ப்பனரல்லாதோரின் திராவிட இயக்கம் தோன்றியது.
எல்லா இறையியல் வகைகளிலும், மதநெறிகளிலும் தமிழ்நாட்டில் தனித்துவமிக்க தடங்கள் இருந்தன. தமிழ் பெளத்தம், தமிழ் ஜைனம், அஜீவகம், தமிழ் சைவம், தமிழ் வைணவம் என்று தனித்தன்மை கொண்ட பண்பாட்டு வளம் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனால் வட நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அரசியல் அடையாளமாக இந்து மதம் கட்டமைக்கப் பட்டதைப் போல தமிழ்நாட்டில் நிகழ வேண்டிய அவசியமும் இருக்கவில்லை; சாத்தியமும் இருக்கவில்லை. பிற நெறிகளைப் போலவே தமிழ் இஸ்லாம் என்பதும், தமிழ் கிறுஸ்துவம் என்பதும் கூட தனித்த அடையாளங்களை வளர்த்துக்கொண்டன. அதனால் இந்த பன்மைத்துவ பண்பாட்டு விளைநிலத்தில் பார்ப்பனீயத்தின் ஏற்றத்தாழ்வு நோக்கை எதிர்த்த, புராண கற்பனைகளை விமர்சித்த பகுத்தறிவு மரபு சுலபத்தில் வேர்பிடித்து வளர்ந்தது.
இவ்வாறெல்லாம் நீண்ட கால வரலாறு கூறுவதால் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் நவீன தமிழ் சமூகம் உருவாகியதன் முக்கியத்துவத்தை மறந்துவிடக் கூடாது. இங்கே காலனீய எதிர்ப்பு அரசியல் என்பதே தனிப்பட்ட தமிழ் பண்பாட்டின் வழியேதான் உருவானது. காந்தியைப் பாடிய நாமக்கல் ராமலிங்கம்தான் “தமிழன் என்றோர் இனமுண்டு/ தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று பாடினார். நீதிக்கட்சிதான் தமிழ்நாட்டில் உருவான குடிமைச் சமூக அமைப்பு. சுயமரியாதை இயக்கம்தான் தமிழ் குடியரசுத் தத்துவத்தின் அடித்தளம். அண்ணாவின் எழுத்துக்கள்தான் தமிழ் மக்களாட்சி அரசியலின் கொள்கைக் கருவூலங்கள். கலைஞர்தான் நவீன தமிழ்நாட்டின் அரசியல் சிற்பி. இதையெல்லாம் வரும் கால ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்.
எப்படி மராத்தியத்தில் உருவாகி வட நாட்டில் பரவிய இந்துத்துவ அரசியல் அடையாளம், “இந்தி, இந்து, இந்தியா” என்ற முழக்கம் தமிழ்நாட்டிற்கு அந்நியமானதோ, அதே போல தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதோர் திராவிட இயக்கம் என்பது வட நாட்டினருக்கு புரியாத புதிராக இருப்பதைக் காண முடியும். அதனால்தான் திமிங்கலம் தரைக்கு வர விடாது முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டது, வளர்கிறது என்றெல்லாம் கூறப்படுவது புதிதல்ல. ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். எண்பதுகளிலேயே என்னிடம் பலர் கூறியுள்ளார்கள்; பாஜக வேகமாக வளர்கிறது என்று. எங்கோ வளர்ந்த செடிகளை பிடுங்கி வந்து இங்கே நடலாம்; ஆனால் வேர் பிடிக்காது. இந்த மண் அதற்கானது அல்ல. வட மாநிலங்களில்கூட பாஜக வெற்றி நிரந்தரமானதல்ல. தெற்கிலிருந்து சூரிய ஒளி அங்கும் பரவும் காலம் விரைவில் வரும்.
ஜெயலலிதா மறைந்தவுடன் பா.ஜ.கவின் தலைமைக்கு ஒரு பேராசை தோன்றியது. எப்படியாவது அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து பலவீனப்படுத்திவிட்டுத் தாங்கள் அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்று. இதைச் செயல்படுத்த ரஜினிகாந்த்தை நிர்பந்தித்தார்கள். அவர் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். பின்னர் அவருக்காக கொண்டுவரப்பட்ட அண்ணாமலையை அதிரடி தலைவராக்கினார்கள். என்னென்னவோ செய்து பார்த்தார்கள். எதுவும் எடுபடவில்லை. அண்ணாமலை மும்மொழிக் கல்வி ஆதரவு மாநாடெல்லாம் போட்டார். இப்போது திடீரென்று மீண்டும் அ.இ.அ.தி.மு.க-வையே முன்னிறுத்தி செயல்பட முன்வந்துள்ளார்கள். என்ன பிரச்சினையென்றால் தள்ளாட்டத்தையே நடனமென்று வியப்பதைப்போல, பாஜக-வின் அரசியல் தடுமாற்றத்தையே சாணக்கியத்தனம் என்று புகழ ஒரு வகுப்பார் இருப்பதுதான்.
கான மயிலாடக் கண்ட வான்கோழி அ.இ.அ.தி.மு.க
வான்கோழியும் பறவைதான். சிறகுகள் உண்டு. ஆனால் அவற்றால் வானில் வெகுதூரம் பறக்க முடியாது. ஆபத்தென்றால் சிறிது பறக்கலாமே தவிர பருந்தாக மாற முடியாது. அதே போல அவ்வையார் கூறியது போல மயில் தோகை விரித்தாடுகிறதே என்று அதுவும் சிறகு விரித்து ஆடினால் மயிலைப்போல சோபிக்க முடியாது.
அ.இ.அ.தி.மு.க திராவிடக் கருத்தியலில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. திராவிடம் குறித்தெல்லாம் ஆராய்ச்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி அதிர்ச்சியளித்தார். அண்ணாவின் எழுத்துக்களை தொகுத்து வெளியிடும்போது மு.க.ஸ்டாலினைத்தான் தலைமை தாங்க அழைப்பார்கள். ஏனெனில் இன்றுள்ள அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் அறுதிப் பெரும்பாலோர் ஜெயலலிதா காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். ஒரு சிலர் எம்.ஜி.ஆருடன் பழகியிருந்தால் அவர்கள் எல்லாம் சூப்பர் சீனியர். அண்ணாவைப் படித்ததற்கான தடயங்களை அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் பேச்சில் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. கலைஞர் தொடர்ந்துஅண்ணாவை முன்னிறுத்திப் பேசினார். அண்ணாவின் கொள்கைகளுக்கு வடிவம் தந்தார். பெரியாரின் கனலை உயிர்ப்புடன் வைத்திருந்தார். எனவேதான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்துத்துவ, பார்ப்பனீய அரசியல் எழுச்சியை அகில இந்திய அளவில் எதிர்த்துக் களமாடும் அணியை உருவாக்கும் வலிமையுடன் இருக்கிறது. அ.இ.அ.தி.மு.க-வோ பா.ஜ.க-வின் கட்டாய ஆலிங்கனத்தில் சிக்குண்டு கடக்கிறது.

அ.இ.அ.தி.மு.க எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தி.மு.க-வுடன் இரட்டை உறவுடன் இருந்து வந்தது. ஒன்று அது தி.மு.க கொள்கையிலிருந்து அதிகம் விலகிவிடக் கூடாது. அப்போதுதான் அதற்கு மாற்றாக இருக்க முடியும். அதே சமயம் அதனை எதிர்க்க வேண்டும். இப்படி இரட்டை வேட வரலாற்றுப் பாத்திரம் ஏற்கும்போது சமயத்தில் குழம்பிப் போகும். காலப்போக்கில் ஜெயலலிதாவின் பிற்கால அரசியலில் தி.மு.க கொள்கைகளைப் பிரதிபலிப்பது குன்றிப்போய், கண்மூடித்தனமான தி.மு.க எதிர்ப்பு ஒன்றே முக்கியமானதாக மாறியது. இன்றைக்கு அந்த தி.மு.க எதிர்ப்பைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கும் வலிமையற்று நீர்த்துப் போன அ.இ.அ.தி.மு.க எப்படி தன் அரசியல் அணிகளை உருவாக்கும், பயிற்றுவிக்கும் என்ற கேள்விக்கு விடையேயில்லை.
பாஜக உருவாக்கியுள்ள அகில இந்திய அரசியல் நெருக்கடி, மாநில உரிமைகளை பறிப்பது, தமிழ்நாட்டை பல்வேறு விதங்களில் வஞ்சிப்பது ஆகியவை அ.இ.அ.தி.மு.க-விற்குப் புரிகிறது. ஆனால் அதனால் கொள்கை அடிப்படையில் இயங்க முடியவில்லை. அது எப்படியென்று தெரியவுமில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தைக் கூட விட்டுவிடலாம்; அது புரியவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் பழனிசாமி, விவாசாய சட்டங்களை எதிர்த்து நிகழ்ந்த வீரியமிக்க விவசாயிகள் போராட்டத்தைப் புரிந்துகொள்ளாமல், அந்த சட்டங்களை ஆதரித்ததை என்னவென்று சொல்வது? அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு அவகாசமில்லாவிட்டாலும் தக்க ஆலோசகர்களிடம் இது போன்ற முரண்பாடுகளைக் குறித்துத் தெளிவாகக் கேட்டு அறியவேண்டும்.
அவ்வளவெல்லாம் வேண்டாம். ஆளுனரின் அத்துமீறிய நடவடிக்கைகள் மாநில உரிமைகளுக்கு எதிரானவைதானே? கட்சி வேறுபாடுகளைக் கடந்து கொள்கை அடிப்படையில் அவரைக் கண்டிக்க வேண்டாமா? அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் ஆளுனர் அத்துமீறி செயல்பட்டபோது தி.மு.க கண்டித்துப் போராடவில்லையா? ஆளும்கட்சி சங்கடப்பட்டால் எதிர்கட்சியான நமக்கு நல்லதுதான் என்றா தி.மு.க நடந்து கொண்டது? ஆளுனரின் எதேச்சதிகார போக்கிற்கு எதிராக தமிழ்நாட்டு அரசு பெற்றுள்ள தீர்ப்பை மாநில நலனில் அக்கறை இருந்தால் அ.இ.அ.தி.மு.க கொண்டாடி வரவேற்க வேண்டாமா? ஆட்சி செய்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஓயாமல் கொள்கைகளை முரசொலித்ததால்தானே கலைஞரால் தி.மு.க-வை கொள்கைப் பாசறையாக உறுதிபட நிற்கச் செய்ய முடிந்தது?
கொள்கை வேறு; கூட்டணி வேறு என்று சொல்லலாம். அதற்கு முதலில் கொள்கையை எப்படிப் பேச வேண்டும், வலுப்படுத்த வேண்டும், இயக்கத்தினர் இதயத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று தெரிய வேண்டும். அப்படி எதையும் செய்யாமல் கூட்டணி கணக்கு மட்டும் போட்டால் வரலாற்றில் விடை கிடைக்காது. தேர்தல்களில் கலைஞர் கூட்டணி வைத்ததை மட்டும் பேசுபவர்கள் அவர் ஒவ்வொரு நாளும் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களை படித்திருப்பார்களா? தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரம் பெறவேண்டும், அதுதான் அரசியல் என்று புரிந்து வைத்துள்ள அரசியல்வாதிகளுக்கு கூட்டணியைத் தாண்டி வேறென்ன கொள்கை தெரியும்?
கட்சியும் சரி, கூட்டணியும் சரி சுயநல இழைகளால் மட்டுமே பின்னப்பட முடியாது. அதற்கு கொள்கை என்ற பிணைப்பு, கருத்தியல் என்ற பற்று வேண்டும். அது இல்லாதவரை அ.இ.அ.தி.மு.க என்ற வான் கோழி பருந்து போல பறக்கவும் முடியாது, மயில்போல ஆடவும் முடியாது.
இந்திய அரசியலில், அதன் பகுதியாக தமிழ்நாட்டு அரசியலில் இது முக்கியமான கால கட்டம். வெல்வது ஆரியத்தின் இந்து ராஷ்டிரமா, திராவிடத்தின் கூட்டாட்சிக் குடியரசா என்பதே கேள்வி.