சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்!

-சாவித்திரி கண்ணன்

சிந்து நதியின்மிசை நிலவினிலே எனப் பாடினான் பாரதி. சீனாவின் தீபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சிறிதளவு பாயும் சிந்துவை தடுப்பது என்பது இந்தியா- பாகிஸ்தான் போராக மட்டுமல்ல, சர்வதேச பிரச்சினையாகவும் மாறி, சர்வ நாசத்திற்கு வித்திடும்;

காஷ்மீரில் தீவிரவாதிகள் மூன்று பேர் செய்த தீய செயலுக்கு பழி வாங்கலாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுப்போம். சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இரத்து செய்வோம் என அறிவித்துள்ளது இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு.

வெறும் மூன்று தீவிரவாதிகள் ஒரு மிகப் பெரிய நாட்டின் அரசையே பயங்கரவாத பாதைக்கு திருப்பிவிட முடியும் என்பது  பெரும் அவலமல்லவா?

எந்த ஒரு பொறுப்பும் இல்லாத, எந்த நேரத்திலும் தங்கள் உயிரையே துச்சமாக துறக்க நினைக்கும் முட்டாள்த்தனமான முரட்டு தீவிரவாதிகளுக்கு இணையாக 144 கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசு சிந்திக்கலாமா?

பயங்கரவாதிகளின் வழிமுறையிலேயே ஓர் அரசும் சிந்தித்து செயல்படத் துணியுமென்றால், அந்த அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்கும். இதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளை அத்தனை இந்திய மக்களும் அல்லவா அனுபவிக்க நேரும்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த உடனேயே பிரதமர் மோடி தலைமையில் கூடிய முக்கிய அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவை அவசரமாக அறிவித்துள்ளனர்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து, SAARC விலக்கு விசா இரத்து, 48 மணிநேரத்திற்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற போடப்பட்ட உத்தரவு, இனி SAARC விலக்கு விசா பாகிஸ்தானியர்களுக்கு கிடையாது என்றது, அடாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு நேற்று அறிவித்தது என்பது ஏதோ போர் முஸ்தீபுக்கு செய்யப்படும் ஒத்திகை போல உள்ளது.

பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தவர்களின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தியதோடு, உலக நாடுகளின் உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் தடுத்ததைப் போல இந்தியா, தன்னை பாகிஸ்தான் விவகாரத்தில் இஸ்ரேலாக கருத தொடங்கிவிட்டதோ என அச்சமாக உள்ளது.

பா.ஜ.க அரசு நினைத்தைப் போலவே பாகிஸ்தான் அரசும் இதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளது.

பாகிஸ்தான் அரசின் அறிவிப்பில், ”சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்க அல்லது திசைதிருப்ப எந்தவொரு முயற்சியும், நதிக்கரையின் உரிமைகளைப் பறிப்பதும், போர் அறிவிப்பாக கருதப்படும்” என தெரிவித்ததோடு, பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய ஊழியர்களைக் குறைத்துக் கொள்வதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க தடை எனவும் அறிவித்தது.

மேலும், வாகா எல்லைச் சாவடியை மூடுவதாகவும், இருப்பினும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை அது திறந்திருக்கும் எனவும் அறிவித்தது. சீக்கிய யாத்ரீகர்கள் தவிர அனைத்து இந்திய குடிமக்களும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. SAARC திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை பாகிஸ்தானும் நிறுத்தியது.

இமயத்தில் உள்ள பனிப்படலம் உருகுவதனால் சிந்து நதிக்கு அதிக நீர் கிடைக்கின்றது. சிந்து நதியின் பிரதான 5 கிளைநதிகளாக சீலம், செனாப், ராவி, பியாஸ், சாட்லொக் ஆகியன காணப்படுகின்றன

இரு நாடுகளுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் நடந்த  நீண்ட, நெடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக வங்கியின் உதவியுடன், இந்த ஒப்பந்தம் இறுதியாக இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானாலுக்கும் இடையே செப்டம்பர் 1960 இல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கும்,

கிழக்கு நதிகள் இந்தியாவுக்கும் ஒதுக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாடும் மற்றொன்றுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளில் அணை கட்டிக் கொள்வது, மின்சாரம் தயாரித்துக் கொள்வது உள்ளிட்ட சில பயன்பாடுகளை அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தம் சிந்து நதியை மட்டுமின்றி அதன் துணை நதிகளையும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கான  வழி செய்கிறது.

சிந்துவின் முக்கிய துணை நதிகள் ராவி, பியாஸ், சட்லெஜ், ஜீலம் மற்றும் செனாப் ஆகியவையாகும். பாகிஸ்தானின் 90 சதவிகித விவசாய நிலப்பரப்பு இந்த நதியை சார்ந்துள்ளது. 68 சதவிகித மக்களின் குடி நீரும் இந்த நதியை சார்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிறகு  இந்தியாவுக்கும், பாகிஸ்தான் அரசுக்குமே நேரடி போர்கள் மூன்று முறை நடந்துள்ளது. அப்போது கூட இது போன்ற தீய எண்ணம் நமது நாட்டுத் தலைவர்கள் தரப்பில் ஏற்பட்டதில்லை. ஆனால், வெறும் மூன்று தீவிரவாதிகள் இந்த ஆட்சியாளர்களின் மூளையையே இன்புளுயன்ஸ் பண்ண முடியுமென்றால், நமது ஆட்சியாளர்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்று தான் எண்ண வேண்டியுள்ளது.

சிந்து நதி மொத்தம் 11.2 இலட்சம் சதுர கீ.மீ பாய்கிறது. இதில் இந்தியா 39 சதவிகிதமும், பாகிஸ்தான் 47 சதவிகிதமும், சீனா 8 சதவிகிதமும், ஆப்கானிஸ்தான் 6 சதவிகிதமும் உள்ளன.

பாகிஸ்தான் சந்தையை ஆக்கிரமித்துள்ளது இந்திய உற்பத்தி பொருட்களே. பாகிஸ்தான் தியேட்டர்களை ஆகர்ஷித்து இருப்பது இந்திய திரைப்படங்களே. மதம் ஒன்று தான், இரு நாட்டையும் பிரிக்கிறது. மனிதம் ஒன்று தான். பாகிஸ்தான் சந்தையை நம்பித்தான் இந்திய வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் என 20 கோடி பேரின் வாழ்வாதாரம் உள்ளது. இந்தியா பாகிஸ்தானை பகைத்தால் இந்த சந்தையை மிகச் சுலபமாக சீனா ஆக்கிரமித்துவிடும்.

இது காந்தி தேசம். புத்தரும், மகாவீரரும், வள்ளலாரும், காந்தியும் உலவிய அகிம்சை செழித்தோங்கிய மண். அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் எந்த அசுரச் செயலுக்கும் இந்த மக்கள் உடன்படமட்டார்கள். ஆகவே, பா.ஜ.க அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு,  பயங்கரவாதிகளை ஒடுக்கட்டும். ஆட்சேபனை இல்லை. அதே சமயம் பயங்கரவாதம் உருவாதற்கான சூழலையும் களைய வேண்டும்.

Tags: