சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம்

-பா.முருகன்

முதலாளித்துவ சமூகம் உருவான போது நிலப்பிரபுத்துவக் காலத்தைப் போலவே சூரியன் உதிக்கும் முன்னே வேலைக்குப் புறப்படுவதும் சூரியன் அஸ்தமித்த பின்னேயும் கூட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்புவதுமான நிலைமையே தொழிலாளர்களுக்கு கதியாக இருந்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டு நிதி மூல தனம் சுரண்டலை அதிகப்படுத்தி செல்வத்தைக் குவிப்ப திலேயே குறியாக இருந்தது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கசக்கிப் பிழியப் பட்டார்கள்.

16, 18  மணி நேரம் கூட வேலை வாங்கப்பட்டனர். உண்ணவும் உறங்கவும் அவர்களுக்கு நேரமும் இல்லை இடமும் இல்லை.  பொழுது போக்கு, மருத்துவம் செய்து கொள்ள கூட அனுமதிக்கப்படாத நிலை. அடிமை வியாபாரத்தில் விலைக்கு வாங்கப்பட்டவர்கள், கொடூரமாக வேலை வாங்கப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு தொழிற் சாலைகளிலேயே பிரசவம் ஆகும் கொடுமையான சூழ்நிலை நிலவியது என்றால் அன்று நடந்த ஒடுக்கு முறையின் கொடூரத்தை நம்மால் உணர முடியும்.

ஒழிப்புச் சட்டம் நிறைவேறினாலும் கூட தொழிலாளர்கள் நிலைமையில் பெரிதாக  மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் ஆங்காங்கே மாற்றத்துக்கான வெளிச்சக் கீற்றுகள் தென்படவே செய்தன. இந்த காலக்கட்டத்தில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1848இல் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார்கள்.

வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்தன. இதையடுத்து ஆங்காங்கே உலகின் பல பகுதிகளிலும் குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்ட அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக  போராட்டங்கள் நடக்கத் துவங்கின.

இந்தியாவில் வேலைநிறுத்த போராட்டம்

1886 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலை நிறுத்தமும் போராட்டமும் நடப்பதற்கு முன்பே  1862 இல் இந்தியாவில் நடந்தது. 1856 இல் ஹவுரா ரயில்நிலையத் தொழிலாளர்கள் 1200 பேர் 8 மணி நேர வேலை உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்தனர்.

அதற்கு முன்பு 1856 இல் ஏப்ரல் 1 அன்று ஆஸ்திரேலியாவில் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் உலகின்  முதல் போராட்டம் என்று ரோசாலக்சம்பர்க் குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்துக்கு ஆதரவான அரசின் அடக்குமுறையை எதிர்த்த போராட்டம் இப்படித்தான் துவங்கியது.

ஆயினும் இரத்தம் சிந்தி உயிரைத் தந்து முத்திரை பதித்தது சிகாகோ நகரத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் தான்.  8 மணி நேர வேலைக்காக உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியது. அமெரிக்காவிலும் 8 மணி நேர வேலை உரிமை கேட்டு நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில்  போராட்டங்கள் நடந்தன. 1886 ஏப்ரல் 25 முதல் மே 4 ஆம் திகதி வரை 19 போராட்டங்கள் நடந்தன.

சிகாகோ போராட்டம்

அதில் ஒன்று தான் சிகாகோ நகரில் மே 1 அன்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். மே 3, 4 திகதிகளில் நடந்த போராட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சியை அடக்கவும் ஒடுக்கவும் அமெரிக்கக் காவல்துறை 12 முறை வன்முறையை ஏவியது. 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. மே 3 இல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அவர்களது தகவல்  தெரிவித்தது.

மே 4 அன்று ஹே – மார்க் கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிர்ப்பலியானதாக கூறினர். ஆனால் உண்மையில் பலி எண்ணிக்கை அதிகம். அமைதியாக நடந்த பேரணி பொதுக் கூட்டத்தில் இருந்து காவல்துறை மீது வெடி குண்டு வீசியதாகக் கூறி துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.

அந்த பொய்க்காரணத்தைக் கூறியே நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில்தான் தொழிலாளர் தலைவர்களில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ஜுரிகள் 12 பேரும் முதலாளித்துவ விசுவாசத்தின் படி ஒரே கருத்தைக் கூறி தண்டனை விதித்தனர். தொழிலாளர் தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையில் நிரூபிக்கப்படவில்லை.

தூக்கிலிடப்பட்ட தியாகிகள்  குரல் வளை  நெரிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் முழக்கம் ஒலிப்பதைத் தடுக்க முடியவில்லை. அது வரலாற்றில் நிலைத்தது. அந்த வழக்கு அமெரிக்க வரலாற்றிலேயே மோசமானதாக அமைந்தது. தொழிலாளர்களின் கோபாவேச தீ கொழுந்துவிட்டெரிந்த போராட்டத்தால் தான் 8 மணி நேர வேலை நாள் அமுலானது.

மே தினம் பிறந்தது

தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற்றது.  இந்த ஹே-மார்க்கெட் தியாகிகளுக்கு 1893 ஆம் ஆண்டில் வால்டுஹும் கல்லறையில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அது இன்னும் மே தினத் தியாகிகளின் தீரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க ஆட்சியாளர்கள் போராட்டத்தினால் உயிரிழந்தவர் என்று கூறி ஒரு காவல் அதிகாரிக்கு ஹே-மார்க்கெட்டில் 1889 இலேயே சிலை வைத்தனர்.

அது 1969இல் சேதப்படுத்தப்பட்டதால் 1970 இல் காவல்துறையாலேயே அது அகற்றப்பட்டது. சிகாகோ எழுச்சியையடுத்து 1889 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் ஏங்கெல்ஸ் தலைமையில் கூடிய இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் அமெரிக்கத் தொழிலாளர்களின் தீரத்தைப் பாராட்டியது. 1890 மே 1ஆம் திகதியை 8 மணி நேர வேலைநாள் கோரிக்கை தினமாகவும் சர்வதேச தொழிலாளர்களின் உரிமை தினமாகவும் சிகாகோ தியாகிகளின் நினைவஞ்சலி தினமாகவும் கடைப்பிடிக்குமாறு அறைகூவல் விடுத்தது. அதன் படியே உலகம் முழுவதும் மே முதல் நாள் உழைக்கும் மக்களின் உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் புரட்சி நடந்து தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்ததும் பல்வேறு நாடுகளில் சோசலிச அரசுகள் உருவானதும் உலகின் பெரும்பகுதி நாடுகளில் மே 1 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. நமது இந்தியாவில் 1957 இல் கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மே தினத்துக்கு முதன்முதலாக விடுமுறை வழங்கியது. 1967 இல் மேற்குவங்கத்தில் ஜோதிபாசு துணை முதல்வராக இருந்த அரசு மே தின விடுமுறையை நடைமுறைப்படுத்தியது. 1970 இல்  தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, மே தினத்துக்கு விடுமுறையை அளித்தது. ஆயினும் நாடு தழுவிய அளவில் 1990இல் தான் வி.பி.சிங் தலைமையிலான அரசு, இடதுசாரிகள் ஆட்சிக்கு வெளியே இருந்து கொடுத்த ஆதரவுடன் நடந்த ஆட்சியின் போது மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது. சரியாக நுறாண்டுக்குப் பிறகு இந்தியாவில் மே தின விடுமுறை ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய காவி கோர்ப்பரேட் ஆதரவு மோடி  ஆட்சியில் தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் ஒழித்துக் கட்டப்பட்டுள்ள நிலையில், அரசுத் துறைகளிலேயே ஒப்பந்தத் தொழிலாளர் முறை அதிகரிக்கும் நிலையில் சொல்லப்போனால் அரசுத் துறைகள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் நிலையில் 8 மணி நேர வேலை, நியாயமான அடிப்படை ஊதியம், தொழிலாளர் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவை அதிக முக்கியத்துவம் உடையதாகிறது.

தொழிலாளர்களை ஒன்றிணைப்போம்!

சமத்துவ உலகத்தை அடைவோம்!

வாழ்க மே தினம்!

பா.முருகன் தீக்கதிர் செய்தி ஆசிரியர்.

Tags: