பகுதி 3: இந்தியாவின் மீதான உக்ரைனிய – பலஸ்தீனப் போர்களின் தாக்கம்!

பாஸ்கர் செல்வராஜ்

க்ரைன் போரை மூலதனம், நிதி, வணிகம் சார்ந்தும் பலஸ்தீனப் போரை பூகோள அரசியல் பொருளாதாரம், வணிகப்பாதை சார்ந்தும் தமிழகம் புரிந்து கொள்வது அவசியமானது. உக்ரைன் – ரஷ்யப் போர் டொலர் மைய ஒற்றைத்துருவ உலக ஒழுங்கை உடைந்து பல நாணயத்தில் வணிகம் நடைபெறும் பல்துருவ உலகை உருவாக்கி இருக்கிறது என்றால், இஸ்ரேலிய – பலஸ்தீனப் போர் சீனா முதல் ஐரோப்பா வரையிலான யூரேசியா நிலப்பரப்பை ஒரே மண்டலமாக ஒருங்கிணைத்து வருகிறது. அது சீனாவின் “ஒரே மண்டலம் ஒரே பாதை” திட்டத்தை நனவாக்கி அந்தப் பாதையில் பல நாடுகளும் தத்தமது நாணயத்தில் வணிகம் செய்து கொள்வதை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தப் போர்களில் அமெரிக்க நாடுகள் ஓர் அணியாகவும், மற்றவர்கள் ஓர் அணியாகவும் நின்றார்கள். உக்ரைன் போரில் ரஷ்ய சார்பெடுத்த இந்தியாவோ, பலஸ்தீனப் போரில் முதலில் இஸ்ரேலிய சார்பெடுத்து, இந்திய ஊடகங்களை இறக்கி சமூக ஊடகங்களில் ஆதரவு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பின்பு சத்தத்தைக் குறைத்துக்கொண்டு பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுக்குத் திரும்பி இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பமான முரணான நிலைப்பாடு? என்ற கேள்விக்கான விடையை இந்திய அரசியல் பொருளாதார மாற்றத்தின் ஊடாகவே காண முடியும்.

டொலர்மயமாக்கத்தில் இந்தியா  

இதுவரையிலும் பொருட்களின் உருவாக்கத்துக்கும் இயக்கத்துக்கும் அடிப்படையான எரிபொருளின் விலையை டொலரில் தீர்மானிப்பதாகவும், எண்ணெயின் விலையிலும் டொலரின் மதிப்பிலும் ஏற்படும் மாற்றம் உலகின் எல்லா பொருட்களின் விலைகளையும் பணத்தின் மதிப்புகளையும் தீர்மானிப்பதாகவும் உலகம் இயங்கி வந்தது. தொண்ணூறுகளுக்கு முன்பு வரையான இந்தியாவில், எரிபொருள் உற்பத்தியை அரச முதலாளித்துவ பொதுத்துறை நிறுவனங்களும், அதன் விலையையும் ரூபாயின் மதிப்பையும் ஒன்றிய அரசும் தீர்மானித்து வந்தது.

அதன் பிறகு ரூபாயின் மதிப்பைச் சந்தைத் தீர்மானிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியில் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டு சந்தை விலைக்கேற்ப எரிபொருளின் விலையைத் தீர்மானிப்பது என்பதாக மாற்றப்பட்டது. கூடவே, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் முதலிட இருந்த தடைகள் படிப்படியாக விலக்கப்பட்டது.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பொருட்களின் விலைகள் கூடி நிறுவனங்களின் இலாபம் பெருகி பங்குச்சந்தை உயர்ந்தது. இந்தியாவின் டொலர் கையிருப்பு கூடிய அதேசமயம், ரூபாயின் மதிப்பு சரிந்து, சொற்ப ரூபாயை வருமானமாகப் பெறும் தொழிலாளர்களின் சேமிப்பு அருகி, நுகர்வு குறைந்து, உற்பத்தி வீழ்ந்து, வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. சுருக்கமாக ரூபாய் மூலதனத்தை டொலர் கடன் பதிலீடு செய்து வந்தது.

ரஷ்ய எண்ணெயும் இந்திய இறையாண்மையும்

இந்நிலையில் ஏற்பட்ட உக்ரைன் போரில் இந்தியா நேட்டோ ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்தால், அதிக விலையில் எண்ணெய் வாங்கி, டொலர் கையிருப்பை இழந்து, ரூபாய் மதிப்பு வீழ்ந்து, விலைவாசி உயர்ந்து, பொருளாதாரம் வீழ்ந்து, பங்குச்சந்தை சரிந்து, டொலர் மூலதனம் மலிவான விலையில் மேலும் இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றுவதில் முடிந்திருக்கும்.

கூடவே மலிவான ரஷ்ய ஆயுத இறக்குமதியில் விரிசல் விழுந்து, விலை அதிகமான நேட்டோ ஆயுதங்களுக்குக் கையேந்த வேண்டி இருந்திருக்கும். உற்பத்தி பொருளாதார சுழற்சிக்கான ரூபாய் நாணயத்தையும், அதற்கான சந்தையான நாட்டைக் காக்க ஆயுதமின்றியும் இந்தியா தனது இறையாண்மையை இழந்திருக்கும்.

இதனைத் தவிர்க்க ரஷ்ய சார்பெடுத்து, குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை ரூபாயில் வாங்கி, ரூபாய் மதிப்பை நிர்ணயிக்கும் ஆற்றலையும் டொலர் கையிருப்பையும் தக்கவைத்துக் கொண்டது இந்தியா. எரிச்சல் அடைந்த ஐ.எம்.எப் ரூபாயை சந்தையினால் மதிப்பு தீர்மானிக்கப்படும் நாணயமல்ல என்று அறிவித்தது.

இந்த எரிபொருளையும் ரூபாய் மூலதனத்தையும் கொண்டு எரிபொருள் விலையை மலிவாக்கி, பொருட்களின் விலைகளைக் குறைத்து, மக்களின் வாங்கும் அளவைக் கூட்டி, உற்பத்தியைப் பெருக்கி, வேலைவாய்ப்பையும் ஏற்றுமதியையும் அதிகரிக்கும் வகையில் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால், இரண்டு பெருவணிகக் குழுமத்துக்கான அரசை நடத்தும் இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

மலிவான எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து பெருலாபமீட்டும் வணிக வாய்ப்பாக ரிலையன்ஸ் பயன்படுத்த அனுமதித்தது ஒன்றியம். எதிர்நிலைப்பாடு எடுத்த இந்தியாவைப் பணியவைக்க அவர்கள், டொலர் முதலீடு குறைவாக இருக்கும் அதானியையும் இந்தியப் பங்குச்சந்தையையும் தாக்கியபோது ரூபாயைச் சந்தையில் கொட்டியும் பகுதி அளவு சொத்துகளை அதானி டொலர் மூலதனத்துக்குக் கொடுத்தும் சமாளித்தார்கள்.

மலிவான விலையில் வாங்கிய எண்ணெயை சந்தை விலைக்கு விற்ற நிறுவனங்கள் இலாபத்தைக் கூட்டின. ஒன்றியம் வரி வருவாயைக் கூட்டிக்கொண்டு தனது வரவு செலவு கணக்கை நிலைப்படுத்தியது. இதனால் எண்ணெய் விலை குறைந்தும் பொருட்களின் விலை உயர்ந்தவண்ணம் இருந்தது. அதனால் இலாபம் பெருகவும் பங்குச்சந்தைக் குறியீட்டு எண் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இப்படி ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இந்திய பெருநிறுவனங்களைக் காத்து இலாபத்தைப் பெருக்கி பங்குச் சந்தையை உயர்த்துவதில் முடிந்தது. அடிப்படையான பிரச்சினைகளான மக்களின் வாங்கும் திறன் குறைவு, உற்பத்தி சுருக்கம், வேலைவாய்ப்பின்மை தீர்க்க தவறியது.

வெறும் வணிகமல்ல தேவை புதிய உற்பத்தி சுழற்சி

உற்பத்தி பெருகாமல் ஊகபேர பங்குச்சந்தை வணிகம் பெருகிய நிலையில், பில்லியன் கணக்கில் ரூபாயில் எண்ணெய் கொடுத்த ரஷ்யர்கள் அந்த ரூபாயைக் கொண்டு இந்தியாவில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொருள் இல்லை. ஆதலால் அவர்கள் பெற்ற ரூபாய் பணம் அவர்களுக்குப் பயனின்றி தேங்கியது. இதைச் சமாளிக்க எங்களது நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என்றது ஒன்றியம். ஊதிப்பெருக்கப்பட்ட விலையில் ஒன்றுக்கும் பெறாத பங்குகளை வாங்கி நஷ்டமடைய ரஷ்யர்கள் என்ன நமது உள்ளூர் முதலீட்டாளர்களா? அப்படியே முதலீட்டாலும் ஒரு நிதியத் தாக்குதல் மூலம் அது எப்படி ஒன்றுமில்லாமல் உருக்குலைக்கப்படும் என்று அவர்கள் அறியாததா?

ஆகவே, இந்த ரூபாயில் எண்ணெய் வாங்குவது இவர்கள் நினைப்பதுபோல வெறும் இலாபகரமான வணிகமல்ல; அது கோருவது ரூபாய் மைய மூலதன உற்பத்தி சுழற்சி. அச்சுழற்சியை டொலரின் பிடியில் இருக்கும் இந்திய நிறுவனங்களைக் கொண்டு நிகழ்த்த இடமில்லை. அரச முதலாளித்துவக் கட்டமைப்பைக் கொண்ட ரஷ்யாவுடன் நமது அரச முதலாளித்துவ பொதுத்துறை நிறுவனங்களின் வழியாகவே அப்படியான உற்பத்திச் சுழற்சியை ஏற்படுத்த முடியும்.

இந்தியா அந்தப் பாதைக்கு எதிரான திசையில் செல்லும் நிலையில் ரஷ்யர்கள் அரச முதலாளித்துவ கட்டமைப்பைக் கொண்ட சீன யுவானைக் கொடு என்கிறார்கள். ஒன்றியம் அடம்பிடித்துக் கொண்டு ஈரான் – ரஷ்ய நாடுகளுடன் நெருக்கமாக இருக்கும் வெனிசுவேலா எண்ணெயை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்துகிறது. பிரச்சினையின் மையத்தை விடுத்து நெருக்கடியைத் தவிர்க்க பல வழிகளிலும் சுற்றித் திரிகிறது இந்திய வெளியுறவுக்கொள்கை.

பலஸ்தீனப் போரிலும் அதே வணிகப்பார்வை

உக்ரைன் போரில் ரஷ்ய சார்பெடுத்து ரூபாயில் எண்ணெய் வாங்கி ரஷ்யாவில் இருந்து ஈரான் வழியாக குஜராத் துறைமுகத்துக்கு சரக்குகளை இறக்குமதி (import) செய்ய இந்தியா நகர்வதைத் தடுக்க, அமெரிக்கா ‘கிண்டன்பெர்க்’ அறிக்கையின் (Hindenburg Report vs Adani Group) வாயிலாக அதானியின் மீதான பங்குச்சந்தை நிதியத் தாக்குதலைத் தொடுத்தது. எழுபதுகளில் பனிப்போர் தொடங்கியபோது ரஷ்ய சார்பெடுத்த இந்திராவின் அரசை, சீக்கியப் பிரிவினைவாதத்தைத் தூண்டி வழிக்குக்கொண்டு வந்ததைப்போல இப்போதும் அதனைக் கையில் எடுத்தது. அரச படுகொலைகளின் வழியாக எதிர்கொண்ட இந்த அரசை அதையே ஆயுதமாக்கி அரசியல் ரீதியாகத் தாக்கியது.

INSTC, International North–South Transport Corridor, political map. Network for moving freight, with Moscow as north end and Mumbai as south end, replacing the standard route across Mediterranean Sea.

டொலர் மூலதனத்துக்கு அதானி தனது குழுமத்தைத் திறந்துவிட்டும், ஈரான் வழியாக ரஷ்யாவுடனான நில – கடல்வழி (International North–South Transport Corridor – INSTC) இணைப்பைக் கிடப்பில் போட்டும், அமெரிக்க ஆயுதங்கள் வாங்க ஒப்புக்கொண்டும், அதானியின் குஜராத் துறைமுகத்தை ஐக்கிய அரபு நாடுகள் வழியாக இஸ்ரேலின் கைபா (Haifa) துறைமுகத்தின் வழியாக ஐரோப்பாவை இணைக்கும் நில – கடல்வழி மாற்றுப் பொருளாதார திட்டத்தில் (India-Middle East-Europe Economic Corridor – IMEC) இணைந்தும் பாரதிய ஜனதாக்கட்சி அரசு அந்த நெருக்குதலுக்குப் பணிந்தது.

இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கும் மாற்றங்களுக்கும் இடையில், ஒக்ரோபர் ஏழன்று நடந்த ஹமாசின் தாக்குதலில் இந்திய ஒன்றியம் இயல்புக்கு மாறாக அமெரிக்க அணியுடன் இணைந்து கொண்டு ஹமாசைக் கண்டித்து, இஸ்ரேலிய சார்பெடுத்தது. உக்ரைன் போரை அதன் முழு பரிமாணத்தில் அணுகாமல், எண்ணெய் வர்த்தக வாய்ப்பை முன்னிறுத்தி எதிர்கொண்டதைப் போலவே இந்தப் போரையும் வர்த்தகம் அதானியின் கப்பல் வணிகம் ஐரோப்பிய பொருளாதார வாய்ப்பு சார்ந்து அணுகியது.

மேற்காசிய எரிபொருள் சார்பு, அப்பகுதியின் நில – கடல்வழி வணிகப்பாதையின் முக்கியத்துவம், ரஷ்ய – சீன – ஈரானிய பூகோள பொருளாதார அரசியல் கூட்டு, அதில் அரேபியர்களின் அரசியல், வளர்ந்து வரும் ஈரானின் படை பலம் அதில் நமது தற்சார்பு, நிலைத்தன்மை, வாய்ப்பு, பலம், பலகீனம் என்பதாகப் பரந்து விரிந்த பார்வையற்ற குறுகிய நோக்கத்தில் அமெரிக்க – இஸ்ரேலிய யூத குழுக்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து நடந்தது இந்தியா.

இருபக்க மிரட்டல் அரசியல்

எதிரிகளைக் கட்டம்கட்டி அடித்து யூத உளவுத்துறைக்கு இணையான வஞ்சகத்துடன் வழிக்குக் கொண்டுவரும் ஈரான் தன்னுடன் எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்ளும் கத்தாருடன் கைகோத்துக் கொண்டு இந்திய முன்னாள் இராணுவத்தினர் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி மரண தண்டனை விதித்தது. இந்திய அரசியல் தாக்குதலால் இந்தியா வழிக்குக் கொண்டுவரப்படும் ஆபத்தை உணர்ந்த அமெரிக்கர்கள் பெயர் குறிப்பிடாத இந்திய அரச அலுவலரையும் உள்ளடக்கிய கொலைக் குற்றச்சாட்டை  நீதிமன்றத்தில் பதிவு செய்தார்கள்.

இல்லையில்லை… இவையெல்லாம் எதேச்சையாக நடந்தவை; இதற்கும் இஸ்ரேலியப் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எவரேனும் வாதிடுவார்களேயானால் அவர்கள் எல்லாம் அரசியல் அறியாத வெள்ளை மனம் கொண்ட நல்லவர்கள் என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

இந்த இரண்டகமான அரசியல் இந்துத்துவ தேசபக்த அரசின் இதயத்தில் செருகப்பட்ட ஈட்டி. கொஞ்சம் தவறினாலும் இந்துத்துவ அரசைக் கொல்லும் அளவுக்கு இந்தியர்களின் கூருணர்வைத் தூண்டக்கூடியது. வேறுவழியின்றி இந்திய ஒன்றியம் தனது இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. அமெரிக்கர்களிடம் குறைவான அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய அடியாளை பலிகொடுத்தது. கத்தார் இந்திய முன்னாள் இராணுவத்தினருக்கு விதித்த தூக்குத்தண்டனையை சிறைத்தண்டனையாகக் குறைத்தது.

மறைமுகப் பொருளாதாரத் தாக்குதல்

இந்த அரசியல் தாக்குதலை அடுத்து  தாக்குதலை செங்கடல் பகுதியில் இஸ்ரேலிய கப்பல்கள் செல்ல யேமனின் ஹுத்தி (Houthis) அமைப்பினர் தடை விதித்தனர். மீறிச்செல்லும் கப்பல்கள் தாக்கப்பட்டன. இது நேரடியாக இஸ்ரேலின் மீது தொடுக்கப்பட்ட பொருளாதார தாக்குதல். அதேசமயம் இந்தியாவின் இஸ்ரேலை மையப்படுத்திய பொருளாதார இணைவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மறைமுக தாக்குதலும்கூட.

சீனக் கப்பல்கள் எந்தத் தாக்குதலுக்கும் உட்படாத அதேவேளை இந்திய கப்பல்களுக்கு அப்படியான சலுகைகள் வழங்கப்படாதது மட்டுமல்ல; இந்தியத் துறைமுகத்துக்கு வரும் இஸ்ரேலிய கப்பலும் தாக்கப்பட்டது அதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

இதற்கு எதிரான அமெரிக்க கூட்டுக்கு ஆட்கள் சேராத நிலையிலும் இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையற்ற அதன் கையாலாகாத தனத்தையும் உலகமே பார்த்தது. அதிலிருந்து இந்தியாவும் பாடம் கற்று இது ஹேர்முஸ் பகுதிக்கும் விரிவடைந்தால் இந்தியாவின் வணிகமே கேள்விக்குள்ளாகும் எதார்த்தத்தை உணர்ந்து கொண்டது. யூரேசிய நில – கடல்வழி வணிகப் பாதைகள் சீன – ஈரானிய – ரஷ்ய நாடுகளின் பிடிக்குள் வந்துவிட்ட உண்மையை ஏற்று இனி அமெரிக்கர்களையும் இஸ்ரேலியர்களையும் அண்டி வாழ்வதில் பயனில்லை என்று முடிவுக்கு வந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

சார்பிலா கொள்கைக்குத் திரும்பும் இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சர், ஈரானுக்குச் சென்று கிடப்பில் போடப்பட்ட ஜப்பார் துறைமுகத் திட்டத்தையும், ரஷ்ய – ஈரான் – இந்திய நில – கடல்வழி இணைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தீர்ந்தால் சீன முதலீடுகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவிக்கிறது இந்தியா. பேச்சைக் குறைத்து செயலில் காட்டுங்கள் என்று பதிலுரைக்கிறது சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை. எனில் இந்தியா அமெரிக்க சார்பை விடுத்து இருபக்கமும் நடுநிலை என்ற நிலைப்பாட்டுக்குத் திரும்புகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

ஆனால், இது வணிகம் சார்ந்த பிரச்சினையல்ல; மாற்று நாணய முதலீடு உற்பத்தி சுழற்சி சார்ந்த பிரச்சினை என மேலே கண்டோம். அப்படி இருக்க இந்தியாவின் இந்த முயற்சி என்ன பலனைத் தரும்? டொலர் கோலோச்சும் இந்தியப் பொருளாதாரத்தில் சீன யுவானை அனுமதிக்க அமெரிக்கா விடுமா? அப்படியே விட்டாலும் யூரேசிய இணைவில் வடக்கை இணைக்கும் முயற்சி பலன் தருமா? உள்ளே நுழையும் மாற்று மூலதனம் என்ன விதமான உற்பத்தி, உள்கட்டமைப்பில் ஈடுபடும்? தொழிற்துறை மையமான தென்னகம் இதனை எப்படி எதிர்கொண்டு பயன்படுத்த வேண்டும்?

அடுத்த கட்டுரையில் காணலாம்.

பகுதி 1: உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு

பகுதி 2: இஸ்ரேல் – பலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்!

Tags: