கனிம வளத்தை காவு கொடுத்த ஷெலன்ஸ்கி

கனிம வளத்தை காவு கொடுத்த ஷெலன்ஸ்கி : நகங்களால் நிலத்தை கிழிக்கப் போகும் அமெரிக்க வல்லூறு

க்ரைன்- அமெரிக்காவிற்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு நூற்றுக் கணக்கான பில்லியன் டொலர்கள் அளவிற்கு பணமும் ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்தது. தற்போது இந்த பணத்திற்கு ஈடாக உக்ரைனில் உள்ள அறிய கனிம வளங்களில் சுமார் 50 சதவீதம் வரை அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.  

உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி அமெரிக்காவில் டிரம்ப் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி, ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் நிலங்களை மீட்பது, உக்ரைனுக்கு இராணுவ பாதுகாப்பு உதவியை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைத்தார்.  ஆனால் டிரம்ப் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஊடகங்களின் முன்பாகவே இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட னர். அதன் பிறகும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வேளையில் உடன்படாமல் ஷெலன்ஸ்கி மறுத்து வந்தார்.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது வாங்கிய ஆயுதங்களுக்கு பணத்தை கொடுங்கள் என அமெரிக்கா  உக்ரைனுக்கு நெருக்கடியை கொடுத்தது. அதன் பிறகு தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சீனாவுடனான சர்வதேச வர்த்தகப் போட்டியை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு மின்சார வாகனங்கள், செயற்கை நுண்ணறிவுக்கான சிப்கள் உள்ளிட்ட தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு உரிய கனிமங்கள் தேவை. இத்தொழில் நுட்பத்திற்கு தேவையான கனிமங்கள் உக்ரைனில் நிறைந்துள்ளன. அதனைச் சூறையாட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மேலும் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு, அமெரிக்காவிற்கு சவாலாக  உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் சீனாவை முடக்க ரஷ்யாவுடன் மீண்டும் பொருளாதார உறவுகளை துவங்க திட்டமிட்டு அதற்கான வேலைகளையும்  அமெரிக்கா செய்து வருகிறது. இதற்காக போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா  முன்வைத்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவின் பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவிக்கு நிரந்தர தடை உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் அமெரிக்காவை நம்பிய ஷெலன்ஸ்கி இறுதியில் ஏமாந்துவிட்டார்.   ஷெலன்ஸ்கி தனது நாட்டின் கனிம வளங்களை ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுத்து அந்த நாட்டின் குடிமக்களை மிக மோசமான சுரண்டலுக்குள் தள்ளி, அந்நாட்டின் வளர்ச்சியையே அழிவுப் பாதையில் தள்ளியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: