தோழர் சா.தியாகலிங்கம் எம்மைவிட்டுப் பிரிந்தார்!

Image may contain: 1 person, glasses and close-up

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரும், நாரந்தனை கணேச வித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம் என்பனவற்றின் முன்னாள் அதிபருமான தோழர் சாம்பசிவம் தியாகலிங்கம் அவர்கள் சுகவீனம் காரணமாக தமது 68ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தோழர் தியாகலிங்கம் தாம் கற்பித்த பாடசாலைகளில் மட்டுமின்றி, பொதுவாக அனைத்துப் பிள்ளைகளினதும் கல்வியில் எப்பொழுதும் அதிக அக்கறை காட்டிச் செயற்பட்ட ஒருவராவார். அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட பிரதேசத் தவைராக இருந்து ஆசிரியர்களின் உரிமைப் பிரச்சினைகளிலும் அயராது பாடுபட்ட ஒருவராவார்.

அரசியல் ரீதியாக முற்போக்குச் சிந்தனைகளை வரித்துக்கொண்ட அவர், இடதுசாரி அமைப்புகளுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்துள்ளார். இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CP – ML)  ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக அக்கட்சி உருவாக்கிய தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட அவர், பின்னர் அவ்வியக்கத்தின் தொடர்ச்சியாக உருவாகிய தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் (NLFT) தீவகப்பகுதி செயற்பாட்டாளராகவும் செயலாற்றினார்.

ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த முற்போக்கான நிகழ்ச்சிகளுடன் எப்பொழுதும் தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார்.

அவரது திடீர் மறைவு அன்னாரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அனைத்து கல்விச் சமூகத்தினருக்கும், முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும்.

அவரது இறுதிச் சடங்குகள் 09-08-2019 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அவரது குடும்பத்தினருடனான தொடர்பு தொலைபேசி எண் – 94777238377

Tags: