பாகிஸ்தானில் இடது ஜனநாயக முன்னணி நாடு தழுவிய போராட்டம்

பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் சொந்த வர்க்க நலனை மட்டும் பாதுகாத்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரச் சூழலை பாதுகாக்க தவறியதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தான் இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front – LDF), செப்டம்பர் 16 அன்று நாடு தழுவிய போராட்டங்களை  நடத்தியுள்ளது.  

மக்களின்  ஜனநாயகம், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், அண்டை நாடுகளுடன் அமைதியை மேம்படுத்துவதற்காகவும் சோசலிசத்திற்கான  வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவும் 2017 ஆம் ஆண்டில் மஸ்தூர்  கிசான் கட்சி (Mazdoor Kisan Party – எம்.கே.பி) [தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி],  மக்கள் உரிமைக் கட்சி (Haqooq e Khalq – எச்.கே.பி), அவாமி தொழிலாளர் கட்சி (Awami Workers Party – ஏ.டபிள்யூ.பி) மற்றும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 10 இடது மற்றும் ஜனநாயகக் கட்சிகள் இணைந்து ‘எல்டிஎப்’ (LDF) அமைப்பு உருவாக்கப்பட்டது.  

செப்டம்பர் மாத துவக்கத்தில் மஸ்தூர் கிசான் கட்சியின்  பொதுச் செயலாளர் தைமூர் ரஹ்மான் (Taimur Rahman) ‘எல்.டி.எப்’ செயலாளராகவும், அவாமி தொழிலாளர் கட்சியின் துணைத்தலைவர் அக்தர் ஹுசைன் (Akthar Hussain) ‘எல்.டி.எப்’ தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தமும் அவர்கள் விதித்த அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மானியங்களை நீக்கும் நிபந்தனைகளுமே பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை எட்டியிருப்பதில் முக்கியப் பங்காற்றியது என போராட்டத்தின் போது தலைவர்கள் கூறினர். இதுவே தற்போதுள்ள பணவீக்கத்தை மேலும் மோசமடையச் செய்து, மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மோசமான நிலைக்கு தள்ளியதற்கு காரணம் என்று தெரியவந்த பின்பும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம், இந்த ஆண்டு ஜூலையில் 300 கோடி  டொலர் கடனுக்கான ஒப்பந்தத்தில்  மக்களுக்கான மானியங்களை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது.  

தற்போதுவரை பாகிஸ்தானில்  ஓகஸ்ட் மாதத்தில் 27 சதவீதத்திற்கு மேல் பணவீக்கம் இருந்தது, உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 38 சதவீதமாக இருந்தது. இந்தப் போராட்டத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளில் பொது முதலீடு இல்லாததையும் இராணுவத்திற்கு  17 சத வீதத்திற்கும் அதிகமாக செய்யப்படும் செலவினங்களை சுட்டிக் காட்டியதோடு நாட்டின் பொருளாதார மாற்றங்கள், பணக்காரர்கள் மீதான வரி விதிப்பதன் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி பேசினர்.

பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடியின் மத்தியிலும்,  இந்த ஆண்டு இராணுவத்திற்கான செலவினங்களை  அதிகரித்தது பாகிஸ்தான் அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு  இடையே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஒப்பந்தங்கள் தான் நாட்டின் மின்சாரக் கட்டணம் அதீதமாக 76 சதவீதம் வரை உயர்ந்ததற்கு காரணம் என்றும் தற்போது விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் அந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது தனியார் மின் நிறுவனங்களை தேசியமயமாக்க வேண்டும் என்றும் இடது ஜனநாயக முன்னணி செயலாளர் தைமூர் ரகுமான் கூறி னார்.

Tags: