சர்க்கரை நோயில் ஒரு புதிய வகை!

-கு.கணேசன்

டல் பருமன் இருந்தால்தான் சர்க்கரை நோய் வரும் என்று நினைக்கிறீர்களா? இனி, அந்த நினைப்பைக் கைவிட்டுவிடுங்கள். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரலாம் என்கிறது மருத்துவ உலகம். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற உலகளாவிய சர்க்கரை நோய் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நோய்க்கு ‘ஐந்தாம் வகை சர்க்கரை நோய்’ (Type 5 diabetes) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் வகைகள்: உடலில், கணையத்தில் இன்சுலின் துப்பு​ர​வாகவே சுரக்க​வில்லை என்றால், முதலாம் வகை சர்க்கரை நோய் (Type 1 diabetes) வருகிறது. இது குழந்தை​களுக்கு வருகிற சர்க்கரை நோய். மாறாக, இன்சுலின் குறைவாகச் சுரந்​தாலோ, சுரந்த இன்சுலின் செயல்​ப​டாமல் போனாலோ இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 diabetes) வருகிறது. இது பெரும்​பாலும் உடல் பருமன் உள்ளவர்​களுக்கு வருகிறது.

மருந்துகளின் தூண்டுதல், கணைய நோய் போன்ற பிற காரணங்​களால் மூன்றாம் வகை சர்க்கரை நோய் (Type 3 diabetes) வருகிறது. கர்ப்​பிணி​களுக்கு வருகிற சர்க்கரை நோய் (Gestational Diabetes) நான்காம் வகை (Type 4 diabetes). இந்த வரிசையில் இப்போது புதிதாக ஐந்தாம் வகை சர்க்கரை நோய் இணைந்துள்ளது.

வரலாற்றுப் பின்னணி: பருமனாக உள்ளவர்​களின் உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்பு நிலை (Insulin Resistant) உருவாகிறது. அப்போது இன்சுலின் செயல்​ப​டாமல் போகிறது. இதனால் இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை நோய் ஏற்படு​வ​தில், உடல் எடை தொடர்பில் இந்தக் கண்ணோட்டமே நவீன மருத்​துவத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்​தியது. இது தவறு; ஊட்டச்​சத்துக் குறைபாடு (Malnutrition) இருக்​கிறவர்​களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது என்பதை முதன்​முதலில் 1955 இல் ஜமைக்கா நாடு கண்டறிந்​ததும் இந்தக் கருத்தில் சந்தேகம் பிறந்தது.

அது மட்டுமன்றி, இந்த நோய் வித்தி​யாசமாக இளம் வயதினரிட​மும், உடல் எடை குறைந்​தவர்​களிட​மும், அதாவது, ‘பிஎம்ஐ’ (BMI) அளவு 18.5க்கும் குறைவாக இருந்​தவர்​களிட​மும்தான் காணப்​பட்டது. இந்தியா, பாகிஸ்​தான், வங்கதேசம், ஆப்ரிக்கா, உகாண்டா போன்ற குறைந்த – நடுத்தர வருமானம் உள்ள நாட்டினரிடம்தான் (LMICs) இது காணப்​பட்டது. வளர்ந்த நாடுகளில் இது காணப்​பட​வில்லை.

அப்போது இதை ‘ஜே வகை சர்க்கரை நோய்’ (Jamaica type diabetes) என்று அழைத்​தனர். இதைத் தொடர்ந்து, ஊட்டச்​சத்துக் குறைபாடு சார்ந்த சர்க்கரை நோய் (Malnutrition-related diabetes mellitus) என்று 1985 இல் உலகச் சுகாதார நிறுவனம் வகைப்​படுத்​தியது. ஆனால், ஊட்டச்​சத்துக் குறைபாடு, புரதச்​சத்துக் குறைபாடு காரணமாகச் சர்க்கரை நோய் ஏற்படு​கிறது என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி 1999இல் இந்த வகையை அந்த நிறுவனம் கைவிட்டது.

தமிழ்​நாட்டு மருத்​துவர்​களின் சாதனை! – நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்​துவக் கல்லூரியின் பேராசிரியர் மெரிடித் ஹாக்கின்ஸ் என்னும் பெண் ஆராய்ச்சி​யாளர் 2005 இல் மருத்​துவச் சொற்பொழி​வுக்​காகப் பல நாடுகளுக்குச் சென்ற​போது, வருமானம் குறைந்த நாடுகளில் ஊட்டச்​சத்துக் குறைபாடு சார்ந்த சர்க்கரை நோய் இருப்பதை அறிந்து, அது தொடர்பான ஆராய்ச்சியை மீண்டும் முன்னெடுத்​தார். ஏற்கெனவே அறியப்​பட்​டிருக்கும் முதலாம் வகை, இரண்டாம் வகை சர்க்கரை நோய்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த நோய் இருப்பது அவரது கவனத்தை ஈர்த்தது.

இதனால், 2010 இல் ஐன்ஸ்டைன் சர்வதேச சர்க்கரை நோய் நிறுவனத்தை நிறுவி, ஓர் ஆராய்ச்சிக் குழுவையும் அமைத்​தார். இந்தக் குழுவில் தமிழ்​நாட்​டிலிருந்து வேலூர் கிறிஸ்துவ மருத்​துவக் கல்லூரி (CMC) மருத்​துவர்கள் நிஹல் தாமஸ், ரித்தி தாஸ்குப்தா என்னும் இருவரையும் இணைத்​துக்​கொண்​டார். பின்தங்கிய சமூகப் பொருளா​தாரப் பின்னணியில் இருந்த 73 இந்திய ஆண்களிடம் 12 ஆண்டுகள் இந்த ஆராய்ச்சியை இவர்கள் மேற்கொண்​டனர். இதில் பங்கெடுத்​தவர்​களில் 20 பேருக்கு ஊட்டச்​சத்துக் குறைபாடு சார்ந்த சர்க்கரை நோய் இருப்பதை இவர்கள் உறுதிப்​படுத்​தினர்.

எப்படி? ஆராய்ச்சிக்கு வந்தவர்​களில் உடல் எடை குறைந்த சர்க்கரை நோயாளிகளை ஒரு பிரிவிலும், உடல் எடை குறைந்​திருப்​பவர்கள் ஆனால் சர்க்கரை நோய் இல்லாதவர்களை அடுத்த பிரிவிலும் சேர்த்​துக்​கொண்​டனர். மூன்றாவது பிரிவில் இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களை இணைத்​துக்​கொண்​டனர். இவர்கள் எல்லாருக்கும் மரபுத்​தன்மை காரணமாகச் சர்க்கரை நோய் வரவில்லை என்பதை முதலிலேயே உறுதிப்​படுத்​திக்​கொண்​டனர்.

பின்னர், ரத்தத்தில் சி-பெப்டைடு சுரப்பை அளந்து (C-peptide deconvolution) இவர்களுக்குத் தினமும் இன்சுலின் எவ்வளவு சுரக்​கிறது என்பதைத் தெரிந்து​கொண்​டனர். இதை மூன்று பிரிவினரிடமும் ஒப்பிட்டுப் பார்த்த​போது, முதலாம் பிரிவில் இருந்​தவர்​களுக்கு இன்சுலின் சுரப்பு மிகவும் குறைவாக இருந்தது. இவர்கள் உடலில் உறுப்புக் கொழுப்பும் (Visceral Fat) வயிற்றுக் கொழுப்பும் (Adipose Fat) இல்லை. கல்லீரலிலும் கொழுப்புச் சுரப்பு அதிகமாக இல்லை. ஆனாலும், இவர்களுக்குச் சர்க்கரை நோய் வந்திருக்​கிறது. ஊட்டச்​சத்துக் குறைவினால் கணைய வளர்ச்சி குறைந்து​போனதுதான் இதற்குக் காரணம் என்பதை மெய்ப்​பித்​தனர்.

இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரை 2022 இல் ‘டயபெடிக் கேர்’ (Diabetic Care) என்னும் ஆய்விதழில் வெளிவந்தது. 2023 இல் ‘சயின்​டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American) என்னும் ஆய்விதழ் இதை மதிப்​பாய்வு (Peer review) செய்தது. 2025 ஏப்ரல் 7 இல் பாங்காக்கில் நடைபெற்ற உலகச் சர்க்கரை நோய் காங்கிரஸ் (World Diabetes Congress) மாநாட்டில் சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு (International Diabetes Federation) இந்த ஆராய்ச்சியை அங்கீகரித்து, இந்தப் புதிய நோய்க்கு ‘ஐந்தாம் வகை சர்க்கரை நோய்’ என்று பெயரிட்டது. அதோடு, சர்க்கரை நோய் மாத்திரைகளால் இதைக் கட்டுப்​படுத்த முடியும் என்பதையும் இந்த அமைப்பு தெரிவித்​துள்ளது.

என்ன வித்தி​யாசம்? – முதலாம் வகை, இரண்டாம் வகை சர்க்கரை நோயாளி​களுக்​கும்தான் இன்சுலின் சுரப்பு இல்லாமலோ, குறைந்தோ இருக்​கிறது. அப்படி​யா​னால், இந்த ஐந்தாம் வகை சர்க்கரை நோய்க்கும் மற்ற வகைகளுக்கும் என்ன வித்தி​யாசம்? இந்தக் கேள்விக்கும் ஹாக்கின்ஸ் குழுவினர் பதில் தந்துள்ளனர்.

அதாவது, மற்ற வகை சர்க்கரை நோயாளி​களுக்கு இரத்தச் சர்க்​கரையின் அளவு கடுமை​யாகி​விட்​டால், உயிருக்கு ஆபத்தைத் தருகிற ‘கீட்டோன் அமில மிகைநிலை’ (Ketoacidosis) ஏற்படும். ஆனால், ஐந்தாம் வகை சர்க்கரை நோய் இருப்​பவர்​களுக்கு இந்த நிலைமை ஏற்பட​வில்லை. மேலும், இரண்டாம் வகை சர்க்கரை நோயாளி​களுக்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை இருக்​கும். இவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistant) இல்லை. மாறாக, இன்சுலின் சுரப்பு குறைவாக (Insulin Deficiency) இருந்தது.

ஆராய்ச்சி அளித்​துள்ள எச்சரிக்கை: இந்தியா உள்பட உலகளவில் சுமார் 3 கோடி பேருக்கு ஐந்தாம் வகை சர்க்கரை நோய் இருக்​கிறது. பெரும்​பாலும் ஏழை நாடுகளில்தான் இது காணப்​படு​கிறது. இதுவரை இந்த நோயாளி​களுக்கு முதலாம் வகை சர்க்கரை நோய் இருப்​ப​தாகத் தவறாகக் கணித்து இன்சுலின் சிகிச்சையை வழங்கிவந்​தனர். இனி, இவர்களுக்கான சிகிச்சை மாறும். குறிப்பாக, இன்சுலின் செலவைக் குறைத்​துக்​கொள்ள முடியும். ஒல்லியாக இருப்​பவர்கள் தங்களுக்குச் சர்க்கரை நோய் வராது என இனிமேல் அலட்சியமாக இருக்க முடியாது.

ஊட்டச்​சத்துக் குறைவினால் இவர்களுக்குச் சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தை​களுக்குச் சரியான ஊட்டச்​சத்து கிடைக்​கா​விட்டால் அவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்படலாம். இனி, இந்தக் குழந்தை​களும் சரியான உடல் எடையுடன் வளர்க்​கப்பட வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்​படுத்த அதிக மாவுச் சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாக எடுத்​துக்​கொள்​வது​போல், உடல் எடையைச் சரியாகப் பேண புரதம், ஆரோக்​கியக் கொழுப்பு, ஊட்டச்​சத்து, நார்ச்​சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டியது அவசியம்.

Tags: