Operation Polo 1948 முதல் Operation Sindoor வரை… இந்திய இராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கைகள்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளுக்குள் நுழைந்து Operation Sindoor என்ற பெயரில் 07.05.2025 அன்று இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய இராணுவம் அடுத்தடுத்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. 

நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தற்போது வரை இந்திய இராணுவம் இதுபோல பல்வேறு Operations-களை நடத்தி இருக்கிறது.

Operation Polo 1948

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. இதனையடுத்து Operation Polo என்ற பெயரில் 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ந் திகதி முதல் செப்டம்பர் 18-ந் திகதி வரை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹைதராபாத், இந்தியாவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டது.

Operation Vijay 1961

போர்த்திக்கீசியர்களிடம் இருந்து கோவாவை விடுதலை செய்து இந்தியாவுடன் இணைப்பதற்காக 1961 ஆம் ஆண்டு Operation Vijay என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா விடுதலை பெற்றதுடன் டையூ, டாமன் பகுதிகளும் இந்தியாவுடன் இணைந்தன. 1961-ம் ஆண்டு டிசம்பர் 18, டிசம்பர்19 ஆகிய நாட்களில் மேற்கொள்ளப்பட்டதுதான் Operation Vijay.

Operation Cactus Lilly 1971

அன்றைய கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக இந்திய விமானப் படை மேற்கொண்ட ஆபரேஷன் இது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் திகதி முதல் டிசம்பர் 16-ந் திகதி வரை Operation Cactus Lilly நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒபரேஷனின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகி வங்கதேசம் என்ற தனி சுதந்திர நாடு உருவானது.

Operations Trident, Python 1971

வங்கதேச விடுதலைப் போருக்கான இந்திய கடற்படையின் முதலாவது ஒபரேஷன் இது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4, 5 ஆகிய இருநாட்கள் இந்த ஆபரேஷனை கடற்படை மேற்கொண்டது. இந்த ஆபரேஷனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில்தான் கடற்படை தினமாக டிசம்பர் 4-ந் திகதி கொண்டாடப்படுகிறது.

Operation Meghdoot 1984

ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைக்காக ராணுவம் மேற்கொண்ட ஒபரேஷன் இது. உலகின் மிக உயரமான போர்க்களம்தான் சியாச்சின் போர்முனை. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ல் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு சியாச்சின் மலைப் பகுதி முழுவதையும் இந்திய இராணுவம் தக்க வைத்துக் கொண்டது.

Operation Blue Star 1984

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இராணுவ நடவடிக்கை இது. இந்தியாவில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி பிந்தரன்வாலே தலைமையிலான ஆயுதப் போராட்டத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை இது. சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை இது. இந்நடவடிக்கையில் பிந்தரன்வாலே மற்றும் அவரது ஆயுத குழுவினர் முற்றாக அழிக்கப்பட்டனர். இதற்கு எதிர்வினையாக, இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது சீக்கியர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பழிதீர்க்க, பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியினர் கொன்று குவித்த சீக்கியர் இனப்படுகொலை நிகழ்ந்தது. 

Operation Cactus 1988

மாலத்தீவு அதிபராக இருந்த கயூமுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. மாலத்தீவு தொழிலதிபர் ஒருவருக்காக தமிழீழ விடுதலை கோரிய ஆயுதக் குழுக்களில் ஒரு பிரிவினர் இந்த ஆயுத கிளர்ச்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து அதிபர் கயூம் இந்தியாவின் உதவியை கோரியதால் முப்படைகளும் Operation Cactus 1988 என்ற பெயரில் களமிறங்கி மாலத்தீவு அதிபரை காப்பாற்றின. அதேநேரத்தில் மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, இந்த முயற்சிக்காக தமிழீழ விடுதலை கோரிய ஆயுதக் குழுக்களை மாலத்தீவுக்கு அனுப்பியது ஆகியவை குறித்த சர்ச்சைகளும் இருக்கின்றன.

Operation Rajeev 1987

ஜம்மு காஷ்மீரின் சியாச்சினில் தற்போது Bana Post என்ற அழைக்கப்படுகிற பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்பதற்காக கேப்டன் பனாசிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை இது. Qaid Post என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த பகுதி, இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு Bana Post என மாற்றப்பட்டது.

Operation Pawan 1987

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இந்திய இராணுவத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு Operation Pawan 1987 முதன்மை காரணமாகவும் கூறப்படுகிறது. 

Operation Vijay 1999, Operation Safed Sagar 1999, Operation Talwar 1999

பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தின் போது முப்படைகளும் மேற்கொண்ட ஒபரேஷன்கள் இவை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்று கார்கில் பிரதேசங்களை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டது.

Operation Parakram 2001

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஒத்திகை இது. இந்தியா- பாகிஸ்தான் முன்னரங்கில் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் ஒன்று குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட போர் ஒத்திகை. ஆசிய நாடுகளில் இத்தகைய பிரம்மாண்ட போர் ஒத்திகையை இந்தியாதான் முதன் முதலாக மேற்கொண்டது.

Operation Black Tornado 2008

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மீதான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிப்பதற்கான ஒபரேஷன் இது.தேசிய கமாண்டோ படையின் இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Operation Sindoor 2025

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் 26 பேரை சுட்டுப் படுகொலை செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய இராணுவம் 07.05.2025 அன்று அதிகாலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இது. 

Tags: