கறுக்கும் அமெரிக்கா வெளுக்கும்

George Floyd and the history of police brutality in America - The ...

லகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கம். இதை பயன்படுத்திக் கொண்டு மத்தியஸ்தம் செய்வதாக கூறிக் கொண்டு அந்த நாட்டிற்கு படைகளை அனுப்பி அந்த நாட்டையே விழுங்குவதும் அமெரிக்காவுக்கு கை வந்த கலை. 

உலகின் போலீஸ்காரராக தன்னை கருதிக் கொள்ளும் அமெரிக்கா பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதோடு, இரு நாடுகளுக்கிடையிலான சர்ச்சைகளிலும் மூக்கை நுழைத்து அதில் தனக்கு என்ன ஆதாயம் என்று அலையும்.

ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முனையும் பொழுதெல்லாம் சர்வதேச பயங்கரவாதம் என்கிற வார்த்தையை அமெரிக்கா உச்சரிக்கும். ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என்று ட்ரம்ப் அலறுகிறார். மக்களுடைய கவனத்தை திசை திருப்ப தேவையின்றி சீனா உள்ளிட்ட நாடுகளை வம்புக்கு இழுத்த அவரின் சாகசம் தோற்று விட்டது.

கருப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளாய்ட் (George Floyd) போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது. நிறபேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் அமெரிக்க அரசு காலம் காலமாக பின்பற்றி வரும் நிறவெறிக்கெதிராகவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆணவம், அட்டூழியங்களை எதிர்த்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். 

வெள்ளை மாளிகையின் எல்லை வரை போராட்டத் தீ சுழன்று அடிக்கும் நிலையில் பதுங்கு குழிக்குள் சென்று பம்மிக் கொண்ட ட்ரம்ப், போராடுபவர்களை கலகக்காரர்கள் என்று சித்தரித்து, இவர்களை ஒடுக்க ராணு வத்தை அழைக்கவும் தயங்க மாட்டேன் என்று கொக்கரிக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் நுழைந்து ஈவிரக்கமின்றி மக்களை கொன்று குவித்து ரத்த ருசிகண்ட ஏகாதிபத்தியம் தற்போது தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே வேட்டையாடத் துணிந்துவிட்டது.

The George Floyd Protests Are Being Soundtracked to "This Is ...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான அதிருப்தி அதிகரித்துள்ளது. அமெரிக் காவை திவாலாக்கிய ட்ரம்ப் மீது மக்கள் கொண்டுள்ள கடும் கோபம் இப்போது நடந்து வரும் போராட்டங்களின் வழியே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இப்போது நடப்பது நிறவெறிக்கெதிரான போராட்டம் மட்டுமல்ல, வல்லரசு என்று கூறிக் கொண்டு உலகம் முழுவதும் சண்டியர்த்தனம் செய்வதோடு உள்நாட்டு மக்களை ஓட்டாண்டி ஆக்கிய ஏகாதிபத்திய திமிர்த்தனத்திற்கு எதிரான போராட்டமும் ஆகும். இந்தப் போர்க் களத்தில் அமெரிக்க மக்கள் தனித்து நிற்கவில்லை. ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் நேசிக்கிற உலக மக்கள் அனைவரும் உடனிருக்கிறார்கள்.

தீக்கதிர் தலையங்கம்
ஜுன் 3, 2020

Tags: