30 கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள் உலக உணவு நெருக்கடி மோசமாகிறது

  • 53 நாடுகளில் 29 கோடியே 53 இலட்சம் மக்களுக்கு உடனடி உணவு உதவி தேவை
  • பலஸ்தீனத்தில் 100 சதவீதம் மக்கள் பசியால் வாடுகிறார்கள்
  • 3 கோடியே 77 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்

லகம் முழுவதும் உணவு நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய உணவு நெருக்கடி அறிக்கையின்படி, தற்போது 53 நாடுகளில் 29 கோடியே 53 இலட்சம் மக்கள் உடனடி உணவு உதவி தேவைப்படுபவர்கள் ஆவர்.

மிக மோசமான நிலையில் உள்ள நாடுகள்

பலஸ்தீனம் (காசா பகுதி) உலகின் மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பகுதியாக உள்ளது. இங்கே 100% மக்களுக்கும் உடனடி உணவு உதவி தேவைப்படுகிறது. சூடான், தென் சூடான், யேமன், ஹைட்டி ஆகிய நாடுகளில் சுமார் 50% மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் கடும் பாதிப்பு

6 மாதம் முதல் 59 மாதம் வயது வரையிலான 3 கோடியே 77 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 கோடியே 2 இலட்சம் குழந்தைகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். காசா பகுதியில் உள்ள குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாறியுள்ளனர். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவிட்டனர்.

உணவுப் பஞ்சத்தின் முக்கிய காரணங்கள்

அறிக்கையின்படி, மூன்று முக்கிய காரணங்கள் இந்த உணவு நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன:

  1. போர் மற்றும் மோதல்கள் : 20 நாடுகளில் 13 கோடியே 98 இலட்சம் மக்கள் போர் மற்றும் மோதல்களால் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள்.
  2. காலநிலை மாற்றம் : 18 நாடுகளில் 9 கோடியே 61 இலட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  3. பொருளாதார நெருக்கடி : 15 நாடுகளில் 5 கோடியே 94 இலட்சம் மக்கள் பொருளாதார சிக்கல்களால் உணவு வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள். மக்கள் இடம்பெயர்வு உணவுப் பஞ்சத்தால் 9 கோடியே 85 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 75% பேர் தங்கள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

சர்வதேச சட்ட மீறல் 2018 இல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் 2417-ஐ நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின்படி, போரின்போது மக்களுக்கு உணவு மறுப்பது சர்வதேச சட்ட மீறலாகும். ஆனால் தற்போது பல நாடுகளில் இந்த சட்டம் மீறப்படுகிறது. உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்துவது “இடைக்கால முற்றுகைப் போர்” முறையாகும். இது நவீன காலத்தில் தடை செய்யப்பட்ட முறையாகும். உலகின் கண் முன்பே இஸ்ரேல் இந்த கொடிய செயலில் ஈடுபட்டுள்ளது.

வரலாற்று ஒப்பீடு

1943 இல் நடந்த வங்காள பஞ்சத்தை இந்த அறிக்கை நினைவுபடுத்துகிறது. அப்போது ஆங்கிலேயர்களின் கொடுமையால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர். அதே மாதிரி இன்று பல நாடுகளில் நடக்கிறது. கவிஞர் ஹரிவம்ச ராய் பச்சன் 1943 இல் எழுதிய “வங்காளத்தின் காலம்” கவிதையில்,

“பசி ஒரு பயங்கரமான தேவி, அவள் அநீதியை மெல்லக் கூடியவள், கொடுங்கோலர்களின் ஆட்சியை விழுங்கக்கூடியவள்”
என்று எழுதினார்.

2025 இல் நிலைமை மேலும் மோச மாகும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

காசா பகுதியில் மே-செப்டம்பர் மாதங்களில் ஊட்டச்சத்து நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. தீர்வுகள் அறிக்கை பின்வரும் தீர்வுகளை பரிந்துரைக்கிறது:

  1. உடனடி நிறுத்தம்: அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்
  2. மனிதாபிமான உதவி: அனைத்து பகுதிகளுக்கும் உணவு மற்றும் மருந்து வினியோகம்
  3. விவசாய மறுசீரமைப்பு: அழிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்டெடுத்தல் 4. சர்வதேச ஒத்துழைப்பு: அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

(Economic and Political Weekly, 2025 மே 31 – தலையங்கத்தின் விபரங்களில் இருந்து)

மூலம்: Dangerously Starved

தமிழில்: ராஜுபாய்

Tags: