‘இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்’

“இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இந்தியாவையம் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. (எனினும்) அவர்கள், ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடி, விளாடிமிர் புட்டின், ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் நேற்று (04.09.2025) வெளியிட்ட ட்ரூத் சமூக ஊடக பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் இணைந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சீன செய்தித் தொடர்பாளர், “பிற நாடுகளுடனான சீனாவின் ராஜதந்திர உறவு என்பது மூன்றாம் தரப்புக்கு எதிரான நோக்கம் கொண்டதல்ல.” என அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “இந்திய, சீன, ரஷ்ய தலைவர்களுக்கு இடையேயான நட்புறவு ஒரு தொந்தரவு. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல.” என தெரிவித்திருந்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் சமூக ஊடக பதிவு குறித்து கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், பீட்டர் நவரோவின் தவறான கருத்துகளை அறிந்தோம். அவற்றை வெளிப்படையாக நிராகரிக்கிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புட்டின் விளக்கம்

சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். கடந்த 1-ம் திகதி எஸ்.சி.ஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புட்டின் தனது சிறப்பு காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் ஹோட்டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புட்டினும் பிரதமர் மோடியும் காரில் இரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.
இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 3 ஆம் திகதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் காரில் பேசியது என்ன என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு புட்டின் பதில் அளித்தபோது, “உக்ரைன் போர் தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினேன். இது தொடர்பான விவரங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டேன்” என்றார்.
அதிபர் புட்டின் மேலும் கூறியதாவது: ‘இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை நெருங்கிய கூட்டாளிகள். இந்த 3 நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். எங்களது பொருளாதாரம் மிகவும் வலுவாக இருக்கிறது. எங்களை யாராலும் மிரட்ட முடியாது, தண்டிக்கவும் முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது நட்பு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடாது. மிரட்டும் தொனியில் பேசக்கூடாது. வரிவிதிப்பு மூலம் இந்தியா, சீனாவை யாராலும் மிரட்ட முடியாது. அதிபர் ட்ரம்பின் சொல்லுக்கு இந்திய, சீன தலைவர்கள் கட்டுப்பட மாட்டார்கள்.
ரஷ்யா, உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்த போர் நடைபெறவில்லை. கிரிமியா, டோன்ஸ்க், லுகான்ஸ்க், கேர்சன் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ரஷ்யாவுடன் இணைய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். அந்த பகுதி மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இதுதான் ஜனநாயகம்.
உக்ரைன் போர் தொடர்பாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருண்ட குகையில் கடைசியில் வெளிச்சம் தெரிவது போன்று தெரிகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாஸ்கோவுக்கு வரலாம். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நிலங்களை பறிமாற்றம் செய்வது தொடர்பாக எதுவும் பேசவில்லை. போர் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசினோம். உக்ரைனுடன் சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால் ரஷ்யா தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.’ இவ்வாறு புட்டின் தெரிவித்தார்.
“உலகின் வசமுள்ள தெரிவு… அமைதி அல்லது போர்!” – இராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை

அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2015-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய பேரணியில் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன இராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
மறைந்த சீன தலைவர் மா(வோ) சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு வெற்றிப் பேரணியில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், “இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல், வெற்றியா முழுமையான இழப்பா என்ற தேர்வையும் எதிர்கொள்கிறது. சீன மக்கள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.” என தெரிவித்தார்.
அணிவகுப்பு தொடங்கியவுடன் ட்ரூத் சமூக ஊடகத்தில் தனது கருத்தை பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், “சீனா ஜப்பானிடமிருந்து சுதந்திரத்தைப் பெற அமெரிக்கா உதவியதை சுட்டிக்காட்டினார். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புட்டின், கிம் ஜோங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சீனாவின் வெற்றிப் பேரணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்த அணிவகுப்பை அமெரிக்காவுக்கான சவாலாக நான் பார்க்கவில்லை என்றும் ஜி ஜின்பிங்குடன் மிகச் சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

சீன இராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நேற்று விழா நடத்தப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனாவின் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
சீனாவின் நவீன ஏவுகணைகளும் இராணுவத் தளவாடங்களும் போர் விமானங்களும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்தவெளி வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்ட ஜி ஜின்பிங், “எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சீனா அஞ்சாது, மனிதகுலமானது போர் அல்லது அமைதி ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த அணிவகுப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும், அமெரிக்கர்கள் சிந்திய இரத்தத்தையும் அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
சீன வெற்றிக்காக உயிரிழந்த அமெரிக்கர்கள் மதிக்கப்படுவார்கள், நினைவு கூரப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். அமெரிக்காவுக்கு எதிராகச் செய்யும் சதிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சுமார் இரண்டரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்ய நாட்டுக்கு வருமாறு கிம் ஜாங் உன்னுக்கு, ரஷ்ய அதிபர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ) பங்கேற்பதற்காக 2 நாள்கள் சீனப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளாமல் நாடு திரும்பி உள்ளார்.