மௌனம் சம்மதமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். ஏற்கெனவே ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான எண்ணெய்யை வாங்கினாலும் இனிமேல் தொடரமாட்டார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறுவது இது இரண்டாவது முறை.
ஆனால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இதுவரை ஒன்றிய அரசு தரப்பில் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ட்ரம்ப் திரும்பத் திரும்ப இந்தியா தன்னிடம் உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியோ அவரது அமைச்சரவை சகாக்களோ வாய்திறக்க மறுக்கிறார்கள். இது இந்திய மக்களை அவமதிப்பதாகும்.
ஒருவேளை ரஷ்யாவிடம் இனிமேல் எண்ணெய் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருந்தால் அதை இந்தியத் தரப்பில் தான் தெரிவிக்க வேண்டும். மாறாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் ட்ரம்ப்பிடம் அவ்வாறு ஒன்றிய அரசு உறுதி அளித்திருக்கிறதா இல்லையென்றால் ட்ரம்ப் பொய் சொல்கிறாரா என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த முறை ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று வெளிப்படையாகவே நிர்ப்பந்தம் செய்தார். பிறகு இந்தியத் தரப்பும் இதற்கு இணங்கியது. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறதா? அமெரிக்காவுடன் இந்திய தரப்பில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறுவதன் மர்மம் என்ன?
ட்ரம்ப் இவ்வாறு அத்துமீறுவது இது முதன்முறையல்ல. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த இந்திய-பாகிஸ்தான் போரை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று 40 இற்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். பாகிஸ்தான் தரப்பு ஒருவகையில் இதை ஒப்புக்கொண்ட நிலையில் பிரமதர் நரேந்திர மோடி மௌனம் சாதித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளால் துளைத்த போதும் பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை. கடைசியில் இந்தப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என்று பொத்தாம் பொதுவாகத்தான் ஒன்றிய அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இப்போது ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்க முயலும் ட்ரம்ப் இந்தியா எண்ணெய் வாங்காது என்று கூறுகிறார் என்றால், இந்தியாவின் அயல்துறை கொள்கையை தீர்மானிப்பது யார்? என்ற கேள்வி எழுகிறது. மோடி அரசின் சர்வதேச செய்தித் தொடர்பாளராக ட்ரம்ப் செயல்படுகிறாரா? இந்தியாவை தொடர்ந்து ட்ரம்ப் அவமதிப்பதும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பிரதமர் மோடி அவருக்கு தொடர்ந்து வாழ்த்து மடல் வாசிப்பதும் நம் நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.
-தீக்கதிர்
2025.10.19
இந்தியப் பிரதமர் மோடி மௌன சாமியார் ஆகிவிடுகிறார்
–ஆனந்த்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என எனது நண்பர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருக்கிறார். ஆனால், அந்த நல்ல நண்பர் திடீரென மௌன சாமியார் ஆகிவிடுகிறார். ஒபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறும்போதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கும் என மோடி கூறியுள்ளார் என ட்ரம்ப் கூறும்போதும் அவர் மௌன சாமியாராகிவிடுகிறார்.
இதற்கிடையில், 2025 ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் சீனா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சீனா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்கறை 49.6 பில்லியன் டொலராக இருந்தது. அது தற்போது 54.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.