மேதினத் தியாகிகளின் நினைவலைகள்

– பெரணமல்லூர் சேகரன்

“எங்களைத் தூக்கிலிடுவதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால்…
இலட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோரும், துன்பங்களில் உழல்வோரும் விடுதலைக்காக எதிர்பார்த்திருக்கும் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நினைத்தால்…
இதுதான் உங்கள் எண்ணம் என்றால், எங்களைத் தூக்கிலிடுங்கள்!
இங்கு நீங்கள் ஒரு சிறு தீப்பொறியின் மீது கால் வைக்கிறீர்கள்…
ஆனால் இங்கே…
அங்கே….
உங்களுக்குப் பின்னால்….
முன்னால்….
எங்கும் தீப்பந்தங்கள் ஒளிரும்!
இது நீறுபூத்த நெருப்பு….
உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களுக்கு எதிரான அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும்!
உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயமே.”

தூக்குமேடையில் மேதினத் தியாகிகள் முழங்கிய முழக்கமிது.

உலகம் முழுவதிலும் உழைப்பாளி மக்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்பட்ட காலமது. குறிப்பாக அமெரிக்காவில் அனலுக்கு அருகில் நின்று கொண்டு 15-17 மணி நேரம் உழைத்தார்கள். படகு ஓட்டுபவர்களுக்கு 15 மணி நேர வேலை. டிராம் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் காலை, மாலை என இரு பிரிவுகளாகப் பிரித்து மொத்தம் 15-16 மணி நேரம் வேலை பார்த்தார்கள்.

1872 இன் குளிர் காலத்தில் பட்டினியால் வாடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் “ரிலீஃப் அண்ட் எய்ட்சு சொசைட்டி” நோக்கி உணவு வாங்கப் பணம் கேட்டுப் பேரணி நடத்தினார்கள். அவர்கள் சிகாகோ நதியின் கீழே செல்லும் சுரங்கப் பாதைக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள். அங்கு தடியடி நடத்தப்பட்டது. இது சிகாகோ வரலாற்றில்” ரொட்டிக் கலவரம்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

1877 வாக்கில் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்க முதலாளிகள் அஞ்சி நடுங்கினார்கள். பத்திரிகைகள் மிகைப்படுத்தி எழுதி அச்சத்தை அதிகரித்தன. 1877 வேலைநிறுத்தம் கிழக்கே விர்ஜீனியா மற்றும் பென்சில்வேவேனியாவில் ஆரம்பித்தது. சிகாகோவில் ஜூலை 23 அன்று வேலைநிறுத்தம் துவங்கியது. தென்மேற்கே சிகாகோ, பர்லிங்டன் மற்றும் குவின்சி ரவுண்ட் ஹவுஸ் பகுதிகளில் 8000 தொழிலாளர்கள் கூடினர். காவல்துறை மூவரைக் கொன்று, ஏழு பேரைக் காயப்படுத்தி, அந்த 8000 பேரையும் கலைத்தது. ஜூலை 26 அன்று சிகாகோவிற்கு மேலும் கூடுதலாக இராணுவத் துருப்புகள் வந்தன. அவையெல்லாம் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தன. இது ‘வயாடக்ட் போர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தொழிலாளர் சங்கம் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை பற்றி முதலாளிகளுடன் பேச ஏற்பாடு செய்திருந்தது. இக் கூட்டத்திற்கு மன்றத்திடம் உத்தரவும் வாங்கியிருந்தது. இருந்தபோதிலும் காவல்துறையினர் கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தினர். தப்ப முயன்ற தொழிலாளிகளைச் சுட்டபோது டெஸ்மன் என்ற தொழிலாளி இறந்தார். அனுமதி பெற்று நடந்த போராட்டம் என்பதால் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. சிகாகோ காவல்துறையினரின் தவறைச் சுட்டிக் காட்டி ஒரு டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

1877 ரயில்வே வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கு மூன்று விசயங்களை உணர்த்தியது. ஒன்று நகரத்தின் ‘நிறுவனங்களை’ எதிர்த்துப் போராட அவர்களுக்கு இன்னும் அதிகமான அரசியல் செயல்பாடுகள் தேவை என்பது. இரண்டாவதாக பெரிய செய்தித்தாள்களை நம்ப முடியாது என்பதால், தம் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்ல, அவர்களுக்கு என்று பத்திரிகைகள் வேண்டும். மூன்றாவதாக தொழிலாளர்கள் பலரும் போலீஸ் தாக்குதலைச் சமாளிக்க தங்களிடம் ஆயுதமேந்திய குழு இருக்க வேண்டும் என்று கருதினார்கள்.

1884-85களில் சிகாகோவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதும் மெக்கார்மிக் கம்பெனி தனது மூலதனமான இரண்டரை மில்லியன் டொலரில் ஆண்டுதோறும் 71 சதவீதம் இலாபம் ஈட்டியது. இதைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் 1884 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களையும், கதவடைப்புகளையும் செய்து வந்தனர். இது 1886 மே வரை தொடர்ந்தது. 1886 மே 1ல் நாடெங்கிலும் உள்ள 12000 தொழிற்சாலைகளில் இருந்த 3 இலட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைக் கீழே போட இயக்கம் துவங்கியது. ஒரு சங்க நகரமாக சிகாகோ நகரின் பலத்தைக் காட்டும் வண்ணம் அங்கு 80000 தொழிலாளர்கள் இருந்தார்கள். போராட்டம் துவங்கும் முன்னரே, சிகாகோவின் 45000 தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

மே 2 ஞாயிறன்று சிறுசிறு ஊர்வலங்கள் நடந்தாலும் மே 3 திங்களன்று மெக்கார்மிக் தொழிற்சாலை அருகே ஓகஸ்ட் ஸ்பைஸ் பேசிய கூட்டம், மே 4 செவ்வாயன்று நடந்த ஹேமார்க்கெட் சதுக்கக்கூட்டம் என இரண்டு பெரும் கூட்டங்களும் ஈர்த்தன. 6000 தொழிலாளர்களுக்கு நடுவே ஒரு டிராம் வண்டியின் மீது ஏறி நின்று பேசிய ஓகஸ்ட் ஸ்பைஸின் சுருக்கமான உரைக்குப்பின் ஆல்பர்ட் பார்சன்சின் ஒரு மணிநேரப் பேச்சு முடிந்தது.

காவல்துறையினரின் திடீர் தாக்குதல் துவங்கியது. கூட்டங்களைக் கட்டுப்படுத்த பல மாதங்களாகப் பயிற்சி செய்து வந்த புதிய வகை இராணுவ அணிவகுப்பைக் காவல்துறையினர் பயன்படுத்தினர். வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. குண்டு காவல்துறையினரின் நடுவே விழுந்து ஒருவர் இறக்க, பலர் பலத்த காயமடைந்தனர். காவல்துறையினர் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் இறந்தனர். பதட்டத்தில் காவல்துறையினர் தமது ஆட்களின் மீதே சுட்டனர். காவல்துறையினர் ஆறு பேர் இறந்தனர்.

அடுத்த பல வாரங்களுக்கு சிகாகோவிலும், நாட்டின் பல பகுதிகளிலும் பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை தடை செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு இன மக்களின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இத்தகைய வன்முறைக்கு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ என்ற அமைப்புதான் காரணம் என பழி சுமத்தப்பட்டது. செய்தித்தாள்கள், வர்த்தகர்கள், பின்னர் பொதுமக்கள் என தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் திரும்பினர். அனைவரும் சட்டம் ஒழுங்கு வேண்டும் என்று கூச்சலிட்டனர். இதன் தொடர்ச்சியாக எட்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அதில் நால்வர் 1887 நவம்பர் 11 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

சிகாகோ நகரின் ஹப்பர்ட் தெரு காவல் நிலையத்திற்கு இடையில் உள்ள சந்தில், நடைபாதையில் தூக்குமேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையின் முன்பாக பார்வையாளர்களாக 200 பேர் கூடியிருந்தனர். அந்த தூக்கு மேடையில் ஓகஸ்ட் ஸ்பைஸ், பிஷர் , எங்கேல், பார்சன்ஸ் ஆகிய நால்வரும் எவ்விதக் கவலையுமின்றி தங்களுக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஸ்பைசின் கழுத்தில் கயிறு இறுக்கமாக இருந்தது. அது சற்று வசதியாக சரி செய்யப்பட்டவுடன் அவர் புன்னகையுடன் ‘நன்றி’ என்றார். பின்னர் “இன்று நீங்கள் நெரிக்கும் எங்கள் மௌனம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும் காலம் ஒன்று வரும்.” என்றார் ஸ்பைஸ். அவரைத் தொடர்ந்து ஃபிஷரும், எங்கேலும் “இதுதான் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்” என்றனர். கடைசியாக பார்சன்ஸ் “ஓ அமெரிக்கர்களே! நான் பேச அனுமதிக்கப்படுவேனா?.. என்னைப் பேச விடுங்கள்! மக்களின் குரல் கேட்கட்டும்” என்றார். அடுத்த சில நிமிடங்களில் அந்த நால்வரும் நின்று கொண்டிருந்த அந்த மேடையின் அடிப்பலகை உருவப்பட்டது. உயிரற்ற அந்த நான்கு உடல்களும் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன.

நவம்பர் 13 அன்று மில்வாக்கி சாலையில் சிகாகோ நகர் மையம் வழியாக உணர்வுப்பூர்வமான பெருந்திரள் இறுதி ஊர்வலம் சென்று வால்ட் ஹைமில் முடிந்தது.

1889 ஜூலை 14 இல் பாரீசில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவில் சிகாகோ தியாகிகளின் நினைவாக மேதினம் சர்வதேசத் தொழிலாளர் தினமாக ஏற்கப்பட்டது. 1893 ஜுன் 25 அன்று வால்ட்ஹைம் கல்லறையில் தியாகிகள் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.

மேதினத் தியாகிகளின் ஒப்பற்ற தியாகத்தின் விளைவால் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமை உலகமயமாக்கல் கொள்கையின் விளைவால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பறிபோய்க் கொண்டிருக்கிறது. மூலதனத்தின் கோரத் தாண்டவம் தொழிலாளி வர்க்கத்தைச் செக்கிலிட்ட எள்ளாய்ப் பிழிகிறது. அரசுத்துறைகளில், தனியார் நிறுவனங்களில் என எங்கு நோக்கினும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் மீது பணிச்சுமை கூடுதலாக சுமத்தப்பட்டு உழைப்புச் சுரண்டல் அரங்கேறி வருகிறது. இதனால் எட்டு மணி நேர வேலை கேள்விக் குறியாகிவிட்டது.

மேதினத்தைத் தொழிலாளர்கள் இன்பமாகக் கொண்டாட இயலாத நிலையே முதலாளித்துவ நாடுகளில் நிலவுகிறது. மேதினத் தியாகிகளின் நினைவைப் போற்றும் அதே வேளையில் அவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறை உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அரசு எனும் அடக்குமுறைக் கருவி பிரயோகித்த போதிலும் நம் முன்னோர்கள் போராடி, செங்குருதி சிந்தி, இன்னுயிர் நீத்துப் பெற்ற தொழிலாளர்களின் எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகளுக்கான வர்க்கப் போரினைத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்கும் நாளிது.

(நவம்பர் 11: மேதினத் தியாகிகளின் நினைவு நாள்)

Tags: