ரஷ்ய அதிபர் புட்டினின் இந்திய வருகையும், இந்தியாவின் வெளியுறவு கொள்கையும்!

-ச. அருணாசலம்

ந்தியா  தற்போது அதிகமாக அமெரிக்க சார்பு அரசியலை முன்னெடுத்தாலும், பாரம்பரியமான இந்தியாவுடனான தன்னுடைய நட்பை ரஷ்யா வலுவாக கைக் கொண்டுள்ளது. புட்டினின் இந்திய வருகையும், கையெழுத்தான ஒப்பந்தங்களும், இது சர்வதேச அளவில் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் குறித்த ஒரு அலசல்.

உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யா தன்னகத்தே 11 நேர மண்டலங்களை கொண்ட பரந்த நாடு, உலகிலேயே மிக அதிகமான கனிம தாது இருப்புகளை (73 டிரில்லியன் டொலர் மதிப்பு) கொண்ட அந்த ரஷ்ய நாட்டின் அதிபர் புட்டின் இரண்டு நாள் அரசு வருகையாக இந்தியா வந்தார். இந்திய ருஷ்ய உச்சி மாநாட்டில்  கலந்து கொண்டதன் மூலம் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தி உள்ளார் புட்டின்!

இதையடுத்து புது டெல்லியே விழாக் காலம் பூண்டது. இந்தியாவின் பிரதமர் மோடியுடனும், குடியரசு தலைவர் திருமதி முர்முவுடனும் பேச்சுவார்த்தைகளில் புட்டின் கலந்து கொண்டு, விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்!

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை புட்டின் போன்ற வெளிநாட்டு தலைவர்கள், ஆளுமைகள் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அரசு அளித்த அதிகாரபூர்வ விருந்தில் கலந்து கொள்ள நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும், பிரதான எதிர்கட்சியான காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே அவர்களுக்கும் அழைப்பு இல்லை! ஆனால் சசி தரூருக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மோடி அரசின் “சின்ன புத்தியை” இது காட்டுகிறது எனலாம்.

இந்திய அரசுடனான ரஷ்யக் குழுக்களின் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் 05.12.2025 அன்று நடந்த கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி, இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 2030 க்குள் 100 பில்லியன் டொலர் அளவு உயரும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் புட்டின், இந்தியா ரஷ்யா இடையே கேந்திரமான நட்புறவு மென்மேலும் வளரும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா ரஷ்யாவுடன் எரிசக்தி (Energy sector) துறையில் மட்டுமின்றி,

அணு சக்தி துறையில் கூட்டுறவு, கல்வித் துறை பரிமாற்றங்கள்,

சுகாதாரத்துறையில் உறவை மேம்படுத்துதல்,

மீன்வளம், இறைச்சி மற்றும் பால் போன்ற துறைகளில் வர்த்தக உறவுகளை வளர்த்தல், வேளாண்துறையில் இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை மேம்படுத்துதல். போன்ற பல்வேறு அம்சங்களில் உறவுகளையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த இரு நாடுகளும் இலக்குகளை நிர்ணயித்து முடிவுகளை எட்டியுள்ளனர்.

இத்துடன் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விவகாரம், ரஷ்ய நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வது தொடருமா என்பது தான் !

ஏனெனில், ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியா கச்சா எண்ணை இறக்குமதி செய்வதை அமெரிக்க ட்ரம்ப் நிருவாகம் விரும்பவில்லை. அதனால் இந்தியாவின் ஏற்றுமதி மேல் 25% வரியும், அபராதமாக 26% வரியும் விதித்துள்ள ட்ரம்ப்பின் நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் மிக பாதிப்புக்குள்ளான நிலையில் மோடி அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அமெரிக்கர்கள் மத்தியில் மட்டுமின்றி, இந்தியர்கள் மத்தியிலும் வலுவாக எழுந்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் எண்ணை இறக்குமதி சமீபமாக – கடந்த மூன்று நான்கு மாதங்களில், அமெரிக்காவின் அபராத வரிக்குப்பிறகு – பெருமளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட (2024) இந்த ஆண்டு இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் அளவு 38% குறைந்துள்ளது!

ஆனால ரஷ்ய அதிபர் புட்டின், “தங்குதடையற்ற எரிசக்தியை இந்தியாவிற்கு ரஷ்யா ஏற்றுமதி செய்யும்“ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியா இராணுவ தளவாடங்களை வாங்குவதை குறைத்து கொள்ள வற்புறுத்தி வரும் வேளையில், இந்திய பிரதமர் இரு நாட்டிற்கிடையேயான வர்த்தகம் 100 பில்லியன் டொலர் அளவு உயரும் என பொதுவாக கூறியுள்ளார். அவற்றில் கச்சா எண்ணெய் இறக்குமதி, S400 போன்ற இராணுவ தளவாடங்கள் மற்றும் இராணுவ கூட்டுறவுகள் ஆகியவற்றின் பங்கின் அளவை வெளிப்படையாக கூறவில்லை.

ஆனால், அதிபர் புட்டின், “நாங்கள் , பாதுகாப்பு , வர்த்தகம்,பொருளாதாரம் மற்றும் கலாச்சார துறைகளில் எங்களது கூட்டுறவை மேம்படுத்த முன்னுரிமை கொடுப்போம்“ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வர்த்தகத்தை தத்தமது நாட்டு பணத்தை  கொண்டே நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். இம்முயற்சி  சர்வதேச வர்த்தக சந்தையில் டொலரின் சர்வதேச ஆதிக்கத்திற்கும், மேற்கத்திய  நாட்டு வங்கி பரிவர்த்தனை முறையான ஸ்விஃப்ட் (SWIFT) அமைப்பு  முறைக்கும்  மரண அடி  கொடுக்கும் செயலாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகள், வர்த்தக தடைகள், தொழில்நுட்ப தடைகள் போன்றவற்றை பிரயோகித்தன, மேலைநாட்டில் உள்ள ரஷ்ய சொத்துக்களை, ரஷ்ய இருப்பு நிதியை முடக்கியும் வைத்தன.

இத்தனைக்கு பிறகும் ரஷ்யாவை வீழ்த்த முடியாமல், அமெரிக்கா இன்று இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்கிறது என்ற காரணத்தினால்- அபராத வரி விதிப்பும் தடைகளையும் அமுல் செய்துள்ள சூழலில் இந்திய பிரதமர் மோடி, “இந்தியா நடுநிலையாக இல்லை, அமைதியின் பக்கம் தான்  இருக்கிறது”  என்று கூறியுள்ளார்.

இதை தனது நண்பர் ட்ரம்ப்பிற்காக கூறுகிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.

உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என புட்டினிடம் தாம் தெரிவித்ததாக மோடி கூறியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா சென்ற மோடி, ‘இந்த யுகம் யுத்தங்களின் யுகமல்ல’ என்று தான் புட்டினிடம் கூறியதாக அறிவித்த மோடி, இன்று ரஷ்ய நாட்டுடன் பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தைதீட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய ரஷ்ய உறவுகள் ஒரு துருவ நட்சத்திரம் போல உலக அரசியலில் உலக  நாடுகளின் சர்வதேச உறவுகளில் திகழ்ந்து வந்துள்ளது.

நேரு – குருச்சேவ் காலத்திலிருந்து ,

 இந்திரா – பிரஷ்நேவ் காலத்தை கடந்து,

ராஜீவ் – கோர்பசேவ் காலம்வரை

இந்தியாவின் உற்ற நண்பனாக, ஆபத்பாந்தவனாக சோவியத்யூனியன் இருந்தது.

அதற்கு பின்னரும் இந்தியா தடம் புரண்டாலும், புட்டின் தலைமையிலான ரஷ்யா  இன்றுவரை இந்தியாவின் உற்ற நண்பனாக ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்றி தொடர்ந்து வந்துள்ளது. இதை எண்பதாண்டு கால நட்பு என மோடி பாராட்டாமல் இருக்க முடியாது!

ஆனால் – டிசம்பர் 4,5 – இரண்டு நாட்களில் இரு நாடுகளின் இடையே ஏற்பட்டுள்ள உறவு வளர்ச்சி அறிக்கைகளில் பல்வேறு துறைகளில் குறிப்பாக அணுசக்தி உற்பத்தி மற்றும் ரஷ்யாவில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற அம்சங்கள் கூறப்பட்டாலும், எரிபொருள் (கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு) இறக்குமதி மற்றும் S400 மற்றும் S500 போன்ற ராணுவ தளவாடங்கள் பெறுவது போன்ற விவகாரங்களில் இந்தியா (மோடி அரசு) பம்மி பதுங்குவதை மறைக்க முடியாது. ரஷ்ய அதிபர் புட்டினின் கோரிக்கை மற்றும் அறிவிப்புகளுக்கு பின்னரும் இந்தியா பொத்தாம் பொதுவாக (100 பில்லியன் டொலர் வர்த்தகம்) பேசுவது இந்த தயக்கத்தை காட்டுகிறது.

ஒற்றை பேராளுமை என்ற உலக நியதியில் இருந்து பன்முக ஆளுமை நோக்கி உலகச்சூழல் மாறியுள்ள நிலையில், இந்தியா தனக்கு இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துகிறதா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அமெரிக்கா ஐரோப்பாவை தவிர்த்த யூரேசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தோ பசிபிக் போன்ற பகுதிகளில் உள்ள நாடுகளோடு இந்தியாவின் உறவையும் இடத்தையும் நிலை நிறுத்துவதும், மேம்படுத்துவதும் இந்திய அயலுறவுக்கொள்கையின் அடிநாதமாக இருக்க வேண்டும். இந்திய மக்களின் நலனே அதற்கு உரைகல்லாக இருக்க வேண்டும் .

ஆனால், இந்தியா பிரிக்ஸ், ஷங்காய் கூட்டுறவு குழும்ம் (BRICS, SCO) ஆகியவற்றின் உறுப்பினராக இருக்கும் சூழலில், அமெரிக்காவின் குவாட் கூட்டமைப்பிலும் தன்னை பிணைத்து கொண்டு, இராணுவ ஒப்பந்தங்களில் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது.

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பணிந்து மோடி அரசு அமெரிக்க விமானங்களை-113 ஜெட் ரக விமானங்களை- வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அதிக விலை கொடுத்து அமெரிக்க எரிவாயுவை -LPG- வாங்குகிறது.

ரஷ்யாவுடன் (Reciprocal Exchange of Logistics Agreement ) லாஜிஸ்டிக்ஸ் ஒப்பந்தம் 2025 பெப்ரவரியில் போட்ட பிறகும், மோடி கடந்த செப்டம்பரில் சீனாவில் நடந்த எஸ். சி. ஓ (SCO) மாநாட்டில் பங்கு பெற்ற பின்னரும், அமெரிக்காவுடன் கடந்த நவம்பர் மாதம் இந்தியா குவாட் ஒப்பந்தத்தின் ஒரு கூறாக இந்திய துறைமுகங்களை விமான தளங்களை அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உபயோகித்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளது.

ட்ரம்பின் பார்வை எல்லாம் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை விடுத்து, இன்று தென் அமெரிக்காவை நோக்கி இருக்கையில், நேட்டோவையும் ஐரோப்பிய யூனியனையும் கூட புறந்தள்ளும் வேளையில், இந்தியாவின் இடம் அமெரிக்காவின் தொங்கு சதையாக மாறுவதா நாம் எண்ணி பார்க்க வேண்டும் .

ரஷ்யாவும் சீனாவும், ஏன் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்தை தத்தமது தேசிய நாணயங்களின் மூலம் (National Payments System) நடத்துவதை முன்னெடுக்கின்றன. இதில் இந்தியா – மோடி அரசு- உறுதியாக இல்லை என்பதும், இந்த பேச்ச்சு வார்த்தை முடிவுகளில் தெரிகிறது.

எனவே இறுதியாக புட்டின் இந்தியாவிற்கு ஏராளமான வாய்ப்புக்களை – குறைந்த  விலையில் எரி பொருள் அளிப்பது, S400 மற்றும்  S500 போன்ற  உயர்ரக  ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்பம் அளிப்பது, யுரேசிய பகுதியில்  இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்துவது, ரூபாய் ரூபிள் பரிமாற்றத்தை  வளர்ப்பது  போன்ற – வழங்கிய பின்னரும் இந்தியா இந்த வாயப்பை பயன்படுத்தி கொள்ளுமா? என்பது கேள்விக் குறி!

அமெரிக்க மோகத்திலிருந்து இன்னும் இந்தியர்கள் விடுபடவில்லை, மோடி நிச்சயமாக விடுபடவில்லை!

இரு நாட்டு உறவுகளை இரு தலைவர்களின் உறவாக சிறுமைப்படுத்தும் மோடியின் குறுகிய பார்வை, இந்திய நாட்டு நலன்களுக்கு உதவப் போவதில்லை. அதே வேளையில் அத்தகைய “தலைவர்களின் உறுதி மொழிகளும் , உடல் மொழிகளும்” சாசுவதமல்ல என்பதை பிற நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, இந்திய மக்களும் உணர்ந்துள்ளனர்.

Tags: