தியாகத்தில் காந்திக்கு இணையானவரே கஸ்தூரிபாய்!

-பீட்டர் துரைராஜ்

குடும்பத்தை முக்கியமாகக் கருதாமல் நாட்டையும், மக்களையுமே பெரிதெனக் கருதி இயங்கிய ஒரு தலைவனுக்கு முழு ஒத்துழைப்பும் தந்து, ஒன்றாக களத்திலும், சிறையிலும் தொடர்ந்தவர் அன்னை கஸ்தூரிபாய்! காந்திக்கும், கஸ்தூரிபாய்க்குமாக ஆத்மார்த்தமான பிணைப்பை இந்த நேர்காணலில் விளக்குகிறார் முனைவர் ம.பிரேமா!

ஒரு மனைவி என்ற முறையில் கஸ்தூரிக்கும்,  காந்திக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது ?

திருமணம் முதல் கஸ்தூரிபாய் இறக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணக்கமாகவே வாழ்ந்தனர். இருவருக்கும் ஒரே வயது; 13 வயதில் திருமணம் நடந்தது. மணவறையில் இருவரும் ஒருவரையொருவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கை பிடித்து விளையாடிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். இருவரும் பெரும் ஈடுபாட்டோடும்,  விருப்பத்தோடும் இல்லறத்தில்  ஈடுபட்டிருக்கிறார்கள். பிரமச்சரியத்தை  கடைபிடிப்பது என்பதை  இருவரும் சேர்ந்து 1901 ஆம் ஆண்டு ஆலோசனை செய்கிறார்கள்.  சில ஆண்டுகள் கழித்து 1906ல் பிரம்மச்சரியத்தை நிரந்தரமாக தொடர்வது என்ற முடிவை இருவரும் சேர்ந்தே எடுக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு வயது 36.

கஸ்தூரிக்கு உண்மையானவராக, நம்பிக்கைக்கு உரியவராக காந்தி  கடைசி வரை இருந்திருக்கிறார். கஸ்தூரிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இரவு நேரங்களில் காந்தி தன் மனைவிக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆகாகான் மாளிகையில் சிறையில் இருந்தபோது கூட, கணிதம், வானவியல் குறித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  காந்தியின் குளியலறைக்கு கதவுகள் இல்லை. குளித்துக் கொண்டு  பேட்டிகள் கூட கொடுத்திருக்கிறார். ஒளிவுமறைவற்ற வாழ்க்கைத்தான் காந்தியுடையது. சரளா தேவியை தனது ஆன்மீக மனைவி (spiritual wife) என்று அவர்  அறிவித்த போது  கூட  கஸ்தூரி பாய், தனது கணவனை சந்தேகித்தது இல்லை.

காந்தி தன் கையால் நூற்ற கதர் புடவையை அணிந்து கொண்டு, காந்தி மடியில் தலை வைத்தபடியே கஸ்தூரி இறந்தார், அவர் தனது கணவரிடம் வேண்டியதும் இது ஒன்று தான். அவரது எண்ணப்படியே நடந்தது.  ஒவ்வொரு ஆணும் பெண்ணும், காந்தி – கஸ்தூரியைப் போல வாழ வேண்டும் என்று விரும்பக்கூடிய வகையில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் காந்தி தம்பதியினரை விரும்பும் பலரும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு கஸ்தூரி என்ற பெயரை வைத்தார்கள்.

இளம் வயதில் காந்தியும், கஸ்தூரிபாயும்!

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது கஸ்தூரிபாய் காந்தியோடு சண்டை போட்டுள்ளாரே ?

காந்திக்காக கஸ்தூரி விட்டுக் கொடுத்த நிகழ்வுகள் அனேகம்! காந்தி அடிப்படையில் கொள்கையில் பிடிவாதக்காரர்! அவரை அனுசரித்து வாழ்வது எந்தப் பெண்ணுக்கும் சவாலானதே! அதை கஸ்தூரிபா சிறப்பாகவே செய்தார். கஸ்தூரிபாய் நகைகளை விற்று  தான் காந்தி படிப்பதற்காக இங்கிலாந்து செல்கிறார். தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு பிரிவு உபச்சார விழாவின்போது, நகைகளை அன்பளிப்பாக தருகிறார்கள். இதனை குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் திருப்பித் தர வேண்டும் என்று காந்தி கூறுகிறார். நமது சேவைக்காக, நமக்கு கொடுத்த நகைகளை ஏன் திருப்பித் தர வேண்டும் என்று கஸ்தூரி கேட்கிறார். பிறகு ஒரு அறக்கட்டளை உருவாக்கி, அதில் இந்த அன்பளிப்புகளை சேர்த்து தென்னாப்பிரிக்க மக்களுக்கே பயன்படும்படியான முடிவை கஸ்தூரி சம்மதத்தோடுதான் காந்தி நடைமுறைப் படுத்தினார்.

கஸ்தூரி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டுவேலைகளை செய்வதற்கு பணியாட்கள் இருந்திருக்கின்றனர். பூசை புனஸ்காரங்களில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது.  தென்னாப்பிரிக்காவில் காந்தியின் உதவியாளராக, (டைப்பிஸ்ட்) வின்செண்ட் லாரன்ஸ் என்ற தாழ்த்தப்பட்டவர் அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்து இரவு நேரத்தில் தங்கி அவர் உபயோகித்த  அவரது சிறுநீர் கலயத்தை முகம் கோணாமல் அகற்ற வேண்டும் என்று காந்தி கூறுகிற போது, காந்தியோடு சண்டை போடுகிறார் கஸ்தூரிபா. அதே கஸ்தூரிதான், தக்கர் பாபா அழைத்து வந்த ஒரு குடும்பத்தில் இருந்து லட்சுமி என்ற அரிசனப்பெண்ணை  தத்து எடுக்கிறார். காந்தியிடம் முறையிட முடியாத தங்கள் குறைகளை கஸ்தூரி மூலமாகத்தான் ஆசிரமவாசிகள் முறையிடுவார்கள். கஸ்தூரிதான் மற்ற ஆசிரமவாசிகளுக்காக காந்தியிடம் ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக வாதாடுவது போல வாதிடுகிறார்.

இவ்வாறாக காந்தியின்  கொள்கைகளை மனமொப்பி ஏற்றுத் தனதாக்கிக் கொண்டவராக கஸ்தூரி மாறுகிறார்.  சம்பாரண் போராட்டக்களத்தில் அங்குள்ள மக்களுக்கு சுத்தத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒரே ஆடை இருந்தால் எப்படி அவர்களால் தினமும் குளிக்க முடியும் என்ற அவர்களது ஏழ்மை நிலைமையையும் காந்தியிடம் அவர்தான் கூறுகிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் கதர்  நூற்பதை பெருமளவில் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்காக  காந்தி  விரிவுபடுத்துகிறார்.

ஒரு தாயாக கஸ்தூரி எப்படி இருந்தார் ?

பதில்: உப்புச் சத்தியாகிரகத்தில் காந்தி, அவரது மகன் தேவதாஸ், காந்தியின் பேரன்  என்று மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருந்தனர். இப்படி ஒரு சிறப்பு, வேறு எந்த தேசியத் தலைவருக்கும் இல்லை. அவர்களுக்கு நான்கு மகன்கள். அதில் மணிலால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்தான் இப்போது இருக்கும் இலா காந்தி. காந்தியின் இன்னொரு மகன் ராமதாஸ்;  அவரது மனைவி நிர்மலா பெகனை வார்தா ஆசிரமத்தில்  நான் சந்தித்து இருக்கிறேன். இன்னொரு மகன்  தேவதாஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்தார். காந்தியின் மூத்த மகன் ஹரிலால், காந்தியோடு தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போது, இங்கிலாந்தில் கல்வி பயில ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காந்தி அந்த வாய்ப்பை தன் மகனுக்குத் தராமல், அவரைவிட தேவை மிகுந்த  ஆசிரமத்தில் இருந்த வேறொரு பையனுக்கு கொடுத்து விட்டார். அந்தக் கோபம் ஹரிலாலுக்கு இறுதிவரை  இருந்தது. பிறகு அவர் குடிகாரராக ஆனார். இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். தமது மூத்த மகன் ஹரிலால் குறித்து காந்தி, கஸ்தூரி என இருவருமே கவலைப்பட்டனர். காந்தி இறந்த சில மாதங்களில் ஹரிலால் சாலையோரமாக இறந்து கிடந்தார்.

காந்தியின் குழந்தைகள் பெற்றோரைப் பார்க்க ஆசிரமத்திற்கு வருவார்கள். ஆனால், அங்கு மற்றவர்களுக்கு என்ன கிடைக்குமோ அது தான் அவர்களுக்கும் கிடைக்கும்.  தங்களை தனியாக தங்கள் தாயார் கவனிக்கவில்லை என்ற வருத்தம் அவருடைய குழந்தைகளுக்கு இருந்தாலும், காந்தி தனது குடும்பத்தை விரிவுபடுத்தி எல்லோரையும் தனது குடும்பத்தினராக பாவித்த விதம் அன்னை கஸ்தூரிக்கும் இருந்ததால் தங்களது தாயை பெரிதும் மதித்தனர். இன்று வரை பேரக் குழந்தைகளான கோபால் கிருஷ்ணக் காந்தி மற்றும் தாரா காந்தி ஆகியோருக்கு தாத்தா காந்தியை விட, பாட்டி கஸ்தூரி மேல் தான் பாசம் அதிகம்.

கஸ்தூரிபாயின் சிறை அனுபவங்களைச் சொல்லுங்களேன்?

பதில்:  கிறிஸ்துவமத முறைப்படி செய்த திருமணம் மட்டுமே செல்லும் மற்ற மத  முறைப்படி திருமணம் செய்தால் அது செல்லாது, அத் திருமணத்தின் மூலம்  பிறப்பவர்கள் முறையான  குழந்தைகள் ஆக கருதப்படமாட்டார்கள் என்ற  தீர்ப்பு தென்னாப்பிரிக்க  நீதிமன்றத்தில் வந்தது. இதனை எதிர்த்து கஸ்தூரி பாய் தலைமையில் ஆசிரமத்தில் இருந்த மற்ற பெண்களும் சிறைக்கு செல்கிறார்கள்.  இதுதான் அவரது முதல் சிறை அனுபவம்.  அதேபோல் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து சிறைச் சென்ற  11 பெண்களில்  பத்து பேர் தமிழகத்துப் பெண்கள்.  காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்ற முக்கியமான ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த  தில்லையாடி வள்ளியம்மை. 16 வயதான அவர்  சிறைவாசத்தால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால்  இறக்கிறார். அதேபோல ராஜ்கோட் சமஸ்தானத்தை,  தங்களது உரிமைக்காக,  எதிர்த்து பெண்கள் நடத்தியப் போராட்டத்தில், ஈடுபட்டப் பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டு  சிறை வைக்கப்பட்டனர். இதற்காக நியாயம் கோரி கஸ்தூரி  கைதாகி, சிறை சென்று வெற்றி பெற்றார்.

அதே போல 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்  ஈடுபட்டு, காந்தி கைதாகி சிறைச் சென்றப் பிறகு, காந்தி அன்று மாலை பேச வேண்டிய பம்பாய் சிவாஜி பூங்காவில்  கஸ்தூரி பேசி கைதாகி,  காந்தியோடு சிறை வைக்கப்படுகிறார். இங்குதான் அவர் இறந்தார். செய் அல்லது செத்துமடி என்று சொன்ன காந்தியின் வாக்கை செயல்படுத்தி, காண்பித்தவர்தான் அன்னை  கஸ்தூரி பாய்! காந்தி சிறையில் இருக்கும்போதும், உண்ணாவிரதம் மேற்கொள்ளும்போதும் கஸ்தூரி பாய் தன்னை வருத்திக் கொண்டு  ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவார்.

காந்தி நடத்திய போராட்டங்களில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொள்ள கஸ்தூரிபாய் ஒரு காரணம் என்று சொல்லலாமா ?

காந்தியின் மனைவியே களத்தில் நிற்கும் போது அதுவே மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம் தானே! காந்தி நடத்திய எல்லா ஆசிரமங்களிலும் கஸ்தூரியின் பங்களிப்பு இருந்தது. வார்தா ஆசிரமத்தில் அதிக அளவு கதர் ஆடையை நூற்றவராக கஸ்தூரி இருக்கிறார். ராட்டையோடு இருக்கும் கஸ்தூரி பாயைத்தான் நீங்கள் படங்களில் பார்க்க முடியும். ‘நான் எனது செயல்பாடுகளை  கொள்கையாகவும், கடமையாகவும் நினைத்தேன்; ஆனால் கஸ்தூரி பாய் அதனை தனது உயிராக நினைத்தார்’ என்று காந்தியே கஸ்தூரி பாயைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கள்ளுக்கடை மறியல் என்பதை பெண்கள் தங்களுக்கான போராட்டமாக பார்த்தார்கள். கதரை பெண்கள் வீட்டில் இருந்து நூற்றார்கள்; இது அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியை, பொருளாதார மேம்பாட்டைக் கொடுத்தது. பெண்கள் சிறைக்குச் சென்றால் அவர்களுடைய குழந்தைகளை ஆசிரமத்தில் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடு இருந்தது. அதனால் தமது குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்ற கவலை இன்றி பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காந்தி என்கிற ஆலமரம்தான் நமது கண்களுக்குத் தெரியும். ஆனால் அதைத் தாங்கிப்பிடிக்கும் எத்தனையோ விழுதுகள், வேர்கள் மற்றவர்களுக்கு தென்படுவதில்லை. அப்படிப்பட்ட வேர்களில் ஒருவராகத் தான் கஸ்தூரிபாய் இருந்தார்.

பெப்ரவரி 22 – கஸ்தூரிபாய் காந்தி நினைவு நாள்!

முனைவர் ம.பிரேமா

நேர்காணல்: பீட்டர் துரைராஜ்

Tags: