“எத்தனை காலமானாலும் நீங்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது” – ராகுல் காந்தி

ந்திய நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுதலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று (02.02.2022) பேசியபோது பாரதிய ஜனதாக்கட்சி அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“இந்த நாட்டை குறித்து ஒன்றோடு ஒன்று போட்டியிடும் இரண்டு வகையான பார்வை உள்ளது. அதுதான் உண்மையிலேயே எங்களுக்கும் அவர்களுக்குமான (பிஜேபி) பிரதானமான வேறுபாடு.

இந்திய அரசியல் சாசனத்தை நீங்கள் படித்தால், அதில் இந்தியா என்பது, அரசுகளின் ஒன்றியம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். என்னுடை சக உறுப்பினர்களில் பலர் அதை படிக்கவில்லை. படியுங்கள். இந்தியா ஒரு தேசம் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தியா, தேசங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியென்றால் என்ன? அப்படியென்றால், என்னுடைய தமிழ் சகோதர்கள் என்ன உரிமையை பெற்றுள்ளார்களோ அதே உரிமையை மஹாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், பீகாரில் உள்ள சகோரர்களும், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரமில் உள்ள சகோதரிகளும் பெற்றிருக்க வேண்டும். இதுதான் அதற்கு அர்த்தம். ஜம்மு காஷ்மீரும்தான்… ஆமாம்… அந்தமான் நிக்கோபார், நாகாலாந்தும் தான்… ஆமாம்… லட்சத்தீவுகளும்தான்…

இது முக்கியமான விஷயம். இதுகுறித்து உங்களின் பார்வையை அறிய விரும்புகிறேன். இந்த நாடாளுமன்றம், இன்று நடந்ததுபோல் தேவையற்ற விவாதங்களை விட்டுவிட்டு, இதுகுறித்து தீவிர விவாதம் நடத்த வேண்டும்.

இந்தியா குறித்து இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று இது தேசங்களின் ஒன்றியம். இதற்கு அர்த்தம், உரையாடல். இதற்கு அர்த்தம் என்னவென்றால், என்னுடைய தமிழ்நாட்டு சகோரர்களிடம் என்ன வேண்டும் என்று நான் கேட்பேன். அதற்கு அவர்கள் இதுதான் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு என்ன வேண்டும் என்று அவர்கள் கேட்பார்கள். இதுதான் வேண்டுமென்று நான் சொல்வேன். இது கூட்டுமுயற்சி. இது அரசாட்சியில்லை.

நீங்கள் என்ன ஜாலங்களை செய்தாலும், உங்களால் எந்த ஒரு காலத்திலும், மாநிலங்களின் மக்களை ஆள முடியாது. கடந்த 3000 ஆண்டுகளில் இது எப்போதும் நடந்ததில்லை. எப்போதுமே நடந்ததில்லை. நீங்கள் எந்த ஒரு பேரரசையும் எடுத்துக்கொள்ளலாம். அசோகர், மௌரியர், குப்தர்கள் என எந்த ஒரு பேரரசையும் எடுத்துக்கொள்ளலாம். யாராக இருந்தாலும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம்தான் இந்தியா ஆளப்பட்டது.

இப்போது பிரச்சனை என்னவென்றால் நீங்கள் குழம்பிப்போயுள்ளீர்கள். பிரச்னை என்னவென்றால், இந்த மொழிகள், இந்த கலாச்சாரங்கள், இந்த வரலாறுகளை நீங்கள் ஒடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள். வரலாற்றை பற்றி உங்களுக்கு புரிதல் இல்லை. நீங்கள் எதை கையாள்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை.

ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் அத்துடன் கூட இந்தியாவையும் தங்கள் உள்ளத்தில் வைத்துள்ளனர். நீங்கள் குழம்ப வேண்டாம். கேரளாவின் மக்களுக்கு அவர்களின் கலாச்சாரம் உள்ளது. அவர்களுக்கென்று சுயமரியாதை உள்ளது. அவர்களுக்கென்று வரலாறு உள்ளது. நான் தற்போது கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற அடிப்படையில் அதைப்பற்றி எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும்.

அதேபோல், ராஜஸ்தான் மக்களுக்கும் பண்பாடு, வரலாறு, கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்வியலும் உள்ளது. இது ஒரு பூங்கொத்து போன்றது. இதுதான் நமது வலிமை. நான் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். ராஜஸ்தான் மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்தும் (பாஜக) கற்றுக்கொள்கிறேன். இதை கேளிக்காக சொல்லவில்லை. இது உண்மை.

இந்தியா குறித்து இன்னொரு பார்வை உள்ளது. அது இந்தியாவை மத்தியிலிருந்து ஒரு செங்கோலை வைத்து ஆட்சி செய்வது. உங்களுக்கு வரலாறு தெரியவில்லை. இப்படி ஆட்சி செய்யமுயன்ற ஒவ்வாருமுறையும் அந்த செங்கோல் அடித்து, உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.

நாட்டை குறித்த உங்களுடைய தவறான பார்வையின் விளைவு என்ன தெரியுமா? உண்மையில் இரண்டு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே இரண்டு பார்வைகள். ஒன்று தேசங்களின் ஒன்றியம், மொழிகளின் ஒன்றியம், கலாச்சாரங்களின் ஒன்றியம், உலகத்தின் எப்பேர்பட்ட சக்திகளையும் எதிர்க்கக் கூடிய அழகிய மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பூங்கொத்து. இந்த பூங்கொத்தை உலகத்தின் எந்த சக்தியும் இதுவரை எதிர்த்ததாக சரித்திரம் இல்லை.

File written by Adobe Photoshop? 5.0

இன்னொரு பார்வை உள்ளது. மத்தியத்துவப்படுத்தும் பார்வை. அது ஒரு அரசனின் பார்வை. அது, 1947ல் காங்கிரசால் தூக்கி எறியப்பட்ட ஒரு கருத்தியல். நாங்கள் அரசன் என்ற அந்த கருத்தியலை நசுக்கினோம். அது இப்போது மீண்டும் வந்துள்ளது. ஒரு அரசர் உள்ளார். அரசருக்கெல்லாம் அரசர் உள்ளார். ஆள்பவரையெல்லாம் ஆள்பவர். தலைருக்கெல்லாம் தலைவர். (மோடியை குறிப்பிடுகிறார்)

இந்த தவறான பார்வையால் என்ன நடக்கிறதென்றால், மாநிலங்களுக்கு, மக்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அடிப்படையாக உள்ள நமது அமைப்புகள், ஒரு கருத்தியலால் தாக்கப்பட்டு, அகபரிக்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, தமிழ்நாட்டின் விருப்பம் இந்திய கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும், மீண்டும், மீண்டும் உங்களிடம் வருகிறார்கள். நீட் (வேண்டாம்) நீட் (வேண்டாம்) நீட் (வேண்டாம்) என்று. நீங்கள், முடியாது வெளியே போய்விடுங்கள் என்று சொல்கிறீர்கள். உங்களுடைய சட்டகத்தில் அவர்களின் குரல் எடுபடவில்லை.

பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் இந்த மூன்று சட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். அவர்களுடைய குரல் உங்களுடைய சட்டகத்தில் எடுபடவில்லை. அரசனால் மட்டும்தான் (இங்கு) பேச முடியும். விவசாயிகள், வெட்ட வெளியியில், கொரோனா காலத்தில் ஓராண்டாக உட்கார்ந்திருக்கலாம், செத்தும்போகலாம். அதைப்பற்றி (உங்களுக்கு) கவலை இல்லை. அரசன் ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்கள் யார் சொல்வதையும் கேட்பதில்லை.

பாஜகவில் உள்ள என் சகோதர, சகோதரிகளே. நான் தலித் சமூத்தை சேர்ந்த என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினரான திரு.பஸ்வான் அவர்களை பார்த்தேன். அவருக்கு தலித்துகளின் வரலாறு தெரியும். 3000 ஆண்டுகளாக தலித்துகளை யார் ஒடுக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு தயக்கத்துடன்தான் பேசுகிறார். (மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி) அவரை குறித்து நான் பெருமைகொள்கிறேன். அவர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால், அவர் தவறான கட்சியில் உள்ளார்.

இந்த குழப்பமான கருத்தியலும், இந்தியாவை குறித்த குழப்பமான புரிதலும் இந்த நாட்டை நாசமாக்குகிறது. அதற்கு உதாரணங்கள் சொல்கிறேன். நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகசிஸ் ஆகியவை மாநிலங்களின் குரல்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்துப்படுகின்றன.

இந்திய அரசியல்வாதிக்கு எதிராக நீங்கள் பெகசிசை (உளவு செயலி) பயன்படுத்தும்போது, பிரதமர் தனிப்பட்ட முறையில் இஸ்ரேலுக்கு செல்லும்போது, பெகசிஸ் உளவு செயலியை பயன்படுத்த அனுமதி வழங்கும்போது, அவர் தமிழ்நாட்டு மக்களை தாக்குகிறார். அஸ்ஸாம் மக்களை தாக்குகிறார். கேரள மக்களை தாக்குகிறார். அவர் மேற்கு வங்க மாநில மக்களை தாக்குகிறார்.

என்ன நடக்கிறது என்றால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு இந்திய அரசின் அடிப்படை அமைப்புகளை கைப்பற்றியுள்ளது. அது பல்வேறு மாநிங்களின் குரல்களை நசுக்கிறது. என்னுடைய பயம் என்னவென்றால், இதற்கு நீங்கள் எதிர்வினையை சந்திப்பீர்கள். அரசின் அடிப்படை அமைப்புகள் மீது நீங்கள் தொடர்ந்து நடத்தும் இந்த தாக்குதலுக்கு மாநிலங்களிடமிருந்து எதிர்வினையை சந்திக்கவுள்ளீர்கள்.

இதை நீங்கள் கேட்க மாட்டீர்கள். அது எனக்குத் தெரியும். இவற்றை கட்டமைக்க (அரசின் அடிப்படை அமைப்புகளை) என்னுடைய கொள்ளு தாத்தா 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார். என்னுடைய பாட்டி 32 முறை சுடப்பட்டார், என்னுடைய தந்தை வெடித்து துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டார்.

ஆகவே, இந்த நாட்டை பற்றி எனக்கு கொஞ்சமாவது புரியும். என்னுடைய கொள்ளு தாத்தா, என்னுடைய பாட்டி, என்னுடைய தந்தை இந்த நாட்டிற்காக ரத்தம் சிந்தியுள்ளனர். ஆகவே எனக்கு புரிகிறது நீங்கள் மிக மிக ஆபத்தான ஒன்றுடன் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் நிறுத்தவில்லை என்றால், பிரச்னை ஏற்படும். நீங்கள் ஏற்கனவே பிரச்னையை உருவாக்க தொடங்கிவிட்டீர்கள். அது வட கிழக்கில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த பிரச்னை ஏற்கனவே தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டது. அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. காமீரிலும். அதைபற்றி நான் பிறகு பேசவுள்ளேன்.

நீங்கள் மிகவும் ஆபத்தானதுடன் விளையாடுகிறீர்கள். வரலாற்றை பற்றி உங்களுக்கு போதுமான புரிதல் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று வீட்டுக்குப் போங்கள், இந்தியாவை இதுவரை ஆண்ட பேரரசுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அவை அனைத்தும் தேசங்களின் ஒன்றியம்தான். ஒரே பேரரசு என்று ஒன்று இருந்தது கிடையாது. அசோகர் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஸ்தூபியை நிறுவியதற்கு காரணம் உள்ளது. அசோக பேரரசர், தனது ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் மதிக்கின்றார் என்பதே அதற்கு அர்த்தம். நீங்கள் யாரையும் மதிப்பதில்லை. என்னை மதிக்க வேண்டாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களை மதிக்காமல் இருக்காதீர்கள்.”

Tags: