அலைபேசி அடிமைகளாகும் மாணவர்களை மீட்பது எப்படி?

ஜி. ராமானுஜம் 

போதை வஸ்துவுக்கு அடிமையாவதை ‘அடிக்ஷன்’ (addiction) என மருத்துவ உலகில் குறிப்பிடுவார்கள். அப்படி போதைப் பொருட்களுக்கு மட்டுமல்ல, சில செயல்கள், பழக்கங்களுக்கும் மக்கள் அடிமை ஆவதுண்டு. பொருட்களை வாங்குவது, சூதாடுவது தொடங்கிப் பல பழக்கங்களுக்கும் அடிமை ஆவது நடக்கிறது. அந்த வரிசையில் இப்போது மிகப் பரவலாகக் காணப்படுவது செல்போனுக்கு அடிமை ஆவது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்.

பதின்பருவத்தினர் நாளொன்று சராசரியாக 6 மணி நேரம் செல்போனைப் பார்ப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 95%-த்தினர் காலை எழுந்ததும் முதல் வேலையாக செல்போனைத்தான் பார்க்கிறார்களாம். இதன் உச்சபட்சமாக செல்போன் பயன்பாடு மறுக்கப்படும்போது தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வது என்கிற எல்லைவரை அண்மைக்காலமாக மாணவர்கள் சிலர் செல்வதைக் கண்டு துயருறுகிறோம்.

வேறு வழியின்றி: இதிலிருந்து தங்கள் பிள்ளைகள் விடுபட வழி உண்டா என்று பெற்றோர் கவலை கொள்கிறார்கள். அதற்கு முதலில் செல்போன் பழக்கத்துக்கு அடிமையாகும் அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும். முதலாவது அறிகுறி, பெரும்பான்மையான நேரம் செல்போனை பயன்படுத்திக் கொண்டே இருப்பது. அடுத்த அறிகுறி, செல்போன் இல்லையென்றால் எதையோ இழந்தது போல் பதற்றமடைவது. முக்கியமாக அன்றாட செயல்களைச் செய்யாமல் செல்போன் பார்த்துக் கொண்டே நேரத்தை வீணடிப்பது. இதில் சிலர் சமூக ஊடகத் தளங்களை காரணமின்றி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, சூதாட்டத்துக்கு, ஆபாச தளங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

இவ்வாறு செல்போன் அடிமையாக முதல் காரணம் எளிதில் கிடைப்பதுதான். போதைப் பழக்கம்போன்றே ஒரு செயலை அடிக்கடி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைப்பதுதான் முக்கிய காரணமாகும். கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கிப் போன மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் எல்லாமே வீட்டிலிருந்தே நடைபெறத் தொடங்கின. அதற்கு முன்புவரை செல்போன் பார்க்க அனுமதிக்காத பெற்றோர்கூட இந்த காலகட்டத்தில் வேறு வழியில்லாமல் குழந்தைகளுக்கென தனி செல்போன் அல்லது ‘லாப்டாப்’ (Laptop) வாங்கிக் கொடுக்க நேரிட்டது.

இனி வரும் காலத்தில் இதிலிருந்து விடுபட நினைத்தால் இன்றையபெற்றோர் தங்களது குழந்தை வளர்ப்பு முறையிலேயே சில மாறுதல்களைக் கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைக்கு சோறூட்டவே செல்போனைக் காட்டிவிட்டுப் பிற்காலத்தில் அதே குழந்தை அலைபேசி அடிமையாகிவிட்டது எனப் புலம்புவதில் பிரயோசனமில்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுடன் பேசி, விளையாடப் போதுமான நேரம் பெற்றோர் ஒதுக்க வேண்டும்.

“நீ மட்டும் பார்க்கலையா?” – குழந்தைகள் எவ்வளவு நேரம் செல்போனை பார்க்கிறார்கள், அதில் என்னென்ன பார்க்கிறார்கள் என்பதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதனை செய்யும்போது குழந்தைகளின் சுதந்திரத்தில், அவர்களது அந்தரங்கத்தில் தலையிட்டு அதிகமாகக் கட்டுப்படுத்துவது போன்று மாணவர்களுக்குத் தோன்றக் கூடும். தங்களது மகிழ்ச்சிக்கு இடையூறாகப் பெற்றோர்கள் இருப்பதாகப் பதின்வயதினர் கருதுவார்கள்.

இதற்குத் தீர்வு காண குழந்தைகளிடம் வெளிப்படையாக உரையாடுங்கள். நீங்கள் கண்காணிப்பது அவர்களது நலனுக்காகத்தான் என்பதைப் புரியவையுங்கள். தொழில்நுட்பங்களை அவர்கள் பொறுப்பாக எப்படிக் கையாள்வது என்பதை கற்றுக் கொடுங்கள். அதற்கு முதலில் நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பெரியவர்கள் அடிக்கடி அலைபேசி பயன்படுத்துவதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பில்லை என்றாலும் அந்த தர்க்கம் குழந்தைகளிடம் எடுபடாது. “நீ மட்டும் பார்க்கலையா?” என்ற கேள்விதான் பெற்றோர் மீது வீசப்படும்.

பிடித்த ஒரு விஷயத்திலிருந்து வெளியேற வேண்டுமானால் அதற்கு மாற்றாக அதைவிடப் பிடித்த ஒரு விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டும். புத்தக வாசிப்பு, இசை, உடற்பயிற்சி, நடனம், ஓவியம் என ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். ஒரு தொழில்நுட்பத்தை நாம் அறவே புறக்கணிக்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சி அவசியமான ஒன்று. ஆனால், அதை கவனமாக கையாள முடியும். வடிவேலுவின் நகைச்சுவையில் சொல்வது போல், ‘கவனமாகக் கையாண்டால் அது நமக்கு அடிமை. இல்லையேல் நாம்தான் அதற்கு அடிமைகளாக இருப்போம்’ 

Tags: