லெனின் 153 : புதியதோர் பொன்னுலகமே, இன்றைய நிகழ்ச்சிநிரல்!

-என்.குணசேகரன்

மார்க்சிய தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்டி; புரட்சிகரமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்  தத்துவமாக மார்க்சியம்  விளங்குகிறது. மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது.

அவர் வாழ்ந்த காலம், முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்த காலம். அந்த காலச் சூழலில் புதிய நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்து ரஷ்யாவில் புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர் லெனின்.

அவரது எழுத்துக்கள் விரிந்து பரந்த தளங்களில் புரட்சிகர மாற்றத்திற்கான பிரச்சனைகளை விளக்குகின்றன. ஏகாதிபத்தியம் எனும் சுரண்டல் அமைப்பின் விசேட தன்மைகள், புரட்சிகர இயக்கத்தின் பிரச்சனைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகள், ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுவதற்கான வியூகங்கள், மார்க்சிய தத்துவ வளர்ச்சி பிரச்னைகள், அரசியல் பொருளாதாரத்தின் புதிய பரிமாணங்கள் என பல வகைகளில் உயரிய தரம் கொண்ட  படைப்புகளாக லெனின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவை வெளிப்படுத்தும் பொதுக் கோட்பாடுகள், பொதுவான கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டனவாக விளங்குகின்றன.

காஸ்ட்ரோ எச்சரிக்கை

அண்மையில் நடந்த ஒரு பயிற்சி முகாமில் ‘ஏகாதிபத்தியம்’ எனும் சொல் பொதுமக்களிடம் பேசுவதற்கு பொருத்தமாக இல்லை எனவும், புரியும் வகையிலான வேறு சொல் இருந்தால் நல்லது என்றும்  கருத்து வந்தது. பிறகு விவாதித்ததில், அந்த சொல் மட்டுமே அதன் உண்மையான பொருளைக் கொண்டது எனவும், அதன் பொருளை எளிமையாக விளக்க வேண்டுமெனவும், அந்த சொல்லையே பயன்படுத்த வேண்டுமென்றும் பேசப்பட்டது.

ஃபிடெல் காஸ்ட்ரோ குறிப்பிட்டார்: “ஏகாதிபத்தியம் குறித்து விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்!”. அந்த மகத்தான மனிதனின் மகத்தான இந்த அறிவுரை சாதாரணமானதல்ல. உலக உழைக்கும் மக்களின் நலன்களை பறித்து, பலி கொடுத்து, அந்த நர வேட்டையில் குளிர் காய்ந்து, வளர்ந்து வரும் ஒட்டுண்ணியாக ஏகாதிபத்திய முறை செயல்படுகிறது. உழைக்கும் வர்க்கங்கள் அந்த அமைப்பை ஒழித்திட ஒன்றுபட்டு திரள வேண்டிய கட்டாயம் உள்ளது. இது வரலாறு நமக்கு விதித்துள்ள கடமை.

அடித்தட்டு வர்க்கங்கள் இவற்றைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது என்று சில உண்மைகளை அலட்சியப்படுத்தினால், அவர்கள்தான் பாதிப்புக்கு உள்ளவார்கள். அவர்களது வாழ்வாதார நெருக்கடிகளுக்கு காரணமான கூட்டத்தை அவர்களால் அடையாளம் காண இயலாமல் போய்விடும்.

கம்யூனிஸ்டாக தன்னை பிரகடனப்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் செயல்படுகிற ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே செயலாற்ற வேண்டும். அவர்களது வாழ்நிலையையும், அதற்கான காரணங்களையும் உணரச் செய்து, அவர்களை வர்க்கப் போராட்டத்திற்கு தயார் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் உண்டு.

கம்யூனிஸ்டுகளுடைய பங்கு இந்த இடத்தில் முக்கியமானது என்பதை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த கடமையை செய்வதில் ‘சிரமம் உள்ளது; கம்யூனிச கருத்தாக்கங்களை உழைக்கும் வர்க்கத்தினருக்குப் புரிய வைப்பதில் சிரமம் இருக்கிறது’ என்று தயங்கினால், அவர்கள் கம்யூனிஸ்ட் என்கிற முறையில் கடமை தவறியவர்கள் ஆவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து கொண்டு வெறும் சீர்திருத்தவாதிகளாகவும், உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கைத்  துரோகம் செய்தவர்களாகவும் மாறிடுவார்கள். இதனை கடந்த கால வரலாற்று அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த பல மார்க்சிஸ்டுகள்,  மார்க்சியத்திலிருந்து வழுவி, திசை மாறி, இயக்கத்தை எதிரிகளிடம் அடகு வைத்த மோசமான நிலைமைகளைப் பற்றி எங்கெல்சும், அவருக்குப்   பிறகு லெனினும் விளக்கியுள்ளனர். அந்த சந்தர்ப்பவாதிகளையும், மார்க்சியத்தை திரித்த திருத்தல் விதிகளையும் அம்பலப்படுத்தியுள்ளனர். மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் அப்பணியை செய்தார்.

உழைக்கும் மக்களின் வரலாற்றுப்  பாத்திரத்தை உணரச் செய்கிற பணியை தியாக பூர்வமாக, உறுதியுடன் மேற்கொள்கிறவர்களே சிறந்த கம்யூனிஸ்டுகளாக திகழ்வார்கள். இப்பணியை  செய்வதற்கு சிந்தனை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் தடுமாறுபவர்கள் இயக்கத்தை தேக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள். எனவே, ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த எச்சரிக்கை பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏகாதிபத்தியம் இன்று

லெனின் 1916ஆம் ஆண்டில் ஜூரிச் நகரில் தலைமறைவு வாழ்க்கையின்போது  “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலை எழுதினார். அதில் கடந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் வந்தடைந்த புதிய கட்டத்தினை  லெனின் விளக்கியிருந்தார்.

ஏகாதிபத்தியத்தின் தன்மைகள் குறித்து அன்றைக்கு லெனின் எழுதிய எழுத்துக்கள் இன்றளவும் பொருத்தப்பாடு கொண்டனவாக விளங்குகின்றன. ஆனால் ஏராளமான புதிய அம்சங்கள் ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்பாட்டில் உள்ளன

அடிப்படையில் அது உலக உழைக்கும் மக்களை மிகத் தீவிரமாக சுரண்டி, பெரிய மூலதன சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் இயக்கத்தை விளக்கி லெனின் எழுதிய பொதுவான கோட்பாடுகள் இன்றைய ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்வதற்கும் செயல்படுவதற்கும் வழிகாட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ள இந்த கட்டம், சமூகப் புரட்சிகள் ஏற்பட்டு சோசலிசத்தை நோக்கி மானுடம் பயணிக்கிற கட்டமாகவும் சகாப்தமாகவும் விளங்குகிறது என்று லெனின் கணித்தார். இது வெறும் ஆரூடம் அல்ல; வரலாற்று நோக்கில் எதிர்காலத்தைப் பற்றி விளக்குகிற அறிவியல்.

இன்றைய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின்  பிரத்யேகத் தன்மைகளுக்கு ஏற்ப சோசலிசத்தை கட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. அதில் தோல்வி அடைய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது. ஆனால், சீன சோசலிசம் வெற்றிப் பாதையில் நடைபோட்டு  முன்னேற்றங்களை சாதித்து வருகிறது.

எனவே, சோசலிச புரட்சிகளுக்கான காலமாக ஏகாதிபத்திய சகாப்தம் விளங்குகிறது என்கிற லெனின் கூற்று உண்மையானது. இதனை இன்றைக்கும் உலகம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் பற்றி லெனின் எழுதிய இதர கோட்பாடுகளும் இன்றைய சூழலில் பொருந்தி வருகின்றன. பல மாற்றங்களை கொண்டிருந்தாலும் லெனின் வரையறுப்புகளுக்கு மேலும் வலு  சேர்க்கிற வகையில்தான் இன்றைய நடப்புக்களும் உள்ளன.

லெனின் கோட்பாடுகளும் இன்றைய நிலையும்

முதலாளித்துவத்தின்  வளர்ச்சி  நீண்ட வரலாறு கொண்டது.  பல வளர்ச்சிக் கட்டங்களை தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் உருப்பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது. இதனை லெனின் ஏகாதிபத்திய கட்டம் என்று விவரித்தார். இந்தக் கட்டத்தில் உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார வளர்ச்சி பல வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருந்தது.

அரசியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறையும், பல நாடுகளில் சர்வாதிகார முறையும் இருந்தன. பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு வளர்ச்சி பெறாத சூழலும் இருந்துவந்தது. பொருளாதாரத்திலும் வேறுபாடுகள் இருந்தன. சில நாடுகள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. பல நாடுகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தன.

உலகின் முன்னணி நாடுகள் தங்களது பொருளாதார ஆதிக்கத்தை வெளிநாடுகளில் வலுப்படுத்திக் கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பங்கு போட்டுக் கொள்ளவும் முனைந்தன. இதற்கான நாடுகளின் கூட்டணி அமைந்தன. இவை பொருளாதார ஆதிக்கத்திற்கும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைக்கார கூட்டணிகள். இந்த கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டி, இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது.

லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து இயல்புகளை விளக்குகிறார்.

  •  1) உற்பத்தியும்  மூலதனமும் ஒன்றுகுவியும்  நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவாகின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன.
  •  2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றன. இந்த “நிதி மூலதனம்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது.
  •  3) அதுவரை முக்கியத்துவம் கொண்ட  சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி, மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது.
  •  4) சர்வதேச அளவில்  ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றன.
  • 5) முன்னணி முதலாளித்துவ அரசுகள்  உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன.

இது கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில்  ஏகாதிபத்தியம் வளர முற்பட்ட சூழலில், அதன் இயல்புகளைப் பற்றி லெனின் வழங்கியுள்ள ஆய்வு. மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்தை ஆராய்ந்து விளக்கியது போன்று, அவருக்குப் பிறகு லெனின், முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கினார்.

அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து  அடிப்படை இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கிறதா? இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் அவை பொருந்துவதாக உள்ளதா? முதலாளித்துவத்தை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், சோசலிச மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் மிக அவசியமானது.

பன்னாட்டு கோர்ப்பரேட் பேரரசு

உலகில் மேலும் மேலும் மூலதனம் குவிந்து, பெரிய மூலதன சாம்ராஜ்யங்களாக பிரம்மாண்டமான, ஏகபோக, பன்னாட்டு கோர்ப்பரேஷன்கள் வளர்ந்தன. அவற்றில் பல,  நாடுகள் பலவற்றின் சொத்துக்களை விட அதிக சொத்து படைத்தவையாக வளர்ச்சி பெற்றன. உண்மையில், சர்வதேச, ஏகபோக முதலாளித்துவத்தின் இன்றைய பிரதிநிதிகளாக இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் விளங்குகின்றன. வகையிலான கார்ப்பரேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

உலக அளவில் இந்த. இவை நேரடி அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய கிளைகளையும், இணைப்பு நிறுவனங்களையும்  உலகம் முழுதும் அமைத்து செயல்படுகின்றன. 1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை  நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து பத்தாயிரம் வரை  உயர்ந்துள்ளது.

உலகப் பெரும் கார்ப்பரேஷன்களின் இந்த வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் பெரும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தக இணைப்புகளில் இணைந்துள்ளன. இது மூலதனத்தின் சர்வதேச தன்மையை வலுப்படுத்தியுள்ளது.

உற்பத்தி மற்றும் மூலதனம் மேலும் மேலும் ஓர் இடத்தில் குவியும் நிலை தீவிரமடைந்துள்ளது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சில ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனம் மேலும் மேலும் குவிந்து பெருகி வருகிற நிலையில், ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் பேரரசு உருவாகியுள்ளது.

பன்னாட்டு முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு, சந்தை செயல்பாடு, இயற்கை வளங்கள், நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இதனால்தான் உற்பத்தி பொருட்கள் மற்றும் அவற்றின் விநியோகத்தில் ஏகபோக கட்டுப்பாடும், போட்டியில் பெரும் கார்பரேஷன்களுக்கு சாதகமான நிலையும் உள்ளது.

இதன் ஒரு விளைவு அதிகரிக்கும் பணவீக்கம். இன்று பணவீக்கமும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதற்கு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளாதார ஆதிக்கமும் முக்கிய காரணம்.

இந்த பெரும் கோர்ப்பரேஷன்கள் அரசு அதிகாரம், மற்றும் அரசு நிறுவனங்களுடன் வலுவான கூட்டணியை கொண்டுள்ளன.

அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் இன்றுவரை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் விளைவாக மூலதனக் குவியல் மேலும் அதிகரித்து வந்தது. பல கம்பெனிகள் மேலும் மேலும் பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டன. சிறிய, நடுத்தர கம்பெனிகள் பன்னாட்டு கம்பெனிகளுடன் இணைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றன. பல சிறிய நடுத்தர கம்பெனிகள்  திவாலாகி மூட வேண்டிய நிலை ஏற்பட்டன. 

பெரும் கம்பெனிகளின் மூலதனக் குவியல்  அதிகரிப்புக்கு முக்கிய காரணம், குறைந்த ஊதிய செலவில் உலக அளவில் தொழிலாளர் உழைப்பு கிடைப்பதுதான். கடந்த பல பத்தாண்டுகளாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், வளரும் ஏழை நாடுகளிலும் அமைத்தன. அங்கு வேலையில்லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன.

பன்னாட்டு கம்பெனிகள் சிறந்த முறையில் வலுவான அமைப்பாக செயல்படுகின்றன.ஆனால் உழைக்கும் மக்களால் ஒன்று சேர்வதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. வளரும் நாடுகளின் அரசாங்கங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது மூலதன தேவை மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை பின்பற்ற தூண்டுகின்றனர். தொழிலாளர் உரிமைகளை பறிக்கிற கொள்கைகளையும் இந்த அரசாங்கங்கள்  பின்பற்றுகின்றன.

சர்வதேச முதலீடுகள் வழியாக மொத்த உள்நாட்டு வளர்ச்சியை பெருக்கிவிடலாம் என்ற நோக்கில் ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். இதற்கு விலையாக தங்களது மக்களுக்கான சமூக நல  திட்டங்களை குறைப்பது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு காப்பரேட் கம்பெனிகளுக்கு  ஏராளமான வரிச்சலுகைகள், கடன் ஏற்பாடு போன்றவற்றை இந்த உறுதி செய்கின்றன.

குறைந்த எண்ணிக்கையிலான பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன. நிதி ஏகபோக மூலதனம் ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு உடனடி இலாப வேட்டையை துரிதப்படுத்துகிறது. கடந்த 30 ஆண்டுகளில் நிதி மூலதனம், தொடர்ச்சியான  தொழில்மயத்தை தடுத்து வந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. பெரிய கம்பெனிகளின் மூலதனம் நிரந்தர தொழில் முதலீட்டிலிருந்து மாறி, அதிகமாக ஊக வணிக நிதி பரிமாற்ற செயல்பாடுகளாக மாறின.

முதலாளித்துவ கூட்டணிகள்

லெனின் ஏகாதிபத்தியம் நூலில் முதலாளித்துவ கூட்டணிகள் வளர்ந்து உலகம் பங்கு போடப்படுவதை குறிப்பிடுகிறார். இது இன்றைய உலகுக்கும் பொருந்துகிறது. சர்வதேச பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்ற உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு போன்றவைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன குவியலுக்கு ஏற்ற வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றன. சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணி நலன்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்கான இராணுவக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. நேட்டோ இராணுவக் கூட்டணியை  ஆசிய பிராந்தியத்தில் விரிவாக்குவதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்ட நிலையில்தான், ரஷ்யா போரில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இன்றுவரை போர் நீடித்து வருகிறது. இது உலக மக்களை பாதித்து வருகிறது. போரினால், பொருளாதார பின்னடைவும், அதிகரிக்கும் பணவீக்கமும் உலகம் முழுவதும் சாதாரண மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஆனால் இதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் ஏகாதிபத்திய நாடுகள் ராணுவ கூட்டணிகளை பலப்படுத்தி வருகின்றனர். சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிராக பல ராணுவ தளங்களையும், கூட்டணிகளையும் அமெரிக்கா அமைத்து வருகிறது.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை பெருமளவுக்கு பலப்படுத்தி வருகின்றனர். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போர்கள்  என ஆறு ஆக்கிரமிப்பு  போர்களை அமெரிக்கா மேற்கொண்டது. அவையும், தற்போது நடந்து வரும் ராணுவ மோதல்கள் அனைத்தும் ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவே நடைபெறுகின்றன. மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவையும் நாசத்தையும் அவை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கை வளங்களை சூறையாடும் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டையும், சுரண்டலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

உலக உழைக்கும் மக்களின் குரல்

லெனின்  குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும்  அழிவு சக்தியாக உள்ளது.

நமீபியா நாட்டின் பிரதமர் சாரா கூகோன்கெல்வா அமாதிலா உக்ரைன் போரினைப்  பற்றி பேசுகிறபோது குறிப்பிட்டார்:

“நாங்கள் இந்த மோதலை நிறுத்துவதற்கு அமைதியான வழியில் தீர்வு காண முயற்சிக்கிறோம். அத்தகைய அமைதி வழி தீர்வுதான் இந்த உலகத்தினுடைய அனைத்து வளங்களையும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தும். உலகத்தின் வளங்கள் அத்தனையும் ஆயுதங்கள் வாங்குவதற்கும், மக்களை கொல்வதற்கும், மேலும் மேலும் பகைமையான முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.”

இதுதான் உலக உழைக்கும் மக்களின் குரல்; அது மட்டுமல்ல; இதுவே  ஏழை நாடுகளின் குரலாகவும் இருந்து வருகிறது. இன்று லெனின் காலத்தில் இருந்ததைவிட உலக உற்பத்தியில் ஏகாதிபத்தியமல்லாத நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சீனா, ரஷியா உள்ளிட்டு ‘உலகின் தெற்கு’ என்று அழைக்கப்படும் வளரும் நாடுகள் மொத்த உலக உற்பத்தியில் (ஜி.டி.பி) 65 சதம் என்ற அளவில் உயர்ந்துள்ளன. இதன் பலன்கள் உழைக்கும் மக்களுக்கு சென்றடைய வேண்டும். உற்பத்தியின் பலன்களை சூறையாடுவதற்கு கார்ப்பரேட் சாம்ராஜ்யம் என்ற உலக அரக்கனின் வெறியாட்டத்தை ஒடுக்க வேண்டும். 

மனித நாகரிகத்தை அழிக்கும் ஏகாதிபத்தியம் எனும்   கொடூரமான அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இன்றைய உலக நிகழ்ச்சி நிரல் சோசலிசம் எனும் புதிய பொன்னுலகை படைப்பதுதான். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் எழுச்சி பெற வேண்டும். மார்க்சிய-லெனினியமும், லெனினது வரலாறும், அவரது போதனைகளும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும்.

ரஷ்யப் புரட்சியின் பிதாமகன் விளாடிமிர் லெனினின் 153-வது பிறந்த தினம் இன்று!

Tags: