அமெரிக்காவிற்கு வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெனிசுவேலாவில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தவும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வெனிசுவேலாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவும் வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள், வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே எச்சரித்ததை உறுதிப்படுத்தியுள்ளன. வெனிசுவேலா மற்றும் கரீபியன் நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளானது, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரானதோ அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கோ அல்ல, மாறாக, நம் நாட்டின் இயற்கை வளங்கள், நிலப்பரப்பு மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா நடத்துகிற ஒரு காலனித்துவத் தாக்குதலாகும்.

வெனிசுவேலாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முழுமையான முற்றுகையானது சர்வதேசச் சட்டங்களை மீறும் செயலாகும். இந்தத் தடை ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் வெனிசுவேலா மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும். அதேநேரத்தில் வெளிநாடுகளின் இந்தத் தாக்குதலை சாக்காக வைத்துக்கொண்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை அமுல்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் உருவாகும் நெருக்கடிக்கு சாதாரண உழைக்கும் மக்களே பலியாகி வருகின்றனர்.”

சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல்

“வெனிசுவேலாவின் எண்ணெய், நிலம் மற்றும் சொத்துக்கள் அமெரிக்காவிற்குச் சொந்தம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். இது நமது சுதந்திரத்திற்கு விடப்படும் பெரும் அச்சுறுத்தலாகும். கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை வழிமறித்துத் திருடுவது ஒரு சர்வதேசக் கொள்ளைச் செயல் தான் என வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சிக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

கரீபியன் பகுதிகளிலிருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேற வேண்டும்

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளது.
அவை,

  1. நாட்டின் வளங்கள் குறித்து முடி வெடுக்கும் மக்களின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும்.
  2. கரீபியன் பகுதிகளில் இருந்து அமெரிக்கா தனது இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்.
  3. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

மூலம்: Communist Party of Venezuela condemns imperialist offensive and defends national sovereignty

Tags: