சீனா எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது; அமெரிக்கா 19ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கிச் செல்கிறது

சீனாவின் சோசலிச சந்தைப் பொருளாதார மாடல் மற்றும் அமெரிக்காவின் வர்த்தகப் போர் உள்ளிட்டவை பற்றி சீனாவின் புகழ்பெற்ற ஷாங்காய் ஃப்யூடான் பல்கலைக்கழகத்தின் (Shanghai Fudan University) சர்வதேசத் துறைத் தலைவர் மற்றும் சீன சமூக ஊடகங்களில் பல இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டுள்ள கல்வியாளர் ஜாங் வெய்வே (Zhang Weiwei) உடன் ‘ஜியோபொலிட்டிக்கல் எகானாமி ரிப்போர்ட்’ (Geopolitical Economy Report) ஆசிரியர் பென் நோர்டன் (Ben Norton) நேர்காணலின் தொகுப்பு.

பென் நோர்டன்: கடந்த 20 ஆண்டு காலமாக ‘சீன மாடல்’ என்று சொல்லி வருகிறீர்கள். அதன் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பரிமாணங்கள் மற்ற அமைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

ஜாங் வெய்வே: நீங்கள் குறிப்பிடுகிற சீன மாடல் என்பது வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான நாகரிகத்தின் வெளிப்பாடு. இது அரசியல் பரிமாணம், பொருளாதாரப் பரிமாணம் மற்றும் சமூகப் பரிமாணம் என மூன்று தூண்களைக் கொண்டுள்ளது. மேற்கத்திய அரசியல் மாடல்களில் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட பகுதி நலன்களை அல்லது பிரிவின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இது ஒரு தீவிரமான போக்கு. ஆனால் சீனா ஒரு நாகரிக நாடு. கி.மு. 221 ஆம் ஆண்டு முதல் ஒரு நாடாக உருவான நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்த நீண்ட காலப் பின்னணியில், ஒன்றுபட்ட ஒன்றிய அமைப்பு முறை மட்டுமே நாட்டின் ஸ்திரத்தன்மைக்குச் சாத்தியமானது. இந்த நாகரிகத் தொடர்ச்சியின் விளைவே, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) முழுமையான மக்கள் நலன் சார்ந்த ஒரு தேசியக் கட்சியாக இருப்பது. இதுவே சீன மாடலின் அடிப்படை அரசியல் பலம்.

பென் நோர்டன்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மேற்கத்திய தேர்தல் முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இது திறமையான தலைவர்களை உருவாக்குமா?

ஜாங் வெய்வே: நிச்சயமாக. எங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை நான் “தேர்ந்தெடுத்தலுடன் தேர்வு செய்வது” என்று குறிப்பிடுவேன். மேற்கத்திய நாடுகளில் ஒருசில வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில், பொதுவான கவர்ச்சி மற்றும் பணபலத்தின் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் சீனாவில், தலைவர்கள் கீழ் மட்டத்திலிருந்து படிப்படியாக, பல கடுமையான சோதனைகள் மற்றும் கள அனுபவங்கள் மூலம் மேலே வருகிறார்கள். ஒரு தலைவராக நீங்கள் வர்த்தகம், பொருளாதாரம், சமூக நிர்வாகம் மற்றும் அரசியல் என அனைத்துத் தளங்களிலும் உங்கள் திறனை நிரூபிக்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சீன தேசத்தின் உயர்ந்தபட்ச பதவியான 7 பேர் கொண்ட அரசியல் தலைமை நிலைக்குழுவின் தலைவர்கள். இந்த நிலைக்கு வரும் ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தபட்சம் மூன்று முறை ஒரு மாகாணத்தின் கட்சிச் செயலாளராகவோ அல்லது ஆளுநராகவோ இருந்திருக்க வேண்டும். அதாவது, அவர்கள் இந்த தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன்னர், குறைந்தபட்சம் 10 கோடிக்கும் அதிகமான மக்களை நிர்வகித்த நீண்ட கால நிர்வாக அனுபவத்தைக் கொண்டிருப்பார்கள்.

இந்த முறையானது, பெரும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய, உண்மையான திறமையும் அனுபவமும் வாய்ந்த தலைவர்களை உருவாக்குகிறது.

பென் நோர்டன்: சீன மாடலின் பொருளாதாரத் தூணான சோசலிச சந்தைப் பொருளாதாரம் குறித்து மேலும் விளக்குங்கள். இதில் அரசின் பங்கு என்ன?

ஜாங் வெய்வே: எங்களின் சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு கலப்புப் பொருளாதாரம் தான். ஆனால் அதன் அடிப்படையே வேறு. கனிம வளங்கள், நிலம் உள்ளிட்ட நாட்டின் வளங்களின் பெரும்பகுதி அரசுக்குச் சொந்தமானவை. அதேசமயம், நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை தனியார் நிறுவனங்களுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசின் திட்டமிடலுடன் சந்தைச் சக்திகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படுகிறது.

சீனாவின் இணைய வெற்றி இதற்கு மிகச் சிறந்த உதாரணம். டிக்டாக், டெமு, ஷெயின் போன்ற செயலிகள் சீனாவின் உள்நாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னரே உலகளவில் வெற்றி பெறுகின்றன. இந்த வெற்றிக்கு அடித்தளம் என்னவென்றால், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 4ஜி அல்லது 5ஜி இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்பது அரசின் உறுதியான அரசியல் இலக்கு. இந்த அரசியல் இலக்கின் காரணமாக, அரசுத் துறைகள் நாடு தழுவிய இந்த இணையக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. இந்த அதிநவீன மற்றும் விரிவான கட்டமைப்பைத்தான் அலிபாபா போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் இணைய வர்த்தகத்திற்குப் பயன்படுத்தி, அபரிமிதமான வளர்ச்சியைப் பெறுகின்றன. சீனாவில் நாங்கள் தீவிரமான போட்டியை ஊக்குவிக்கிறோம். இதை “ஜூவான் – போட்டி, போட்டி, போட்டி” என்று சொல்வோம். உதாரணமாக, 100 ஓட்டோமொபைல் தொழிற் சாலைகள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. போட்டியில் நிலைப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள், இதனால் வாகனங்களின் விலை குறைகிறது, தரமும் உயர்கிறது.

பென் நோர்டன்: அமெரிக்க மாடலில் அதிகாரச் சமநிலை மூலதனத்தின் நலன்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறுகிறீர்கள். சீனாவில் அதிகாரச் சமநிலை எவ்வாறு செயல்படுகிறது? இது தொழிலாளர்களுக்கு எவ்வாறு பலன் அளிக்கிறது?

ஜாங் வெய்வே: அமெரிக்க மாடலில் செயலாக்கம், நீதி மற்றும் சட்டம் என அதிகாரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, ஒரு சமநிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில், இந்த அதிகாரச் சமநிலை மூலதனத்தின் அதிகாரத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது. சக்திவாய்ந்த பில்லியனர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி வழங்கி, கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள். இது சீனாவில் நடக்கவே நடக்காது.

சீனாவின் பார்வையில், இந்த மூன்று அதிகாரப் பிரிவுகளும் முழுமையாக அரசியல் தளத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இந்த அதிகாரங்களின் சமநிலை பெரும்பான்மை சீன மக்களின் நலன்களுக்கு ஆதரவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மைக்ரோசாஃப்ட் அல்லது ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடுகளைச் செய்து அதிக இலாபம் ஈட்டும்போது, சீனத் தொழிலாளர்கள் அந்த இலாபத்தின் ஒரு சிறு பகுதியை பெறுவார்கள். மீதமுள்ள பகுதி வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது. எனினும், இதன் மூலமாக சீனாவிற்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, மேலும் இந்தத் தொழிலாளர்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் நல்ல வாழ்க்கையை வாழ முடிகிறது.

நிச்சயமாக, சீனா நீண்ட கால நோக்கில் மதிப்பு கூட்டுச் சங்கிலியை (Value-Added Chain) நோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. வெறும் உழைப்பு மற்றும் டி-ஷர்ட் உற் பத்தியை மட்டுமே வைத்துக்கொண்டு நீடித்து இருக்க முடியாது. அதனால்தான், இன்று, மேற்கத்திய நாடுகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் சீனா ஆண்டுதோறும் உருவாக்குகிறது. சமூக அதிகாரம், மூலதனத்தின் (பொருளாதாரம்) அதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரம் அனைத்தும் சீன மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான இலக்குடன் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில், உலகமயமாக்கல் மூலம் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், அந்த வருவாயின் சிறு பகுதியைக் கூட அமெரிக்காவின் நலன்களுக்காகச் செலவிடுவதில்லை. இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சனை என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்.

Ben Norton

பென் நோர்டன்: சீனா ஒரு சர்வாதிகார நாடு என்று மேற்கத்திய ஊட கங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் நீங்கள் அங்கு ஒரு விரிவான ‘மக்கள் ஜனநாயகம்’ இருப்பதாகக் கூறுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்?

ஜாங் வெய்வே: ‘சர்வாதிகாரம்’ என்பது சீனா மீது மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தும் ஒரு தவறான முத்திரை. பல ஆண்டுகளுக்கு முன்பே, ஜனநாயகம் குறித்த தவறான மேற்கத்திய முன்னுதாரணத்தை நான் விமர்சனம் செய்துள்ளேன். சீனாவில் நாங்கள் நம்புவது அடிப்படை ஜனநாயகம் மற்றும் நடைமுறை ஜனநாயகம் ஆகிய இரண்டையும் ஆகும். எங்களைப் பொறுத்த வரை, ஒரு நல்ல அரசாங்கத்தை வழங்கு வதே (lhX – அனைத்து வகைக்குமான தேவை) ஜனநாயகத்தின் மிக முக்கியமான தேவை. ஒரு நல்ல ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்து, அதன் பின்னரே அதற்கான வழிமுறைகளை (N – குறிப்பிட்டவைக்கானது) நோக்கி பயணிக்கிறோம்.

எங்களின் மக்கள் ஜனநாயகத்தின் செயல்முறைக்குச் சட்டமியற்றும் நடைமுறையே சிறந்த உதாரணம். அமெரிக்காவில் ஒரு சட்டக்குழு எளிதாக ஒரு சட்டத்தை இயற்றிவிட முடியும். ஆனால் சீனாவில், மக்கள் நாடாளுமன்றத்தால் முன்மொழியப்படும் ஒவ்வொரு சட்டமும் முதலில் நூற்றுக்கணக்கான உள்ளூர் தொடர்பு மையங்கள் மூலமாக அடித்தட்டு மக்கள் வரையிலும் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படும். உதாரணமாக, குடும்ப வன்முறைச் சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தின்போது, கிராமப்புறங்களில் முதியவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பொது மக்கள் ஆலோசனை வழங்கினர். அந்த ஆலோசனைகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.

சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதன் அமுலாக்கத்தை மக்கள் நாடாளுமன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழு ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யும். இதுதான் முழுமையான மக்கள் ஜனநாயகத்தின் செயல் முறை. மேலும், எங்களின் ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்த செயல்முறையின் மிக முக்கியமான அம்சம். மின்சார வாகனத் துறையில் சீனா அடைந்துள்ள வளர்ச்சி க்குக் காரணம், 20 ஆண்டுகால (நான்கு ஐந்தாண்டுத் திட்டங்கள்) இடைவிடாத திட்டமிடல் மற்றும் உழைப்புதான். பருவ நிலை மாற்றம் போன்ற பெரும் சவால்களை எதிர்கொள்வதில், சோசலிச மாடலால் உறுதியான இலக்குகளைத் திட்ட மிட்டு நிறைவேற்ற முடிந்தது, ஆனால் மேற்கத்திய மாடலால் அது கடினம். பசுமைப் புரட்சி இலக்குகளைச் சீன சோசலிச மாடல் மூலம் செயல்படுத்த முடிந்தது.

பென் நோர்டன்: 2011ஆம் ஆண்டில் ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமாவுடன் நீங்கள் விவாதித்தீர்கள். அப்போது அவர் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு வரலாறு முடிந்துவிட்டது என்றும், அரபு வசந்தம் போலச் சீனாவிலும் மாற்றம் வரும் என்றும் வாதிட்டார். இன்று அந்த விவாதத்தின் நிலை என்ன?

ஜாங் வெய்வே: ஆம், அது 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் எகிப்தில் முபாரக் அரசு கவிழ்ந்த நேரத்தில் நடந்தது. அரபு எழுச்சியைப் போலச் சீனாவிலும் ஆட்சி கவிழும் என்று அவர் சுயதிருப்தி அடைந்தார். பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு என்பதற்காக அனைவரும் போராடுவார்கள் என்றார். ஆனால் நான் அவருக்கு எகிப்து கண்டிப்பாக வீழ்ச்சியடையும் என்று சொன்னேன், ஏனென்றால் அந்நாட்டைப் பற்றி எனக்குத் தெரியும். அதேபோல வீழ்ந்தது. வரலாறு முடிவு பெறும் என்ற அவரது கருத்தியல் தோல்வியுற்றது. சீனா ஆயிரமாண்டுகள் நாகரிக வரலாறு கொண்டது. அதைப் புரிந்து கொள்ளா மல் செய்யும் எந்தப் பகுப்பாய்வும் பயனற்றது.

பென் நோர்டன்: அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் சீனப் பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதனால் யாருக்கு அதிக இழப்பு?

ஜாங் வெய்வே: ட்ரம்ப் தனது முதல் சுற்று வர்த்தகப் போரைத் தொடங்கிய முதல் நாளிலேயே நான் இதைச் சொன்னேன்: வர்த்தகப் போரினால் அமெரிக்கா தான் மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றொன்றைச் சார்ந்துள்ள நிலையில், இந்தச் சார்புநிலை யாருக்கு மிகவும் ஆழமானது என்பதைப் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் விற்கப்படும் நுகர்வுப் பொருட்களில் 80% முதல் 90% வரை சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை.

ஒரு சிறிய திருகாணி முதல் பெரிய இயந்திரங்கள் வரை, அமெரிக்காவால் உடனடியாக மாற்று உற்பத்தியாளர்களை ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் கண்டு பிடிக்க முடியாது. வர்த்தகப் போரைச் செயல்படுத்த வேண்டுமானால், அமெரிக்கா முதலில் அதன் உற்பத்தித் தொழிலை மறுகட்டமைக்க வேண்டும். இது சாத்தியமற்றது. சீனாவின் உட்கட்டமை ப்பு வசதிகளை அமெரிக்காவால் திடீ ரென்று உருவாக்க முடியாது. ஷாங்காயைச் சுற்றியுள்ள முத்து நதி பிரதேசம், உலகளாவிய நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தியின் மையமாக உள்ளது. இது பல பத்தாண்டுகளின் திட்டமிடல் மற்றும் சந்தை அணுகுமுறையின் விளைவாகும். இந்த காரணங்களால், ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் கணக்கு அப்பாவித்தனமானது; அது அமெரிக்காவிற்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தும்.

பென் நோர்டன்: உலக நிதி அமைப்பில் டொலரின் மேலாதிக்கத்திற்கு எதிராக சீனா பிரிக்ஸ் நாடுகள் மூலம் மாற்றை உருவாக்குமா?

ஜாங் வெய்வே: உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. ரஷ்யா தனது ரூபிளை தக்கவைத்துக் கொண்டது, ஏனெனில் அவர்களிடம் சரக்கு இருந்தது. சீன மொழியில் கரன்சிக்கு ‘ஹியோ’ (சரக்கு) மற்றும் ‘பை’ (பணம்) என இரண்டு வார்த்தைகள் உள்ளன. அமெரிக்காவிடம் பணம் இருக்கிறது, ஆனால் சீனாவிடம் உற்பத்திப் பொருட்கள் (சரக்கு) உள்ளன. நெருக்கடியான காலங்களில் சரக்குகளைத் திடமாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறோம். அமெரிக்கா டொலர் மற்றும் ஸ்விப்ட் (SWIFT) இரண்டையும் ஆயுதமாக்குகிறது. இதற்குப் பதிலாக, சீனாவின் சிப்ஸ் (CIPS) (எல்லைதாண்டிய வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை முறை) வேகமாக வளர்ந்து வருகிறது. சிப்ஸ் (CIPS) அதிநவீன பிளாக் செயின் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படு கிறது.

இது பழைய டெலிகிராஃபை அடிப்படையாகக் கொண்ட ஸ்விப்ட் முறையை விட மிகவும் வேகமானது (சில நொடிகளில் பரிவர்த்தனை), செலவு குறைந்தது மற்றும் திறமையானது. 2025 மார்ச் மாத நிலவரப்படி, சரக்கு வர்த்தகத்தில் சீனக் கம்பெனிகள் சீன நாணயத்தைப் பயன்படுத்துவது ஏற்கெனவே 54% ஆக உள்ளது, இது அமெரிக்க டொலர் பயன்பாட்டை விட அதிகம். மூலதனச் சந்தையில் டொலரின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், சரக்கு வர்த்தகத்தில் சீனாவின் யுவான் நாணயம் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாதது.

பென் நோர்டன்: ஒற்றை உலகக் கோட்பாட்டிற்குப் பதிலாக, சீனா பன்முக உலக ஒழுங்கில் நம்பிக்கை கொண்டுள்ளதா? சீனா எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறதா?

ஜாங் வெய்வே: ஓம், அதுவே எனது பார்வை. பன்முக உலகம் என்பது தவிர்க்க முடியாதது. ஒற்றை உலகக் கோட்பாட்டை விரும்புவோர் (ட்ரம்ப் போன்றோர்) உலகை 19ஆம் நூற்றாண்டு வணிகமயப் பொருளாதாரத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். இந்த அணுகுமுறை அமெரிக்கப் பொருளாதாரத்தையும் சிதைத்துவிட்டது. அவர்கள் பின்னோக்கிப் பார்க்கிறார்கள், ஆனால் நாங்கள் முன்னோக்கிப் பார்க்கிறோம். நிச்சயமாக, சீனா எதிர்காலத்தை நோக்கியே பயணிக்கிறது.

மூலம்: How does China’s system really work? Renowned scholar Zhang Weiwei explains the ‘China model’

Tags: