‘‘அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்கவைக்கும் ஒப்பந்தம்’’ – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கக்கூடியது என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 11 -வது நாளான இன்று (12.02.2026), இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஒப்பந்தம் அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். உலகம் ஒரு உலகளாவிய புயலை எதிர்கொள்கிறது என்பதையும் ஒரு வல்லரசின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதையும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள், எரிசக்தி மற்றும் நிதியை ஆயுதமாக்குகின்றன என்பதையும் அரசே ஒப்புக்கொள்கிறது.
இந்த யதார்த்தத்தை உணர்ந்த போதிலும் மத்திய அரசு எதற்காக, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் நிதி அமைப்புகளை ஆயுதமாக்க அனுமதித்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் இது தொடர்பான கூட்டறிக்கை குறித்தும் மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அவையின் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட அனைத்து அலுவல்களையும் நிறுத்திவிட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
“எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – மக்களவையில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று (11.02.2026) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அவையில் ராகுல் காந்தி பேசியதாவது: ”நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன.
போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தனர். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உக்ரைன், காசா, மத்திய கிழக்கு நாடுகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஒப்பிரேஷன் சிந்தூரை சந்தித்தோம். டொலருக்கும், அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் சவால் விடப்படுகிறது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டொலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள் தான்.
மக்கள் தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கின்றனர். ஆனால், மக்கள் தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து நீங்கள் (மத்திய அரசு) இந்தியாவை விற்றுவிட்டீர்கள்.
இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்று விட்டீர்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கின்றனர்.

ஒன்று தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க வழக்கு. மற்றொன்று இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ தொடர்பானது. எப்ஸ்டீன் தொடர்பான 30 இலட்சம் கோப்புகள் வெளியாகி உள்ளன. ஒரு வேளை இண்டியா கூட்டணி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்
எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் (ட்ரம்ப்) பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது பணியாட்களைப் போல நடத்தாதீர்கள்.
இந்திய மக்களின் தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்.” இவ்வாறு ராகுல் பேசினார்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “அவையில் ராகுல் காந்தி பேசியது அனைத்தும் பொய். அவரது பேச்சில் என்னென்ன பொய்கள் உள்ளனவோ, அவற்றை நீக்கக் கோருவோம். இது தொடர்பாக ராகுல் காந்தி ஆதாரங்களை அளிக்குமாறு பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்குவோம்” என்றார்.