சும்மா அமைவதில்லை சோசலிச அரசு!

பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு வளரும் நாடு இருக்கிறது தெரியுமா என்று கேட்டால், “உலகப் பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவிலேயே வீடற்றவர்கள் இருக்கும்போது, ஒரு வளரும் நாட்டில் இது எப்படிச் சாத்தியம்?” என்ற பதில் வரும். அந்த நாடு தான் நமக்கு அருகிலேயே இருக்கும் வியட்நாம் சோசலிசக் குடியரசு. இது ஏதோ மாய வித்தையல்ல; சோசலிச கொள்கையினால் விளைந்த மாற்றம். இதுபோல் வியட்நாமிற்குள் நேரில் கண்ட சில அனுபவங்களுக்குள் பயணிப்போம் வாருங்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை  வீழ்த்திய மன உறுதி

வியட்நாம் என்றாலே தொடர்ந்து சண்டை நடை பெறும் இடம் என்கிற கேலிப் பொருளில் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்தை 1970 இல் நாம் எடுத்துக் கொண்டி ருந்தோம். ஆனால், அப்போது அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலை எதிர்த்து, பெரும் ஆயுதங்களற்ற வறிய வியட்நாமியர்கள், தங்களிடம் உள்ள மூங்கில் மற்றும் ஆணிகளைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டார்கள். அதுவும் ஒருநாள் இரண்டு நாள் அல்ல; கால் நூற்றாண்டுக் காலம் சண்டையிட்டு, முடிவில் அமெரிக்காவை வெற்றி கொண்டார்கள்.

1930 இல் உருவான வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, தோழர் ஹோ சி மின் தலைமையில் நீண்ட காலம் பிரெஞ்சு காலனியாக இருந்த வியட்நாமின் விடுதலைக்காகப் போராடியது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுக்கு எதிராகவும் தங்களது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தார்கள். 1945 செப்டம்பர் 2 இல் வியட்நாமை முழு விடுதலை பெற்ற நாடாக அறிவித்தார் ஹோ சி மின். சோசலிச அரசாகச் செயல்படத் தொடங்கியிருந்த வியட்நாமைச் சில வாரங்களுக்குள் மேற்குலகம் கைப்பற்றியது.

மீண்டும் மக்கள் போராடினார்கள்

1954 இல் நாடு வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்பட்டது. தெற்கில் மேற்குலக ஆதரவு அரசும், வடக்கில் சோசலிச அரசும் உருவானது. ஆனால் வியட்நாம் மக்கள் இந்தப் பிரிவை விரும்பாமல் நாட்டை ஒன்றிணைக்கப் போராடினார்கள்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலம்

இந்த முறை அமெரிக்கா நேரடியாகத் தனது சூழ்ச்சி மூலம் போரைத் தொடுத்தது. ஒரு கட்டத்தில் ஐந்து இலட்சம் படை வீரர்களோடு வியட்நாமை வேட்டையாடியது. 1955 முதல் 1975 வரை இருபது ஆண்டுகள் அமெரிக்கா 70 இலட்சம் குண்டுகளை அந்நாட்டில் வீசியுள்ளது. இது இரண்டாம் உலகப்போரின் போது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வீசப்பட்ட மொத்த குண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகம். ஒவ்வொரு வியட்நாமியரும் தலா 500 பவுண்டு குண்டுகளைத் தாங்கிக்கொண்டார்கள். சுமார் 30 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2 கோடி பள்ளங்கள் ஏற்பட்டன. 27,363 சதுர கிலோ மீட்டர் நிலங்கள் அமெரிக்காவின் விஷக் குண்டுகள் மூலம் நச்சுத் தன்மையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமானது. இவ்வளவு தாக்குதல்களுக்குப் பின்னும் அமெரிக்காவால் வியட்நாமை வெற்றி கொள்ள முடியாமல் வெளியேற வேண்டியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர், கென்னடியிடம் பேசும்போது, “நமது படைகளை விட கம்யூனிஸ்டுகளின் மன உறுதி சிறப்பாக இருப்பதைக் கண்டு நான் பெரிதும் வியக்கிறேன்” என்றார். அமெரிக்க ஜெனரல் மாக்ஸ்வெல் டெய்லர், “வியட்காங் படைப்பிரிவுகள் ஃபீனிக்ஸ் பறவையின் மீட்சி பெறும் சக்தி கொண்டிருப்பது மட்டுமல்ல, அவை மன உறுதியைப் பராமரிப்பதற்கான அற்புதமான திறன் கொண்டுள்ளன. வியட்காங் கைதிகளிடமோ, ஆவணங்களிலிருந்தோ அவர்களின் மோசமான மனஉறுதி சான்றுகளைக் காண்பது மிக அரிது” என்று சொன்னார்.

கூச்சி சுரங்கம்: ஒரு புரியாத புதிர்

அமெரிக்காவை வெல்ல வியட்நாமியர்களிடம் படைபலமோ, பணபலமோ இல்லை. அப்போது 20 இலட்சம் வியட்நாமியர்கள் பட்டினியால் இறந்திருந்தனர். உணவுப் பஞ்சத்தில் இருந்த மக்களை வைத்துக்  கொண்டுதான் அமெரிக்காவை எதிர்த்தார் ஹோ சி மின். அதற்குச் சிறந்த போர் உத்தி ‘கூச்சி சுரங்கம்’. சைகோன் நகருக்கு அருகே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் மண்ணுக்கு அடியில் 200 கிலோ மீட்டருக்குச் சுரங்கம் அமைத்து வாழ்ந்தார்கள்.

தரையில் 2 அடிக்கு 1 அடி நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால், மூன்று அடுக்குகளைக் கொண்ட உலகம் இருக்கும். அங்கு சமையற்கூடம், மருத்துவமனை, ஆயுதத் தயாரிப்பு கூடம், அரசியல் தலைவர்கள் கூட்டம் நடத்தும் இடம், செருப்புத் தைக்கும் தொழிலகம், உடைகள் தைக்கும் தொழிற்கூடம் என ஒரு ஊரின் அத்தனை தேவைகளும் இருந்தன. சுரங்கத்திற்குள் குடிதண்ணீருக்கென்று கிணறுகள் வெட்டப்பட்டு, ஆற்று நீரையும் பயன்படுத்தியுள்ளார்கள். காற்றோட்டத்திற்காகச் சிறு துளைகள் போடப்பட்டிருந்தன. சராசரி அமெரிக்க வீரரின் உடல்வாகு அச்சுரங்கத்திற்குள் நுழைய முடியாதபடி அதன் அளவு சிறியதாக இருந்தது. ஒருவேளை நுழைந்தாலும் கண்ணிவெடிகள் அவர்களைச் சிதைக்கும். நச்சு வாயுவைச் செலுத்தியும் வியட்நாமியர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. 1995 இல் இச்சுரங்கத்தின் ஒரு பகுதியைத் தூய்மைப்படுத்திச் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்துள்ளது அரசு.

பொருளாதாரத் தடைகளும் மீட்சியும்

1975 இல் போர் முடிந்தாலும், அமெரிக்கா வியட்நாம் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. 1980களில் சோமாலியா, எத்தியோப்பியாவிற்குக் கீழாக வறுமை போனது. சோவியத்தின் வீழ்ச்சியால் உதவிகளும் நின்றன. இந்தச் சூழலில் 1986 இல் நடைபெற்ற 6 ஆவது கட்சி மாநாடு வரலாற்றின் திருப்புமுனை. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு என்பது பிரம்மாண்டப் பேரணி மட்டும் அல்ல; அரசிற்கான திட்டங்களை வகுக்கும் தளம். மக்களின் விவாதங்கள் மற்றும் திருத்தங்களை ஏற்று அரசின் கொள்கைத் திட்டமாக அது மாறும்.

இதன் மூலம் 1990 முதல் 2022 வரை வியட்நாமின் உற்பத்தி 5 மடங்கு வளர்ந்தது. 1980 இல் வறிய நாடாக இருந்த வியட்நாமில் இன்று வறுமை 4%, வேலையின்மை 2% மட்டுமே. 1992 இல் 60.5% ஆக  இருந்த குடிசைப்பகுதி இன்று இல்லை. பெரு நகரங்களில் முழு வீட்டு வசதிக்கான தீவிர திட்டங்கள் அமுலில் உள்ளன. 2024 கணக்குப்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,696.66 டொலர், ஆனால் வியட்நாமின் தனி நபர் வருமானம் 4,717.29 டொலர். எந்த அமெரிக்கா வியட்நாமை அழித்ததோ, அதே அமெரிக்காவே இன்று தவிர்க்க முடியாமல் அங்கு முதலீடு செய்கிறது.

பண்பாட்டுப் பாதுகாப்பும் பொறுப்புணர்வும்

வியட்நாமில் 50 ஆண்டுகளாகக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கிறது. ஆனால் ஹோ சி மின்னைத் தவிர எந்தத் தலைவரின் பேனரையும் பார்க்க முடியாது. ஊர் முழுக்க “நவீன கல்வி முறை”, “தேசியப் பண்பாடு”, “ஜனநாயகம், ஒழுக்கம், முன்னேற்றம்” போன்ற முழக்கங்கள் மட்டுமே சிவப்புப் பதாகைகளில் உள்ளன. சமீபத்தில் அகில வியட்நாம் மாநாடு நடக்கும்போதும் எங்குமே போக்குவரத்து தடைபடவில்லை.

அண்டை நாடுகளில் உள்ள பாலியல் சுற்றுலா பாதிப்புகள் வியட்நாமிற்குள்ளும் எட்டிப் பார்க்கின்றன. ஆனால், அரசு, மதுவைத் தவிர வேறு போதைப் பொருட்களை அனுமதிப்பதில்லை. காவல்துறையின் கண்காணிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அவர்கள் சொன்ன பதில் முக்கியமானது: “வயது வந்த ஆண் பெண் உறவுகளுக்குள் அரசு தலையிடாது. ஆனால் பாலியல் வணிகத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை. ஸ்பாக்கள் பண்பாட்டிலேயே உள்ளன, சில இடங்களில் சட்ட மீறல்கள் நடப்பதை வைத்து ஒட்டுமொத்த வியட்நாமையும் மதிப்பிடக்கூடாது. இதை பொருளாதார சமத்துவத்தால் மட்டுமே முழுமையாகச் சரி செய்ய முடியும்.”

வறுமை ஒழிப்பு:  சோசலிசத்தின் வெற்றி

பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக வியட்நாம் மாறிய இரகசியம் இதுதான்: உணவுக்கு வழியில்லாமல் ஒருவர் பிச்சை எடுத்தால், அவரை அரசு ‘தொழிற்கல்வி பள்ளிக்கு’ அனுப்பி இலவசப் பயிற்சியும் வருமானம் ஈட்ட வழியும் செய்து கொடுக்கிறது. உடல்நிலை பாதித்த வயதானவர்களை ‘சமூகப் பாதுகாப்பு மையத்தில்’ சேர்த்து அரசே தனது செலவில் பாதுகாக்கிறது. வளர்ந்த நாடுகள் ஆபிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப் பல்லாயிரம் கோடி செலவிட்டும் அங்கு வறுமை ஒழியவில்லை; மாறாக முதலாளித்துவச் சுரண்டலே நீடித்தது. ஆனால், எந்த வெளிநாட்டு உதவியும் இன்றி வியட்நாம் வறுமையை ஒழித்துள்ளது. காரணம், சோசலிசம். ஏன் இம்மக்கள் சோசலிசத்திற்காக இத்தனை ஆண்டுகாலம் போராடினார்கள் என்பதன் பொருளை இன்று வியட்நாமியர்கள் அனுபவிக்கிறார்கள்.

நன்றி: தீக்கதிர்

Tags: