மேற்கத்திய ஊடகங்களின் ஒருதலைப்பட்சப் பார்வையும் மூளைச்சலவையும்
-முத்துகிருஸ்ணன் அழகர்சாமி

ஒரு நாட்டின் அரசியலையும் அதன் தலைமையையும் ஒரே ஒரு தரப்பின் பார்வையில் மட்டும் பார்ப்பது முழுமையான உண்மையை அளிக்காது. உலகமே தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலிய அல்லது மேற்கத்திய ஊடகங்களின் பார்வையில் மட்டுமே ஈரானை அறிந்து வைத்துள்ளது.
மேற்கத்திய ஊடகங்கள் பெரும்பாலும் ஈரானை ஒரு “தீய சக்தியாக” (Axis of Evil) சித்தரித்து வந்துள்ளது. ஆனால், ஈரானின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பிற்குப் பின்னால் நீண்டகால வரலாற்றுப் பின்னணி உள்ளது.
1953 இல் ஈரானின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மொசாடெக் அரசு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் கவிழ்க்கப்பட்டது. ஈரானியர்களின் மனதில் மேற்கத்திய நாடுகள் மீதான பெரும் அவநம்பிக்கையை அது ஏற்படுத்தியது.
ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்பது சர்வதேச சட்டத்தின் (International Law) அடிப்படை விதி. ஈரான் தனது நாட்டின் கலாச்சாரம் மற்றும் மத விழுமியங்களின் அடிப்படையில் ஓர் ஆட்சியை நடத்துகிறது. அந்த அரசு மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், இருக்கவும் வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதனை விமர்சிப்பதை தாண்டி வேறு நாடுகளுக்கு அதன் விவகாரங்களில் தலையிட உரிமை உள்ளதா? ஒரு வெளிநாட்டு இராணுவம் தன்னுடைய முழு பலத்தால் அங்குள்ள அரசை மாற்ற முயல்வது சரியா, அதன் தலைவர்களைக் கொலை செய்வது சர்வதேச விதிமுறைகளின் படி சரியா, இது அமைதிக்கு எதிரானது இல்லையா?
ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய அதே நேரம், அடுத்தது துருக்கி எங்கள் இலக்கு என்றும், அதனை தொடர்ந்து பாகிஸ்தான் எங்கள் இலக்கு என்றும் இஸ்ரேலில் பேட்டியளிக்க தொடங்கியிருப்பது உங்கள் காதுகளை எட்டவில்லையா?
மேற்கத்திய நாடுகள் ஈரானை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் முதலீட்டியமும் மற்றும் புவிசார் அரசியலுமே (Capitalism & Geopolitics).
மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு சவாலாக இருக்கும் ஒரே நாடு ஈரான் என்பதால், அந்தத் தலைமை பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஈரான் மக்களை விடுவிப்பது அவர்களின் நோக்கமே இல்லை, அவர்களின் கண்கள் எல்லாம் எங்கே உள்ளது என்றால் அது ஈரானின் பெரும் எரிசக்தி வளங்கள் மீது உள்ளது.

ஈரானின் எண்ணை வளங்களை தங்களின் கட்டுக்குள் கொண்டு வர மேற்கத்திய நாடுகள் துடித்து வருகின்றன.
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அந்நாட்டு மக்களை அரசுக்கு எதிராகத் திருப்ப 50 ஆண்டுகளாக இவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இது ஒரு வகையான “பொருளாதாரப் போர்” ஆகும்.
ஈரானை சுற்றி அமெரிக்க இராணுவத் தளங்கள் இருக்கும் சூழலில், தங்கள் பாதுகாப்பிற்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் “ஆக்கிரமிப்பு” போலச் சித்தரிக்கப்படுகின்றன. மேற்கத்திய ஊடகங்கள் உருவாக்கும் பிம்பத்தை மட்டும் நம்பாமல், வரலாற்றுப் பின்னணி மற்றும் அந்த நாட்டின் மக்களின் உண்மையான தேவைகளை வைத்துப் பார்ப்பதே ஒரு முதிர்ந்த அரசியல் பார்வையாக இருக்கும். ஆனால் இங்கே ஊடகங்கள் முழுவதுமே மேற்கத்திய ஊடக வாந்தியாகவே உள்ளது, பிரச்சாரங்களை உள்வாங்கி உள்வாங்கி ஈரானுக்கு எதிரான வன்மம் அதவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை.
1979 புரட்சிக்கு முன்பு அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஈரான், 1979 இல் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 444 நாட்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா முதன்முதலில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முறிவை ஏற்படுத்தியது.
புரட்சிக்குப் பிந்தைய நெருக்கடியான சூழலில், ஈராக், ஈரானின் மீது போரைத் தொடுத்தது. 1980 முதல் 1988 வரை என 8 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் சுமார் 10 இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்தப் போரின்போது ஈராக் அதிபர் சதாம் உசேனுக்குப் பல மேற்கத்திய நாடுகள் இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியது. சதாம் அன்றைக்கு அமெரிக்காவின் மடியில் அமர்ந்து இந்த வேலைகளை செய்தார். இது தான் ஈரானியர்களிடையே அமெரிக்காவின் மீதான கசப்பை உண்டாக்கியது, அதை வலுப்படுத்தியது.
2000-களின் தொடக்கத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த புகார்கள் எழுந்தன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபை (UN), அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மிகக்கடுமையான தடைகளை விதித்தன.

எண்ணெய் ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டது, ஈரானின் முக்கிய வருவாயான எண்ணெய் விற்பனை முற்றிலும் முடக்கப்பட்டது. சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பிலிருந்து (SWIFT முடக்கம்) ஈரான் நீக்கப்பட்டதால், வணிகம் செய்வது கடினமானது. ஈரானிய நாணயமான ‘ரியால்’ (Rial) கடும் சரிவைச் சந்தித்தது, இது அத்தியாவசியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது.
2015 இல் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஈரான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் தடைகள் தளர்த்தப்பட்டு பொருளாதாரம் மீளத் தொடங்கியது. ஆனால், 2018 இல் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகி, “அதிகபட்ச அழுத்தம்” (Maximum Pressure) என்ற கொள்கையை அமுல்படுத்தினார். இது ஈரானின் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்திற்குத் தள்ளியது.
மருத்துவத் துறையில் பல தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இலட்சக்கண க்கான மக்கள் மருந்துகள் இல்லாமல் செத்து மடிந்தனர்.
பொருளாதார தடையால் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறின, தொழிற்சாலைகள் இரவோடு இரவாக மூடப்பட்டனர், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்தனர், வறுமை தலைவிரித்தாடியது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர், ஈரானின் மனித உரிமை மீறல்கள் மற்றும் மதக் கட்டுப்பாடுகள் குறித்து உள்நாட்டிலேயே போராட்டங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இந்த போராட்டங்களின் போது அரசு கொன்றது என்கிற எண்ணிக்கையும் கூட மேற்கத்திய ஊடகங்கள் பூதாகரமாகவே ஒவ்வொரு முறையும் மாற்றிக் காட்டியது.

ஒரு விவாதத்திற்கு இந்த எண்ணிக்கை ஓர் ஆயிரம் என்று வைத்து கொண்டு அதனை வைத்து ஈரானுக்கு தீர்ப்பு எழுதியவர்கள், அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால், மருத்துவ தடையால் அங்கே இறந்து போன இலட்சக்கணக்கான உயிர்களை ஒரு கணக்காக கூட எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் பொருளாதார தடையால், மருந்துகளில் தடையால் இறப்பவர்களின் எண்ணிக்கையை அவர்கள் ஒரு போதும் வெளி உலகிற்கு தெரிவித்ததில்லை, அப்படி 50 ஆண்டுகளில் இறந்தவர்ளை பொருட்டாகவே மதிப்பதில்லை.
ஈரானுக்கு எதிராக 8 ஆண்டுகள் போர் தொடுத்து அங்கே இறந்து போன 10 இலட்சம் பேரை இவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை. உயிர்கள் எல்லாம் சமம் என்றால் இந்த உயிர்களை நீங்கள் ஏன் கணக்கில் எடுப்பதில்லை.
எல்லாம் உயிர்களும் உயிர்கள் தானே…
ஒருவன் தான் பாலியல் நாடகத்தை மறைப்பதற்கு ஈரான் போரை ஆரம்பித்துள்ளான் என்பதை கூட அறியாத அறிவிலிகளின் உலகமாக இது மாறிக் கிடப்பதை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.