ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபோதும் வெல்ல முடியாது

– பேராசிரியர் விஜய் பிரசாத்

ங்கள் காலடியில் பணிய மறுக்கும் நாடுகளின் இறையாண்மையை நசுக்குவது ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாகிவிட்டது. 2026 பெப்ரவரி 28 அதிகாலையில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் பகுதியில் உள்ள ‘ஷஜாரா தய்யிபா’ சிறுமியர் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட இந்த சட்டவிரோதத் தாக்குதலில் பிஞ்சு உயிர்கள் பலியாகின. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்த பல நிபந்தனைகளை ஏற்ற சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.  

ஒரு வரலாற்றுப் பின்னணி  

ஈரான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அமெரிக்காவைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையைத் தோற்றுவித்த நாடுகளுள் அதுவும் ஒன்று. எனவே, ஐ.நா சாசனத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும் ஈரான் தகுதியானது. அமெரிக்கா ஐ.நா சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், மற்ற உறுப்பு நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அதற்கு உண்டு.  

இருப்பினும், 2004 இல் ஈராக் போர் ஒரு “பயங்கரமான தவறு” என்று கூறிய அதே டொனால்ட் ட்ரம்ப், இன்று தனது சொந்த ஆலோசனையைத் தானே மீறிச் செயல்படுகிறார். சுமார் 10 கோடி மக்கள் தொகையும், பல நூற்றாண்டுகால தேசபக்தி பாரம்பரியமும் கொண்ட ஈரான் மீது ஏன் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன?  

அணுஆயுதக் கட்டுக்கதை  

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உரையில், ஈரான் அணுஆயுதத் திட்டத்தைக் கொண்டிருப்பதாகத் தான் நம்புவதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறினார். ஆனால், ஈரான் அணுஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா செய்யது அலி காமேனி, 2003 இலேயே இது தொடர்பாக ஒரு மதக் கட்டளையை (Fatwa) வெளியிட்டார்.

ஈராக் போரின் போது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட இரசாயன ஆயுதங்களால் ஈரானிய வீரர்கள் அடைந்த துயரங்கள் மற்றும் இஸ்லாமிய அறநெறிகளின் அடிப்படையில், மனிதகுலத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கும் ஆயுதங்களை உருவாக்குவது அறத்திற்கு எதிரானது என்பதே ஈரானின் நிலைப்பாடாகும்.  

சமீபத்தில் 2026 பெப்ரவரி 24 அன்று ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரான் ஒருபோதும் அணுஆயுதங்களை உருவாக்காது என்ற இரகசிய வார்த்தைகளை நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினார். ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி, “ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணுஆயுதங்களை உருவாக்காது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும், “எந்த மொழியில் சொன்னால் நாங்கள் அணு ஆயுதங்களை விரும்பவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?” என்று வேதனையுடன் கேட்டார். இவ்வளவு தெளிவான அறிவிப்புகள் வந்த பிறகும், வெள்ளை மாளிகைக்கு இந்தத் தகவல்கள் எட்டவில்லை என்பது வியப்பிற்குரியது.

அணுசக்தி ஒத்துழைப்பின் வரலாறு

1957 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவும் ஈரானும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜனாதிபதி ஐசனோவரின் ‘அமைதிக்கான அணுக்கள்’ (Atoms for Peace) திட்டத்தின் மூலம் அமெரிக்காவே ஈரானுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கியது. 1959 இல் டெஹ்ரான் அணு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக 5 மெகாவாட் அணு உலையை அமெரிக்காவே ஈரானுக்கு வழங்கியது.

1979 இல் நடந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, புதிய  அரசாங்கம் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை நிறுத்தியது. பின்னர் 1988 இல் ஈராக் போர் முடிந்த பிறகு, மின்சாரம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக மீண்டும் அணுசக்தித் திட்டம் தொடங்கப்பட்டது. 1995 இல் ரஷ்யாவுடன் இணைந்து புஷெர் அணுமின் நிலையத்தை (Bushehr Nuclear Power Plant) ஈரான் கட்டியெழுப்பியது. அப்போதெல்லாம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவிற்குப் பெரிய சந்தேகங்கள் இருந்ததில்லை.

புனையப்பட்ட குற்றச்சாட்டுகள்

2001 இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003 இல் ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு நிலைமை மாறியது. ஈரானின் வரலாற்றுப் பகைவர்களான தலிபான்களும் சதாம் உசேனும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பிறகு, ஈராக், சிரியா மற்றும் லெபனானுடன் உறவுகளை வளர்க்கும் வாய்ப்பு ஈரானுக்குக் கிடைத்தது. இது வாஷிங்டனுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானைத் தனிமைப்படுத்த விரும்பிய புஷ் நிர்வாகம், ஈரானின் அணு ஆயுதக் கனவு என்ற கட்டுக்கதையை உருவாக்கியது. இதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை (IAEA) ஒரு கருவியாகப் பயன்படுத்தியது.

ஆனாலும், உண்மைகள் வேறு விதமாக இருந்தன:

  • 2007 இல் அமெரிக்க உளவுத்துறை, ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை 2003 இலேயே நிறுத்தி விட்டது என்று உறுதிப்படுத்தியது.
  • 2011 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, ‘சாத்தியமான இராணுவத் தன்மை’ பற்றிச் சந்தேகம் எழுப்பி னாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்க வில்லை.
  • 2015 இல் ஐ.ஏ.இ.ஏ வெளியிட்ட இறுதி மதிப்பீட்டு அறிக்கை, 2009 இற்குப் பிறகு ஈரான் எவ்வித அணுவெடிப்புச் சோதனைகளிலும் ஈடுபடவில்லை என்று தெளிவுபடுத்தியது.
  • மிக முக்கியமாக, 2025 இல் தற்போதைய ஐ.ஏ.இ.ஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ கிராஸி, ஈரானில் அணுஆயுதங்களை உருவாக்கும் முறையான திட்டங்கள் எதுவுமில்லை என்று திட்ட வட்டமாகக் கூறினார்.

இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஜோர்ஜ் புஷ் ஈராக்கில் ‘பேரழிவு ஆயுதங்கள்’ இருப்பதாகக் கூறிப் பொய் சொன்னதையே மீண்டும் நினைவூட்டுகிறது. அந்த ஆயுதங்கள் எங்கே இருந்தன? அவை புஷ்ஷின் கற்பனையில் மட்டுமே இருந்தன.

பேராசிரியர் விஜய் பிரசாத்

பொருளாதாரத் தடைகளும்  மக்களின் துயரமும்

ஈரானுக்குள் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகள் நிலவுவது உண்மைதான். ஈரானின் பொருளாதாரத்தை அலறச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முயற்சி ஒருபுறம், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற ஈரானின் பொருளாதாரத் துறை அமைச்சர் செய்யது அலி மதானிசாதேவின் தவறான மேலாண்மை மறுபுறம், என ஈரானிய உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். ஆனால், ஈரானின் பொருளாதாரத்தை மூச்சுத்திணறச் செய்யும் இந்த மறைமுகப் பயங்கரப்  போர் (Hybrid War) முடிவுக்கு வராமல், ஈரானால் தனது உள்நாட்டுப் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது.

ஈரானிய மக்கள் போரை நன்கு அறிந்தவர்கள். 1856 இன் ஆங்கிலோ-பாரசீகப் போர் முதல் 1980 இன் ஈராக் படையெடுப்பு வரை அவர்கள் பலமுறை போரைச் சந்தித்துள்ளனர். ஈரானியக் கவிஞர் பெஹ்சாத் ஜரின்பூர் தனது ‘உடல் இல்லாத சவப்பெட்டிகள்’ என்ற கவிதையில் போரின் பயங்கரத்தை இவ்வாறு விவரிக்கிறார்:

“காற்றானது நகரத்தின் மூளைக்குள் அழிவின் நாற்றத்தை நிரப்பியுள்ளது.

நிலையற்ற சுவர்களின் மென்மையைத் தேடி எரிக்கின்ற சூரியனிடமிருந்து எவரும் தப்பி ஓடுவதில்லை.

விரிந்து கிடக்கும் விருந்தோம்பலற்ற மேஜை விரிப்புகள்,

வெற்று வாக்குறுதிகள்,

ரொட்டிக்கு பதிலாகத் துப்பாக்கி குண்டுகளைத் தின்னும் வயிறுகள்…

பாட்டியின் நாக்கு அச்சுறுத்தலில் உறைந்து கிடக்கிறது,

அவரால் தனது பிரார்த்தனைகளை நினைவுகூர முடியவில்லை.”

ஈரானிய மக்களின் தேசபக்தியையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் ஒருபோதும் முறியடிக்க முடியாது. அணுஆயுதங்கள் குறித்த கவலைகள் வெறும் போலி முகமூடி மட்டுமே என்பதை இந்தத் தாக்குதல் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கப் பசிக்கு எதிராக அணிதிரள்வோம்.

மூலம்: Israel and the United States cannot win the war against Iran

தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்

Tags: