அமெரிக்காவுடன் உடன்படிக்கை செய்வதற்கு இலங்கை இராணுவத்தளபதி எதிர்ப்பு!
இலங்கையின் பூகோளரீதியிலான மற்றும் யுத்ததந்திரரீதியிலான அமைவிடம் காரணமாக தற்போதைய சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பிராந்திய மற்றும் உலக சக்திகள் இலங்கையில் அனுகூலம் பெறுவதற்கு முயற்சிப்பதைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், ‘படைகள் ஒப்பந்தத்தின் நிலை’ (Status of Forces Agreement – SOFA) குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை தான் ஏற்கப்போவதில்லை என இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.
“எப்படி நாங்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியும்? இதில் உள்ளடங்கியுள்ள விடயங்களை நாம் ஏற்க முடியாது. என்னுடைய உடமைகள் முழுவதையும் வேறு ஒருவருக்கு தாரைவார்த்துவிட்டால் அது தற்கொலை செய்வதற்கு சமமானது” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவுடன் இந்த SOFA உடன்படிக்கையில் கையெழுத்திட எடுத்துள்ள முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், நாட்டின் மீது அக்கறையுள்ள குழுக்கள் என்பன எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்த உடன்படிக்கை இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்களையும், வரி முறைமையையும் மீறுவதாக இருப்பதுடன், பரஸ்பர பரிமாறுதல்கள் இல்லாததாகவும் இருக்கின்றது.
அமெரிக்க இராணுவ வீரர்கள் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் காலத்தில் அவர்கள் அமெரிக்கச் சட்டங்களுக்கு உள்ளானவர்களாகப் பேணப்பட வேண்டும் எனவும், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு இலங்கையின் வரிச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டியிருந்ததாக இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தனர்.
“இலங்கையின் சுங்க அதிகாரிகள் அமெரிக்க படையினரின் பொதிகளைச் சோதனையிட முடியாது. அப்படியானால் இலங்கை ஜனாதிபதி அமெரிக்கா செல்லும்போது இதுபோல அவருக்கும் அமெரிக்க சுங்க இலாகா விலக்கு அளிக்குமா? எனவும் இலங்கை இராணுவத்தளபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.