உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை அறிவித்த ரஷ்யா

– இரத்தக்களறிக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு
– உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அந்நாடு அறிவிப்பு
– பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிப்பு

ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இன்றையதினம் (24.02.2022) அறிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசையில் உரையாற்றிய புட்டின், உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டது எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த இரத்தக்களரிக்கான பொறுப்பை உக்ரேனிய ஆட்சியே பொறுப்பேற்க வேண்டுமென்றும் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் இதுவரை கண்டிராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று புட்டின் ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புட்டினின் அறிவிப்பு வெளியான உடனேயே, உக்ரைன் தலைநகர் கிவ்வில் (Kyiv) பாரிய வெடிப்புச்சத்தம் கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மனிதநேயத்தின் அடிப்படையில் தங்கள் படைகளை மீண்டும் வாபஸ் பெறுமாறு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம் பொதுச்செயலாளராக இருக்கும் தனது பதவிக்காலத்தில் மிகவும் சோகமான தருணம் இது என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகள் தாக்குதல் நடாத்துவதை நிறுத்துமாறு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி தொடர்பான இரண்டாவது அவசரகால பாதுகாப்பு கவுன்சில் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் கடந்த மூன்று நாட்களில் ரஷ்ய ஜனாதிபதிக்கு நேரடியான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

உக்ரைன் மீதான போரின் விளிம்பில் இருந்து ரஷ்யா பின்வாங்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் நேற்றையதினம் (23) வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடெஸ்ஸாவில் (Odessa) வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக AFP தெரிவித்துள்ளது.

Kyiv கியேவ் விமான நிலையம் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளதுடன், உக்ரைன் வான்பரப்பு பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைனின், Kyiv விமான நிலையத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ள நிலையில், Kyiv, Karkiv இல் உள்ள உக்ரேனிய இராணுவக் கட்டளை மையங்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாக, அந்நாட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரியை மேற்கோளிட்டு Ukrainska Pravda உக்ரைனிய செய்தித் தளம் தெரிவித்துள்ளது

பிரான்சிற்கான ஐ.நா. தூதுவர், ரஷ்யா போரைத் தேர்ந்தெடுத்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் பொறுப்பற்ற மற்றும் தேவையற்ற தாக்குதலுக்கு நேட்டோ தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது போர் அல்ல, விசேட இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யாவுக்கான ஐ.நா. தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைனிலுள்ள, இரு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் இரு பிராந்தியங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு பிராந்தியங்களிலும் உள்ள இரு பிரிவினைவாத அமைப்புகளுக்கும் ரஷ்யா ஆயுதங்களை வழங்கி வருவதாக இதுவரை காலமும் குற்றச்சாட்டுகள் நிலவி வந்திருந்ததோடு, அங்குள்ள ஏராளமான மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்க ஆரம்பித்துள்ளன.

உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக பாய்ந்து தாக்குவதால் உச்சக்கட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என ஜனாதிபதி புட்டின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், ‘உக்ரைனை ஆக்கிரமிப்பது ரஷ்யாவின் நோக்கமல்ல. அங்கு அமைதியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். நேட்டோவில் உக்ரைனை சேர்க்க கூடாது என்ற எங்கள் கோரிக்கையை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஏற்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், நேட்டோ கூட்டணி நாடுகளின் தலைவர்களுடனும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Tags: